ஜி.எஸ்.டி வரிமுறை மாநில அரசின் வரி வசூலிக்கும் அதிகாரத்தை பறித்துக் கொண்டது. கார்ப்பரேட்டுகளின் நன்மைக்காக மாநில உரிமைகளை காவு கொடுக்கிறது! மாநிலங்களை எந்த வகையிலும், சுயசார்பில்லாமல் செய்து, மத்திய அரசிடம் மண்டியிட வைக்கிறது! இந்தியாவில் இதை தட்டிக் கேட்கும் திரானியுள்ள ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது! நாளைய கூட்டத்தில் நடக்கப் போவது என்ன..?
செப்டம்பர் 17 ந்தேதி ஜி எஸ் டி உயர்மட்டக்குழுவின் 45 வது கூட்டம் நடைபெற உள்ளது. சென்ற கூட்டத்தில் பட்டாசுகள் படபடத்தன. நமது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் உரை இந்திய பொருளாதார உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

ஜி எஸ் டி ராஜ்ஜியம், கூட்டாட்சி ஆட்சிமுறையை குப்புறத் தள்ளி விட்டது, ஜி எஸ் டி மன்றத்தின் உயர்மட்டகுழுவின் கூட்டம் ஒரு ‘ரப்பர் ஸ்டாம்பாக’ இருக்கிறது’’ என்று அன்று திரு. தியாகராஜன் தெரிவித்த கருத்துகளுக்கு நாடெங்கிலும் ஆதரவும்,ஆமோதிப்பும் பெருகியது.
அதன்விளைவாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் , விவரம் அறிந்தோரும் – பலரும் அறிந்த ஆனால் தீர்க்கமாக எடுத்துரைக்க மறந்த – உண்மையை தியாகராஜன் வெளிப்படையாக மன்றக்கூட்டத்திலேயே தெரிவித்ததை வரவேற்றனர்.
மோடியின் மூர்க்த்தனத்தையும், நிர்மலா சீத்தாராமனின் ஒருதலைப்பட்சமான போக்கையும் தோலுரித்துக்காட்டிய தியாகராஜனின் பேச்சு படித்தவர்கள்,வணிகர்கள் மற்றும் நிதி விவகார ஆலோசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதற்கு காரணமிருக்கிறது.
முதல் காரணம், ஜி எஸ் டி திட்ட நடைமுறை அமலுக்கு வந்து நான்காண்டுகள் கழிந்தும் மோடி அரசு ஜி எஸ் டி மன்றத்திற்கு துணை தலைமை பதவிக்கு யாரையும் தேர்ந்தெடுக்க முன் வராதது!
அதுவும் அரசியல் சட்ட 101 வது திருத்தத்தின்படி , அரசியல் சாசனம் பிரிவு 279 A படி ஜிஎஸ்டி மன்றத்தின் தலைவராக ஒன்றிய நிதி அமைச்சரும் , துணை தலைமைப் பொறுப்பிற்கு, உறுப்பினர்களாக உள்ள மாநில அமைச்சர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த சட்டவிதி இன்று வரை அமல்படுத்தப்படவில்லை.
இப்படி காலங்கடத்துவது மோடி அரசின் தான்தோன்றிதனத்மையும், மூர்க்க குணத்தையும் தான் காட்டுகிறது என்பது மட்டுமல்ல, ஜிஎஸ்டி மன்றத்தை தங்களது கைப்பாவையாக வைத்திருப்பதைத் தானே மோடி அரசு விரும்புகிறது? பின் இம்மன்றத்தை ‘ரப்பர் ஸ்டாம்ப்’ என்று சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்!
இது மட்டுமன்றி, ஜிஎஸ்டி மன்ற உயர் தீர்ப்பாயம் ( G S T Appellate Tribunal) அமைப்பதையும் மோடி அரசு தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பதின் மர்மம் என்ன? என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதியரசர் என் வி. ரமணா தலைமையிலான அமர்வே கண்டனம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் நீண்ட உறக்கத்தை கண்டித்த உச்ச நீதி மன்றம் கடந்த 6ம்தேதி அரசு வழக்குரைஞர் துஷார் மேத்தாவை ” இனி பொறுக்க முடியாது, சாக்கு போக்குகளை கைவிட்டு தீர்ப்பாயத்தை உடனடியாக அமையுங்கள்” என உத்தரவிட்டுள்ளது.
தூங்காத அரசு என்று தனக்குதானே பாராட்டிக்கொள்ளும் மோடி அரசின் “வேகம்” இவ்வளவுதான்.
ஆனால் இந்த பம்மாத்துகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் . ஜிஎஸ்டி மன்றத்தை தனது கைப்பாவையாக நீட்டிப்பது ஒன்றுதான் அவர்களது தேவை.
ஏனெனில், அவ்வாறு செயலற்ற ரப்பர் ஸ்டாம்பாக இருந்தால் மட்டுமே மாநிலங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிதியை – சட்டப்படி கொடுக்க வேண்டிய நிதியை – கொடுத்த வாக்குறுதியின்படி கொடுக்க வேண்டிய நிதியை- கொடுக்காமல் காலம் தாழ்த்த முடியும்?
இதையெல்லாம் கேட்க நாதியுண்டா? இல்லை கேட்டால்தான் நியாயம் உடனே கிடைத்து விடுகிறதா?
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் இழந்த வரி வருவாயை ஈடுகட்ட இழப்பீடு தொகை ஐந்தாண்டுகள் வரை வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரும் (ஒன்றிய அரசும் மற்றும் அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும்) ஒத்துக் கொண்ட ஒரு அம்சமாகும்.
ஆனால் அதை இன்று உதாசீனம் செய்கிறது ஒன்றிய அரசு.
இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் பொது முடக்கத்தின் காரணமாகவும், மக்கள் மட்டுமின்றி மாநில அரசுகளும் வருவாய் குன்றிய நிலையில் இழப்பீட்டு காலத்தை ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்க கோரிக்கைகள் எழுப்பியுள்ளனர். இத்தகைய கோரிக்கையை, மேற்கு வங்கம், சட்டீஸ்கர்,பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் ஒடிசா போன்ற பாஜக அல்லாத மாநில அரசுகள் எழுப்பினாலும் பாஜக ஆளும் மாநில அரசும், மக்களும் இக்கோரிக்கையை எதிர்க்கவில்லை மாறாக ஆதரிக்கின்றனர்! ஆனால் குரல் மட்டும் வெளியில் அதிகம் வராது!
கேரள மாநில நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் இக்கோரிக்கையை கடந்த மன்றக் கூட்டங்களில் முன்வைத்தார் , நடக்கவிருக்கும் (செப்டம்பர் 17 ) கூட்டத்தொடரிலும் இதை வலியுறுத்த உள்ளார்.
இப்பொழுது நடைமுறையில் உள்ள ஃபார்முலாவின்படி ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி ,அதாவது வரி வசூலில் உள்ள வளர்ச்சி 14% ஆக இருக்கும், அப்படி அதற்கும் குறைவாக வளர்ச்சி இருந்தால் அதனை செஸ் வரிகள் விதித்துவரும் வருமானத்தில் இருந்து பகிர்ந்தளிக்க வேண்டும். பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட முடக்கமும், மாநிலங்களின் வரி போடும் உரிமை பறிபோன நிலையில், வருமானங்குன்றிய அரசுகள், “வளர்ச்சி துளிர் விடுகிறது இங்கே பார்.. அங்கே பார் ” என்று குரளி வித்தைக்காரனாக ஒன்றிய அரசு நடந்து கொள்வதைக்கண்டு வெதும்பியுள்ளனர்.
ஜி எஸ் டி வரி வசூல் இந்தக் காலாண்டில் 1லட்சம் கோடியை தாண்டிவிட்டது, இது முந்தைய காலாண்டைவிட அதிகம் , எங்களது வரி வசூலிக்கும் திறமையே இதற்கு காரணம், ஜிஎஸ்டி முறையே இத்திறமைக்கு காரணம் என்று அடிக்கடிமோடியும்,நிர்மலாவும் மார்தட்டிக்கொள்ளும் தமாஷை பார்த்து புருவத்தை உயர்த்துகிறோம் .
உண்மை நிலை என்ன?
மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் ஒன்றிய அரசின் பங்கு 30% அளவே.( மொத்த வரிகளில் ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரி அளவு இன்றைய ஜிஎஸ்டி கலெக்ஷனில் 30 சதவிகிதம் மட்டுமே! ஏனைய 70 % த்தில் 50 விழுக்காடு மாநிலங்களின் கூடையில் இருந்து பெறப்படும் வருமானம், மீதி 20 விழுக்காடு ஒன்றிய அரசுக்கு மட்டும் போகும் செஸ் எனப்படும் தனிவரிவகையாகும்)
ஆனால் மொத்தமும் சென்றடைவது டில்லியை அதனால் கணக்குபெரிதாகத் தெரிகிறது.மாநிலங்கள் ஜிஎஸ்டி வருகைக்கு முன் வசூலித்த வரித்தொகையை கணக்கிட்டால் மாயம் விலகிவிடும்.
ஆனால் உண்மையில் வருமான இழப்பு மட்டுமின்றி, வரிவிதிக்கும் உரிமையும் இழந்த இரண்டுங்கெட்டான்களாக மாநிலங்கள் மாறியதற்கு ஜி எஸ் டி முறையே காரணம் என்பதை மறக்கலாகாது.
சட்டீஸ்கர் மாநில நிதி அமைச்சர் டி. எஸ். சிங் தியோ தனிவரிகள் (செஸ்) விதிக்கும் உரிமையை மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார் . அதுகுறித்து பல மாநில அமைச்சர்கள் கருத்து பறிமாறியுள்ள நிலையில் வரும் கூட்டத்திலும் இது வலுப் பெறலாம்.
இது ஒருவகையில் தும்பை விட்டு வாலைப்பிடிக்கின்ற வேலை எனலாம்.
ஒரே தேசம், ஒரே வரி என்ற முழக்கமும், ஜி எஸ் டி வரிமுறையும் ஒன்றா? இதை மோடியும் (அவர் குஜராத் மாநில முதல்வராக இருந்த பொழுது) ஜெயலலிதாவும் எதிர்த்ததை மறக்க முடியாது.
முதலில் இம்முறை ஒரே வரியல்ல, ஒற்றை வரியும் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து இம்முறை 0 5, 12, 18 மற்றும் 28 விழுக்காடு என்ற படிநிலைகளை கொண்டது! நடைமுறை அறிவின்றி மேலிருந்து திணிக்கப்பட்ட சீர்குலைக்கும் வரி முறையாகும்.
ஒருமித்த கருத்தும் உயரிய நோக்கமும் இம்முறைக்கு தேவைப்படவில்லை!
கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக முன்னிறுத்தப்பட்ட இந்த முறை மோடியின் அரசியல் ஆதாயங்கருதியும் , கஜானாவை தன்பிடியில் வைத்துக்கொண்டு, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே இவ்வரிவிதிப்பு முறை ஆகும்.
இதைக்கொண்டு வருவதன்மூலம் நாட்டின் உற்பத்தி மதிப்பு 2% உயரும் வாய்சவடால் அடித்து ஆட்டு மந்தைகளை மேய்ப்பது போல் மாநில அரசுகளை ஏய்த்தனர் . நமது வருத்தமெல்லாம் பெரும்பான்மையான மாநிலங்கள் பாஜக ஆளுபவையாக இருந்தாலும், எஞ்சியுள்ள மாநிலங்களும் இதை நம்பி ஏமாந்தனரா அல்லது தொலைநோக்கு பார்வையோ அல்லது மாநில உரிமை மற்றும் மாநில நலன் மீது அக்கறையற்று இருந்தனரா என்பது புதிராக உள்ளது.
ஏனெனில், அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கிய வணிக வரி( Sales Tax- the right of levying and collecting taxes on the goods and commodities according to the preferences of the State) உரிமை ஒரு கூட்டாட்சி கோட்பாடு. அது பொது அதிகார உரிமையிலோஅல்லது ஒன்றிய அரசு அதிகார உரிமையிலோ இல்லை. அது மாநிலங்கள் உரிமையில் ( State List) உள்ளது. இந்த ‘மாநில உரிமை’ விஷயத்தில் பாராளுமன்றம் எவ்வாறு தலையிட்டு சட்டமியற்றி மாற்ற முடியும். எனவே, இந்த 101 வது அரசியல் சட்ட திருத்தமே அரசியல் சாசனத்திற்கு முரணானது என்ற கருத்து நிலவுகிறது.
மேலும் மாநில உரிமைகளை பறிக்கும், அதிகாரக் குவியலை மையப்படுத்திய திட்டமே ஜி எஸ் டி முறையாகும்! .
கார்பரேட்டுகளின் வற்புறுத்தலுக்கிணங்க, அவர்கள் நலனுக்காக மாநில உரிமைகளை பலிகடா ஆக்கிய இந்த திட்டம் ஒருங்கிணைந்த சந்தை என்ற கோஷத்தை முன்னிறுத்துகிறது. ஒருங்கிணைந்த சந்தைதான் வளர்ச்சிக்கு வழிவிடும் என்று கதையளந்தனர். ஒரே நாடு, ஒரே சந்தை ஒரே முன்னேற்றம் என்று குதித்தனர்.
அப்படியானால் முதலாளித்துவ வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்காவில், வளர்ந்த நாடுகளிலே முதன்மையாக இருக்கும் அமெரிக்காவில் ஒரே வரி -ஜி எஸ் டி – இல்லையே ஏன்? அங்கு மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு வரி முறையும் விகிதமும் உள்ளதே , அங்கு சந்தை வளரவில்லையா? மக்கள் முன்னேற வில்லையா? அங்கே மாநிலங்களின் உரிமையை அமெரிக்கர்கள் நேசித்தனர்; முதலாளிகளின் வசதிக்காக மாநிலங்களின் உரிமையை விட்டுக்கொடுக்க அவர்கள் விரும்பவில்லை, மாநிலங்களின் தனித்தன்மையை இழந்து சமரசம் செய்ய மறுத்தனர் .
ஆக, வளர்ச்சிக்கு இவ்வரி விதிப்பு முறை தேவை என்பதெல்லாம் கட்டுக் கதை!
உரிமைகளையும் , தன்னாட்சி அதிகாரத்தையும் பறி கொடுத்த மாநில அரசுகளும் அதன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருசில கட்சிகளும் இன்னமும் இழப்பின் பாதிப்பை முழுவதும் உணராத நிலையில்தான் உள்ளனர் .. இழந்த உரிமைகள் கிடைக்கப்பெறுமா? தனித்தன்மைகளும், தனித்தேவைகளும் மதிக்கப்படுமா?
ஜி எஸ் டி மன்றத்தில் ஒன்றிய அரசின் ஆதிக்கம் அதீதமாக இருப்பதும், அந்த இடத்தில் மோடி போன்றவர்கள் இருப்பதால் ஏற்படும் அதீத பாதிப்பும் தான் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் ஆகும்.
ஆனால், மன்மோகன் சிங் போன்று ஒருவர் ஆட்சியதிகாரத்தில் இருந்தாலுமே கூட பாதிப்புகள் மாறாது; அதனுடைய தீவிரம் வேண்டுமானால் வேறுபடலாம்.
வரி முறைகளை மாற்ற, இழந்த உரிமைகளை மீண்டும் பெற, கூட்டாட்சி கோட்பாட்டிற்கு உயிர் கொடுக்க விழிப்படைந்த மாநிலங்களும் ,கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
நன்றி:
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
அறம் இணைய இதழ்