2023 ஆம் ஆண்டின் துவக்கமே கொடூரமான வேலை நீக்கங்களும், பணியிலிருந்து துரத்தல்களும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் துவங்கி டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஆள் இல்லாத சேவை வழங்குகின்ற நிறுவனங்கள் வரை அனைத்தையும் ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது.

ஒரு தொழிலாளி தான் வேலையில் அமர்த்தப்பட்டவுடன் தனக்கு முறையான ஓய்வு பெறுகின்ற 58 அல்லது 60 வயது வரை தனது நிறுவனத்திற்கு கடுமையாக உழைத்து கொடுத்து அற்ப சொற்ப கூலியைப் பெற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்.

தான் பிறந்த கிராமத்திலோ அல்லது தான் வளர்கின்ற நகரத்திலோ வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் கிடைக்கின்ற வேலையைத் தேடி, ஒரு ஊரை விட்டு வேறொரு ஊருக்கோ அல்லது ஒரு நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்கோ புலம் பெயர்ந்து சென்று தனது வாழ்க்கையை நடத்துவதற்கான வருவாயை ஈட்டுகிறார்கள் தொழிலாளர்கள்.

தான் செய்கின்ற வேலையின் மீது மிகப்பெரும் ஈடுபாடோ அல்லது முந்தைய காலங்களில் சொல்வதைப் போல ‘செய்யும் தொழிலே தெய்வம்‘ என்ற மனநிலையோ தொழிலாளி வர்க்கத்திற்கு இருப்பதில்லை. உண்மையில் தனது உழைப்பு சக்தியை விற்பனை செய்து அதன் மூலமாக அவர் ஈட்டுகின்ற கூலி வேறொரு பொருளாக மாற்றப்படும் போது அதாவது வீட்டு வாடகை ஆகவோ, வாகன வசதிகள், மருத்துவ செலவு, குடும்பத்திற்கான உணவு தேவைகள் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு செலவு செய்யும்போது கிடைக்கின்ற மகிழ்ச்சியும், மன நிறைவும், தான் பணி செய்யும் இடத்தில் அவருக்கு கிடைப்பதில்லை.

தான் படித்த படிப்புக்கோ அல்லது பெற்ற பட்டயத்திற்கோ பொருத்தமான வேலை கிடைப்பதில்லை என்பதில் துவங்கி தன்னுடைய வாழ்நாளில் கண்டும் கேட்டிராத புதிய தொழில்நுட்பத்தில் புதிய உற்பத்தி முறையில் ஈடுபடும்போது மனப்பூர்வமாக அதை கற்றுக் கொண்டு மனமகிழ்ச்சியுடன் அந்த வேலையில் ஈடுபட முடியாமல் போவதற்கு முக்கிய காரணம் அவரது உழைப்பு சக்தியின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள பொருட்களின் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாலேயே உழைப்பிலிருந்து அன்னியமாகிக் கொண்டே செல்கிறது தொழிலாளி வர்க்கம்.

இதன் காரணமாகவே தான்  செய்கின்ற வேலை தன்னுடைய வாழ்க்கைக்கு போதுமான வருவாயை தராத போதிலும், குறைந்தபட்சம் வேலை உத்தரவாதம் இருந்தால் தனது வாழ்நாளில், அதாவது தன்னுடைய ஓய்வு காலத்திற்குள் பிள்ளைகளைப் படிக்க வைப்பது, திருமணம் செய்து கொடுப்பது, தான் வாழ்க்கை நடத்துவதற்கு பொருத்தமாக வீடு கட்டிக் கொள்வது போன்றவற்றை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.

இத்தனை வலி மிகுந்த தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கையில், பணி நீக்கம் அல்லது பணியிலிருந்து துரத்தப்படுதல் போன்ற அதிர்ச்சிகள் அனைத்தும் பல்வேறு விதமான மன நோய்களையும், உடல் நோய்களையும் உருவாக்கி வாழ்நாள் முழுவதும் நடை பிணமாக வாழ்வதற்கான அழுத்தத்தை உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்: உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி அவதியுறும் ஆஷாக்கள்!

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு துவங்கிய ஒரு மாத காலத்திற்குள்ளேயே, சாதாரண ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கி உலகம் முழுதும் கடைவிரித்து நிற்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பணி நீக்கம் என்ற கொடூரமான ஒடுக்குமுறை தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு கொரோனா காலத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட ஆட்களை குறைப்பது என்ற பெயரில் நியாயம் கற்பிக்கின்றது ஏகாதிபத்திய முதலாளித்துவம்.

இந்த பணி நீக்க அலையானது அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தாய் கழகமான ஆல்பாபெட் போன்ற நிறுவனங்களையும் தாக்குதலுக்கு உள்ளாக்கி வருகிறது. 2023 துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் 219 தொழில்நுட்ப நிறுவனங்கள் 68,149 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிகப்பெரும் மென்பொருள் நிறுவனமான ஐபிஎம் கார்ப்பரேஷன் தனது ஊழியர்களின் 3900 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.. Spotify என்ற மியூசிக் ட்ரைனிங் சேவை நிறுவனமானது அதன் பணியாளர்களில் ஆறு சதவீதம், குறிப்பாக 600-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் கூறியுள்ளார்.. ஆல்பாபெட்-கூகுள் பன்னிரண்டாயிரம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர்களுக்கான பணி நீக்க ஆணைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பிய சுந்தர் பிச்சை தான் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கையை விரித்து விட்டார்.

கூகுள் நிறுவன தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை

உலகின் மிகப் பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தன்னுடைய பணியாளர்களில் 10 ஆயிரம் பேரை பணியை விட்டு துரத்தப் போவதாக தற்போது அறிவித்து விட்டது. இ காமர்ஸ் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்களில் 18,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்டி ஜாஸி தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் செய்தியில் “நிச்சயமற்ற பொருளாதார சூழல்” காரணமாகவே அவர்களை பணியில் இருந்து விரட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மெட்டா – பேஸ்புக் நிறுவனம் அதன் பணியாளர்களில் 13 சதவீதம் பேரை அதாவது பதினோராயிரம் பணியாளர்களை வீட்டுக்கு துரத்தியுள்ளது. மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் 2023 ஆம் ஆண்டில் 3 பில்லியன் டாலர் செலவை குறைப்பது என்ற கணக்கில் தொழிலாளர்களை பணியை விட்டு துரத்தியுள்ளது. 44 பில்லியன் அமெரிக்க டாலர் மூலம் எலன் மாஸ்க் கையகப்படுத்தியுள்ள டுவிட்டர் நிறுவனம் 3700 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்!

ஏகாதிபத்திய நிதி மூலதன சுரண்டலுக்கு மேலும் பல மடங்கு லாபத்தை ஈட்டி தருவதற்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய வகையிலான தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனித உழைப்பை ஒழித்துக் கட்டிவிட்டு அந்த இடத்தில் தானியங்கி எந்திரங்களையும், அல்கரிதங்களால் இயக்கப்படும் கணினிகளையும் பயன்படுத்துகின்றனர். இதன் மற்றொரு விளைவாக தகவல் தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மனி மென்பொருள் நிறுவனமான எஸ்ஏபி தனது பணியாளர்களில் 3000 பேரை அதாவது இரண்டரை சதவீதம் பேரை பணியைவிட்டு துரத்தியுள்ளது.

சர்வதேச ரீதியில் துவங்கியுள்ள இத்தகைய பணிநீக்க நடவடிக்கைகள் இந்தியாவிலும் பிரதிபலிக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் மோடி கொண்டு வந்த மேக் இன் இந்தியா என்ற வாய்ச்சவடல்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும், ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கு பொருள்களை உற்பத்தி செய்து கொடுக்கின்ற ஆக்சிலரி, துணை நிறுவனங்களாக இருந்ததால் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலை இந்தியாவிலும் பிரதிபலித்து உள்ளது.

இந்தியாவில் கோ மெக்கானிக் என்ற கார் சர்வீஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமானது அதன் 70% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதன் நிறுவனர்களின் ஒருவரான ஹமித் வாசிங் இந்த தகவலை தெரிவித்தது மட்டுமின்றி நீர் குமிழி பொருளாதாரத்தை நம்பி தான் ஏமாந்து விட்டதாகவும் தொழிலாளர்களை, காயப்படுத்தி விட்டதாகவும் வருத்தமடைந்துள்ளார்.

சமூக ஊடகத்தில் ஷேர் சாட் மற்றும் வீடியோ பயன்படான மோஜ் ஆகியவற்றின் தாய் நிறுவனம் தனது ஊழியர்களின் 20 சதவீதம் அதாவது 500க்கும் மேற்பட்டவர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது மட்டுமன்றி ஸ்விக்கி 350 பேரையும், ரிலையன்ஸ் தொடர்புள்ள நிறுவனமான டான்ஸ் 3 சதவீதம் தொழிலாளர்களையும், ஓலா 200 தொழிலாளர்களையும் பணமில்லா ஆன்லைன் கட்டண சேவை வழங்குனரான கேஷ் ஃப்ரீ நூறு ஊழியர்களையும் பைஜூஸ் நிறுவனத்தின் 50 ஆயிரம் பணியாளர்களில் 5 சதவீதம் பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய பணி நீக்கங்கள் மொத்த பொருளாதார நெருக்கடியில் ஒரு துளி மட்டும் தான்! உற்பத்தியில் தனது மூலதனத்தைக் குவிக்கின்ற நிதி மூலதன ஏகாதிபத்தியங்கள் பல மடங்கு லாப உத்தரவாதம் இருந்தால் மட்டுமே அந்த தொழிலை மீண்டும் செய்கின்றனர். கொரானாவிற்கு முன்பு இருந்தே சர்வதேச ரீதியில் பொருளாதாரம் தேக்கமடைந்து மக்களின் வாங்கும் சக்தி அதல பாதாளத்திற்கு சென்றது. கொரோனா போன்ற நோய் தொற்று காலகட்டத்தில் அது மேலும் பல மடங்கு நெருக்கடிகளை சந்தித்தது. மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத போதும் பொருளை அபரிமிதமாக உற்பத்தி செய்து குவித்து வைப்பதன் விளைவு பொருளாதார தேக்க நிலையையும், பண வீக்கத்தையும் உருவாக்கி விடுகிறது.

பொருளுற்பத்தியில் மனித குலத்திற்கு தேவையான பொருட்களை, பண்டங்களை உற்பத்தி செய்வதை காட்டிலும், நுகர்வு பொருளுக்கு முன்னுரிமை கொடுத்து உற்பத்தி செய்கின்ற காரணத்தினால் இருக்கின்ற அரைகுறை சேமிப்பு முறையும் வருவாயும் ஏகாதிபத்தியங்களால் வேறொரு வகையில் சுரண்டிக் கொள்ளப்படுகிறது.

தற்போது சர்வதேசரீதியில் உருவாகியுள்ள மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையானது தொடர்ச்சியான பணி நீக்கங்களையும், பணியில் இருந்து துரத்தல்களையும் மிகப்பெரும் தாக்குதலாக தொழிலாளர்களின் மீது ஏவி விடப்பட்டுள்ளது. இத்தகைய சுரண்டல் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக “மக்களையும் நாட்டையும் பாதுகாக்கின்ற சோசலிச பொருளாதாரத்தை” கட்டியமைக்காமல் இத்தகைய நெருக்கடிகளில் இருந்து மீளவே முடியாது! என்பதே நேர்மறையிலும் எதிர்மறையிலும் பாட்டாளி வர்க்கத்தின் அனுபவ பாடமாக உள்ளது.

  • கணேசன்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here