தினமணி நாளிதழானது நேற்றைய (11.9.2024 புதன்கிழமை) தலையங்கத்தில் 91 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தன்னைப் பற்றி தானே புகழ்ந்து எழுதிக் கொண்டுள்ளது.

அதில், இந்திய விடுதலைப் போராட்டம் அண்ணல் காந்தியடிகளின் வரவால் உத்வேகம் பெற்றிருந்த வேளையில், தமிழ்ப் பற்றையும் தேசப் பற்றையும் மக்களுக்கு ஊட்டுவதற்காக ஒரு நாளிதழ் தொடங்கப்பட்டது என்றால் அது  ‘தினமணி’ மட்டுமாகத்தான் இருக்கும் என சுயதம்பட்டம் அடித்துள்ளது.

நாம் காண்பது என்ன?

உண்மையில் 90 ஆண்டு கால வரலாற்றில் தினமணி நாட்டுப்பற்றுடன் தான் செயல்பட்டு உள்ளதா? தற்போது  நமது நாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற ஏகாதிபத்தியங்களும், அம்பானி, அதானி போன்ற தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் பல்வேறு வகையில் சூறையாடி வருகின்றனர்.

இந்தியாவை சூறையாடி வரும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக, ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக எத்தனை முறை போர்க் குரல் எழுப்பியுள்ளது தினமணி. நாட்டுப்பற்றுடன் போராடுபவர்களை ஒன்றிய அரசு தனது சர்வாதிகார அடக்குமுறை உறுப்புகள் மூலம் வேட்டையாடும் பொழுது எத்தனை முறை அறச்சீற்றம் கொண்டு கண்டித்துள்ளது?

நாட்டுப்பற்று தான் எதுவும் இல்லை; தமிழ் பற்றாவது  உள்ளதா? காவி பாசிஸ்டுகள் திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பைச் செய்யும் போது வேடிக்கை தானே பார்க்கிறது? அதனை ஆதரிக்கவும்தானே செய்கிறது.

தில்லை சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடும் போராட்டத்தில் எத்தகைய செய்தியை வெளியிட்டது? யார் பக்கம் நின்றுள்ளது தினமணி ? சிவனடியார் ஆறுமுகசாமியை தில்லை தீட்சீதர்கள் அடித்து கையை உடைத்துத் தூக்கி வீசியபோது தலையங்கத்தில் அதை கண்டிக்க திராணி இருந்ததா?

நான் படித்தவரையில் அப்படி நாட்டுப்பற்றோடு கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியதாகவோ அல்லது தமிழ்ப் பற்றோடு இந்தி சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக அறச்சீற்றம் கொண்டதாகவோ தலையங்கத்தில் பார்த்த ஞாபகம் இல்லை.

ஆனால், தினமணி கீழ்க்கண்டவாறு சொல்லிக் கொள்கிறது. “விடுதலைப் போராட்ட காலத்திலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி தன்னுடைய குறிக்கோளிலிருந்தும் கொள்கை பிடிப்பிலிருந்தும் சற்றும் விலகாமல் தினமணி நடை போட முடிந்துள்ளதற்கு …. ” என தொடர்கிறது.

தினமணியின் கொள்கை பிடிப்பு எது? பார்ப்பன மேலாதிக்கத்திற்கு முட்டுக் கொடுப்பதும், கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை ஏலம் விடும் காவி பாசிஸ்டுகளுக்கு நியாயம் கற்பிப்பதும் தானே. நாட்டுப்பற்றுடன் உண்மையில் களமாடுபவர்களை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், அந்நிய கைக்கூலி  என்றெல்லாம் அரசின் மொழியில் அவதூறு செய்வது தானே!

நிமிர்ந்த நன்னடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடனும் தினமணி நாளிதழ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டி, இப்போது நூற்றாண்டை நோக்கி பீடுநடை போடுகிறது என்றால் அதற்குக் காரணம், அதன் ஜீவ நாடியாக, உந்து சக்தியாக திகழும் பாரதி சிந்தனை தான் என்கிறது.

பாரதியார் கூட ஆங்கிலேயர்களை கடுமையாக சாடி எழுதி செயல்பட்டதால் ஆங்கிலேயர்களால் துரத்தப்பட்டார். அவர்களின் ஆட்சிப் பகுதியில் தொடர்ந்து செயல்பட முடியாமல் பிரஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரியில் தஞ்சமடைந்து பத்திரிக்கை பணியைத் தொடர்ந்தார். இதுவே வரலாறு.

ஆனால், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தினமணி அப்படி ஏதாவது அடக்குமுறை எதிர்கொண்டதா? தெரியவில்லை. ஆனால் தினமணியின் தற்போதைய செயல்பாடுகளில் இருந்து அது யாரை தனது பிரதான எதிரியாக கருதியது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இன்றைய தினமணி நாளிதழில் வந்துள்ள கேலிச் சித்திரத்தை பார்த்தாலே போதும். அதில் ராகுல் காந்தி அமெரிக்கர்களிடம் இந்தியாவைப் பற்றி குறை சொல்லி அழுவதாக படம் வரையப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி எப்போது இந்தியாவைப் பற்றி குறைத்து பேசினார்? அவர் இந்துக்களின் அத்தாரிட்டியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஆர்எஸ்எஸ் – ஐயும், இந்துராஷ்டிரம் அமைக்கும் வெறிகொண்டு இந்தியாவை கார்ப்பரேட்டுகளுக்கு கூறுபோட்டு விற்று வரும் மோடி அரசையும்தானே விமர்சித்து வருகிறார்.

அதாவது மோடியை விமர்சித்தால், அது இந்தியாவைப் பற்றி சொல்வதாக தினமணிக்குத் தெரிகிறது. மோடி, பிஜேபி , ஆர் எஸ் எஸ் எப்படி இந்தியாவாக முடியும். இதுதான் சங்கிகளின் விஷமத்தனம். தினமணியின் அயோக்கியத்தனம்.

இப்படி பார்ப்பன மேலாதிக்கத்தின் கருத்து பிரச்சாரகனாக, கார்ப்பரேட் சூறையாடலுக்கு கண்ணக்கோல் வைக்க துணை நிற்பவனாக, இந்தியாவை நாசப்படுத்தும் இந்து மத வெறியர்களின் பாதுகாவலனாக, தன் திசைவழி மாறாமல்தான் தினமணி பயணித்து வருகிறது என்று வேண்டுமானால் அங்கீகரிக்கலாம்.

ஆளும் வர்க்க சேவையில் மூழ்கி முத்தெடுக்கும் தினமணி நூற்றாண்டை நெருங்குவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த ஆளும் வர்க்கம் நீடிக்கும் வரை தினமணி போன்ற ஊது குழல்களின் சேவையும் நீடிக்கவே செய்யும். இதில் ஆச்சரியப்படவோ பெருமைப்படவோ எதுவும் இல்லை.

இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here