
தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எனும் தாமிர உற்பத்தி தொழிற்சாலையை நிறுவிய கார்ப்பரேட் முதலாளியும், கொலைகாரனுமான அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம், அந்தப் பகுதியில் சுற்றுச்சூழலை நாசமாக்கி மக்களின் ஆரோக்கியத்தையும் சீர்குலைத்தது. அந்த நாசகார நச்சு ஆலையை அகற்ற வேண்டுமென அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 உயிர்களை கொன்றொழித்தது அகர்வாலுக்கு ஆதரவான எடப்பாடியின் ஏவல் போலீசு.
இத்தகைய மாபெரும் உயிர்த் தியாகத்தின் விளைவாக மூடப்பட்ட அந்த ஆலையை எப்படியாவது திறந்து விட வேண்டும் என பல்வேறு தகிடு தத்தங்களை செய்தது வேதாந்தா நிறுவனம். இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கிலும் அக்டோபர் 22 அன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வந்து விட்டது. எனவே அந்த ஆலைக்கு நிரந்தர மூடுவிழா உறுதியாகி விட்டது.
இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் விதமாக மதுரை அருகே உள்ள மலைக் குன்றுகளில் கனிம வளங்களை கொள்ளையிட அதானி, அம்பானி, வரிசையில் இந்தியாவை சூறையாடும் தேசங்கடந்த தரகு முதலாளியான அனில் அகர்வால் நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது ஒன்றிய மோடி அரசு. மதுரை மாவட்டத்தின் மேலூர் தாலுகாவில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அழகர்கோவில் முதல் அரிட்டாபட்டி வரையிலான சுமார் 5200 ஏக்கர் பரப்பில் சுரங்கம் அமைத்து கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசின் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் ‘ஸ்டெர்லைட் புகழ்’ வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இதற்கான அறிவிப்பு நவம்பர் 7- ல் வெளியானது. வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் சிங்க்(Zinc) லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளது. 2018 – 19 காலகட்டத்தில் இந்தப் பகுதியில் கனிமவள ஆய்வு நடத்தியதன் அடிப்படையில் இங்கு ஏராளமான மதிப்பு வாய்ந்த பொக்கிஷங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இப்போது டங்ஸ்டன் எனும் கனிமத்தை கொள்ளையிடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர். கார்ப்பரேட் கும்பலுக்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வேறுபாடு தெரியுமா என்ன? லாப வேட்டைக்கு இடம் ஒரு தடையாக இருக்குமா?
டங்ஸ்டன் மிக அதிக உருகு நிலையை (3422°C) கொண்ட தனிமம் ஆகும். மின்விளக்கு இழைகள், இசைக்கருவி நாண்கள், அறுவை சிகிச்சை கருவிகள், கதிர்வீச்சு பாதுகாப்பு, எக்ஸ்ரே இயந்திரங்கள் என இதன் பயன்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதன் கடினத் தன்மை மற்றும் அதிக அடர்த்தி காரணமாக இராணுவப் பயன்பாடுகளிலும் உதவுகிறது.
பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்களின் புகலிடம்!
அரிட்டாபட்டியை உள்ளடக்கிய இப்பகுதியின் சூழல் பல்லுயிர்களுக்கு புகலிடமாக உள்ளதை கணக்கில் கொண்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இந்தப் பகுதியை உயிர் பன்மைய மிக்க பாரம்பரிய இடமாக (Bio diversity Heritage site) 21.11.22 அன்று அரசாணை வாயிலாக அறிவித்தது. இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், மலைப்பாம்பு, தேவாங்கு மற்றும் அழுங்கு போன்ற அரிதான உயிரினங்களும் வாழ்வதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிட்டாபட்டியைச் சேர்ந்த பல்லுயிர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், ஏழு மலைகள் பாதுகாப்பு சங்க செயலாளருமான ரவிச்சந்திரன், “எங்களது நிலப் பகுதி வளங்கள் பல நிறைந்த தற்சார்பு பூமியாக உள்ளது. இந்த மண்தான் எங்கள் தாய்; இந்த மலைகள் எங்கள் தெய்வம்” என்கிறார். மேலும் இப்பகுதியில் 16 வகையான வரலாற்று சான்றுகள் உள்ளதாகவும் எறும்புத்தின்னி, லகுடு வல்லூறு போன்ற மிக அரிதான உயிரினங்கள் வசிப்பதாகவும் கூறுகிறார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதி!
இங்கு கழிஞ்ச மலை, நாட்டார் மலை, இராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகுமலை, தேன்கூடு மலை, கூகைக் கத்தி மலை ஆகிய ஏழு மலை குன்றுகள் தொடர்ச்சியாக உள்ளன. 72 ஏரிகளும், 200 இயற்கை சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகளும் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக விளங்குகின்றன.
இந்தப் பகுதி பெருங் கற்காலத்தை சேர்ந்தது என்றும், மாங்குளத்தில் தமிழின் ஆதி எழுத்து வடிவமான “தமிழி” எழுத்தின் 2300 ஆண்டுகள் தொன்மையானக் கல்வெட்டுகள், சங்க கால பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது இந்த கல்வெட்டுகள்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
மீனாட்சிபுரம் ஓவா மலையில் உள்ள நான்கு குகை தளத்தில் 50க்கும் மேற்பட்ட சமணர் படுகைகளும், அரிட்டாபட்டி கழிஞ்ச மலையில் கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பமும், அதன் கீழே தமிழி வட்டெழுத்து கல்வெட்டும் உள்ளன. இதே பகுதியில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான குடவரை கோயிலும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
படிக்க: ♦ டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
இத்தனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியையும், இங்கு வசிக்கும் பல்லாயிரம் மக்களையும் அப்புறப்படுத்தி விட்டு, சுரங்கம் அமைத்து டங்ஸ்டனை வெட்டி எடுக்கப் போகிறது வேதாந்தா நிறுவனம். இதனால் பல்லுயிர்வாழ் சூழல் அங்கு முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் நமது வரலாற்று சான்றுகளும் அழிக்கப்படும்.
மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்!
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். விவசாய சங்கங்களும், வணிகர்களும் இணைந்து கூட்டம் நடத்தி, அதில் ஒன்றிய அரசைக் கண்டித்தும், மாநில அரசு இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம் இயற்றியுள்ளனர்.
சமீபத்தில் அரிட்டாபட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி, தமிழக அரசு இந்த திட்டத்திற்கான அனுமதியை அளிக்காது என்று உறுதி அளித்துள்ளார். மேலும் 52 கிராமங்களை சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்து நடந்த கூட்டத்திலும் இதே போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. முதல் கட்டமாக ஒன்றிய அரசை கண்டித்து நவம்பர் 29 அன்று மேலூரில் ஆர்ப்பாட்டமும் கடையடைப்பு போராட்டமும் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே பிஆர்பி கிரானைட்டுக்கு எதிராகப் போராடி விரட்டி அடித்த அனுபவம் வாய்ந்த, போர்க்குணம் மிக்க மக்கள் நிச்சயமாக இந்த கார்ப்பரேட் வேதாந்தாவின் கனிமவளக் கொள்ளையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அவர்களது ஆவேசமான உணர்வுகள் வெளிப்படுத்துகின்றன. அப்பகுதி மக்களுக்கு துணை நிற்க வேண்டியது மண்ணையும், மக்களையும் நேசிக்கும் அனைவரது வரலாற்றுக் கடமையாகும்.
படிக்க: ♦ டங்ஸ்டன் வெட்ட வரும், வேதாந்தாவை விரட்டி அடிப்போம்!
பாசிச மோடி தான் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவின் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் தடையின்றி சூறையாடுகின்ற வகையில் பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டுவந்துள்ளது அதில் ஒன்றுதான் சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் குறித்த சட்டம். இந்த சுரங்கம் மற்றும் கனிமங்கள் சட்டம் 1957ல், பல்வேறு திருத்தங்களை பாசிச மோடி அரசு அரசு மேற்க்கொண்டது. 2023 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சுரங்க மற்றும் கனிம சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
இந்த சட்ட திருத்தத்தின்படி லித்தியம், கிராஃபைட், நிக்கல், பொட்டாஷ், டங்ஸ்டன், வனேடியம், கிளாக்கோனைட், கோபால்ட் போன்ற கனிமங்களை ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி டங்ஸ்டன் போன்ற குறிப்பிட்ட கனிம சுரங்கங்களை மத்திய அரசால் மட்டுமே ஏலம் விட முடியும். நிலக்கரியை தவிர, பிற கனிமங்களை மத்திய அரசின் அனுமதியுடன் ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுக்கு இருந்தது.
பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட 107 கனிம சுரங்க ஏல உரிமங்களில் வெறும் கிராபைட், நிக்கல் போன்ற 19 கனிம சுரங்கங்களே மாநில அரசுகளால் ஏலம் விடப்பட்டதாக பாசிச மோடி அரசு கூறுகிறது.
இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தேவையான முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் இந்த சட்ட திருத்தத்தின்படி மத்திய அரசுக்கு வழங்கப்பட்டதாக தனது செய்தி குறிப்பில் இந்திய ஒன்றிய பாசிச பாஜக அரசு தெரிவித்துள்ளது.
இந்த சட்டத் திருத்தங்கள் அமலில் உள்ள சூழலில் தமிழக அரசு எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து 2024 டிசம்பர் 9ஆம் தேதி சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதியில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது அது மட்டுமின்றி எனது பதவிக்காலம் முழுவதும் இத்திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் என்று தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் முன்மொழித்துள்ளார்.
மாநில அரசின் அதிகாரங்கள் அனைத்தையும் பல்வேறு வழிமுறைகளில் பறித்து மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை குவித்து வைத்துள்ள பாசிச பாஜக அரசாங்கமானது இத்தகைய திட்டங்களை மக்களின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக கைவிட்டாலும் மீண்டும் மூர்க்கமாக அமல்படுத்தவே எத்தனிப்பார்கள். அதுமட்டுமின்றி பல்வேறு சிக்கல்களில் மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றுகின்ற தீர்மானங்களை கழிப்பறை காகிதமாகவே மாற்றியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
எனவே தமிழக மக்கள் பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் இத்தகைய கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டத்தையும் ஒன்றிணைத்து மதுரையை பேரழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
- அன்புச்செல்வன்.
புதிய ஜனநாயகம்
டிசம்பர் இதழ்