
ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கிய வேதாந்தா குழுமம் தற்போது மதுரையின் அரிட்டாப்பட்டியை குறிவைத்து களமிறங்கியுள்ளது.
தொல்லியல் சின்னங்கள் நிறைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் டங்ஸ்டன் வெட்டி எடுப்பதற்கான அனுமதியை ஒன்றிய மோடி அரசிடமிருந்து பெற்றுள்ளது ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்.
பாசிச ஜெயாவின் ஆட்சியில் தமிழகத்தின் தூத்துக்குடிக்குள் வேதாந்தாவை அனுமதித்து விட்டு மக்கள் அனுபவித்த துயரம் கண் முன் நிற்கிறது . அந்த ஆலையை மூட வைக்க மக்கள் பேரணியாக வந்து, துப்பாக்கி குண்டை உடலில் தாங்கி சிந்திய ரத்தம் இன்னும் உலராமல்தான் உள்ளது. இந்நிலையில், மதுரை மக்கள் எப்படி மீண்டும் ஒரு நாசகார திட்டத்துக்கு அனுமதியை தருவார்கள்?
கார்ப்பரேட்டுகளின் வாய்க்குள் ‘கவளமாக’ பொதுத்துறைகள்!
ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) என்பது துத்தநாகம் , ஈயம் , வெள்ளி மற்றும் காட்மியத்தை வெட்டி எடுக்கும் நிறுவனம் ஆகும் . இது வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும் . உலகின் இரண்டாவது பெரிய துத்தநாக உற்பத்தி நிறுவனமான இது ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகத்தான் இருந்தது.
30,000 கோடியை வருவாயாக ஈட்டி வரும் இந்நிறுவனமானது, 2003 ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், அனில் அகர்வாலின் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.
கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்க அமைச்சகம் தேர்வு செய்தது.
நக்கும் நாய்க்கு செக்கென்ன – சிவலிங்கம் என்ன?
“கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேலூரில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக (Biodiversity Heritage Site) மாநில அரசு அறிவித்தது.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், ‘தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள், ஏழு சிறு குன்றுகளைத் தொடர்ச்சியாக இப்பகுதி கொண்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகவும் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, பாம்புண்ணிக் கழுகு உள்பட 250 பறவைகளும், அலங்கு, மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது” என்கிறது பிபிசி.
நக்கும் நாய்க்கு வித்தியாசம் தெரியாததைப் போலவே, மோடி அமித் ஷா கும்பலானது இப்பகுதியைத்தான் அனில் அகர்வாலின் “HZL நிறுவனத்திற்கு தாரை வார்த்து, அழிக்க துடிக்கிறது.
கைகோர்த்துள்ள காவியும் கார்ப்பரேட்டுகளும்!
குடவரைக் கோயில்கள்,சமணச் சின்னங்கள் கற்பலகையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் என பாதுகாக்கப்பட வேண்டியவை ஏராளம். சுற்றியுள்ள மலைகள் இருக்கும் போது அது பற்றியெல்லாம் ஒன்றிய அரசுக்கு கூந்தல் அளவு கூட கவலை கிடையாது.
தமிழகத்தின் மரபுச் சின்னங்கள் தொல்லியல் ஆதாரங்களின் மீதும் ஒன்றிய அரசு – பாசிச மோடி தலைமையிலான காவி கும்பல் தாங்க முடியாத வன்மம், வெறுப்புடன் உள்ளன.
ஒருபுறம், தமிழர்களின் புராதன சின்னங்களை அழிப்பதற்கு காவி கும்பல் வெறி கொண்டு அலைகிறது என்றால், மறுபுறம் கார்ப்பரேட் கும்பல்களோ கனிம வளங்களை சூறையாட, வாயில் எச்சில் ஒழுக வலம் வருகின்றன. மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க அனுமதி விஷயத்தில் இவ்விரு கும்பல்களும் கைகோர்த்து களம் இறங்கி உள்ளன.
தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு!
தற்போது டங்க்ஸ்டன் கனிமம் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ள அரிட்டாபட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் அதை தடுப்பதற்காக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மதுரை பாராளுமன்ற உறுப்பினரான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் சு.வெங்கடேசனும் இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை கோரியுள்ளார்.
தமிழகத்தை ஆண்டு வரும் திமுக தலைமையிலான அரசும் நவம்பர் 2 ஆம் தேதி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது. வேதாந்தாவின் துணை நிறுவனத்துடன் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
வேதாந்தாவின் கனிம சூறையாடலுக்கு எதிரான, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை நாசமாக்குவதற்கு எதிரான, உழைக்கும் மக்களை அகதிகளாக விரட்டி அடிக்கும் மக்கள் விரோத திட்டத்திற்கு எதிரான குரல்கள் எதுவும் கார்ப்பரேட் அடியாளான மோடி அரசின் காதில் விழவே இல்லை.
அனில் அகர்வாலின் HZL நிறுவனத்திற்கு தரப்பட்ட சுரங்க அனுமதியை ரத்து செய்ய முடியாது என தமிழக அரசுக்கு பதில் அளித்து விட்டது.
அரிட்டாபட்டியை காக்க தேவை மக்கள் முன்னணி!
மதுரையில் அரிட்டாப்பட்டி பகுதியை பாதுகாக்க பகுதிவாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டக் குழுக்களை கட்டியமைக்க வேண்டும். கார்ப்பரேட்டு திட்டங்களால் வாழ்விழக்கப் போகும் அல்லது வாழ்விழந்து அகதிகளாக வெளியேறி உள்ள அனைத்து மக்களும் ஓரணியில் ஒன்றிணையவும் வேண்டும். இதை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.
செவ்வாயன்று (நவம்பர் 26) மதுரை அழகர் கோவிலில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, வெள்ளியன்று (நவம்பர் 29) மேலூரில் கடை அடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் அறிவித்தனர்.
சுரங்க ஏலத்துக்கு எதிராக, 30 கிராம சபைகளில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
படிக்க: அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக கிராமசபை தீர்மானம்!
பரந்தூர் விமான நிலையம், ஆறு வழி எட்டு வழி சாலை திட்டங்கள், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பு ஒப்பந்தங்கள் என கார்ப்பரேட் நலனுக்காக உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்கள் விரிவடைந்து வருகின்றன. இப்படி பாதிக்கப்படும் அனைவரும் ஓரணியாக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பில் மக்கள் அனைவரையும் அணி திரட்டவும், வழி நடத்தவும், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து களம் காண வேண்டிய சூழலும் இதுதான். வாருங்கள் கரம் கோர்ப்போம்.
- இளமாறன்








பாசிச பாஜக மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பட்டுக்கம்பளம் விரித்து இந்திய நாடு மட்டுமல்ல; உலகம் முழுமைக்கும் கொள்ளை லாபமடிக்க வழி வகுத்து விட்டது. இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்திற்கு தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை முழுமையாக தாரை வார்த்து கொடுக்கிறது மோடி அரசு! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எப்படி மக்கள் திரண்ட எழுந்து போராடி உயிர் தியாகம் செய்து ஆலையை மூட வைத்தார்களோ அதே போல மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் நிறுவனத்தை உருவாக்கி இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக சுரண்டிச் செல்ல எத்தனைக்கும் அனில் அகர்வாலையும், பக்கபலமாக நிற்கும் மோடி கூட்டத்தையும் பகுதி மக்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களே கரம் கோர்த்து களம் கண்டு விரட்டி அடிக்க வேண்டும் என்பதனை தோழர் இளமாறன் கட்டுரையில் சிறப்பாக எடுத்து இயம்பி உள்ளார். பாராட்டிற்குரிய கட்டுரை எழுதிய தோழர்க்கு வாழ்த்துக்கள்!
RSS ன் சித்தாந்தத்தை தமிழ் நாடு எதிர்ப்பதனால் தமிழ்நாட்டை முழுவதுமாக அழித்தாக வேண்டும் என்று செயல்படுகின்றனர்.
தமிழ் நாட்டுக்கு ஒரு ஸ்டெர்லைட் போதும்,
மக்கள் பாதிக்கக்கூடிய நச்சு ஆலைகள் தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது என்று புதிய சட்டம் இயற்ற வேண்டும். இதை அரசு செய்யாது. மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும்.