
மதுரை மேலூரில் 2015 ஹெக்டேரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இருக்கும் ஸ்டெர்லைட் புகழ் கொலைகாரன் வேதாந்தா நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் ஜிங் நிறுவனத்திற்கு ஒன்றிய பாஜக அரசு வழங்கிய ஏல உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக மதுரை நோக்கி படையெடுத்துள்ளார்கள்.
மக்களின் பெரும் படையைப் பார்த்து மாநில அரசும், ஒன்றிய அரசும் செய்வது அறியாது திகைத்து நிற்கிறது. மேலூரில் தொடங்கிய பேரணியில் இந்த சுரங்கம் அமைத்தால் பாதிக்கப்படக்கூடிய அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கர் பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
நரசிங்கம்பட்டியில் துவங்கி மாநகர் தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் வரையிலான 16 கிலோமீட்டர் தொலைவிற்கு பேரணியானது சென்றது. இந்த பேரணியில் விவசாய சங்கங்கள் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
பேரணியின் போது திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; முல்லைப் பெரியாறு பாசனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்; மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலும் திட்டமிடப்பட்டுள்ள டங்ஸ்டன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். காவல்துறை பேரணியை அனுமதிக்காத இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர் மக்கள்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும் ஒன்றிய அரசை நிர்பந்திக்க மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை. ஒன்றிய பாஜக அரசு மக்கள் எதிர்ப்பு வலுத்த காரணத்தினால் டங்ஸ்டன் சுரங்க அமைய உள்ள இடத்தை மறு ஆய்வு செய்யுமாறு இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு பரிந்துரைத்துள்ளது. பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு மீதமுள்ள பகுதிகளில் சுரங்கம் அமைப்பது குறித்தும் ஆய்வு நடத்துகிறது.
ஆனால் மக்களின் கோரிக்கை அதுவல்ல. டங்ஸ்டன் சுரங்கம் தமிழ்நாட்டிற்கே வேண்டாம் என்கிறார்கள். இதுதான் இன்றைய பேரணியில் மக்கள் முழக்கமாகவும் எதிரொலித்தது. டங்ஸ்டன் ஆலை அமைந்தால் பல்லுயிர் பகுதிகள் மட்டுமல்ல சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். இதனை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்படும் மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
போராட்டமே மகிழ்ச்சியான தருணம்!
போராட்டமே மகிழ்ச்சியான தருணம் என்பது என்பார் தோழர் லெனின். அது உண்மைதான். போராட்டக் காலத்தில்தான் மக்கள் அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து நிற்பார்கள். இந்த நேரத்தில் சாதி மறந்து, மதம் மறந்து, ஊர் மறந்து, என்ன நோக்கத்திற்காக போராடுகிறோம் என்பது மட்டுமே நினைவில் நிற்கும்.
இந்த தருணம் தான் அரசை அச்சப்பட வைக்கும். மக்கள் ஒன்றிணைந்தால் அரசுக்கு ஏன் அச்சம் வருகிறது என்ற கேள்வி வரலாம். மக்களை பிரித்தாளும் கொள்கையின் மூலமே அரசு என்ற நிறுவனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரும் போதெல்லாம் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் நிறைவேற்றுவதற்கான அடிப்படையும் அரசின் பிரித்தாளும் கொள்கையிலேயே அடங்கி இருக்கிறது. அதனால் தான் மக்கள் ஒன்றிணைவதை அரசு ஒருபோதும் விரும்புவதில்லை.
மக்களுக்கான கோரிக்கைகளுக்கு நோ!
ஆளும் அரசுகள் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வரும் போதெல்லாம் மக்கள் அதனை வரவேற்பதில் தயங்கியதில்லை. ஆனால் அவர்களுக்கு நன்மை பயக்காத திட்டங்களை எதிர்க்க தயங்குவதும் இல்லை. குறிப்பாக விவசாயிகளுக்கான சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பெருநிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றுகிறார்கள். அதே நேரத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) கோரி வருட கணக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை அரசு செவிசாய்க்கவில்லை.
படிக்க: டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிர்ப்பு: மதுரையில் விவசாயிகள் பேரணி.
நீட்டில் தொடங்கி புதிய கல்விக் கொள்கை, நுழைவுத் தேர்வு, ஜிஎஸ்டி என மக்கள் விரும்பாத, அவர்களுக்கு சுமையாக இருக்கக்கூடிய திட்டங்களை அரசு அமல்படுத்தும் போது போராட்டங்கள் மூலம் தங்களை எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.
தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை அமைக்க கோரி நீண்ட நாட்கள் கோரிக்கை எழுப்பினாலும் செவி மடிப்பதில்லை. அதே நேரத்தில் ஆறு வழிச்சாலை, 8 வழி சாலை, எக்ஸ்பிரஸ் சாலை என முதலாளிகள் தங்கள் சரக்குகளை தங்கு தடையின்றி கொண்டு செல்ல விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும், மக்கள் குடியிருப்பு பகுதிகளையும் அழித்துவிட்டு சாலை அமைக்கிறார்கள்.
இதையெல்லாம் யார் கேட்டது இன்னும் இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் சரியான சாலை வசதிகளோ, ஆற்றைக் கடந்து செல்ல பாலங்களோ இல்லாத நிலை நீடிக்கிறது. ஆனால், இதையெல்லாம் கண்டு கொள்ளாத அரசு, முதலாளிகளின் தேவைக்காக மின்னல் வேகத்தில் செயல்படுகிறது.
அப்படியான ஒரு திட்டம்தான் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதும். மதுரை மக்கள் எதிர்த்தால் அடுத்து எங்கு கொண்டு செல்லலாம் என்று திட்டமிடுகிறது அரசும் முதலாளியும். ஆனால் தமிழ்நாடு இதனை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. மதுரை மக்களும் இதில் உறுதியாக இருக்கிறார்கள்.
மக்கள் இது போன்ற போராட்டங்களின் மூலமே அரசு யாருக்கானது என்பதை உணர்வார்கள். ஒன்றிணைந்து போராடினால் எவ்வளவு பெரிய கொடுங்கோலர்களையும் வீழ்த்தி விடலாம் என்பதனை வரலாற்று அனுபவங்கள் மூலம் மக்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு சமூகத்தை மாற்ற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
- நந்தன்