மகாகும்பமேளா: காவிகளுடன் கைகோர்க்கும் கார்போரேட் பாசிஸ்டுகள்!

0
கும்பமேளாவில் விநியோகிக்கவுள்ள 1 கோடி “ஆர்த்தி சங்ரா” என்ற பிரசுரத்துக்கு நிதி உதவி செய்வதாக அதானி ஒப்புக்கொண்டுள்ளார்.

லகம் முழுவதும் உள்ள கஞ்சாகுடிக்கி இந்து சாமியார்களும், பிணம் தின்னும் அகோரிகளும், இந்தியாவெங்கும் உள்ள ஊரை ஏய்த்துப் பிழைக்கும் டிசைன் டிசைனான பாபாக்களும், ஊரை அடித்து உலையில் போட்டுள்ள கார்போரேட் சாமியார்களும், நாகரிக காலத்திலும் காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்தும் நிர்வாண மனநோயாளிகளும், விளம்பர விரும்பிகளான சமூகஊடக பைத்தியங்களும் 12 வருடங்களுக்கு ஒருமுறை ஒன்றுகூடி குளித்து கும்மாளம் போடும் மகாகும்பமேளா உத்திரபிரதேசம் ப்ரயாக்ராஜ் நகரிலுள்ள திரிவேணி சங்கமத்தில் இம்மாதம் 13-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக இம்மாநில அரசு 7500 கோடிகளை வாரியிறைத்துள்ளது. இதே அரசுதான் தனது மாநிலத்தில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் சேர்க்கை இல்லையென்று சுமார் 27000 அரசு பள்ளிகளை மூடிவிடத் தீர்மானித்துள்ளது. பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு தேவையான நிதியை ஒதுக்க மனமில்லாமல் மகாகும்பமேளாவுக்கு தனது மாநில பட்ஜெட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத நிதியை ஒதுக்கியும், ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியிலிருந்தும் செலவு செய்துள்ளது.

கல்வியறிவு பெற்றுவிட்டால் தங்கள் இருப்பு காலியாகிவிடும் என்பதை அறிந்துள்ள காவிக்கூட்டம் மக்களை பக்தி மற்றும் மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தி வைத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்திவருகிறது. ஆனால் அதை மறைக்க கும்பமேளாவுக்கு இப்படி செலவு செய்வதன்மூலம் 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று மாநில அரசும், ஊடகங்களும் இச்செலவை நியாயப்படுத்தி வருகின்றன. அதற்காகவே யோகி அரசு கும்பமேளாவைத் தொடர்புபடுத்தி 70 தலைப்புகளை பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது. அத்தலைப்புகளின் கீழ் பல்வேறு புனைக்கதைகளை எப்படி எழுதுவது, யாரிடமெல்லாம் பேட்டி எடுக்கவேண்டும், யாரையெல்லாம் “ஹைலைட்” செய்யவேண்டும் என்ற வழிகாட்டுதலையும் கொடுத்துள்ளது.

படிக்க: உத்தர பிரதேசம் ஹத்ராஸ்: மூடநம்பிக்கைக்கு பலியான 134 பேர்!

இது ஒருபுறம் இருந்தாலும், உலகிலேயே ஒரு மத நிகழ்ச்சிக்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடும் காவிகளின் இந்த நிகழ்வில் கார்போரேட்டுகளின் பங்கு இல்லாமலா இருக்கும்? இதோ வந்துவிட்டார்கள் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.கா.-வின் எஜமானர்களும் புரவலர்களுமான அதானியும், அம்பானியும். கடந்த 100 வருடங்களாக புத்தகவடிவில் சனாதனத்தை மக்களிடம் பரப்பிவரும் கீதாபிரஸ் என்ற ஆர்.எஸ்.எஸ்.-சின் சார்பு அமைப்பு அச்சிட்டு கும்பமேளாவில் விநியோகிக்கவுள்ள 1 கோடி “ஆர்த்தி சங்ரா” என்ற பிரசுரத்துக்கு நிதி உதவி செய்வதாக அதானி ஒப்புக்கொண்டுள்ளார். அம்பானியோ அங்குவரும் வசதி படைத்தவர்களுக்கு “காம்பா ஆஷ்ரம்” என்ற பெயரில் பல்வேறு வசதிகளை அளிக்கும் கடைகளை விரிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இவர்களால் நடத்தப்படும் ஊடகங்களும், கோடிமீடியாக்களும் சாமியார் வேடம்பூண்டு ஊரை ஏய்க்கும் பேர்வழிகளையும், கஞ்சாகுடிக்கிகளையும், ஊடக பிரபலங்களையும், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்-சின் மனைவி போன்ற அகிலஉலக பிரபலங்களையும் பின்தொடர்ந்து அவர்களின் ஒவ்வொரு அசைவையும் செய்திகளாகத் இடைவிடாமல் தந்து மக்களை பக்தி பரவசத்திற்குள் மூழ்கடிக்கிறார்கள்.

படிக்க: மகா கும்பமேளா: மக்கள் வரிப்பணத்தில் மூடத்தனத்தை வளர்க்கும் பாஜக அரசு!

கல்வி, பகுத்தறிவு, அறிவியல் வளர்ச்சி, அறிவியல் கண்ணோட்டம் என்பதையெல்லாம் புறக்கணித்து மக்களை பிற்போக்குத்தனத்தில் மூழ்கடித்து சமுதாய முன்னேற்றத்தையே முடக்கிப்போடும் மதவாதிகளின் கைகளில் ஆட்சியதிகாரம் சென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைத்தான் இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்தியாவில் புராண புளுகுமூட்டைகளையே உண்மையென பரப்பித்திரியும் சனாதன காவி கும்பலால் நடத்தப்படும் அரசு மக்களை மூடநம்பிக்கைகளில் மூழ்கடிக்க கோடிக்கணக்கான நிதியை செலவிடுவதும் அதில் கார்போரேட் கொள்ளையர்கள் கூட்டுச்சேர்ந்து கொள்வதும் இயல்பானதே. ஆனால் மனிதகுல வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல கடமைப்பட்டுள்ள நாம் மக்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க இடையறாது பாடுபடுவோம்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here