ந்தியாவில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கின்றது என்பது நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் விவசாயத்தை நம்பி வாழ்கின்ற விவசாயிகளின் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

நாடு முழுவதும் குறுக்கு நெடுக்காக பல்வேறு நதிகள், ஆறுகள், ஓடைகள் ஓடிக் கொண்டிருந்தாலும், பெரும்பாலானவை மழைக்காலங்களில் அதிக அளவு நீர் கொள்ளளவுடன் ஓடி வீணாக கடலில் கலக்கின்றது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.

’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றெல்லாம் பெருமையடித்துக் கொள்கின்ற பாசிச பாஜக அரசு உள்ளிட்டு கடந்த 77 ஆண்டுகளில் எந்த இந்திய ஒன்றிய அரசும் தேசிய நதிகளை ஒன்றிணைப்பது என்ற கொள்கையை அமல்படுத்தவில்லை.

இது ஒருபுறமிருக்க 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நாள் முதல் பாசிச மோடி அரசாங்கமானது இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைவருக்கும் வழங்குவதற்கு பல்லாயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

”நாட்டின் இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பிரதமரின் கிரிஷி சிஞ்சாய் திட்டம், அடல் பூஜல் யோஜனா, ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் ஜல் சக்தி அபியான்“   போன்ற திட்டங்கள் பாராட்டுக்குரியவை என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 2020 ஆம் ஆண்டிலேயே சவடால் அடித்தார்.

பூமியில் தற்போது கிடைக்கும் 3% தூய்மையான தண்ணீரில் 0.5% தான் குடிநீர் தேவைக்கு கிடைக்கிறது. அதிலும் உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார்  18% பேர் இந்தியாவில் வசிக்கும் நிலையில்,  புதுப்பிக்கத்தக்க தண்ணீர் வளத்தில் 4% மட்டுமே நாட்டில்  கிடைக்கிறது..

ஐ.நா. அறிக்கையின் படி இந்தியாவில்  சுமார்  2.2 பில்லியன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம். இந்தியப் பெண்கள்,  “தொலை தூரங்களுக்குச் சென்று தண்ணீர் பிடிப்பதற்காகவே தினந்தோறும் 200 மில்லியன் மணிக்கும் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகின்றனர்,“ என்று  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதலாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, கடந்த 2 ஆண்டுகளில் ரூ.19,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் 544 இடங்களில், கிட்டத்தட்ட 5 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில், பட்டா வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.18,600 கோடி மதிப்பில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 75% வீடுகளில் உள்ள நிலத்தடி நீர் கழிவு நீர் கலந்த நீர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள நிலத்தடி நீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை உண்டாக்கும் பாக்டீரியாவான ஈ கோலியால் மாசுபட்டுள்ளது என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொசு தொல்லை தாங்க முடியலை!

People’s Water Data initiative எனப்படும் ஐஐடியின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பழைய தண்ணீர் குழாய்கள், அசுத்தமான தொட்டிகள் அல்லது தண்ணீர் கொள்கலன்கள் சென்னையில் மோசமாக உள்ளன.

இதன் காரணமாக சென்னை முழுவதும் பாதிக்கப்பட்ட 75% குடும்பங்களில் குழந்தைகள் உள்ளனர். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை உண்டாக்கும் பாக்டீரியாவான ஈ கோலியால் மாசுபட்ட நீரைத்தான் இவர்கள் குடித்து வருகின்றனர். வசதி படைத்த வீடுகளில் வாட்டர் பியூரிஃபையர் மூலமாக உருவாக்கப்படும் ஆர் ஒ வாட்டர் என அழைக்கப்படும் தண்ணீரிலும் கூட இந்த ஈ கோலி பாக்டீரியாக்கள் கலந்துள்ளது என்று ஐஐடி ஆய்வு தெரிவிக்கின்றது.

இது போன்ற வசதிகள் ஏதுமில்லாமல் நேரடியாக குழாய் தண்ணீரை பிடித்துக் குடிக்கும் மக்கள் முதல் பாதுகாப்பாக இருப்பதாக நம்பிக் கொண்டுள்ள மக்கள் வரை அனைவரும் இதை பற்றி அறியாமல் தண்ணீர் சுத்தமாக உள்ளது என்று நினைத்து குடித்துக்கொண்டு இருக்கின்றனர். இனம் புரியாத நோய்கள் பலவும் குடிநீரால் தான் பரவுகிறது என்ற மருத்துவ அறிவியலின் படி பார்த்தால் சென்னையில் மருத்துவ கார்ப்பரேட்டுகள் புதிது புதிதாக மருத்துவமனைகளை துவக்குவதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாகவே தெரிகிறது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் ஊழியர்களை ஒப்பந்த முறைக்கு மாற்றாதே!

ஒரு புறம் மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டே, ”மாநிலங்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு பொருத்தமான திட்டம் வகுக்க வேண்டும்” என நாட்டின் குடியரசு தலைவர் முதல் இந்திய ஒன்றிய அரசான பாசிச பாஜக வரை கூப்பாடு போடுகின்றனர்.

சொந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியாத  இந்தியா, ”உலகின் ஐந்தாவது பெரிய வல்லரசாக மாறுகிறது; ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடக்கின்ற போரை தடுத்து நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்கிறது; இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியான காசாவிற்கு பொருட்களை அனுப்பி தன்னை ஒரு பெரிய மனிதாபிமானியாக காட்டிக் கொள்கிறது என்பதையெல்லாம் சகிக்க முடியவில்லை.

உண்ண உணவு – குடிக்கத் தண்ணீர், உடுத்த உடை, இருக்க இருப்பிடம் மற்றும் கல்வி, மருத்துவம் ஆகிய அடிப்படை தேவைகளையே ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு காலமாக தீர்த்து வைக்க முடியாத இந்திய ஒன்றிய, மாநில அரசுகள் தோல்வியடைந்துள்ளது.

சொந்த நாட்டு குடிமக்களின் மீது எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் வெறும் அறிக்கைகள் மூலமாக சவடால் அடிக்கவும், கோடிக்கணக்கான ரூபாயை நிதியாக ஒதுக்கி அந்தந்த துறையில் உள்ளவர்கள் சுருட்டி கொள்ளையடிக்கவும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பாசிச பாஜக அரசானது ’நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருவதாக கூறுவது அப்பட்டமான பொய்’ என்பதையே சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீர் பாழடைந்துள்ளது என்ற ஐஐடி ஆய்வுகள் நிரூபிக்கின்றது.

மக்களின் பொருளாயாத தேவைகளை, அதாவது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்து செயல்படும் ஜனநாயக கூட்டரசு ஒன்றே உடனடி தேவையாக மாறியுள்ளது.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here