ற்போது சில்லறை விற்பனையில் தக்காளி 120 ரூபாய்க்கு மேலும், மிளகாய் 170 ரூபாய்க்கு மேலும் விற்பனையாகி வருகிறது.

ஆந்திராவில் மட்டும் 58 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் சுமார் 27 லட்சம் மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.  குறிப்பாக, சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில்தான்  அதிகபட்ச உற்பத்தி செய்யப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சந்தையில் தக்காளி வரத்து குறையும்போது அதற்கேற்ப விலை தாறுமாறாக ஏறுகிறது. சமீபத்தில் பெய்துள்ள கனமழையால் நாடு முழுவதும் தக்காளியை பறிப்பதும் பெரு நகரங்களில் உள்ள ஏல மையத்திற்கு லாரிகளில் லோடு ஏற்றி அனுப்புவதும் தடைபட்டன.

இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்கள் மட்டுமன்றி, டெல்லி வரை அனைத்து பெருநகரங்களிலும் தக்காளியின் விலை உயர்ந்தே வருகிறது.

நிலையான தேவை : நிலையற்ற சப்ளை!

கோயம்பேடு மார்க்கெட்டின் தக்காளி தேவை நாள் ஒன்றுக்கு 1,100 டன். இப்படி ஒவ்வொரு காய்கறி்க்கும், பழத்திற்கும் தேவை எவ்வளவு என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். குறிப்பாக பண்டிகை காலங்களில் – அதாவது தற்போது நடந்து முடிந்துள்ள பக்ரீத்தாக இருக்கலாம் அல்லது பொங்கல், தீபாவளியாகவும் இருக்கலாம் எவ்வளவு தேவை? என்பதும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படும் ஒன்றுதான்.

பல்லாயிரம் கோடிகள் புரளும் இத்தகைய வேளாண் துறையில், கோடிகளை அள்ள கார்ப்பரேட்டுகள் அலைபாய்கின்றனர். ஒரு பகுதியில், ஒரு மண்டலத்தில், ஒற்றை பயிரை விளைவிப்பது என்ற கார்ப்பரேட் விவசாய பாணியில் உற்பத்தியை மாற்றி அமைக்கவே விரும்புகிறது ஒன்றிய அரசு.

விவசாயிகளும் கூட ஒரு குறிப்பிட்ட பகுதியில் மண்வளம் ,நீர் வளம் அங்குள்ள தட்பவெப்ப நிலை,கடந்த ஆண்டில் மார்க்கெட்டில் எந்த பொருளுக்கு என்ன விலை கிடைத்தது என்ற கணக்கின் அடிப்படையிலும் தற்போதைய பருவத்திற்கான பயிரை தீர்மானிக்கின்றனர். பெரும்பாலானோர் ஒரே கண்ணோட்டத்தில் சிந்திப்பதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில், ஒரே பயிரையே தேர்ந்தெடுக்கின்றனர். அந்த ஒற்றைப் பயிரையே குலுக்கல் லாட்டரியில் பம்பர் பரிசுக்கான எண்ணாக மதிப்பிட்டு பெரும்பாலானோர் பயிரிடுகின்றனர்.

சித்தூரில் உள்ள மதனப்பள்ளி ( Andhra pradesh) தக்காளியின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோன்று மஹாராஷ்டிரா மாநிலம் புனே, சோலாப்பூரில் தக்காளிக்கு பெரிய மார்க்கெட் உள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் தமது தோட்டங்களில் கடும் உழைப்பை செலுத்தி விட்டு, லாட்டரி குலுக்கல் முடிவுக்காக காத்திருப்பவனைப் போல, நல்ல விலை கிடைக்க வேண்டும் என தவித்து கிடக்கின்றனர். சில நேரங்களில் குலுக்கலில் பம்பர் பரிசும், பல நேரங்களில் போட்ட முதலீடு கூட கைக்கு வராமல் ஆறுதல் பரிசு மட்டுமேவும் கிடைக்கிறது.

ஒரு பிராந்தியத்தில் இயற்கை சீற்றம் – அதாவது கனமழையோ அல்லது வறட்சியோ தாக்கும் போது அந்த குறிப்பிட்ட மண்டலத்தில் விவசாயம் செய்யப்பட்ட ஒற்றை பயிர் விளைச்சல் மொத்தமாக அழிந்துவிடும்.

விவசாயி இலாபத்தை குவிக்கிறாரா?

சதம் அடிக்கும் தக்காளி விலை ஏற்றத்தால் தக்காளியை பயிரிட்ட விவசாயிகள் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள் தானே! அதுதான் இல்லை. சில்லறை விற்பனையில் கிலோ 150 ரூபாயை தாண்டி விற்பனையானாலும் கூட விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு சராசரியாக 40முதல்50 ரூபாய் வரை  மட்டுமே கிடைத்துள்ளது.

நவம்பர் 22ஆம் தேதி, சித்தூர் மாவட்டம் குர்ரம் கொண்டாவில் தக்காளியின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.10,800-ஐ எட்டியது. அதாவது, இங்கு மொத்த விற்பனை விலை கிலோ ரூ.108. இருப்பினும், ஒடிசாவின் சுந்தர்காரில் அமைந்துள்ள போனையில் அதிகபட்ச விலை ரூ.2000 மட்டுமே. அதேசமயம் இமாச்சலத்தின் காங்க்ரா மற்றும் சம்பாவில் குவிண்டால் ஒன்றுக்கு 7,000 ரூபாய். அதேசமயம் டெல்லியின் ஆசாத்பூர் மண்டியில் தக்காளியின் குறைந்தபட்ச விலை ரூ.24 ஆகவும், அதிகபட்சமாக கிலோ ரூ.72 ஆகவுமே இருந்தது என்கிறது கிருஷி ஜாக்ரான் இணையதளம்.

அகில இந்திய காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் காட்கில், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால், பயிர்கள் சேதமடைந்துள்ளதாக டிவி-9 க்கு தெரிவித்தார். இதனால் தற்போது விலை ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் 20 கிலோ தக்காளியை விவசாயிகள் 800 முதல் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் கடின உழைப்பின் அதிகபட்ச பலனை இடைத்தரகர்களும் சில்லறை விற்பனையாளர்களும் அறுவடை செய்கின்றனர் என்று காட்கில் கூறியதை இணையத்தில் பார்க்க முடிந்தது.

இப்படி ஒரு பரந்த பரப்பளவில் விளைவிக்கப்பட்ட பயிர் அழியும்போது ஏற்படும் தட்டுப்பாடானது, சுற்றியுள்ள பல மாநிலங்களிலும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திய தீரும். அதன் பலனை இடைத்தரகர்கள் வாரி சுருட்டிக் கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது.

ஒற்றைப்பயிர் உற்பத்தி: வரமா – சாபமா?

ஒற்றைப்பயிர் உற்பத்தியானது சந்தையில் கடும் தட்டுப்பாட்டை, அல்லது மித மிஞ்சிய குவிப்பால் கடும் விலை வீழ்ச்சியையே ஏற்படுத்தும். அதற்கு ஏற்ப அந்த குறிப்பிட்ட விளைபொருளின் விலை தாறுமாறாக உயரும்.

தேனியை வாழை மண்டலமாக அறிவித்து ராபஸ்டா பழத்தை பயிரிட வைத்தது போல, சில மாவட்டங்களை ஒன்றிணைத்து, ஒற்றைப் பயிர் மண்டலங்களாக அறிவித்து, விவசாயத்தில் அரசு தலையிட்டு, கார்ப்பரேட்டுகளுக்காக கொண்டுவரும் முன்னெடுப்புகள் பலமுறை மண்ணைக் கவ்வியே உள்ளன.

முதலாளித்துவ விவசாய பாணியிலான பெரும் பண்ணைகளில் ஒற்றைப் பயிர் விளைவிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு தற்போதைய தக்காளி, மிளகாய் விலை ஏற்றமே சாட்சி!

நம்நாட்டில் காய்கறிகளுக்கான தேவை என்பது நிலையான ஒன்று. அதற்கு ஏற்ப உற்பத்தி ஆகிறதா? விளைச்சல் உள்ளதா  ? என்பதை கண்காணிக்கவும் , கூடுதல் விளைச்சல் வருகிறது எனும் போது அதை கொள்முதல் செய்து, பதப்படுத்தி, மதிப்பு கூட்டி, இருப்பு வைத்து, விநியோகிக்கவும் அரசுகள் உருப்படியாக எதையும் திட்டமிடுவதில்லை.

இதன் விளைவாக ,நன்றாக விளைந்தாலும் விலை இல்லாமல் விவசாயிகள் தெருவோரத்திலும், மாடுகளுக்கும் தமது விளைபொருட்களை கொட்டிச்செல்லும் அவலத்தை அவ்வப்போது பார்க்கிறோம்.

பழனியின் ஆயக்குடி சந்தையில் கொய்யாப்பழங்கள் இப்படித்தான் கடந்த வாரம் வீதியில் கொட்டப்பட்டன. இதே வரிசையில் நாடு முழுவதும் உள்ள கொள்முதல் – ஏல மையங்களில் ஏலம் எடுக்க ஆட்கள் இல்லாமல் முட்டைகோஸ், வெண்டைக்காய் போன்றவை தெருவோரத்தில் கொட்டப்பட்டதையும் பார்த்துள்ளோம். இதுபற்றி  முன்னரே எழுதியும் உள்ளோம்.

இதையும் படியுங்கள்: 
அதிகரிக்கும் தக்காளி விலை: என்ன செய்கின்றன ஒன்றிய, மாநில அரசுகள்?
பருத்தி, நூல் விலை உயர்வு! அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையின் விளைவே!

 

மறுபுறம் நாட்டின் தேவைக்கு ஏற்ப உற்பத்தியோ வரத்தோ சப்ளையோ இல்லாத போதும் விலைவாசி ஏறத்தான் செய்கிறது. விளைச்சல் இல்லாத போதும், நன்றாக விளைந்த பழங்கள்,காய்கறிகள் மழை வெள்ளத்தால் அழுகிவிடும் போதும், கோயம்பேட்டின் தேவைக்கேற்ற  சரக்குகள்  வருவதில்லை.  இப்படி பற்றாக்குறை காரணமாக தாறுமாறாக விலை உயர்ந்து மக்கள் வாங்க முடியாமல் தவிப்பதையும் பார்க்கிறோம்.

விலை ஏற்றத்தை தடுக்க முடியாதா?

அரசு நினைத்தால் நிச்சயமாக தடுக்க முடியும். காய்கறிகளோ, பழங்களோ எதுவாக இருந்தாலும் அரசு நினைத்தால் மொத்த விளைச்சலையும் கொள்முதல் செய்ய முடியும். அதை மதிப்பு கூட்டி சேமித்து, தேவைக்கேற்ப நாடு முழுவதும் விநியோகிக்கவும் முடியும். நம் தேவைக்கு மிஞ்சியதை கொள்முதல் செய்து, FCI  குடோன்களின் தரத்தை உயர்த்தி இருப்பு வைத்து, ஏற்றுமதி செய்யவும் கூட அரசால் முடியும்.

அதேபோல் வேளாண்மையை லாபகரமாக நடத்த சிறு குறு, நடுத்தர விவசாயிகளுக்கு அரசு நினைத்தால் உதவவும் முடியும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயற்கை சீற்றம் காரணமாக விளைச்சல்,அறுவடை பாதிப்புக்கு உள்ளாகிறது. இதன் மூலம் நாடு தழுவிய சப்ளையில் ஏற்படும் பற்றாக்குறையை தடுக்க வேண்டுமானால், அதையும் அரசு ஒழுங்குபடுத்த முடியும்.

முதலாளித்துவ பாணியில் ஒற்றைப் பயிர் மண்டலமாக மாற்றுவதற்கு பதிலாக, பயிர் செய்ய சாத்தியமுள்ள நாட்டின் பிறபகுதியிலும் – பரவலாக ஒரு பயிரை பயிரிட வைப்பதன் மூலம், திட்டமிட்டு காய்கறி சப்ளையின், வரத்துக்களின் சமநிலையை பராமரிக்கவும் முடியும். ஒரு பகுதியில் விளைச்சல் பாதிக்கப்படும் பொழுது, அதற்குப் பொருத்தமான இழப்பீட்டை தந்து,  விவசாயி நொடிந்து போகாமல் காப்பாற்றவும் முடியும்.

தமிழக அரசு தமது பண்ணை பசுமை  கடைகளில் தக்காளியை ஒரு கிலோ 68 ரூபாய்க்கு விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது தான். ஆனால் விவசாயிகளை வாழ வைக்கவோ, அல்லது நுகர்வோர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை உத்திரவாதம் செய்யவோ இது போதுமானதல்ல.

வேளாண்துறையில் கோலோச்ச விரும்பும், அதானிகளுக்காக விலை நிலங்களை பிடுங்கித் தர துடிக்கும் மோடி அமித்ஷா தலைமையிலான  கும்பலுக்கு விவசாயிகளின் கோரிக்கையோ, விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை மக்களின் கவலைகளோ ஒரு பொருட்டாக கூட இருக்காது தானே!

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here