இந்துத்துவ மிரட்டல்களுக்கு அடிபணியும் இந்திய ராணுவம்!


ந்தியா விடுதலை அடைந்த பிறகு ஜவகர்லால் நேரு உள்ளிட்ட சில தலைவர்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடினர். மதச்சார்பின்மை என்பதிலும் அக்கறை செலுத்தினர். பாதுகாப்புப் படைகள், திரைப்படத்துறை, ரயில்வே மற்றும் கிரிக்கெட் போன்றவற்றில் இந்தப் பன்முகத் தன்மை என்பது பேணப்பட்டு இவை மதச்சார்பின்மையின் சின்னங்களாகவும் விளங்கி வருகின்றன.

நாட்டின் பன்முகத்தன்மை காக்கப்பட வேண்டும்: பிரதமா் நரேந்திர மோடி- Dinamani

இரயில் பயணத்தில் உங்களது பக்கத்து இருக்கையில் இருப்பவர் யாரென உங்களுக்குத் தெரியாது. ஒரு திரைப்பட யூனிட்டில் பல்வேறு பின்னணியை சேர்ந்தவர்கள் பணிபுரிவார்கள். ஒரு ஹிந்தி மசாலா படத்தில் கூட மதச்சார்பற்ற இந்தியாவின் அடையாளமாக, படத்தின் முஸ்லிம் ஹீரோ இந்து பெண்ணை காதலிப்பார். இதை ரசிகர்கள் கைதட்டி வரவேற்பார்கள். மேலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு பாதுகாப்பு படைகள் சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன. சிப்பாய்கள் தோளோடு தோள் நின்று போராடுகிறார்கள்.

ஒவ்வொரு பண்டிகையையும் அனைத்து மதத்தினரும் சேர்ந்து அன்புடனும், நேசத்துடனும் கொண்டாடுகின்றனர். இது இங்கு நிலவும் நீண்டகால பாரம்பரியம் ஆகும். இதற்குத்தான் இப்போது குறுகிய மனநிலை கொண்ட இந்துத்துவ கும்பல் வேட்டு வைக்கிறது. வெறுப்பை விதைத்து இந்தியாவின் முகத்தையே மாற்ற முயல்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் இணக்கமாக இருக்கிறார்களா? ஒன்றாக விளையாடுகிறார்களா? முஸ்லிம்களின் இப்தாரில் இந்துக்கள் கலந்து கொள்கிறார்களா? இந்துக்களின் தீபாவளியை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்களா?

ஐயகோ! இது இந்தியாவுக்கு ஆபத்து, இதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும், மத நல்லிணக்கம் என்பதை ஒழித்தாக வேண்டும் என்று இந்துத்துவ தீவிரவாதிகள் அலறுகிறார்கள். ஆக்கம் என்பது அவர்களது அகராதியில் இல்லை. அழிப்பு மட்டுமே அவர்களது இயல்பான குணமாக உள்ளது. 2014- ல் மோடி பிரதமரானவுடன், மும்பைத் திரையுலகம் முதலில் தாக்குதல் இலக்கானது. ம.பி -யின் முன்னாள் பிஜேபி அமைச்சரான கைலாஷ் விஜய்வாஜியா, ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஆதரவாளர் என்பதாக ட்விட்டரில் பதிவிட்டார். அதேபோல அன்றைக்கு எம்பியாக இருந்த யோகி ஆதித்யநாத், ஷாருக்கை பாக் தீவிரவாதி ஹபீஸ் சயீதுடன் ஒப்பிட்டுப் பேசினார். ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால் அப்போது சற்று பின்வாங்கினர்.

ம.பி -யின் முன்னாள் பிஜேபி அமைச்சரான கைலாஷ் விஜய்வாஜியா

ஆனால் அந்தக் கருத்துக்கள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிப் போக்கின் முன்னோட்டமாகவே அமைந்தன. இப்போது திரையுலகில் உள்ள பலரும் ஆளும்கட்சியின் சித்தாந்தத்திற்கு ஆதரவான படங்களையே உருவாக்குகின்றனர். அதாவது முஸ்லிம்களை மிக மோசமாக சித்தரிக்கின்றனர். வரலாற்றை சிதைத்து, திரித்து திரைப்படம் எடுக்கின்றனர். காவிக் கொடியானது உற்சாகமாக அசைக்கபடுகிறது. இந்துராஷ்டிர தேசியவாதம் முன்னணிக்கு வருகிறது.

திரைப்படத்தை உருவாக்குபவர்கள் பெரும்பாலும் சமூக மாற்றங்களையும், அன்றைய காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளையும் வைத்தே படம் எடுக்கிறார்கள். எனினும் வணிக நிபந்தனைகளையும், அன்றைய அரசியல் எஜமானர்களை மகிழ்விப்பதுமே நல்ல நோக்கமாக கருதப்படுகிறது. காவி கும்பலுக்கு சினிமாதான் எப்போதும் தாக்குதல் இலக்காகவே இருந்து வருகிறது. இந்துத்துவ சித்தாந்தத்திற்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கும் அதேவேளையில் காவி சித்தாந்தத்தை பரப்பவும் அவர்கள் சினிமாவை பயன்படுத்த தவறுவதில்லை. காஷ்மீர் பைல்ஸ் படத்தை இந்து வெறியை கக்கும் நோக்கில் பிரச்சார படமாக எடுத்து கொண்டாடும் இந்த கும்பல் அமர், அக்பர், அந்தோணி படத்தின் மறு ஆக்கத்தை அனுமதிக்க மாட்டார்கள். திரைப்பட வணிகம் என்பது பெரும் ஜாம்பவான்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்பது அவ்வளவு எளிதல்ல.

திரைத்துறையின் நிலை இதுவென்றால் ராணுவம் எப்படி உள்ளது என பார்ப்போம்.

இராணுவம் என்பது கட்டளைகளை பின்பற்றுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ஒழுக்கமான நிறுவனமாகும். இது நாட்டைக் காக்கவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் உதவக்கூடியது எனினும் மாத சம்பளம், ஓய்வூதியம் பெறுவது போன்ற நடைமுறைகளால் அது அரசாங்கத்துக்கு கீழ்ப்படுகிறது. இதன் பொருள் உயர் அதிகாரிகளின் வழியே இதனை எளிதாக அரசால் கையாள முடியும் என்பதே! இதற்கு சமீபத்திய உதாரணம்தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா எனுமிடத்தில் ராணுவம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்ச்சி குறித்தான ட்விட்டர் பதிவு மர்மமான முறையில் நீக்கப்பட்டது ஆகும்.

இந்த ராணுவத்தின் டிவிட்டர் பதிவு மிக ‘ஆபத்தான’ ஹேஷ்டேக்கான “மதச்சார்பின்மை” எனும் நல்ல விஷயத்தை கொண்டிருந்ததுதான் காரணமாம். இந்த டிவீட் பதிவு வேட்டை நாய்களின் கவனத்துக்கு வந்தவுடனே, இந்துத்துவா சார்பு தொலைக்காட்சியை நடத்தும் வெறித்தனமாக கூச்சலிடும் நபர், இதற்கு எதிராக மிரட்டல் விடுத்து பதிவிட்டார். ராணுவத்தின் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரி, இவரது கருத்தை புறந்தள்ளாமல், இப்தார் குறித்த டிவீட்டையே நீக்கிவிட்டார். ஒருவேளை அதை நீக்கச் சொல்லி அவருக்கு கட்டளை வந்திருக்கலாம். அதை செய்யா விட்டால் அவருக்கு காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து உடனடியாக அதை நீக்கியிருக்கலாம்.

எப்படி இருப்பினும் இந்த வருந்தத்தக்க நிகழ்வு நம் நாடு இப்போதுள்ள ஆபத்தான நிலையை நமக்கு உணர்த்துகிறது. ராணுவம் போன்ற கட்டுக்கோப்பான அமைப்பு கூட இதுபோன்ற நச்சுத்தன்மையால் பாதிக்கப்படுவது நாட்டிற்கு நல்லதல்ல. இதுபோன்ற இப்தார் நிகழ்வுகளை இனி ராணுவம் நடத்துமா? அல்லது மதச்சார்பின்மை எனும் நீண்டகால மரபை கைவிட்டு விடுமா? பாசிச ஆட்சியாளர்கள் இதை அனுமதிப்பார்களா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்துமத வெறியர்கள் நமது மண்ணின் நீண்டகால மரபுகளை சிதைத்து கைவிட வைக்கிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கான் குறித்த யோகி ஆதித்யநாத் கருத்து அபத்தமானது என பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அவர் உத்தரப் பிரதேசத்தின் முதல்வர்! அதேவேளையில் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டதில் இருந்து அவரை பார்க்கவோ அவரது வார்த்தைகளை கேட்கவோ முடியவில்லை. நிலைமை எப்படி மாறிவிட்டது பாருங்கள்.

படிக்க:

♦ இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிப்பத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!

 இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்

ஒரு வியாபார நிறுவனம் ஒழுக்கமான மற்றும் மதச்சார்பற்ற  வகையில் வெளியிட்ட விளம்பரத்தால் ‘உணர்வு புண்பட்டதாக’ அதற்கு சங்கிகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்தால், தனது வியாபாரம் பாதிக்கப்படும் அல்லது தனது கடை சூறையாடப்படலாம் என அஞ்சி அந்த விளம்பரத்தை அந்த நிறுவனம் நிறுத்தினால் அதில்கூட ஒரு நியாயம் உள்ளது. ஆனால் ராணுவம் அதன் போற்றுதலுக்குரிய மரபுகளை தகர்க்கும் வகையிலான தவறான கருத்துக்கு, இந்துத்துவ மிரட்டலுக்கு ஏன் அடிபணிய வேண்டும்? அப்படி அடிபணிகிறது என்றால் எந்த வகையான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் என நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்ததாக, கிரிக்கெட்டிலும் முஸ்லிம் வீரர்களை சேர்க்கக்கூடாது என்ற பிரச்சாரத்தை இந்துத்துவ கும்பல் தொடங்கினால், உள்துறை அமைச்சரின் மகனால் நடத்தப்படும் பிசிசிஐ ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அரசாங்க வேலைகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படும் சூழலும் உருவாகலாம். ஏற்கனவே இந்துத்துவா சேனல் நடத்தும் வெறிக் கூச்சலிடும் கோஸ்வாமி, முஸ்லிம்கள் வேலை ஜிஹாத்தில் ஈடுபடுவதாக பொய்ப்பிரச்சாரம் செய்கிறார். தனியார் நிறுவனங்களும் இதை பின்பற்ற தொடங்கினால் என்னவாகும்?

மதச்சார்பின்மை என்பது இந்துத்துவவாதிகளின் உணர்வுகளை புண்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் வெறுப்பை விதைத்து அறுவடை செய்ய நினைக்கும் ஓட்டுக்களை தடுப்பதில் அது ஒரு கருவியாக உள்ளது. இதற்கு எதிராகத்தான்  இதுவரை இந்துத்துவ கருத்துக்கள் இல்லாத இடங்களில் எல்லாம் அதைப் பரப்ப மும்மரமாக வேலை செய்கிறது காவி கும்பல்.

அப்பட்டமான மதவெறிக்கு அடிபணியாமல் இருந்து வந்த இந்தியாவில், இப்போது ராணுவம் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களே இந்துத்துவ சக்திகளுக்கு பணியும் போது, மனிதாபிமானம், கண்ணியத்தில் நம்பிக்கையுள்ள சாதாரண குடிமக்களால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். இருப்பினும் இத்தனை காலம் பாதுகாத்து வந்த மதச்சார்பற்ற இந்தியாவை கட்டிக் காக்கும் கடமையில், சமூக அக்கறை கொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடித்தான் ஆக வேண்டும்!

– சித்தார்த் பாட்டியா

மூலக்கட்டுரை:

https://m.thewire.in/article/communalism/by-giving-in-to-hindutva-trolling-the-army-has-undermined-its-secular-ideals

தமிழில் ஆக்கம்: குரு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here