மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு டாலருக்கு ரூ.63 ஆக இருந்த டாலர்-ரூபாய் மாற்று விகிதம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி நிலவரப்படி, ரூ.84.07 என்னும் மதிப்பில் உள்ளது. இது ரூபாயின் மதிப்பில் இதுவரை கண்டிராத சரிவு.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் போது ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை 40 ரூபாய்க்கு கொண்டு வந்துவிடுவேன் என வாய்சவடால் அடித்தார். ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் என பல வாய்சவடால்களைப் போலவே இதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்பது நம் கண்முன் தெரிகிறது‌.

மற்ற பிரச்சினைகள் குறித்து எழுந்த விவாதங்கள் அளவுகூட ரூபாய் மதிப்பின் சரிவு குறித்து  எழவில்லை. அது ஏதோ பொருளாதார அறிஞர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், டாலருக்கு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி பெரும்பான்மை உழைக்கும் மக்களையும் பாதிக்கவே செய்கிறது.

7 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை எட்டி, பல நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி வருகிறது என மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

பணமாற்று விகிதத்தின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பானது. தங்க கையிருப்பு, ஏற்றுமதி, இறக்குமதி, ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், பண வீக்கம், அந்நியச் செலாவணி கையிருப்பு, நாட்டில் அரசியல் தன்மை, கொள்கை முடிவுகள், பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வட்டி விகிதங்கள், உலக நாடுகளின் நிச்சயமற்ற தன்மை என இவைதான் பொதுவாக நாட்டின் பணமதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு முக்கியக் காரணம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இங்கு பயன்படுத்தப்படும் மொத்த கச்சா எண்ணெயில் 88 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், நம் தேவையில் 12 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது.

சர்வதேச அளவில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். உதாரணமாக, யுக்ரேன்-ரஷ்யா போர், சமீபத்திய லெபனான்-இஸ்ரேல் மோதல், ஒபெக் பிளஸ் (OPEC plus) நாடுகள் ஒன்றிணைந்து உற்பத்தியைக் குறைத்து செயற்கையாக தேவையை அதிகரிக்கும் போக்கு ஆகியவை கச்சா எண்ணெய் விலையை பாதிக்கும்.

இருப்பினும், இம்முறை கச்சா எண்ணெய் விலை முன்பை விட குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் 89 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, அக்டோபரில் 76 டாலரை நெருங்கியது.

இது உண்மையில் நமக்கு சாதகமான செய்தி என்றாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

டாலர் மதிப்பு உயர்வு!

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்காவே ஆயுதங்கள் விற்பனை செய்தது. இதன் மூலம் அப்போது நெருக்கடியில் இருந்த பல நாடுகளும் தங்கத்தைக் கொண்டே ஆயுதங்களை வாங்கின. இது பல்வேறு நாடுகளின் தங்க கையிருப்பை குறைத்தது. தொடர்ந்து தங்கத்தை அந்நிய செலவாணியாக பயன்படுத்த முடியாமல் போனதால் அமெரிக்க டாலரை பயன்படுத்த பிரட்டன்வுட்ஸ் ஒப்பந்தம் மூலம் 44 நாடுகள் முடிவெடுத்தன. அது உலகம் முழுவதும் விரிவடைந்தது.

அமெரிக்காவின் அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கம் காரணமாக டாலரே உலகின் பொது நாணயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு அமெரிக்க டாலர் மதிப்பும் ஒரு காரணம். அமெரிக்க டாலர் உலக வர்த்தகத்தில் ‘பொது நாணயமாகக்’ (reserve currency of the world) கருதப்படுகிறது. அதாவது, ஏதேனும் நிச்சயமற்ற சூழல் ஏற்படும் போது, எந்த நாட்டில் அதிக அமெரிக்க நாணயம் மற்றும் தங்கம் இருப்பு உள்ளதோ, ​​அவர்களின் பண மதிப்பு அதிக மதிப்புடையது என்று கருதலாம்.

சமீப ஆண்டுகளில் அமெரிக்கா அதன் வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் நடவடிக்கையாக அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

ஆட்டம் காணும் அமெரிக்க டாலர், புதிய BRICS நாணயம் வருமா?

மேலே உள்ள தரவை பார்க்கும் போது, அமெரிக்காவில் 2021 இல் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்த வட்டி விகிதம் செப்டம்பர் 2024 இல் 5.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி சமீபத்தில் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த பதினாறு ஆண்டுகளில் வட்டி விகிதம் இந்த அளவில் இருந்ததில்லை. கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால், சமீப காலமாக டாலர் மதிப்பு வலுவாக உள்ளது. இது மறைமுகமாக ரூபாயின் மதிப்பை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.

ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும், BRICS போன்ற கூட்டமைப்புகளும் தங்கள் சொந்த நாணயத்தைக் கொண்டு சர்வதேச வர்த்தகத்தை நடத்த முயன்ற போதும் டாலர் மூலமான வர்த்தகமே இன்னும் பலமாக உள்ளது.

உழைக்கும் மக்களுக்கு பெரும்பாதிப்பு!

ரூபாயின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. அதனால் தெரிந்தோ தெரியாமலோ நாட்டில் உள்ள சாமானியர்கள் மத்தியில் அதன் தாக்கம் நிச்சயமாக இருக்கும்.

உதாரணத்திற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு டாலரில் பணம் செலுத்த வேண்டும், அதனால் ரூபாய் மதிப்பு எவ்வளவு வீழ்ச்சியடைகிறதோ, அவ்வளவு பணம் செலுத்த வேண்டும். இது நிறுவனங்களுக்கு நஷ்டத்தை அதிகரிப்பதோடு, கட்டணத்தை உயர்த்துவதற்கு நிறுவனங்கள் முடிவு செய்யும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை கிடுகிடுவென உயரும். அதன் பின்னர் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போன், கேமரா மற்றும் இதர பொருட்களின் விலை உயரும். வெளியூர் பயணங்களுக்கு அதிக செலவாகும். வெளிநாட்டில் படிப்பது சுமையாக மாறும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை உயரும்.

மோடி அரசும் ரிசர்வ் வங்கியும் இதை சரி செய்யுமா?

பாசிச மோடி இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற பின் ஆர்எஸ்எஸ் தான் அன்றாட நிகழ்ச்சி நிரலைத் தீர்மானித்து வருகிறது. எந்த பொருளை பற்றி பேச வேண்டும் என்பதை பற்றியும், எந்த பொருளை பற்றி பேசினால் அடிப்படையான பிரச்சனைகளை பற்றி மக்கள் பேச மாட்டார்கள் என்பதையும் ஒரு பார்முலாவை போல கடைபிடித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ் அன்றாட நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கிறது. இந்த நிகழ்ச்சி நிரலில் மக்களுடைய வாழ்வாதார பிரச்சனைகள் எதுவும் விவாதிக்கப்படுவதில்லை.

வங்கிகளை திவாலாக்கும் மோசடி கும்பல்! ரிசர்வ் வங்கியின் கையாலாகாத்தனம்!

பார்ப்பன இந்துமத வெறியூட்டுவது, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், ஆதிக்க சாதிகளின் இட ஒதுக்கீடு பற்றி பொய் பித்தலாட்டமான தகவல்களை அறிவிப்பது, அன்றாடம் பிரிவினைவாத, பயங்கரவாத, தேசிய வெறியூட்டுகின்ற பிரச்சாரத்தை தவிர மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி பேசாத கார்ப்பரேட் கைக்கூலிகளின் கட்சியால் பொருளாதார பிரச்சனையை எப்படி சரி செய்ய முடியும்.

2018 லிருந்து தற்போது வரை காவிப்படையின் பொருளாதாரத் தாக்குதலை சுதந்திரமாக நடத்த ஏதுவாக இருந்த ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் சக்திகாந்த தாஸ் இந்த 6 ஆண்டுகள் முழுவதும் மோடி செய்த தில்லு முல்லுகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நாடு இதோ வளர்ந்துவிட்டது, அதோ வளர்ந்துவிட்டது, அடுத்த ஆண்டில் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவில் பொருளாதார வளர்ச்சி உள்ளது என மோடிக்கு நிகராக பொருளாதார பொய்களை தற்போது வரை புளுகி வரும் இவரும் மீட்கப்போவதில்லை என்பதே உறுதி.

எனவே, கடும் விலையேற்றத்துக்கு அடிப்படையான கார்ப்பரேட் காவி பாசிசத்தின் அரசியல், பொருளாதார கொள்கைகளை வீழ்த்துகின்ற, அதற்கு மாற்றாக மக்களின் வாழ்க்கையை உத்திரவாதப்படுத்துகின்ற சுயசார்பு பொருளாதாரக் கொள்கையை கட்டமைக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி செயல்படுவதே காலத்தின் கட்டாயமாகும்.

பரூக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here