கேள்வி: தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வது ஏன்? இதற்கும் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு?

மணவாளன். திருப்பூர்.

நமக்கும் தங்கத்திற்கும் என்ன தோழர் சம்பந்தம்? தங்கம் விலை ஏறினால் என்ன? இறங்கினால் என்ன? என்று நாம் கருதி விட முடியாது. ஏனென்றால் நிதி மூலதனம் தங்கத்தின் விலை ஆகியவை இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகிறது என்பதால் காரல் மார்க்ஸ் காலத்திலிருந்து தங்கத்தை பற்றி நமது ஆய்வு தொடர்கிறது.

காரல் மார்க்ஸ் தனது மூலதனத்தில், “இந்த புத்தகம் முழுவதிலுமே எளிமையை முன்னிட்டு தங்கத்தை பணம் பண்டமாக நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார். தங்கம் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் சின்னமாகும். உலகம் முழுவதும் ஆபத்துகளை ஏற்படுத்துகின்ற மூலதனத்திற்கு அது மறுபெயர் என்று ஓரளவிற்கு கூறலாம்.

ரஷ்யாவின் மிகச்சிறந்த மக்கள் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி, தங்கத்தை ’மஞ்சள் பிசாசு’ என்று குறிக்கின்ற வகையில் எழுதினார். அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க் பணத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்ற ஒரு அரக்கத்தனமான நகரம் என்று பொருள் கொள்ளும்படி ’மஞ்சள் பிசாசு நகரம்’ என்று முதன் முதலில் முன்வைத்தது தான் பின்னர் தங்கத்தை குறிப்பிடுவதற்கான குறியீடாக மஞ்சள் பிசாசு என்று மாறியுள்ளது.

“மஞ்சள் பிசாசு தன்னுடைய முகத்தை மாற்றிக் கொள்ள முடியும். அது முன்னேற்றம், கடன், வசதி, தொழில்நுட்பம் மற்றும் கலை என்ற கௌரவமான முகமூடிக்கு பின்னால் மறைந்து கொள்கிறது. முதலாளித்துவம் நீடிக்கின்ற வரை மஞ்சள் பிசாசும் உயிரோடு இருக்கும். முன்பிருந்ததைப் போலவே அது மக்களுடைய மனங்களில் முதலாளித்துவ நாகரிகத்தின், பண நாகரிகத்தின் சின்னமாக இருக்கிறது. அதுவும் தகுந்த காரணங்களோடு தான்.”என்று மஞ்சள் பிசாசின் முகத்திரையை கிழித்தெறிகிறார் பேராசிரியர் அனிக்கின்.

இயற்கையாக கிடைக்கின்ற உலோகத்தை அதன் மதிப்பை கூட்டுகின்ற வகையில் பணத்தின் மதிப்பிற்கும், தங்கத்தின் மதிப்பிற்கும் இணைவைத்து பார்க்கின்ற சமூகம் முதலாளித்துவ சமூகத்தில் தான் தோன்றியது என்றாலும், தங்கம் என்ற உலோகத்தை மனித குலம் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு அறிந்துக் கொள்ளத் துவங்கியது.

இன்றைய நவீன காலத்தில் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் 4000 டன் தங்கத்தில் சுமார் 1500 டன் அளவிற்கு தங்கம் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் மத்திய வங்கிகள் இருப்புக்காக வாங்கப்படுகிறது.

முதலாவதாக ஒரு நாட்டின் மத்திய வங்கியில் எவ்வளவு தங்கம் கையிருப்பு இருக்கின்றதோ அதற்கு நிகரான பணத்தை அச்சடித்து வெளியிட வேண்டும் என்று பணம் குறித்த முதலாளித்துவ கோட்பாடுகள் முன்வைக்கின்றன. ஆனால் இந்த விதிகளை உருவாக்கிய ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளானாலும் சரி! அமெரிக்க மேல்நிலை வல்லரசானாலும் சரி! இவற்றையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு தங்கள் தேவைக்கேற்ப பணத்தை அச்சடித்து தள்ளுகிறார்கள்.

அமெரிக்காவானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டாலர் வர்த்தகம் மூலமாக உலகம் முழுவதையும் ஆதிக்கம் செய்யத் துவங்கியது. அப்போது பணவியல் கோட்பாடு அடிப்படையில் டாலரானது உலகத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கின்ற நாணயமாக மாறியது.

தற்போது அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு தினசரி ஒரு கொள்கை, வரி விதிப்புக் கொள்கை, உள்நாட்டில் நடக்கின்ற டிரம்ப்புக்கு எதிரான கலகங்கள் உலக நாடுகளில் சமாதானம் என்ற பெயரில் அமெரிக்கா பல நாடுகளுக்கு கடன் வாரிக் கொடுப்பது போன்றவற்றின் மூலமாக அமெரிக்காவின் பொருளாதாரம் நிலையற்று தடுமாறிக் கொண்டுள்ளது.

இதனால் உலகில் டாலரின் மூலம் வர்த்தகம் என்பது மாறி தங்கத்தின் மூலமாக வர்த்தகம் என்பது நடக்கத் துவங்கியுள்ளது. டாலரின் மீது உள்ள நம்பிக்கை இழக்க இழக்க தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது தான் டாலர் வெர்சஸ் தங்கம் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள உறவு மற்றும் சிக்கலாகும்.

அமெரிக்க டாலரின் வீழ்ச்சியினால், பிற நாடுகள் டாலரை கொடுத்து தங்கத்தை வாங்கி சேமித்துக் கொள்ளத் துவங்கியுள்ளனர். இதில் உலகை ஆதிக்கம் செலுத்துகின்ற சீனா போன்ற நாடுகள் மட்டுமின்றி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சிலவும், ஏன் இந்தியாவும் கூட தங்கத்தை வாங்கி குவித்துக் கொள்கிறது. ஒரு வேடிக்கையாக இந்தியாவில் அரசாங்கத்திடம் இருக்கின்ற தங்க கையிருப்பை காட்டிலும் மக்களிடம் இருக்கின்ற கையிருப்பு அதிகம்.

படிக்க:

 ஆட்டம் காணும் அமெரிக்க டாலர், புதிய BRICS நாணயம் வருமா?

 டாலருக்கு இணையான இந்திய நாணயத்தின் வீழ்ச்சி! ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பலின் பொருளாதாரக் கொள்கையின் படுதோல்வி!

“இந்தியாவில் உள்ள மக்கள் இடுப்பு கயிற்றின் கீழ் ஒட்டு துணி கட்டி இருந்தாலும் கூட, கையில் வளையல் போடுவதற்கோ அல்லது காதில் கடுக்கன் போடுவதற்கோ மூக்கு குத்தி கொள்வதற்கோ தயங்குவதில்லை. அதாவது இந்தியர்கள் ஆபரணங்களின் மீது விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர்” என்று இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம் என்பதை காரல் மார்க்ஸ் எள்ளி நகையாடினார்.

இரண்டாவதாக டாலருக்கு நிகரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதும், இந்தியாவின் ரூபாயின் மதிப்பு குறைந்துக் கொண்டே செல்வதும் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு மற்றொரு காரணமாகும். புரியும்படி சொன்னால் இந்தியாவில் உள்ள அதிக ரூபாயை கொட்டித்தான் ஒரு கிராம் தங்கம் முதல் ஒரு பவுன் தங்கம் வரை வாங்க முடிகிறது இதனால் தான் விலை அன்றாடம் ஏறிக்கொண்டே போய் தற்போது ஏறக்குறைய 92 ஆயிரம் ரூபாயை நெருங்கிவிட்டது.

தற்போதைய எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைவதற்கு எந்த விதமான சாத்தியமும் இல்லை. முக்கியமாக அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் இருக்கின்ற வரை இந்த தங்கத்தின் விலை குறையப்போவதில்லை. ஒருவேளை ட்ரம்ப் மாறினாலும் 10% அளவிற்கு குறையலாமே ஒழிய தங்கத்தின் விலை குறையாது என்பதுதான் நிலையாகும்.

இந்த சூழலில் மக்களிடம் வாங்கும் சக்தியை தங்கத்தில் மூலதனமாக போடுவதற்கு ஊக்குவிக்கின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற்போக்கு பாசிச அரசாங்கம் தூய தங்கம் என்று அழைக்கப்படக்கூடிய 24 கேரட் தங்கத்தை வாங்குவதை கைவிட்டு 18 கேரட் தங்கம் அல்லது அதுவும் வாங்க முடியவில்லை என்றால் 9 கேரட் கொண்ட ’ஹால்மார்க்’ தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. 24 கேரட் என்பது எதுவுமே கலக்காத சுத்தமான தங்கமாகும். கேரட் குறையும்போது தங்கத்துடன் அந்த அளவுக்கு செம்பு உள்ளிட்ட வேறு உலோகங்கள் கலக்கப்பட்டு இருப்பதாக பொருளாகும்.

இன்றைய நிலைமையில் அமெரிக்காவில் 8133 டன் தங்கமும், ஜெர்மனியில் 3351 டன் தங்கமும், இத்தாலியில் 2852 டன் தங்கமும், பிரான்சில் 2437 டன் தங்கமும், சீனாவில் 2280 டன் தங்கமும் கையிருப்பாக உள்ளது. இந்தியாவில் 870 டன் தங்கம் கையிருப்பாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் மூன்றில் ஒரு பகுதி தென்னாப்பிரிக்காவில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் தென்னாப்பிரிக்கா வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வு, நிறவேற்றுமை அதிகமாக உள்ள நாடாகவே இன்றளவும் நீடிக்கிறது.

இன்று இந்தியாவில் பெரும்பாலான உழைப்பாளி மக்கள் குடும்பங்களிலிருந்து மேட்டுக்குடி-பணக்காரர்கள், அதிகார வர்க்கம் ஆகியோர் திருமணங்கள் வரை தங்கம் புழங்குகிறது. பணக்கார்கள் வீட்டுத் திருமணங்களில் அளவுக்கு அதிகமாக தங்கம் புழங்குகிறது. கூலி விவசாயிகள் வீட்டில் கூட குறைந்தபட்சம் ஒரு பவுன், இரண்டு பவுன் தங்கம் இல்லாமல் திருமணங்கள் நடப்பதில்லை என்ற சூழலில் தங்கத்தின் விலையேற்றம் சாதாரண மக்களுடைய வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கிறது.

மேலும் இந்தியாவில் உறவுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நடக்கின்ற பிற்போக்கு, பழக்க வழக்கங்கள்; சம்பிரதாயங்கள், கூடுகை நடவடிக்கைகள் ஆகியவையனைத்தும் தங்கத்தை ஒரு மரியாதைக்குரிய பண்டமாக மதிக்க வைக்கிறது.

எனவே உறவினர்கள் வீடுகளுக்கு விருந்துக்காக செல்வது என்ற காலமெல்லாம் மாறி அவர்கள் வீட்டில் வைக்கப்படும் சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் தனது கையில் உள்ள காசிற்கு பொருத்தமான அளவிற்கு தங்கத்தை வாங்கிக் கொண்டு வைப்பது என்பது ஒரு பழக்கமாகவே மாறிவிட்ட சூழலில் தங்கம் இந்திய உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை ஆட்டிப் படைக்கிறது. மேலும் ஆட்டிப் படைக்கப் போகிறது என்பதுதான் நாம் வருந்ததக்க, கவலைக்குரிய அம்சமாகும்.

இதனைத் தீர்ப்பதற்கு தோழர் லெனின் முன்வைத்த வழிமுறைதான் நமக்கு பொருத்தம் என்றே கருதுகிறோம். தோழர் லெனின் 1921 ஆம் ஆண்டில் தங்கத்தை பற்றி கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப் பட்ட போது எழுதிய கட்டுரை ஒன்றில் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றார்.

“நாம் பெரும் நகரங்களில் சிலவற்றின் தெருக்களில், பொது கழிப்பிடங்களை கட்டுவதற்கு தங்கத்தை பயன்படுத்துவோம் என்று நினைக்கிறேன். சுதந்திரத்துக்காக நடைபெற்ற மாபெரும் யுத்தத்தில் 1914-18 ஆம் வருடங்களில் நடைபெற்ற யுத்தத்தில், தங்கத்துக்காக 10 மில்லியன் மக்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்; 30 மில்லியன் மக்கள் எப்படி ஊனப்படுத்தப்பட்டார்கள் என்பதை இன்னும் மறந்து விடாத தலைமுறைக்கு மிக நியாயமான மிகவும் அறிவூட்டுகின்ற வகையில் தங்கத்தை பயன்படுத்துவது அதுவே. அதற்கிடையில் ரூ.சோ.யூ.சோ. குடியரசில் உள்ள தங்கத்தை நாம் காப்பாற்ற வேண்டும். அதை மிக அதிகமான விலைக்கு விற்று அதை கொண்டு மிக குறைவான விலைக்கு பொருள்களை வாங்க வேண்டும்” என்று எழுதினார்

இந்த வகையில் மஞ்சள் பிசாசின் கொடூரமான பிடியிலிருந்து நாம் மக்களை விடுவிப்போம். விரைவில் இந்த நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றை நடத்தி முடித்து சோசலிசத்தை நோக்கி முன்னேறுகின்ற பாதையில் தங்கத்தை மதிப்பிழக்கச் செய்வோம். அதற்கு முதற்படியாக தற்போது நாட்டை நாசமாக்கி வரும் கார்ப்பரேட் காவி கும்பலை ஜனநாயக கூட்டரசின் மூலமாக வீழ்த்துவோம்.

இத்தகைய புரட்சிகர போராட்டங்களின் ஊடாக தங்கத்தின் மீதான அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம். இறுதியாக தங்கத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகின்ற நாட்டின் பொருளாதாரம், மனித உறவுகள், மதிப்பு, மரியாதை அனைத்திற்கும் நிரந்தரமான முடிவு கட்டுவோம்.

◾புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here