இந்தியாவில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 40 கோடி உள்ளது என்று சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
பள்ளி, கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், பொறியியல், பட்டைய படிப்புகளில் படித்து முடித்து வெளியில் வருகின்ற மாணவர்களுக்கு பொருத்தமான வேலைகளை கொடுப்பதில் இந்திய அரசாங்கம் குறிப்பாக பாசிச பாஜக அரசாங்கம் தோல்வியுற்றது என்பது மட்டுமின்றி இருக்கின்ற தொழிலாளிகளின் வேலை வாய்ப்பையும் பறித்து கொடூரமான, பதட்டமிக்க சமூக சூழலை உருவாக்கியுள்ளது.
இவ்வாறு படித்து முடித்து வேலை கிடைக்காமல் தவிக்கின்ற இளைஞர்கள் மத்தியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சட்டம், ஒழுங்கு, சமூக நீதி, ஒழுக்கம், பண்பாடு, விதிமுறைகள் ஆகியவற்றை மீறுகின்ற தறுதலைகள் கதாநாயகனாக முன்னிறுத்தப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு கும்பல் உருவாக்குகின்ற கேடுகெட்ட ‘கேங் ஸ்டார் கலாச்சாரம்’ புதிய தலைமுறை மத்தியில் ஒரு அபாயகரமான போக்காக வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தில் ரேஸ் பைக் மூலம் சாகசங்களை செய்கின்ற டிடிஎஃப் வாசன் என்ற தறுதலை எந்த ஊருக்கு சென்றாலும் அவனைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி வரவேற்கின்றனர் என்பதற்கும், சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிழல் உலக ரகசிய பேர் வழியும், கிரிமினல் குற்றவாளியும், 33 வயதைக் கொண்ட தாதாவுமான லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய். பஞ்சாப்பில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்தான். பிஷ்னோய். கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரம்பரை நிலம் கொண்ட பண்ணையார் குடும்பம் பிஷ்னோயின் குடும்பம்.. சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது. மாணவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைகிறார். அதனால், ஏற்பட்ட மோதல்கள் கொலை முயற்சி வழக்கு வரை லாரன்ஸ் பிஷ்னோயை கொண்டு சேர்க்கிறது. அதன் பிறகு கேங்ஸ்டார் கலாச்சாரத்தில் இறங்கிய லாரன்ஸ் பிஷ்னோய் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்.
சிறையில் கிரிமினல்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. வெளியே வந்து கொலை, ஆள்கடத்தல், பணம் பறிப்பு என கிரிமினல் செயல்களில் ஈடுபட்டு ஒரு கேங்ஸ்டராக உருவெடுக்கிறார் லாரன்ஸ் பிஷ்னோய்.
பிஷ்னோய் கும்பலில் சுமார் 700 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் இன்று கனடாவில் இருந்து இயக்கப்படுவதாகவும், அதன் தலைவரின் பெயர் கோல்டி ப்ரார் என்றும் கூறப்படுகிறது.
இந்த பிஷ்னோய் கேங். அந்த கேங்குக்கு 3 இலக்குகள் இருக்கின்றன.
- கேங்கின் பெயரை பிரபலப்படுத்துவது
- கேங்கின் பெயரைக் கேட்டாலே பயம் வர வைப்பது
- மற்ற கேங்கின் within the area செல்வாக்கை செலுத்துவது.
சமீபத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையின் முக்கிய சதிகாரரான கோல்டி ப்ராரை மேலும் பல வழக்குகளில் போலீசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, சித்து மூஸ்வாலா கொலைக்கு அவர்தான் காரணம்.
லாரன்ஸ் பிஷ்னோயின் இந்த கும்பலில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பாலிவுட்டில் பிரபலமான நடிகர் சல்மான்கான் முதல் காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி வரை இந்த திடீர் கிரிமினல் கும்பலின் தாக்குதல் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியாக வெளிவருகிறது.
சிறைக்குள்ளிலிருந்து பல்வேறு கிரிமினல் குற்றச் செயல்களையும், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் போன்றவர்கள் கதாநாயகனாக வரவேற்கப்படுகிறார்கள் என்பது தான் இந்திய சமூக அமைப்பின் பொதுவா புதிதாக உருவாகியுள்ள சிக்கலாகும்.
இப்படிப்பட்ட கிரிமினல் தாதாக்கள் பருத்திவீரன் படத்தில் வருகின்ற லும்பன் கதாநாயகர்களைப் போல காட்சியளிப்பதில்லை. மாறாக ஹைடெக் உடையணிந்து, ஸ்டெயிலாக அதிநவீன கார்களில் வலம் வருகின்ற சினிமா நடிகர்களுக்கு போட்டியாக கிளம்பியுள்ள இப்படிப்பட்ட கிரிமினல் குற்ற கும்பல்கள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
சினிமா: பாசிசத்தின் கீழ் கலைஞன் சோதிக்கப்படுகிறான் !
இப்படிப்பட்டவர்களை திட்டமிட்டு உருவாக்குகின்ற போலீசு மற்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கும்பல் இவர்களின் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.
இதனால் அன்றாடம் கடுமையான வேலைகளில் உழைத்து முறுக்கேறிய கைகளையும், திடமான மனதையும் கொண்ட பாட்டாளி வர்க்கம் இப்படிப்பட்ட கிரிமினல் குற்ற கும்பல்களை சமூகத்தில் நடமாட விடாமல் தடுப்பதற்கும், எதிர்த்து முறியடிப்பதற்கும் பொருத்தமான புதிய வழிமுறைகளை தேட வேண்டும்.
இப்படிப்பட்ட கிரிமினல் கேங் ஸ்டார்களை வரவேற்கின்ற வகையிலான திரைப்படங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தின் சினிமா நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை துவங்கி ஆந்திராவில் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா, யாஷ் நடித்த கே ஜி எஃப் போன்ற திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி வெப் தொடர்கள், திரைப்படங்கள் ஆகியவை ஒன்றிணைந்த முறையில் இப்படிப்பட்ட கேங் ஸ்டார் கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றனர்.
படித்த முடித்தவுடன் பொருத்தமான வேலை வாய்ப்பை தேடி செல்வதற்கு வழியற்ற நிலையில் அப்படிப்பட்ட வேலை வாய்ப்புகளை கோரி மாணவர்கள் இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடி விடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்படுவது தான் இப்படிப்பட்ட கேங்ஸ்டர் கலாச்சாரம்.
குறுகிய காலத்தில் பெயர், புகழ் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்து, ஆடம்பர உல்லாச ஊதாரி வாழ்க்கை என்று கேடுகெட்ட கலாச்சாரத்தை இப்படிப்பட்ட கும்பல் முன் வைப்பதை கண்டு ஏக்கம் அடைகின்ற இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டிருக்கிறது என்பதுதான் நாம் கவலைப்பட வேண்டிய அம்சமாகும்.
இத்தகைய கலாச்சார தாக்குதலில் பலியாகின்ற இளைஞர்கள் அதன் உப விளைவாக பாசிச பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பார்கள். அதில் ஒன்றிணைந்து தனது எதிரிகளுக்கு எதிராக கொடூரமான தாக்குதலையும், கொலை வெறியையும் நடத்துவார்கள் என்பது தடுத்து முறியடிக்கப்பட வேண்டிய கிரிமினல் குற்ற நடவடிக்கைகள் ஆகும்.
லாரன்ஸ் பிஷ்னோய் பெரும்பான்மை மனித சமூகத்திற்கு எதிரான கேடுகெட்ட கிரிமினல் தாதா என்பதால் இப்படிப்பட்ட போக்கிற்கு பலியாகின்ற இளைஞர்களை பாதுகாக்க முன் முயற்சியுடன் களம் காண்போம்.
- ஆல்பர்ட்.
மக்களுக்காக போராடும் நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள் மட்டுமல்லாமல் அப்பாவி ஆதிவாசி, பழங்குடி மக்களை தேடி பிடித்து நரவேட்டையாடும் மோடி அரசிற்கு, சமூக ஒழுங்கிற்கும், மக்களின் அன்றாட வாழ்விற்கும் தீங்கு விளைவிக்கும் இதுப்போன்ற நவீன லும்பன் கிரிமினல் கூலிப் படையை வளர்த்து வருவதும், தனக்கெ பெரிய ஆபத்தாக முடியும். மக்கள் படையால் தான் இதனை ஒழிக்க முடியும்.