ந்தியா அடிப்படையில் வேளாண்மையை பிரதானமாகக் கொண்டு இயங்கும் நாடு. நாட்டின் மொத்த பரப்பளவில் 51% விளை நிலங்களாக உள்ளன. விவசாய விளைபொருள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 4 – ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடிந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

2022 – ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் 113 நாடுகளின் பட்டியலில் இந்தியா 68 ஆம் இடத்தில் உள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தனது திறன் கோட்பாடு எனும் ஆய்வு நூலில், “பஞ்சங்கள் ஏற்படுவது உணவுப் பற்றாக்குறையால் மட்டுமல்ல, அதனோடு உள்ள சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளையும் சார்ந்தது” என விளக்கியுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை பாதிக்கப்படக்கூடிய மக்கள் கிடைக்கின்ற உணவை அணுக முடியாத காரணத்தால் தான் பஞ்சம் ஏற்படுகிறது. இந்தக் கோட்பாடு இன்றைய இந்திய நிலைமைகளுக்கும் பொருத்தமாக உள்ளது.

பசிக் குறியீட்டில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் இந்தியா!

2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பசிக் குறியீட்டில் (Global Hunger Index) 125 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111 வது இடத்தை பிடித்து படு மோசமான நிலையில் உள்ளது. இந்தக் கணக்கீடு, மக்கள் தொகையில் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அவர்களின் இறப்பு விகிதம் ஆகிய நான்கு அளவுகோள்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

படிக்க: உலகப்பட்டினி குறியீட்டில்  ‘முன்னேறிய’ இந்தியா!

இந்தத் தரவுகளின் படி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆய்வில் இந்தியாவின் தரவரிசை  தொடர்ந்து சரிவையே சந்திக்கிறது. 2016 – ல் 97வது இடத்திலும், 2017ல் 100 வது இடம், 2018 – ல் 103 என தொடர்ந்து வீழ்ச்சி அடைவது நமக்கு கவலையை ஏற்படுத்துகிறது. ஹைத்தி மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகள்தான் இந்தியாவை விட பின்தங்கிய நிலையில் உள்ளன.

உணவுப் பற்றாக்குறையும், ஊட்டச்சத்து குறைபாடும்!

இன்றைய இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு பசுமைப் புரட்சி ஒரு முக்கிய காரணியாக உள்ளது. 1950 முதல் 2007 வரையான காலகட்டத்தில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி ஆண்டுதோறும் 2.5% என்ற அளவில் அதிகரித்தது. ஆனால் இதே காலகட்டத்தில் மக்கள் தொகை 2.1% மட்டுமே உயர்ந்தது.

இதனால் அரிசி, கோதுமை போன்றவை எஞ்சிய நிலையில் ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட்டது. இதில் ஒரு நகை முரண் என்னவென்றால் உணவு தானிய உற்பத்தி அதிகரித்த போதும், தனி நபருக்கு கிடைக்கக் கூடிய அளவு 1991-ல் ஒரு நாளைக்கு 510.1 கிராமில் இருந்து 2021 -ல் 507.9 கிராமாக குறைந்துள்ளது. ரேஷன் கடைகளில் தானியங்களை ஏழை மக்களுக்கு கொடுக்க முடிந்ததே தவிர, பருப்பு வகைகளையோ, காய்கறிகள் மற்றும் பழங்களையோ வழங்க முடியவில்லை.

படிக்க: மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பாதியாக குறைந்துள்ளது!

இதன் காரணமாக இந்திய மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த உண்மையை 2014 ஆம் ஆண்டு சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் சுரேஷ்பாபு ஒரு நேர்காணலில் விளக்கினார். உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அறிக்கையில் இந்தியாவில் 74.1% மக்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியது.

ஒன்றிய அரசுக்கு உண்மை சுடுகிறது!

தேசியக் குடும்ப நல கணக்கெடுப்பு (2019 – 21)  ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் எடை குறைவாகவும், வளர்ச்சியில் மந்த நிலையிலும் இருப்பதாக தெரிவிக்கிறது. 36 % பேர் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையே காரணமாக உள்ளது. மேலும் 6 மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளில் 67 % பேர் அனீமியா எனப்படும் ரத்த சோகையால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 2015 – 16ல் இது 59 சதவீதமாக இருந்தது. 2019 – 21 கணக்கெடுப்பில் 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் 57 % பேர் அனீமியா பாதிப்பில் இருந்தனர்.

இந்த அறிக்கை பாசிச மோடி அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால், இதற்கு மூல காரணமாக இருந்த மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனத்தின் இயக்குனரை இடை நீக்கம் செய்தது. இனிமேல் அனீமியா குறித்தான கணக்கெடுப்புகள் கூடாது என அரசு முடிவு செய்தது. அரசாங்கம் ஒப்புக் கொள்ள விரும்பாத விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்ற ‘நல்ல நடைமுறை’ கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு நபருக்கு காய்ச்சல் உள்ளதை தெர்மாமீட்டர் காட்டினால் அதை உடைத்து விடுவது எத்தகைய அறிவீனச் செயலோ, அதற்கு ஒப்பானது ஒன்றிய அரசின் இந்த செயல்பாடும். இதே போன்ற நடைமுறை 2019 ஆம் ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டது. 2012 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியர்களின் சதவிகிதம் அதிகரித்ததாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் புள்ளி விவரங்கள் வெளிவந்த போது அதை அரசாங்கம் ரத்து செய்தது. கணக்கெடுத்த இருவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது.

வேளாண் உற்பத்தியை பாதிக்கும் புறக் காரணிகள்!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஆண்டறிக்கை 2022 – 23, மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள், கால்நடை வளர்ப்பு பால் வளம் மற்றும் மீன்வள  விபரங்கள் பற்றிய கையேடு 2022 ஆகிய மூன்று வெவ்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சில விபரங்களை பார்ப்போம்.

2015 முதல் 2020 வரையான காலகட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் உற்பத்தியின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை கணக்கிட்டு, இதன் போக்கில் 2050 வரை கணித்துள்ளனர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பால், இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் தனிநபர் நுகர்வுக்கான உற்பத்தியானது சராசரியாக அதிகரிக்க வேண்டும்.

படிக்க: வேளாண் சட்ட திருத்தங்களை கிழித்தெறி! கார்ப்பரேட்-காவி கும்பலை வீழ்த்து! புதிய ஜனநாயகப் புரட்சியை விரைந்து நடத்து!

ஆனால் இந்த உற்பத்தி விகிதமானது ஊட்டச்சத்து பற்றாக்குறையை குறைக்கும் அளவில் அதிகரிக்கவில்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளான நீடித்த வறட்சி அல்லது பேரழிவை ஏற்படுத்தும் மழை வெள்ளம் போன்றவையும் இதற்கு காரணமாகிறது.

காலநிலை மாற்றம் தொடர்பானக் குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை, காலநிலை மாற்றம் போன்ற தீவிரமான நிலைமைகளால் அரிசி, கோதுமை போன்ற உணவு தானிய உற்பத்தி மட்டுமல்லாமல் மற்ற விவசாய விளை பொருட்களின் உற்பத்தியும் வீழ்ச்சி அடையும் என தெரிவிக்கிறது.

சமீபத்திய மூன்று ஆண்டுகளில் அதற்கு முந்தைய 10 ஆண்டுகளை விட வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்தியாவின் சராசரி ஆண்டு வெப்பநிலை 1900 மற்றும் 2018 க்கு இடையில் 0.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்ததே இதற்கு காரணமாக உள்ளது. ஏற்கனவே 147 மில்லியன் ஹெக்டேர் விளை நிலங்கள் பல்வேறு வகையான நில அரிப்பு மற்றும் உப்பு நீர் காரணமாக பாழ்பட்டுள்ள நிலையில், காலநிலை மாற்றம் இதை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2050 ஆம் ஆண்டு வாக்கில் ஏறக்குறைய விளை நிலங்களில் பாதி அளவுக்கு பாதிக்கப்படும் என்பதால் உற்பத்தியும் கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது. துறையின் இரண்டு நிபுணர்கள், “உப்பு பாதிப்பு நிலங்களின் அளவு அதிகரிப்பதால், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளது” என்கின்றனர்.

நீர் ஆதாரங்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு பசுமைப் புரட்சியின்போது பயிரிடப்பட்ட நீரை அதிகம் உறிஞ்சும் நெல், கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களும், கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய ராட்சத குழாய்கள் மூலம் நீரை அதிகமாக உறிஞ்சி பயன்படுத்துவதும் காரணமாக உள்ளன.

பஞ்சாப், குஜராத், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சராசரியாக 40 மீட்டருக்கு (131 அடி) மேல் தோண்டி நீரைப் பெற வேண்டி உள்ளது. ஆழ்துளை கிணறுகள் அமைக்க வல்லமை வாய்ந்தவர்களே பயிர் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

எதிர்காலத்தில் அனைவருக்கும் உணவு உத்தரவாதம் செய்யப்படுமா?

மிகவும் நம்பகமான ஆய்வுகள் சிலவற்றை பயன்படுத்தி 2050 ஆம் ஆண்டு வாக்கில் பசியினால் வாடுவோரின் எண்ணிக்கை 11 முதல் 20 சதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப் பட்டுள்ளது. பிரதான பயிர்களின் உற்பத்தியில் தேக்கம் அல்லது சரிவு ஏற்படும் போது உணவு தானிய பற்றாக்குறையும், ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தாக்கங்களும் அதிகரிக்கும்.

இந்தியா அதன் மக்கள் தொகையின் தேவைகளை ஈடு செய்ய 2030 ஆம் ஆண்டில் 311 மில்லியன் டன் உணவு தானியங்களையும், 2050-ல் 350 மில்லியன்  டன்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என கணிக்கப் படுகிறது. இதை அடைவதற்கு  விளைநிலங்களையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க வேண்டும். கூடவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் சமாளிக்க வேண்டும்.

தேர்தல் தில்லுமுல்லுகள் மூலமாக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாசிச மோடி அரசு, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்வதிலேயே முழுக் கவனமும் செலுத்தி வருகிறது. வேளாண்மையை கார்ப்பரேட் மயமாக்க வேண்டும் என்ற வணிக நோக்கில் தான்  வேளாண் திருத்தச் சட்டங்களை கொண்டு வந்தது.

ஏழை, எளிய மக்களுக்கான வாழ்வாதாரங்கள் குறித்து கிஞ்சித்தும் அக்கறைப் படாத இந்த அரசு, மேற்கூறிய சவால்களை சமாளித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பட்டினியில் மக்கள் சாகட்டும் என வேடிக்கை மட்டுமே பார்க்கும். இந்த காவி பாசிச அரசை வீழ்த்தி ஜனநாயகக் கூட்டரசை நிறுவும் போதுதான் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

  • குரு

ஆதாரம்: https://thewire.in/food/its-not-just-food-price-india-is-facing-a-food-security-challenge

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here