பாசிச பயங்கரவாதம் இந்திய சமூகத்தில் தலை விரித்தாடுகிறது என்பதை சமீபத்தில் கோவை அன்னபூர்ணா உரிமையாளர் மீது பகிரங்கமாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இந்தியாவில் ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கு lam துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக பயங்கரவாத கும்பல், சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்து வருகிறது என்பது பல சம்பவங்களில் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. 

சமூக ரீதியாக உரிமைகளை கோரி போராடுகின்றவர்களுக்கு நீதிமன்றம் தான் தற்போது இறுதி நம்பிக்கையாக முன்னிறுத்தப்பட்டுள்ளது என்றாலும் 2014 ஆம் ஆண்டு பாசிச மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீதித்துறையில் படிப்படியாக ஆர்எஸ்எஸ் கும்பலின் ’நாக்பூர்’ தயாரிப்புகள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வருவதால் பல்வேறு முக்கியமான வழக்குகளில் நீதிபதிகள் ஒரு பக்க சார்பாகவும், ஆர்எஸ்எஸ் பாஜக தொடுத்து வரும் பாசிச அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதாகுமே அமைந்து வருகிறது. 

தமிழகத்தில் ஊழல் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் ஜே.என்.யூ மாணவர் உமர் காலித் வரை நூற்றுக்கணக்கான உதாரணங்களை நாம் கூற முடியும்.  குறிப்பாக இந்த இருவரின் மீது வெவ்வேறு சூழலில் வெவ்வேறு விதமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும், வழக்கு விசாரணை காலவரையின்றி நீடிப்பதும், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பிணை குறித்த விவாதங்களை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. 

பிணை வழங்குவதில் நீடிக்கும் சிக்கல் குறித்து நாடு முழுவதும் முற்போக்கு வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பினாலும், ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக செயல்படுகின்ற அரசியல் கட்சியினர், ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், நக்சல்பாரி ஆதரவாளர்கள் போன்ற அனைவரும் எந்த விசாரணையும் இன்றி கொடூரமாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். இதற்கு நீதிமன்றமும் துணை போகின்றது என்பதைதான் மேற்கண்ட இரண்டு வழக்குகளின் தற்போதைய நிலைமை நமக்கு நிரூபித்துள்ளது.

ஜே.என்.யூ மாணவர் அமைப்பின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான உமர் காலித் கடந்த செப்டம்பர் 2020 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 2020 இல் வடகிழக்கு டெல்லியில் வன்முறையைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது இரண்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு நான்காண்டுகள் ஆகியுள்ளது.

”குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து ஒரு தரப்பினரும் கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி வடகிழக்குப் பகுதியில் ஊர்வலம் நடத்தினர். அந்தச் சமயத்தில் இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் பெரிதாகி கலவரமாக மாறியது. அந்தப் பகுதிகளிலிருந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் துப்பாக்கியால் தாக்கினர். டெல்லி நகரமே போர்க்களம்போலக் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.

மூன்று நாள்கள் வரை கலவரம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில், டெல்லி வடகிழக்குப் பகுதியில் துணைநிலை ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். மோதல்கள் சிறிது சிறிதாகக் குறைந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கர்வல்நகர், ஜாப்ராபாத், மவ்ஜிபூர், சந்த்பாக் போன்ற பகுதிகளில் எண்ணற்ற வாகனங்கள் தீக்கிரையாகியிருந்தன. இந்தக் கலவரத்தில் மட்டும் 53 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கலவரம் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.” என்று உமர் காலித் மீதான வழக்கு பற்றி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வழக்கில் உமருக்கு ஏப்ரல் 2021 இல் ஜாமீன் கிடைத்தது. இரண்டாவது வழக்கில், அவர் மீது சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவை இதுவரை இரண்டு நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன. அவரது ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 2023 முதல் நிலுவையில் உள்ளது. அவரது வழக்கு பட்டியலில் வருவது கூட சதித்தனமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது என UAPA சட்டங்களுக்கு எதிராக வாதாடும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சுமத்துகிறார்.

அது போலவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011 – 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்

செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் ரூ.1.34 கோடி இருந்தது; செந்தில் பாலாஜி மனைவி வங்கி கணக்கில் ரூ.29.55 லட்சமும் இருந்தது; இப்பணம் செந்தில் பாலாஜி வருமான வரிகணக்கிற்கு முரண்பாடாக இருந்தது என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணிகளுக்காக சட்ட விரோதமாக பணம் பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை தூசு தட்டி மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் அவரது பிணை மனு தொடர்ந்து பல்வேறு காரணங்களை முன்வைத்து நிராகரிக்கப்படுகின்றது.

பிணை வழங்குவது குறித்து..

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவரிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டுமென்றால் அவரை அழைக்க முடியுமா, அவர் தலைமறைவாகச் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறதா, சாட்சியங்களை சிதைப்பது அல்லது சாட்சிகளை மிரட்டுவாரா ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை நீதிமன்றம் கவனிக்க வேண்டும். ஆனால் செந்தில் பாலாஜி, உமர் காலித் போன்ற இருவரும் இந்த மூன்று அம்சங்களை மீறுபவர்களாக தெரியவில்லை.

 அது போலவே சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்ட (UAPA) வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும். எனவே, பெரும்பாலும் ஜாமீன் வழங்கும் போதே, வழக்கின் ஒரு சிறிய விசாரணை நடைபெறுகிறது, அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் முதன்மையான குற்றவாளியாகத் தோன்றுகிறாரா இல்லையா என்பதை நீதிமன்றம் பார்க்கிறது.

படிக்க:

♦ ஆயிரம் நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உமர் காலித்!

♦ அரங்கேறும் காவி பாசிசம்! அமைச்சர் செந்தில் பாலாஜி கைது!

2019 ஆம் ஆண்டில், ஜாமீன் குறித்து தீர்மானிக்கும் போது நீதிமன்றத்தால் சாட்சியங்களை ஆராய முடியாது என்று உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனவே, நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரங்களை அரசுத் தரப்பு நம்பியிருந்தாலும், ஜாமீன் கோரும் நிலையில் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்தடுத்த தீர்ப்புகள் இதனைக் குறைத்து, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA-ன்) கீழ் ஜாமீன் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது.

 பல்வேறு வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி அபய் எஸ்.ஓகா ஆகஸ்ட் 13-ம் தேதி ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய போது ஜாமீன் வழங்குவது குறித்து நீதிமன்றங்களுக்குச் சில அறிவுறுத்தல்களை  முன் வைத்துள்ளார்.

அதில், `அரசுத்தரப்பு ஒருவர் மீது எவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகளையும் வைக்கலாம். ஆனால், சட்டத்துக்கு உட்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதுதான் நீதிமன்றத்தின் கடமையாக இருக்க வேண்டும். ‘ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விதி முறை; சிறைக்கு அனுப்புவது என்பது விதி விலக்கு’ என்பதுதான் சட்ட தத்துவம். இந்தத் தத்துவம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் ஆகிய சிறப்பு சிறப்பு சட்டங்களுக்கு உட்பட்ட குற்றச்செயல்களுக்கும் பொருந்தும். ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டால், ஜாமீன் வழங்கத் தயக்கம் காட்டவோ, மறுக்கவோ கூடாது. தகுதியான நபர்களுக்கு ஜாமீன் மறுப்பது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு வலியுறுத்தும் வாழும் உரிமைக்கு எதிரான செயல்’ எனக் கூறியுள்ளார். இது விதி விலக்காக உள்ள நீதிபதிகள் சிலரின் கருத்துதான்.

பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் சிறை கொடுமைகளுக்கு எதிராக போராடுவது, சித்திரவதைகளுக்கு எதிராக போராடுவது என்பது மட்டுமின்றி, போராடுபவர்களை இத்தகைய அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குவதும் உள்ளடங்கியதுதான் என்பதே பாசிச எதிர்ப்பு போராட்டத்தின் உலக வரலாறாகும். 

பாசிச பாஜகவின் பயங்கரவாத ஆட்சியின் கீழ் நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்று நம்புவது மிகவும் பாமரத்தனமாக உள்ளது என்ற போதிலும், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கு நீதித்துறைக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்பதால் நமது போராட்டங்கள் அனைத்தும் நீதிமன்றத்திலும், மக்கள் மத்தியில் வீதி மன்றத்திலும் இணையாகவே நடத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த வழக்குகளின் பிணை குறித்த நடப்புகளிலிருந்து நாம் பெற வேண்டிய முக்கிய படிப்பினையாகும். 

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here