தொடர் கட்டுரை….

அன்பார்ந்த தோழர்களே!

இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்கள் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் வாழ்வை முழுமையாக அழிக்கும் தன்மை கொண்டது. விவசாயம் என்பது மாநிலங்களின் பட்டியலில் இருந்தது. அதையெல்லாம் மதிக்காத பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் கும்பல்,பல தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவை, படிப்படியாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்து ’ஒரே தேசிய அரசை’ நிறுவும் நோக்கில் பாசிச கொடுங்கரங்களை நீட்டி வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் உயிராதாரமான விவசாயத் தொழிலை விவசாயிகளிடம் இருந்து பறித்து விட்டு கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் துரோகத்தனத்தில் இறங்கி விட்டது.

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு காலம் நிலவுடைமை சமுதாயமாக இருந்த நமது நாட்டின் விவசாயம் பற்றி ஒரு பருந்துப் பார்வையில் பார்ப்போம். பிரிட்டனுடைய காலனியாதிக்கத்திற்கு முன்பாக இங்கு நிலம் மன்னர்களின் கையில் மட்டும் தான் இருந்தது. விவசாயிகளுக்கு அனுபோக உரிமை மட்டும்தான் கொடுக்கப்பட்டது. பிரிட்டன் இந்த நாட்டிற்குள் நுழைந்த பிறகு ஜமீன்தாரி, மகல்வாரி, ரயத்துவாரி ஆகிய முறைகளில் நிலம் ஓரளவுக்கு பிரிக்கப்பட்டது. ஆனால் நாட்டின் முதுகெலும்பான கோடிக்கணக்கானகூலி விவசாயிகளுக்கு சொந்தமாக ஒரு துண்டு நிலம் கிடைக்கவில்லை. நிலத்தின் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால் அவர்களுக்கு எந்த பிடிப்பும் இல்லை என்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.

காட் ஒப்பந்தமும்!
மறுகாலனிய கொள்கைகளும்!

1980 – களில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தில் விளைந்த உணவு தானியங்களில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா உள்ளிட வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் வளரும் நாடுகளின் சந்தை அவர்களின் லாப வேட்டைக்கு தகுந்தாற் போல பெருகவில்லை. மற்றொரு புறம் உணவு தானிய உற்பத்தியில் சில நாடுகள் தன்னிறைவு அடைய துவங்கியது. அது மட்டுமின்றி, வளரும் நாடுகளின் கடன் சுமை மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பு குறைதல் போன்ற காரணங்களால் அந்த நாடுகளின் வாங்கும் தன்மை குறைந்தது. இதனால் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் உற்பத்தி செய்த வேளாண் விளை பொருட்களுக்கு கிராக்கி குறைதல் (Demanad) ஏற்பட்டது.

உணவு பொருட்களை விற்று லாபம் கொழிக்கும் லாப வேட்டையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் உக்கிரமான போட்டி நிலவியது. தனது உற்பத்தி பொருட்களை கட்டாயம் இந்த அளவு இறக்குமதி செய்ய வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதிக்க துவங்கியது. இதற்கு உகந்த வகையில் ’காட்’ஒப்பந்தத்தை மாற்றியமைக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ‘காட்’ பேச்சுவார்த்தையில்1948 முதல் 1986 வரை7சுற்றுகள் பேசி ஒப்பந்தங்கள் முடிந்த நிலையில், 8வது சுற்றாக1986-ல் உருகுவேயில் துவங்கிய பேச்சுவார்த்தை மிக முக்கியமானது.1986-ல் இருந்து 1994வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் காட்ஒப்பந்தத்தின் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் காட் ஒப்பந்தம் அதுவரை வர்த்தகம் மற்றும் காப்பு வரி தொடர்பான ஒரு பொது உடன்படிக்கையாகவே இருந்தது.1986 -ல் துவங்கிய பேச்சுவார்த்தை மூலம் புதிதாகஇரண்டு துறைகளை ஒப்பந்தத்தில்சேர்க்க வேண்டும் என்பதே ஏகாதிபத்தியங்களின் நிபந்தனையாக இருந்தது. ஒன்றுவேளாண்மை, மற்றொன்று சேவைத் துறை ஆகிய இரண்டு துறைகள்தான் அவை. அதிலிருந்து வேளாண்மை ஒரு கலையாக (Culture) இருந்த நிலைமை மாறி வர்த்தகமாக (Business) மாறத் துவங்கியது.

இதற்கு அடிப்படை என்னவென்றால் ஏகாதிபத்தியங்களின் நிதி மூலதனமும், நிதி ஆதிக்க கும்பல்களின் வருவாயும் பல கோடி ரூபாய்க்கு பெருகியதுதான்.1980-களில் உருவான தேசங்கடந்த தொழிற்கழகங்களும் (TNC), பன்னாட்டு நிறுவனங்களும் (MNC), குறிப்பாக உலக வர்த்தகத்தில் வேளாண்மை மற்றும் சேவைத் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு உள்ளே நுழைந்தது. இவ்வாறு உள்ளே நுழைந்த நிறுவனங்கள் இந்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளில் உலகத்தின் வேளாண் வர்த்தகத்தை மட்டுமல்ல, விவசாயத்தை தனது பிடிக்குள் கொண்டு வந்து விவசாயத்தையே ஒரு மாபெரும் தொழிற்சாலையாக மாற்றுவது என்ற நோக்கத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

சுருக்கமாக, ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்கள் உற்பத்தியில் இருந்து அந்த நாட்டை நீக்குவது; அதாவது சுயசார்பான பொருளாதாரத்தில் இருந்து அந்த நாட்டை விலக்கி வைத்து ஏற்றுமதிக்கு தேவையான விவசாய பொருட்களை உற்பத்தி செய்யநிர்பந்திப்பது; அதன் மூலம் அந்த நாட்டின் உணவு தேவைக்கு ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வைப்பது என்பது அதன் நோக்கமாகும். இந்த வகையில் நாட்டின் இறையாண்மைய ஒழிப்பது தான் திட்டமாகும்.

1990களின் தொடக்கத்தில் ஒபெக் (OPEC) நாடுகளில், அதாவது வளைகுடா நாடுகளில் நடந்த ஈராக் – குவைத்இடையிலான அமெரிக்காவின் போரைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களுக்கான பற்றாக்குறை நிலவியது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பெட்ரோலின் விலையை உயர்த்தியது. இந்த பிரச்சனையினால் கச்சா எண்ணெய் வாங்குவதற்காவே டாலர் அதிகம் தேவைப்பட்டது. தேவை அதிகரித்தது.இதனால் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டது. மறுபுறம் இதன் காரணமாக பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்தது. இதுபோன்ற நெருக்கடிகளில் இந்தியா மாட்டிக்கொண்டு திவாலாகும் நிலைக்கு சென்றது.

இந்த நிலைமையில் இருந்து மீட்பதற்காக உலக வர்த்தக கழகம், உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவை இணைந்து ’காட்’ ஒப்பந்தத்தின் மூலமாக நமது நாட்டின் மீது திணிக்கப்பட்டதே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பொருளாதார சீரமைப்பு ஆகும். அந்த சீரமைப்பு பணிகளை உள்ளடக்கிய மறுகாலனியாக்க கொள்கைகள் முதலில் காங்கிரஸ் அரசால்தான் அமல்படுத்தப்பட்டது. தனியார்மயம்தான் சிறந்தது-சிக்கனமானது, இதற்கு தகுந்தாற்போல விவசாயத்திற்கான மானியத்தை ஒழிப்பது, கடன் செலவுகளை ஒழிப்பது என்பதை தீர்வாக ஏகாதிபத்தியங்கள் முன் வைத்தது. ஏனென்றால் விவசாயத்திற்கு மானியம் அளிப்பது, சலுகைகள் கொடுப்பது, கடன் அளிப்பது போன்றவை எல்லாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக ஆளும் வர்க்கத்தால் பிரச்சாரம் செய்யப்பட்டது.’

தொடரும்….

ஆசிரியர் குழு,

மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here