
ஃபெஞ்சல் புயல் வட மாவட்டங்களில் குறிப்பாக கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த பாதிப்புகளில் புயல், வெள்ளம் உருவாக்கியதை விட மிக அதிகமான பாதிப்பை உருவாக்கியது சாத்தனூர் அணை ஆகும்.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழை, பெரு வெள்ளத்தின் போது சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்தது. அவ்வாறு நிரம்பி வழிந்த போது அந்த நீரை வெளியேற்றுவதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்களுக்கு எந்த விதமான முன்னெச்சரிக்கையும் கொடுக்காமல் நள்ளிரவில் திடீரென ஆயிரக்கணக்கான கன அடி நீரை திறந்து விட்டனர். இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்குள் தண்ணீர் உள் புகுந்து கடுமையான பாதிப்புகளை உருவாக்கியது என்பதை நாம் அறிவோம்.
பாசிச ஜெயாவுக்கு செம்பரம்பாக்கம்!
மு.க. ஸ்டாலினுக்கு சாத்தனூர் அணை!
”9 ஆண்டுகளுக்குப் பிறகு, செம்பரம்பாக்கம் ஏரியை நினைவுகூர்வது போன்று, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், நள்ளிரவு திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்றியதன் மூலம் 4 மாவட்ட மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது திமுக அரசு.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. டிசம்பர்-1 காலை 6 மணிக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், அன்று நள்ளிரவு 12.45 மணிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் டிசம்பர்-2 அதிகாலை 2.45 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியாக கிடுகிடுவென அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும், முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும், தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதனால், தென்பெண்ணையாறு கரையோரங்களில் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. நீர்வரத்து குறைந்ததால், டிசம்பர் 2 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 68 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.. இந்நிலையில், விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் என அறிவித்துவிட்டு, நள்ளிரவில் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் கரையோரங்களில் வசித்த 4 மாவட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
டிச.1-ம் தேதி இரவு 7 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்வளத் துறை விடுத்தது. இதில், சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படலாம் என உதவி செயற்பொறியாளர் ராஜாராமன் தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த 5 மணி நேரத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடியும், அடுத்த 2 மணி நேரத்தில் விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதனால் டிசம்பர்-2 அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதாக, அதிகாலை 4.15 மணியளவில் ஊடகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு, நீர்வளத் துறை எச்சரிக்கை சென்றடையவில்லை. இந்த நாட்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மின்சாரம் தடையாகி ஊடகங்கள் எதையும் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி எச்சரிக்கை விடுக்கும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே, அணையில் இருந்து 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை சற்றும் எதிர்பாராத 4 மாவட்ட கரையோரங்களில் வசிக்கும் மக்கள் திணறினர். உயிரை பாதுகாத்து கொள்ள, வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், தங்களது உடமைகளை பாதுகாக்க முடியவில்லை. வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கியது. கால்நடைகள் உயிரிழந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. திருவண்ணாமலை – விழுப்புரம், திருக்கோவிலூர்–விழுப்புரம், விழுப்புரம்–உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.
படிக்க: புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் பாதிப்பும், மேட்டுக்குடியின் கும்மாளமும்!
2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் நள்ளிரவில் திறந்துவிட்டு, சென்னையை மூழ்கடித்ததை நினைவு கூறுவது போன்று, 9 ஆண்டுகளுக்கு பிறகு நள்ளிரவில் 1 லட்சம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் திறந்துவிடப்படும் என முன்கூட்டியே அறிவிக்காமல், திடீரென 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, 4 மாவட்ட மக்களை நீர்வளத் துறையினர் துன்பத்தில் ஆழ்த்தியது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. இந்த தவறைப் பேசி சரி கட்டும் வகையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் ஊடகங்களுக்கு முன்னுக்குப் பின் முரணாக பேட்டியளித்துளார்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பல்வேறு கிராமங்களை அடியோடு பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கொள்ளளவு நீரியல் கணக்கீட்டின்படி சுமார் 54, 417 கன அடி ஆகும். ஆனால் இதைப் போன்று நான்கு மடங்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீரை திறந்து விட்டதன் காரணமாக பாதிப்புகள் உருவாகியுள்ளன.
சாத்தனூர் அணை திறப்பால்
அதிகம் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம்.
தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 505 ஏரிகளில் 490 ஏரிகள் நிரம்பியுள்ளது. இதில் 103 ஏரிகள் உடைந்து அந்தத் தண்ணீரும், சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் இரண்டும் இணைந்து தென்பெண்ணையாறு வழியாக ஓடி வங்காள விரிகுடா கடலை அடைத்துள்ளது. அதேபோல திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே அகரம்-பள்ளிப்பட்டு-தொண்டமானூர் கிராமத்தை இணைக்கும் உயர்மட்ட பாலம் 16 கோடி செலவில் கடந்த செப்டம்பர் மாதம் தான் திறக்கப்பட்டது அந்த பாலம் தற்போது அடித்துச் செல்லப்பட்டுள்ளது இதன் உச்ச கட்டமான நிலைமை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தென்பெண்ணையாற்றின் உபநதிகள் அனைத்தும் மிகப்பெரும் அளவிற்கு வெள்ளத்தை தாங்காத ஆறுகளாகும். இவை அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏறக்குறைய 240 கிராமங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் தொடர்பு இல்லாமல் தனித்தனி தீவுகளாக மாறியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த துணை ஆறுகள் அனைத்தும் ஓடிய பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் சேறும் சகதியையும் வீடுகளில் நிரப்பியது மட்டுமின்றி, வயல்வெளிகளில் காய்கறி பயிரிட்ட பகுதிகளில் மணலை நிரப்பி நிலத்தை மூடியுள்ளது. நெல் பயிர் முதல் பல்வேறு வகையான பயிர்கள் இருந்த 1,30,000 ஹெக்டேர் நிலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
படிக்க: சாத்தனூர் அணை திறப்பு: அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதா?
தென்பெண்ணையாற்றின் துணை ஆறுகளில் ஒன்றான மலட்டாறு இந்த பாதிப்பை அதிகபட்சம் உருவாக்கியுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள அணைக்கட்டு பகுதியில் இருந்து மலட்டாறு பிரிகிறது. இந்த மலட்டாறு விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணை நல்லூர் வட்டம் சுந்தரேசபுரத்தில் துவங்கி கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வட்டம் அரசமங்கலம் வரை ஓடி மீண்டும் தென்பெண்ணையாற்றிலேயே கலக்கிறது.
2019 ஆம் ஆண்டு மலட்டாறு பகுதியில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர் வாருவதற்கு 23 கோடி ரூபாய் ஒதுக்கி வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் இந்த அனுமதி தாமதமாகவே வழங்கப்பட்டது. இதன் காரணமாக அப்போதே வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி மலட்டாற்றின் குறுக்கே ஆங்காங்கே பல்வேறு ஆக்கிரமிப்புகளும் செய்யப்பட்டுள்ளதால் ஆற்றின் அகலம் குறைந்து இறுதியில் அது ஒரு சிற்றோடையாக மாறியுள்ளது என்ற நிலைமையே உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் நீரின் ஓட்டத்தை தடுத்து கரைகளை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுவதற்கு வாய்ப்பாக மாறியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் மற்றும் சாத்தனூர் அணை திறப்பால் திருவெண்ணைநல்லூர் வட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவெண்ணைநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட 66 கிராமங்கள் முழுவதும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தென் பெண்ணையாற்றிலிருந்து திருக்கோவிலூர் அருகில் பிரியும் மலட்டாற்றின் கரையோரங்களில் உள்ள சுந்தரேசபுரம், சித்தலிங்கமடம் டி. எடையார், திருவெண்ணை நல்லூர், சின்ன செவலை, தொட்டிக் குடிசை, மழவராய நல்லூர், அரசூர், இருவேல்பட்டு, காரப்பட்டு, பொய்கை அரசூர், ஆனத்தூர் சேமங்கலம், தனியாலம்பட்டு உள்ளிட்ட கிராமங்களும், கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வட்டத்திற்கு உட்பட்ட ராசா பாளையம், ஏரிப் பாளையம், கட்ட குச்சிப் பாளையம், திருத்தறையூர், வரிஞ்சிப்பாக்கம், பெரிய கள்ளிப்பட்டு போன்ற கிராமங்களிலும் மீண்டும் தென்பெண்ணை ஆற்றில் இணைகின்ற அரசமங்கலம் வரை பல்வேறு கிராமங்களில் நீர் புகுந்து கடுமையான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்தப் பகுதிகளில் ஊருக்குள்ளே தண்ணீர் புகுந்து ஊருக்கு செல்லும் சாலைகளை இரண்டு, மூன்று இடங்களில் துண்டித்தது மட்டுமின்றி காட்டு ஓடை போல தாழ்வான திசை நோக்கி ஓடியதால் நெற்பயிரிட்ட பகுதிகள் மற்றும் மிளகாய், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளன என்பது மட்டுமின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ளது.
புயல் அடித்த தினம் துவங்கி நேற்றைய தினம் வரை (03-12-2024) ஏறக்குறைய நான்கு நாட்களாக மின்சாரம், குடி தண்ணீர் ஆகிய இரண்டும் இல்லை. இது மட்டுமின்றி அரசு அதிகாரிகள் யாரும் இந்த பகுதிகளில் நேரடியாக இறங்கி ஆய்வு செய்யவில்லை என்ற காரணத்தினால் சாலை மறியல் நடத்திய பிறகுதான் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏ மணிக்கண்ணன் போன்றவர்கள் இந்த கிராமங்களுக்கு நேரடியாக செல்லத் துவங்கினர்.
விவசாயிகள் விடுதலை முன்னணி காரப்பட்டு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கின்ற அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறி உதவி பொருட்களை வைத்து உணவு சமைத்து அனைவருக்கும் வழங்கி வருகின்றனர். தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் வீடுகளை கழுவி சுத்தம் செய்வது, துணிகளை துவைத்து உலர்த்துவது போன்ற குறைந்தபட்ச தேவைகளை மக்கள் பூர்த்தி செய்துக் கொண்டு வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு 1,30,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சுமார் 80,000 ஹெக்டேர் நிலப்பரப்பு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்து இந்த பாதிப்பு விழுப்புரம் மாவட்டத்தை எந்த அளவிற்கு கடுமையாக தாக்கியுள்ளது என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.
(விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் உதவியுடன்)
- முகம்மது அலி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி