பாராளுமன்ற கூட்டத்தொடர்: பாசிஸ்டுகளிடம் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது சரியா?

எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு பாசிஸ்டுகள் ஆட்சியில் தேர்தல் வெற்றி – தோல்வி என்ற வலைக்குள் சிக்கி அவர்களிடம் மூக்குடைபட்டுப் போகின்றன.

0

ண்மை, நேர்மை, நீதி, நியாயம், பரிவு, இரக்கம், உதவி, ஜனநாயகம், பகுத்தறிவு,  மனசாட்சி, மனிதாபிமானம் போன்ற அடிப்படை மனித இயல்புகள், உணர்வுகள் பாசிஸ்டுகளின் இதயத்தின் ஆழத்தில் இருப்பதாகவும் அவற்றை தங்கள் அரசியல் நலனுக்காக மறைத்துக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள், ஜனநாயகவாதிகள், நியாய உணர்வுள்ள பொதுமக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாசிஸ்டுகள், தாங்கள் இயல்பிலேயே இதயமற்றவர்கள் என்பதை ஒவ்வொரு கணமும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹைதராபாத் கலவரத்தின் போது, தான் இந்துவா, முஸ்லிமா என்று கூட சொல்லத் தெரியாத மழலை இந்து வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட போதும், குஜராத் கலவரத்தின் போது நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் வயிறைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்து குத்திக்கொன்ற போதும், வீட்டை வெளியே பூட்டி பெட்ரோல்/மண்ணெண்ணெயை வீட்டுக்குள் ஊற்றி கேஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்து உள்ளே இருந்த அப்பாவி முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த போதும், பில்கிஸ்பானுவின் கைக்குழந்தை உட்பட 17 உறவினர்களை கொன்று அவரை பாலியல் வன்புணர்வு செய்த போதும், மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று இஸ்லாமியர்களை அடித்து கொன்ற போதும், காஷ்மீரில் எட்டு வயது ஆசிபாவை ஆறு நாட்களாக ஒரு கோவிலில் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த போதும், NEET தேர்வால் அனிதா இறந்த போதும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஸ்னோலின் உட்பட 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், உ.பி. ஹத்ராசில் மனிஷா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நாக்கை அறுத்து, கழுத்தில் துப்பட்டாவை இறுக்கி மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்று படுகொலை செய்த போதும், மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாண ஊர்வலம் நடத்தி கும்பல் பாலியல் வன்புணர்வு செய்த போதும், இன்னும் எண்ணிலடங்கா கொடூரங்கள் இவர்களது பரிவாரங்களால் நடத்தப்பட்ட போதும் பாஜக-வின் முதல்நிலை,இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது அக்கட்சியின் கடைமட்ட தலைவர்கள் எவராவது பெயருக்காகவாவது கண்டித்து இருக்கிறார்களா? ஆனால் இப்படிப்பட்ட கொடூர பாசிஸ்டுகளின் கட்சியை எதிர்க்கட்சிகள் மிக சாதாரணமாக எடைபோட்டு உலகத்திலிருந்தே துடைத்தெறியப்படவேண்டிய அக்கட்சியை பத்தோடு பதினொன்றாக அங்கீகாரம் கொடுத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மாநிலங்களுக்கான பேரிடர் நிதியை ஒதுக்குவது கூட தனது ஆளுகையின் கீழ் இருக்கும் அல்லது தனது கூட்டணி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தாராளமாக நிதியை ஒதுக்கி பாரபட்சம் காட்டி தனக்கு ஓட்டு போடாமல் புறக்கணித்த மாநிலங்களில் உள்ள மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு செத்துப் போனால் போகட்டும் என்று நிவாரண நிதியை வழங்காமல் புறக்கணித்து, மனிதாபிமானம் என்றால் என்னவென்று கேட்கும் பாசிஸ்டுகளை உண்மையை உணர வைத்து திருத்தி விடலாம் என்பதோ, விவாதம் புரிந்து வென்றுவிடலாம் என்பதோ, தொடர்ந்து போராடுவதன் மூலம் கோரிக்கைகளை பெற்றுவிடலாம் என்பதோ மூடநம்பிக்கை.


படிக்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல்:  தேர்தல் ஆணையத்தின் அயோக்கியத்தனம்!  எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன?


அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒரு சாதாரண கட்சியைப்போல மக்களுக்கு ஏதாவது ஒரு சில நன்மைகளை செய்து ஓட்டு வாங்கி தேர்தலில் வெல்வதை விட்டு மக்களுக்குள் பிரிவினையை தூண்டிவிட்டு, மோதவிட்டு, கலவரங்களை நிகழ்த்தி அதில் பல மனித உயிர்களை துள்ளத்துடிக்க கொன்றும், சொத்துக்களை சூறையாடியும் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக தன்னுடைய எஜமானர்களான கார்ப்பரேட்டுகளுக்கான சேவையை தங்குதடையின்றி தொடரவும், தன்னுடைய மெகா ஊழல்களையும், மக்கள் விரோத திட்டங்களின் மீதான விவாதத்தை திசைமாற்றவும், நாட்டை ஆள்வதற்கான தகுதியை இழந்து அம்மணமாய் நிற்பதை மறைத்துக்கொள்ளவும், அரசியல் இலாபத்துக்காகவும் நாடெங்கும் பல்வேறு கலவரங்களை நிகழ்த்தி வருகிறது.  இதையெல்லாம் தெரியாத அப்பாவிகளாக எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு பாசிஸ்டுகள் ஆட்சியில் தேர்தல் வெற்றி – தோல்வி என்ற வலைக்குள் சிக்கி அவர்களிடம் மூக்குடைபட்டுப் போகின்றன.

தற்போதுகூட நாடாளுமன்றத்தில் பாசிஸ்டுகளிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மல்லுக்கட்டுவதும், பாசிஸ்டுகள் அவர்களுக்கே உரிய  பாணியில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை செவிமடுக்காமலும், கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் அவையை ஒத்திவைத்துவிட்டு கவிழ்ந்தடித்து படுத்துக்கொள்கிறார்கள். இப்படியே ஒவ்வொரு கூட்டத்தொடரையும் முடித்துக்கொள்கிறார்கள். நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்துக்கும் உட்படுத்தாமலேயே கார்ப்பரேட் சேவைக்கான திட்டங்களை அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து அவசர சட்டங்களாக அறிவித்து பின்னர் சதித்தனமாக நடைமுறைக்கும் கொண்டுவருகின்றனர்.


படிக்க: 2024 நாடாளுமன்றத் தேர்தலும்! ஜனநாயகத்துக்குக் கட்டப்பட்டுள்ள கல்லறையும்!


பாராளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியை சேர்ந்தவருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் 2019 முதல் இன்று வரை அப்பதவியை காலியாக வைத்திருக்கும் பாசிஸ்டுகளை மக்களிடம் அம்பலப்படுத்தாமல் பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வைக்க முடியும், தங்களால் எழுப்பப்படும் கோரிக்கைகளை பாசிஸ்டுகள் செவி கொடுத்து கேட்பார்கள் என்று அனுதினமும் எதிர்க்கட்சிகள் அப்பாவித்தனமாய் எதிர்பார்க்கிறார்கள், மக்களையும் பாசிஸ்டுகள் மேல் நம்பிக்கை வைக்கச் சொல்கிறார்கள். மக்களை அல்லது குறைந்தபட்சம் தங்கள் கட்சி தொண்டர்களையாவது அரசியல்படுத்தி நாட்டை கூறு போட்டு விற்றுவரும் பாசிஸ்டுகளுக்கு எதிராக திரளச்செய்து பதவியில் இருந்து விரட்டுவதற்கான வேலைகளை முன்னெடுக்காமல் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் மேலும் மேலும் பாசிஸ்டுகளின் கைகளில் சரணாகதி அடைய வைக்கிறார்கள்.

அதானி, அம்பானி, ஏர்டெல் பாரதி மிட்டல், இன்போசிஸ் நாராயணமூர்த்தி, HCL சிவநாடார், டாடா போன்ற தேசம் கடந்த தரகு  முதலாளிகளின் பேராதரவோடு, பெரும் பணபலத்தோடு தேர்தல் ஆணையம், நீதித்துறை, அமலாக்கத்துறை, CBI, ராணுவம் போன்ற முக்கிய துறைகளையும் கைக்குள் வைத்திருக்கும் கார்ப்பரேட்-காவி பாசிஸ்டுகளை தேர்தல் மூலம் மட்டும்தான் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்பி மீண்டும் மீண்டும் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டு தோற்றுப் போய் ஏமாந்து போகிறார்கள். ஜனநாயக மாண்பே இல்லாத பாசிஸ்டுகளிடம் அதீத ஜனநாயகவாதிகளாக இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு அழிவையே தரும். இதைத்தான் நடந்து முடிந்த தேர்தல்கள் நிரூபித்து வருகின்றன. ஆதலால் உடனடியாக குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையிலான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை நாடளவில் பரந்துபட்ட வகையில் கட்டியமைத்து பாசிஸ்டுகளை மோதி வீழ்த்த தெருவில் இறங்குவதுதான் எதிர்க்கட்சிகளுக்கு உள்ள ஒரே வழி.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here