
போதிய முன்னெச்சரிக்கை விடப்பட்டதா?
டிசம்பர் இரண்டாம் தேதி அதிகாலையில் போதிய முன்னெச்சரிக்கை விடப்படாமல், சாத்தனூர் அணையில் இருந்து 1.8 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு பெரும் சேதத்தை உருவாக்கியதாக விமர்சனங்கள் வருகின்றன.
கடந்த நவம்பர் 30இல் மரக்காணம் அருகே கரையை கடந்த பெஞ்சால் புயலின் கோர தாண்டவத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகள் வெள்ளக்காடாகின.
திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளில் இப்பெருமழையால் மண் சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் மூழ்கியும் சிலர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கில் கால்நடைகளும் அழிந்து போய் உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். முழு சேதத்தை வெள்ளம் வடிந்து பின் தான் சரியாக கணக்கிட முடியும்.
புதுவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஊத்தங்கரை என்று பெய்த மழையின் அளவானது சில இடங்களில் 50 சென்டிமீட்டர் வரை சென்றது . குறிப்பாக ஊத்தங்கரையில் கனமழை என்றுதான் ஆரஞ்சு அலர்ட் (12 செ.மீ. க்கும் குறைவான மழைக்கானது ) விடப்பட்டிருந்தது. தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மொத்தமாக கணக்கிட்டால் ஒரே நாளில் 170 சென்டிமீட்டரையும் தாண்டி கொட்டித் தீர்த்து உள்ளது.
இது சாதாரணமான பருவமழையை போல் நின்று நிதானமாக நீடித்து பெய்தது அல்ல. Flash Flood என்று குறிப்பிடப்படும் வகையை சேர்ந்தது. இது, அடித்துச் செல்லக்கூடிய வெள்ளப்பெருக்கு என்ற வகையில் குறுகிய நேரத்தில் கொட்டி தீர்த்த பெருமழையே.
துயரத்தின் குறியீடாக சாத்தனூர் அணை!
கரையை நெருங்கி வந்த புயல் நின்று நிதானமாக கன மழையை கொடுத்தபடியே மெதுவாக முன் நகர்ந்தது . இந்த புயலின் பாதையைக் கணிப்பதில், கரையை கடந்து செல்லும் வேகத்தை கணிப்பதிலும்கூட வானிலை ஆய்வு மையம் கோட்டை விட்டுள்ளது.
கிடைத்த முன் எச்சரிக்கைகளை சரியாக பயன்படுத்தி சேதத்தை தவிர்க்கும் விதமாக அணைகளின் நீர் இருப்பை குறைத்து தமது கடமையை செய்வதில் அரசுத் துறைகள் கோட்டை விட்டுள்ளன.
சாத்தனூர் அணையை உரிய நேரத்தில் திறக்காமல் விட்டிருந்தால் அணை உடைந்து இதைவிட பேரழிவு ஏற்பட்டிருக்கும். எச்சரித்த உடன் தண்ணீரை வெளியேற்றியதால் அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என விளக்கம் தருகிறார் துரைமுருகன் .
இப்போது நீர்வளத்துறையும், தமிழக அரசும் சரியாகத்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. நான்கு கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டு தான் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் ஒருபுறம் தினமணி நாளிதழ் கட்டுரையில் விளக்கம் தருகிறார். மறுபுறத்தில், போதிய முன்னெச்சரிக்கை விடுக்காமல் நள்ளிரவில் தென்பெண்ணை ஆற்றில் 1.82 லட்சம் கன அடி நீரை திறந்து விட்டு பல ஊர்களை மூழ்கடித்து விட்டனர் என இந்து தமிழ் உள்ளிட்ட பத்திரிக்கைகள் விமர்சிக்கின்றன.
“மத்திய நீர் ஆணையம் (Central Water Commission) 29.11.2024 அன்று தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு வெள்ள அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியது.
படிக்க: புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் பாதிப்பும், மேட்டுக்குடியின் கும்மாளமும்!
இந்த அறிக்கையின்படி சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதை மத்திய நீர் ஆணையம் கணித்து மாநில அரசுக்கு உரிய எச்சரிக்கையை 29ஆம் தேதியே விடுத்துள்ளது தெளிவாகிறது. அன்றைய நாள் 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.60 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 430 கன அடியாகவும் வெளியேற்றம் 550 கன அடியாகவும் மட்டுமே இருந்தது என்பதை விளக்கி முன்கூட்டியே அணையின் நீர்மட்டத்தை குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என பூவுலகின் நண்பர்கள் விமர்சிக்கின்றனர் .
கோட்டை விட்ட தமிழக அரசு!
தமிழக அரசு குறிப்பிட்ட சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக களப்பணியாளர்களை குழுக்களாகப் பிரித்து அனுப்பி, புயலின் சேதத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான தயார் நிலையில் தான் இருந்துள்ளது. ஆனால் அதி கன மழையை எதிர்கொள்ளும் நீர் மேலாண்மையில் கோட்டை விட்டுள்ளது.
பாசிச ஜெயா ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் நள்ளிரவில் முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டு சென்னை மூழ்கியது. இதிலிருந்து புயலை எதிர்கொள்ள சென்னைக்கு அருகே உள்ள ஏரிகளில் நீர் இருப்பை குறைப்பது என்ற நடைமுறையை முன்னெடுக்கவும் ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் இந்தப் படிப்பினையை தமிழகத்தின் பிறப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை, அணைகளை பராமரிப்பதில் கணக்கில் எடுக்காமல் தவறிழைத்துள்ளனர். இதனால் தான் சாத்தனூர் அணையின் நீர் இருப்பை குறைக்காமல் முழு கொள்ளளவுக்கு மிக நெருக்கமாகவே பராமரித்துள்ளனர்.
அத்துமீறும் மக்களின் கோபம்!
வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடியின் மீது மக்கள் சேற்றை வீசியதும் நடந்துள்ளது. விழுப்புரம் பகுதியில் தங்களுக்கான உதவிகள் கிடைக்காத சூழலில் சாலை மறியலில் அரசின் கவனத்தை தம்பால் திருப்ப வேண்டிய அவலத்தில் உள்ள மக்களை அமைச்சர் பொன்முடி சந்தித்தபோதுதான் இந்த சேறடிப்பு நடந்துள்ளது.
படிக்க: புயல், வெள்ளம் மூலம் அழிவு ஒருபுறம்! பேரிடர் நிதி தராத பாசிச பாஜகவின் அராஜகம் மறுபுறம்!
சாமானிய உழைக்கும் மக்களின் வாழ்நாள் சேமிப்பு பறிபோய் உள்ளது. அம்மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகள், வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாசமாகிவிட்டன. தவறுக்குப் பிராயச்சித்தமாக நிவாரண பணிகளில் திமுக அரசு கவனம் தரட்டும். தவறிழைத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும். ஆத்திரத்தில் குமுறி வெடிக்கும் மக்களின் எதிர்வினைகளை நாம் குற்றமாக கருத முடியாது.
ஒன்றியத்தின் கடமை கை கழுவுவதா?
தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு அவசர நிதியாக 2000 கோடி வேண்டும் என கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
வழக்கம் போல் பாசிச மோடி அரசு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல் முருகன் உள்ளிட்ட தமிழக சங்கிகள் இருக்கும் நிலையிலும் – தமிழகத்தின் தற்போதைய சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்காமலும் , நிவாரண நிதியை ஒதுக்காமலும் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கக்கூடும். “இந்துக்களுக்காக” இருப்பதாக கதை விடும் எச்(சை) ராஜா, வானதி, அண்ணாமலை, தமிழிசை வகையறாக்களை என்ன செய்யப் போகிறோம்?
“GST மூலம் மொத்த வரியையும் பிடுங்கும் போது மட்டும் தான் நாங்கள் இந்தியர்களாக தெரிகிறோமா? தேர்தல் வரும்போது மட்டும் தான் எங்களில் பெரும்பான்மையினர் இந்துக்களாக தெரிகின்றோமா?” என்று உழைக்கும் மக்கள் தான் காவிகளை காணும் இடங்களில் சட்டையைப் பிடித்து, நிவாரண நிதி எங்கே என்று கேட்க வேண்டும்.
புவி வெப்பமயமாவதன் விளைவை உலகம் அனுபவித்தே தீர வேண்டும். அதை தடுக்க நினைத்தால் , கார்பன் உமிழ்வை குறைத்தே தீர வேண்டும். அதற்கு உலகம் முழுவதிலும் கார்ப்பரேட்டுகள் லாப வெறி பிடித்து நடத்தும் உற்பத்தியின் மீது தாக்குதல் தொடுத்தாக வேண்டும். அதற்கு முதலில் கார்ப்பரேட் காவி பாசிச கும்பலை ஆட்சியதிகாரத்தில் இருந்து நாம் இறக்கி ஆக வேண்டும்.
- இளமாறன்
விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு கட்டுரையாளர் தோழர் இளமாறன் சிறப்பான முறையில் எங்கெங்கு தவறு நிகழ்ந்திருக்கின்றன; யார் யார் என்னென்ன செய்திருக்க வேண்டும்; இதில் கோட்டை விட்டவர்கள் யார் யார் என்பதை எல்லாம் நன்றாகவே தெளிவு படுத்தி உள்ளார். ஆனால் இதில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மாநில அரசோ ஒன்றிய அரசோ வானிலை ஆராய்ச்சி மையமோ அசால்டாக இருந்திருக்கின்றன என்பதனையும் தோழர் நன்றாகவே விளக்கி உள்ளார். மக்களின் கோப உணர்ச்சி நியாயமானதே! மக்களுக்கு தேவையானவற்றை உடனுக்குடன் மாநில ஒன்றிய அரசுகள் அதிகாரிகளின் மூலமாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்! மாறாக பாசிச பாஜக, அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் பண்ண முனைவது இழிவானது. இயற்கை பேரிடர் காலத்தில் உலகம் முழுமைக்கும் இத்தகைய எதிர்பாராத சூழல்கள், பாதிப்புக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடுகின்றன. அதே நேரத்தில் மனித தவறுகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குற்றவாளிகளே! 2015ல் ஜெயலலிதா பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு உத்தரவு கொடுக்காததாலேயே நேரம் கெட்ட நேரத்தில் திறந்து விட்டதன் கடும் விளைவை சென்னை மக்கள் சந்தித்தார்கள். அதே போல சாத்தனூர் அணைத் திறப்புப் பிரச்சனையையும் சமன் செய்வது சரியா? ஏனெனில் இப்ப பிரச்சனையை தினமணி ஒன்று கூறுகிறது; தமிழ் இந்து ஒன்று கூறுகிறது; வெவ்வேறு பத்திரிகைகள் வெவ்வேறு யூடியூப் ஊடகங்கள் பல்வேறு விவரங்களை கூறுகின்றனர். அமைச்சர் துரைமுருகன் வேறொன்று கூறுகிறார். ஒரு கிராமத்துப் பெண்மணி அணை திறக்கப்பட இருக்கின்ற உண்மையை முன்கூட்டியே அதிகாரிகள் எங்களுக்கு தகவல் தந்தார்கள்; அதனாலயே நாங்கள் தப்பி பிழைத்து சென்றோம்- என்று பலருடன் போட்டில்
இருந்தபடியே பேட்டி கொடுப்பதை நானே கேட்டேன். ஆக, ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளம் தொடர்பாக, சாத்தனூர் அணை திறக்கப்பட்டது தொடர்பாக, அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி அடித்தார்களா? அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள் அக்காரியத்தைச் செய்தார்களா? என்பதெல்லாம் கூட சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. எனவே கட்டுரையாளர் இன்னும் பலதரப்பட்ட செய்திகளையும் உரிய தோழர்கள் மூலம் நன்கு அறிந்து முழுமை பெற்ற செய்திகளை வெளிக்கொணர வேண்டும் என்பது என் அவா. அதே நேரத்தில் இந்த அளவிற்கு பல அம்சங்களை தெளிவாக விளக்கி விரைவில் கட்டுரை வடிவமாக்கிய தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
தி.மு.க அரசாக இருநாதாலும் சரி, அ.தி.மு.க அரசாக இருந்தாலும் சரி, ஏழை எளிய மக்களின் உயிரைப்பற்றியும்,அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என்பதை பற்றியும் துளியும் கவலை கொள்ள மாட்டார்கள்.
கட்டுரையில் திமுக அரசின் தவறை மென்மையாக கண்டிப்பது ஏற்புடையதல்ல. யார் தவறு செய்தாலும் தவறுதான்.
மோடி தலைமையிலான பிஜேபி அரசு தமிழக மக்களுக்கு செய்யும் துரோகத்தை, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.
அதில் மாற்றுக் கருத்து இல்லை தான். முதலாளித்துவக் கட்சிகளைப் பொருத்த மட்டிலும் அவை ஆளும் வர்க்க சேவகர்களே என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் ஃபெஞ்சல் புயல் எதிர்பாராத சில அசம்பாவிதங்களை உருவாக்கியுள்ளன. வானிலை மையமே 50 சென்டிமீட்டர் அளவு வானவெடிப்பு ஏற்பட்டு கொட்டும் என்று அறிவிக்கவே இல்லை. இப்படிப்பட்ட பேரிடர் உலகம் முழுவதும் ஏற்படுகின்ற பொழுது பல்வேறு விதமான இடரற்பாடுகளை அனைத்து நாட்டு மக்களும் சந்திப்பதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்தே வருகின்றோம். எனவேதான் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அது திமுக அரசாக இருந்தாலும் மனிதத் தவறுகளுக்கு இவர்கள் காரணமாக இருந்திருப்பார்களேயானால் குற்றவாளிகளே! ஆனால் பாஜக, அதிமுக, பாதக, தவெக, பாமக போன்ற பிழைப்புவாதக் கட்சிகள் வழக்கம் போல் ஊளையிடுவதால் நாம் சற்று எச்சரிக்கையாக இவ்விடயத்தை கையாள வேண்டும். நடந்திருக்கக் கூடிய புயல் வெள்ளப் பாதிப்புகளின் தனிமனிதத்தவர்கள்அரசின்தவறுகள்,அதகரிகளின் தவறுகள், வானிலை ஆராய்ச்சி மைய தவறுகள் என அனைத்தையும் மதிப்பீடு செய்து அந்த வகையில் நாம் மக்களுக்கான கடமையை ஆற்ற வேண்டும் என்பதுவும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதுவுமே சரியாக இருக்கும் முடியும் என்பதைத் தான் வலியுறுத்தி இருந்தேன்.