திமுகவும் – பாஜகவும் ஒன்னு! அரசியல் தற்குறிகளுக்கு காமாலைக் கண்ணு! 

தொடர்ச்சி…

2018 ஆம் ஆண்டு திமுகவின் தலைவர், கலைஞர். மு.கருணாநிதி இறந்தபோது மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தினோம். உடனே பார்ப்பனக் கும்பலை விட சற்சூத்திரர்கள் வெகுண்டெழுந்தனர். திமுக காரியவாத, பிழைப்புவாத, போனபார்டிசக் கட்சி என்ற வரையறை என்ன ஆனது என்று மிகவும் பொறுப்புடன் எகிறிக் குதித்தனர்.

“தமிழ்தாய் வாழ்த்தை கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரை காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்கள் கடந்து செல்லும் போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலில் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார். அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன என்ஜினியரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும் தமிழ் புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்க துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.

பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசைவாழ் மக்கள், கட்டிடத் தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்… என சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி. அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.

ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து தன் போராட்ட குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திர குள்ளர்களே. எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.

டெல்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமர்சித்தாலும், டெல்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதி இருக்கின்றனர் என்பது மறுக்க இயலாத உண்மை.

ஆகவே சங்கப் பரிவாரத்தின் இயற்கையான எதிரியை, நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாக கொள்வது தவிர்க்க இயலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுகவை ஆதரிக்கின்றனர் அல்லது பாஜகவின் கருத்தை பேசுகின்றனர், இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாக பேசுபவர்களும் அத்தகையோரே “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறிபிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.

கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார் “கொடியவர்கள் கோவில்களை தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார். “மாநிலங்கள் உள்நாட்டு காலனியாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார். “இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார். இந்துத்துவ பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடை பெற்றுக் கொள்கிறார். காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்கு பொருத்தமான பாதையை பின்பற்றுமாறு நம்மை கோருகின்றன.” என்று 2018 ஆம் ஆண்டு ’திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி’ என்ற தலைப்பில் புதிய ஜனநாயகம் இதழில் இரங்கல் அறிக்கை வெளியிட்டது. ஏனென்றால் திமுகவையும், கலைஞர் கருணாநிதியையும் பற்றி குடுமிகளின் பார்வையும், எங்கள் பார்வையும் வெவ்வேறானது. இது வறட்டு வாதிகளுக்கும், தற்குறிகளின் காமாலைக் கண்களுக்கும் புரியாது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதாவது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னரே, ஏறித் தாக்கி வந்த  கார்ப்பரேட் – காவி பாசிசத்தை எதிர்த்து, ’கார்ப்பரேட் காவிப் பாசிசம் எதிர்த்து நில்!’ என்ற முழக்கத்தின் கீழ் திருச்சியில் அரசியல் மாநாடு ஒன்றை நடத்தினோம். பிற கட்சிகள் அனைவரும் தேர்தலுக்காக வேலை செய்து வந்த போது, மக்களின் மீது தாக்குதல் தொடுத்து வந்த ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலை அம்பலப்படுத்தி முறியடிக்கும் வகையில் மாநாடு நடத்தினோம்.

அந்தக்  மாநாட்டுக் கூட்டத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் உரையாற்றினார். “நாம் புரட்சி என்ற கனவில் இருப்பவர்கள் தொடர்ந்து நாம் அந்தக் கனவைக் கண்டு கொண்டிருப்போம். ஒருபோதும் அந்தக் கனவில் இருந்து வெளியே போக மாட்டோம். ஆனால் இப்போது நாம் சின்னஞ்சிறு கனவுகளையும் காண வேண்டியவர்களாக இருக்கிறோம். அடுத்த சில வாரங்களுக்குள் இந்த பாசிஸ்டுகளை தூக்கி எறிவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வரப்போகிறது. அவர்களை நாம் தூக்கி எறிவோம்.

ஆனால் புதிய ஆட்சியும் ஒரு மனித முகத்தை மாட்டிக் கொண்டு இதே தாராளவாதக் கொள்கைகளை கை பிடிக்கும். அன்று அந்த ஆட்சியைப் பார்த்து நாம் சொல்வோம். கோடீஸ்வரர்களின் ராஜ்ஜியத்தை கலைத்து போடு! இந்த ஆட்சி எந்திரத்தை உடைத்து போடு! இதையே நீ தொடர முடியாது என்று அந்த புதிய ஆட்சியாளர்களுக்கு செல்லுவோம். நமக்கு வேண்டியதெல்லாம் இந்த நாட்டின் செல்வங்கள் அனைத்தும் மக்களுக்குரியவையாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான சேம நல அரசு என்பது சொத்துக் குவியலை தடுக்க வேண்டும். அனைத்து மக்களிடமும் அனைத்து செல்வங்களையும் பகிர்ந்து கொடுப்பதற்காக நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. போராடுவோம்” என்று உரை நிகழ்த்தினார். உடனே அரசியல் தற்குறிகள் பிடித்துக் கொண்டார்கள். திமுக-துமுக-முக-க என்று ஜன்னீயில் அரற்றினர் சிலர்.

தோழர் தியாகு, தோழர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராளிகள் பலரும் கலந்துக் கொண்ட மாநாட்டையே காங்கிரசு மற்றும் திமுகவிற்கு ஓட்டு கேட்பதற்காகவே நடத்தப்பட்ட மாநாடு என்று இழிவு படுத்தினார்கள். அதுமட்டுமல்ல மக்களுடன் ஒட்டுறவு இல்லாத சிலர் கோடிக்கணக்கில் திமுகவிடம் காசு வாங்கி விட்டதாக, அவர்கள் வீட்டு கழிப்பறை சுவர்களில் (முகநூல், வாட்ஸ் அப் தான்) எழுதி விட்டு எங்களின் மீது சேறடித்து விட்டதாக கருதிக் கொண்டு புளகாங்கிதம் அடைந்தனர்.

நாட்டு மக்களுக்கு மிகவும் அபாயமான அந்த சூழலை தான் “தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதன் செல்வாக்கை நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு முனைகளில் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பல். இது பிரதான எதிரியாக கருதுவது தேர்தல் அரசியல் கட்சிகளில் திமுக வையும், போராடும் அமைப்புகளில் மக்கள் அதிகாரம் அமைப்பையும் தான்” என்று வரையறை செய்து அதற்கு முகம் கொடுக்கும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தோம்.

தேர்தல் அரசியலில் பா.ஜ.க வுக்கு எதிராக செயல்படும் கட்சிகள் தொடர்ந்து எமது போராட்டங்களுக்கு  ஆதரவளித்தனர். இதனை பொறுக்க முடியாத உளவுத்துறை பல இடங்களில் நீங்கள் ஏன் மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து வேலை செய்கிறீர்கள் என்று நைச்சியமாகவும், மிரட்டும் வகையிலும் நடந்துக் கொண்டது.

2019 பாராளுமன்ற தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, 2014 ஆம் ஆண்டு 31% பெற்றிருந்த பாஜக- மோடி கும்பல், 2019 ஆம் ஆண்டு 38% வாக்குளை பெற்று வெற்றி பெற்றது. பாஜகவின் இந்த தேர்தல் வெற்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சில அரசியல் வித்தகர்கள் இந்த வெற்றி EVM இயந்திரத்தால் வந்த வெற்றி என்று உளறிக் கொண்டிருந்த போது, கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித் தாக்கி வருகிறது என்று முடிவு செய்து அதற்கு எதிராக போராடுவதை முதற் கடமையாக எடுத்துச் செயல்பட்டு வந்தோம்.

தொடரும்…

முந்தைய பதிவு:

திமுகவும் – பாஜகவும் ஒன்னு! அரசியல் தற்குறிகளுக்கு காமாலைக் கண்ணு! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here