நவம்பர் 7, 1917.  பூவுலகில் புதியதொரு ஆட்சி முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து அடிமை எஜமானர்களின் ஆட்சி,  நிலப் பிரபுக்களின் ஆட்சி, மன்னர் ஆட்சி, அதன் பின்னர் ‘மக்களாட்சி’ என்ற பெயரில் பெரும்பான்மை மக்கள் மீது ஒரு சிறு கும்பல் ஆதிக்கம் செய்யும் முதலாளித்துவ ‘ஜனநாயக ஆட்சி’ போன்ற அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு பெரும்பான்மை மக்கள் கையில் அதிகாரம் கொண்ட சோசலிச ஆட்சி முறை ஒன்றை நிலை நிறுத்தியது.

பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில்  அமரத் துவங்கிய உடன் பல்வேறு முதலாளித்துவ நாடுகளில் 300 ஆண்டுகள் செய்த சாதனைகளை வெறும் 30 ஆண்டுகளில் சாதித்து காட்டியது சோவியத் ரஷ்யா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பஞ்சைகள் என்றும் பராரிகள் என்றும் இழிவுபடுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் அதிகாரம், சோவியத்துகளின் ஆட்சி நிலை நாட்டப்பட்டது.

உழுபவர்க்கே நிலம் என்ற  உரிமையை நிலைநாட்டி விவசாயிகளின் அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்டும் மாற்றத்தை கொண்டு வந்தது மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம், பெண்களுக்கு சமத்துவ உரிமை, மாணவர்களுக்கு இலவச கல்வி, வேலைவாய்ப்பு, அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை, மொத்த சமூகத்திற்கும் ஆரோக்கியமான சுகாதாரமான மருத்துவ வசதி, நவீன விஞ்ஞானத்தை தனிப்பட்ட மனிதர்களின் வசதிக்காக கொள்ளையடிக்க பயன்படுத்தி வந்த நிலைமையை மாற்றி அனைவரும் அறிவியல் வசதிகளை பெறும் உன்னதமான சமூக அமைப்பை உருவாக்கி காட்டினார்கள்.

மனிதர்களை மனிதர்கள் சுரண்டுவது, நாடுகள் நாடுகளை சுரண்டுவது என்ற கேடுகெட்ட சுரண்டல் முறையை பல நூற்றாண்டுகளாக கண்டு வந்த உலக மக்களுக்கு சோவியத்துகள் ஆட்சி புதிய நம்பிக்கையை, குதூகலத்தை உருவாக்கியது. ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிகளின் சர்வாதிகாரம் உலகில் உள்ள அனைத்து செல்வங்களையும் ஒரு சிறு கும்பல் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரம் அனைத்திற்கும் சாவு மணி அடித்தது சோவியத் ரஷ்யா.

கட்சிக்கு வெளியில் உள்ள எதிரிகளை வர்க்கப் போராட்டத்தின் மூலமும், கட்சிக்குள் உள்ள எதிரி வர்க்க சிந்தனை கொண்டவர்களை உட்கட்சி போராட்டத்தின் மூலமும் முறியடித்துக் கொண்டே முன்னேறியது சோவியத் ரஷ்யா.

மகத்தான மக்கள் தலைவர்கள் தோழர் லெனின், தோழர் ஸ்டாலின் தலைமையில் காரல் மார்க்ஸ் முன்வைத்த சோசலிச சமூக அமைப்பை நடைமுறையில் நிகழ்த்தி காட்டி, பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை மட்டுமின்றி அதிகாரத்தையும் நிலைநாட்டியது சோவியத் ரஷ்யா.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வந்த அடிமை சமூக அமைப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு, 300 ஆண்டுகளாக நீடித்து வந்த முதலாளித்துவ சமூக அமைப்பு போன்றவை உருவாக்கிய தனிச் சொத்துடமை கண்ணோட்டத்திற்கு எதிராக சோசலிச சமூக அமைப்பு கூட்டு சிந்தனையையும், பொதுவுடமை சிந்தனையையும் மக்கள் மத்தியில் விதைத்து வந்தது.

உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடுகளில் சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி போராட்டங்களும், காலனி, அரைக்காலனி, நவீன காலனிய நாடுகளில் சோசலிசத்திற்கு இடைக்கட்டமாக புதிய ஜனநாயக புரட்சி என்ற புரட்சிப் போராட்டங்களும் முன்னேற துவங்கியது.

கம்யூனிசத்தை வர்க்கப் போராட்டத்தில் வீழ்த்த முடியாத ஏகாதிபத்திய முதலாளித்துவம் கட்சிக்குள் திருத்தல் வாதத்தை புகுத்தி கம்யூனிச கொடியை கையில் ஏந்தி கொண்டு கம்யூனிசத்திற்கு எதிராக போராடுகின்ற பிழைப்புவாதிகள், சுயநலவாதிகள் அதிகார வெறி பிடித்தவர்களை உருவாக்கியது. விளைவு மகத்தான சோவியத் பின்னடைவுக்கு உள்ளானது.

ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும், மனிதர்களுக்குள் சுரண்டலை தீவிரப்படுத்தும், ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆதிக்கம் செய்வதை ஊக்கப்படுத்தும் முதலாளித்துவ பொருளாதாரத்தையும் அரசியல், பண்பாட்டையும் தூக்கி எறிந்து மனித குலத்திற்கு உண்மையான சகோதரத்துவம், சமத்துவம், உண்மையான ஜனநாயகம் என்பதை வழங்கும் சோசலிச சமூகத்தை புவிப்பரப்பு எங்கும் மீண்டும் உருவாக்குவோம்.

ரஷ்யாவில் தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் திருத்தல்வாதிகளின் சோசலிசத்திற்கு எதிரான சதித்தனங்களையும், ரஷ்ய புரட்சியின் அனுபவங்களையும் முன் வைத்து சீனாவை முன்னேறிய சோசலிச நாடாக உருவாக்கிய தோழர் மாசேதுங் கற்றுக் கொடுத்த அனுபவத்தையும் செரித்துக் கொள்வோம்.

இன்று உலகை தனது ஒற்றைத் துருவ வல்லாதிக்கத்தின் கீழ் ஆதிக்கம் செய்வதற்கு துடித்துக் கொண்டுள்ள அமெரிக்கா உலகெங்கிலும் சமாதானத்தை ஒழித்துக் கட்டி போரை தூண்டி விடுகிறது. உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவின் போர், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் உள்ளிட்ட அனைத்து வகையான போரும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சுரண்டல் நலனுக்காக நடத்தப்படுகின்றமைதான்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசை முறியடித்து ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரம் கார்ப்பரேட்டுகளின் மூலம் காலனி, அரைக்காலனி, நவீன காலனி நாடுகளை சுரண்டி கொழுத்து வருவதை எதிர்த்து முறியடிப்பதற்கு பொருத்தமான அரசியல், பொருளாதார, பண்பாட்டு வாழ்க்கை முறையை கற்றுத் தருவது சோசலிசம் மட்டும்தான், கம்யூனிச சித்தாந்தம் தான்.

இதன் ஒளியில் நமது நாட்டில் புதிய ஜனநாயக புரட்சிக்கு கோடிக்கணக்கான மக்களை அணிதிரட்டும் போக்கில் தற்போது புதிதாக உருவாகியுள்ள இடைக்கட்டத்தில் கார்ப்பரேட்  – காவி பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக ஜனநாயக கூட்டரசு ஒன்றை உருவாக்கும் திசை வழியில் மக்கள் அதிகாரத்தை நிலை நாட்ட பாடுபடுவோம்.

மீண்டும் உலகெங்கும் நவம்பர்கள் தோன்றட்டும்! ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரம் முற்றாக அடித்து நொறுக்கப்படட்டும்! சோசலிச பொருளாதாரத்தை முன்வைத்து கம்யூனிச சமூக அமைப்பு நோக்கி உலகை முன்னேற்றிக் கொண்டு செல்வோம்.

நவம்பர் புரட்சி தின வாழ்த்துகள்!

தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
ஊடகப்பிரிவு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here