பத்திரிக்கைச் செய்தி

06.01.2022

அன்புடையீர்,

எமது கட்சியின் தோழர்கள் இருவர் தலைமைக்குழுவின் அதிகாரத்துவ போக்கினால் அமைப்பிலிருந்து விலகுவதாக 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி பொது வெளியில் அறிவித்தனர். “ஒரு கசப்பான போராட்டத்திற்குப் பின்னர்தான் தவிர்க்கவே இயலாது என்ற நிலையில் இந்த முடிவுக்கு நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்”. என்று அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இது எமது அமைப்பு தோழர்களையும் தாண்டி பல்வேறு அமைப்பினரையும் ஜனநாயக சக்திகளையும் கவலை கொள்ள வைத்தது. விலகலை சரி செய்ய இருவருடனும் பேச நாங்கள் உதவட்டுமா என்று அக்கரையுடன் பலர் விசாரிக்கவும் செய்தனர். அவர்களுக்கு நன்றி கூறி விட்டு நாங்களே சரி செய்ய அமைப்பு முறைக்குள் நின்று பரிசீலிக்கவும் போராடவும் முடிவெடுத்தோம். அது நீண்ட நெடிய ஒன்றாக அமைந்து தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இருவரின் விலகலைத்தொடர்ந்து அமைப்புக்குள் கடும் பதட்டமும், அவநம்பிக்கையும் உருவானது. அணிகளின் போராட்டத்தின் விளைவாக அப்போதைய கட்சித்தலைமை, சிறப்புக்கூட்டம் ஒன்றை நடத்தி தாங்களும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு இடைக்கால கமிட்டி ஒன்றிடம் பொறுப்பை ஒப்படைத்தது. விலகிய இரு தோழர்களையும் உள்ளடக்கி அவர்கள் விலகுவதற்கு முன் வைத்த காரணங்களையும், வேறு காரணங்கள் இருந்தாலும் அதனையும் உள்ளடக்கி விவாதிக்க சிறப்பு பிளீனம் நடத்துவது எனவும், அதில் அனைத்து அம்சங்களையும் விரிவாக விவாதித்து தீர்வு காணவும், புதிய தலைமையை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அந்த சிறப்புக்கூட்டத்திற்கும் அதற்குப் பிறகு நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பிளீனத்திற்கும் கூட வெளியேறிய அவர்கள் இருவரும் வர முடியாது என்று கூறியதுடன் நாங்கள் விலகியது விலகியதுதான் என்றே அறிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பி.எச்.இ.எல் தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வாங்கித்தருவதற்காக உருவாக்கப்பட்ட சொசைட்டியில் அனாதீன நிலத்தை முறைகேடாக வாங்கியது மற்றும் அதில் நடந்த ஊழல் என தொழிற்சங்கத்தின் அப்போதைய மாநில பொதுச்செயலரின் முறைகேடுகள் அம்பலமானது. இந்த ஊழல் முறைகேட்டை கட்சியின் விசாரணைக்கமிட்டி கண்டறிந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் தள்ளிப்போட்டு, அந்த ஊழல் பேர்வழியைப் பாதுகாக்க அப்போதைய செயலர் முயற்சித்தார் என்பது அம்பலப்பட்டது.

கட்சிக்குள் அதிகாரத்துவத்துடனும் நேர்மையின்றியும் நடந்து அதனால் இருவர் வெளியேறி, அணிகளின் கோபத்துக்கு ஆளான நிலையில், இந்த ஊழல் பிரச்சினையிலும் குற்றச்சாட்டுக்கு ஆளானதால், நடக்கவிருந்த பிளீனம் தங்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும் என உணர்ந்து கட்சியைப்பிளக்கும் கேடுகெட்ட வேலையை செய்ய ஆரம்பித்தது செயலர் உள்ளிட்ட பழைய தலைமை. இதற்கு ஒத்துழைக்க மறுத்து தலைமைக் கமிட்டியிலிருந்த மேலும் இருவர் வெளியேறியதால் கூடுதல் பதட்டமடைந்த பழைய தலைமையினர் இன்னும் மோசமான இழிசெயல்களில் இறங்கினர்.

முதலில் விலகிய இருவர் மற்றும் இடைக்கால கமிட்டியில் இருந்த ஒரு தோழர் பற்றி சதிக்கோட்பாடுகளை உருவாக்கி அவதூறு பரப்பினர். விலகிய அந்த இருவரும்தான் இடைக்கால கமிட்டியை இயக்குகிறார்கள் என்று அப்பட்டமான பொய்யைப்பரப்பினர். பொறுப்பிலிருந்து விலகிய பின்னும் தாங்களே தலைமை என கருதிக்கொண்டு, எந்த அமைப்பு முறையையும் மதிக்காமல் இடைக்கால கமிட்டியைக் கலைத்து விட்டதாக அறிவித்தனர். “கட்சியைக் காப்பாற்றுவதற்காக” தாங்களே மீண்டும் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக தங்களுக்குத் தாங்களே மகுடம் சூட்டிக்கொண்டனர். மார்க்சிய-லெனினிய அமைப்பு முறையை மீறிய இந்த அதிகாரத்துவ போக்கை கண்டித்த ஊழியர்கள், மக்கள் திரள் அரங்கின் தலைவர்கள் அனைவரைப் பற்றியும் அவதூறு பரப்பி, யாரிடமும் எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியை விட்டு நீக்குவதாக ஊடகம் மூலம் பொது வெளியில் அறிவித்தனர். “கட்சித்தலைமைக்கு கட்டுப்படாமல் மக்கள் திரள் தலைவர்கள் கலகம் செய்வதாக” கதை கட்டி சதித்தனமாக அமைப்பைப் பிளவுபடுத்திக் கொண்டு, சிறு கும்பலுடன் வெளியேறினர்.

இந்த நெருக்கடியான நிலையில், இப்படி பிளபுபடுத்திய சீர்குலைவுவாதிகளைத் தவிர, பிற பெரும்பான்மை அணிகளையும் ஊழியர்களையும் திரட்டி சிறப்புக்கூட்டத்தில் பொறுப்பளிக்கப்பட்டபடி பிளீனத்தை நடத்தி முடித்தது இடைக்காலக் கமிட்டி. ஜனநாயகப் பூர்வமாக புதிய தலைமை தேர்வு செய்யப்பட்டது. கட்சியைப் பிளவுபடுத்தி கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் செய்த பழைய தலைமை உட்பட சீர்குலைவுவாதிகள் அனைவரும் அமைப்பு விதிகளின்படி கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைமைக்கு விலகிய இருவரும் வாழ்த்து தெரிவித்தும், புதிய தலைமையுடன் இணைந்து வேலை செய்வது குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவித்தும் கடிதம் கொடுத்தனர். அதை கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்களின் விலகல் குறித்து பரிசீலிக்கப்பட்டது.

இந்த இடத்தில் விலகல் அறிவிப்பை பொது வெளியில் போட்டது சரியா என்ற கேள்வி எழுகிறது. பொதுவில் அவ்வாறு போடுவது தவறுதான். ஆனால், குறிப்பான இப்பிரச்சினையில் உள்ள காரண – காரிய உறவைப் பரிசீலிக்க வேண்டும். விலகிய தோழர்கள் இருவரும் தலைமையிடம் தாங்கள் விலகுவதாக கடிதம் கொடுத்த அக்டோபர்-2019 முதல் பிப்ரவரி-2020 வரை சுமார் 5 மாதங்கள் முறையாக – அமைப்பு முறையை மீறாமல்தான் கட்சிக்குள் பேராடியுள்ளனர்.

விலகல் கடிதம் கொடுத்த இருவருமே கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித்தாக்கிவரும் சூழலில் தாங்கள் விலகியிருப்பது சரியல்ல என்பதை உணர்ந்து, தங்கள் விலகலைத் திரும்பப்பெற்றுக்கொள்வதாகவும், அமைப்பில் தலைமைப்பொறுப்பிற்கு வராமல், சாதாரண உறுப்பினராக கீழிருந்து வேலை செய்வதாகவும் மறு கடிதம் தந்தனர். அப்போதைய தலைமைக்கமிட்டி அதை ஏற்காமல் புறக்கணித்தது. தலைமைக்கமிட்டியில் விசாரணைக்கு வரச்சொல்லி அழைத்தது. தலைமைக்கமிட்டியின் மீது நம்பிக்கையில்லை என்று கூறி அணிகள் பங்கேற்கும் படியான பொது விவாதம் நடத்த இருவரும் கோரிய போது, அதை நிராகரித்து விட்டு விவாதிக்கவே வராமல் கடிதப்போர் நடத்துவதாக அவதூறு பரப்பியது. திட்டமிட்டே அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு மாநாட்டை நடத்தி முடித்தது. இவர்கள் இருவரைப்பற்றி – குறிப்பாக, கலாச்சார அமைப்பின் பொதுச்செயலர் பற்றி கேள்வியெழுப்பிய அணிகளிடம், “அவருக்கு உடல் நிலை சரியில்லை; ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளார்” என்று பொய்யான காரணங்களைக்கூறி ஏய்த்தது.

இப்படி கட்சியின் தலைமையிலிருந்த தோழர்களையே எதிரிகள் போல நடத்தியதற்குக் காரணம், செயலரின் சில சந்தர்ப்பவாதமான, பாரபட்சமான செயல்களை கேள்விக்குள்ளாக்கினார்கள் என்பதுதான். இந்திய சமுதாயத்தின் உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்யக் குழு அமைத்து 10 ஆண்டுகளாக ஆய்வுப்பணி நிறைவேறாதது குறித்து இவர்கள் கேள்வியெழுப்பினர். அரசியல் ரீதியிலும் புதிய செயல்தந்திரம் வகுப்பதிலும் முரண்பட்டு தலைமையை அவதூறு செய்தவர் விசயத்தில் தெளிவான முடிவெடுக்காமல் கட்சி தாராளவாதமாக நடந்து கொண்டதை கேள்விக்குள்ளாக்கினர். இது பற்றி, தலைமைக்கமிட்டியில் முடிவெடுத்த பின்னும் அதை அமுல்படுத்தாமல் அவரைக்காப்பாற்றும் நோக்கில் அப்போதைய செயலர் செயல்பட்டதையும், அமைப்புத்தோழர்களிடம் செயலர் பொய் பேசியதையும் எதிர்த்தனர். அதே தோழர், விலகிய இருவரில் ஒருவரான கலாச்சார அமைப்பின் செயலர் பற்றி சாதியைக்குறிப்பிட்டு கட்சிக்குள்ளிருந்தே கீழ்த்தரமான முறையில் தனிநபர் தாக்குதல் தொடுத்ததையும் அதனால் பாதிக்கப்பட்ட அவர் மன உளைச்சலுக்கு ஆளானதையும் கண்டுகொள்ளாமல் செயலர் அமைதி காத்தார். இப்படியெல்லாம் அமைப்பு முறையை அமுல்படுத்தப்போராடியவர்களை – அமைப்பு முறையை மதித்து கேள்வியெழுப்பியவர்களைப் புறக்கணித்து மனஉளைச்சலுக்குத் தள்ளி விட்டு ஒரு மாநாட்டையும் நடத்தி முடித்தனர். அவர்களை ஓரங்கட்டி, அவமானப்படுத்தி வெளியேற்றவும் திட்டமிட்டனர். இப்படி 5 மாத கால கசப்பான போராட்டத்திற்கு பிறகு, வேறு வழியின்றி அமைப்பில் இருந்தே வெளியேறுவதாக முடிவெடுத்த நிலையில்தான் தங்கள் விலகலைப் பொது வெளியில் அறிவித்தனர். இது தலைமை செய்த வினையின் எதிர்வினைதான் என்பதை சேர்த்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு கட்சியின், குறிப்பாக செயலரின் அதிகாரத்துவ போக்கை எதிர்த்துப்போராட முடியாமல் கடந்த காலத்தில் தாங்களே, ‘கவுரவமாக’ விலகிய பல தோழர்களும் தங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதைத் தற்போது கூறுகின்றனர்.

மேலும், அந்த அறிவிப்பை வெளியிட்ட போது மீண்டும் அமைப்புக்குள் வரும் எண்ணம் அவ்விருவருக்கும் இல்லை. வாழ்க்கையையே கட்சிக்காகவும் புரட்சிக்காகவும் அர்ப்பணித்து, குடும்பம், வேலை அனைத்தையும் தூக்கியெறிந்து 30-40 ஆண்டுகள் உழைத்த தோழர்களை அமைப்பை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்து விட்டு, அவர்கள் பொது வெளியில் போட்டது தவறு என சுருக்கி பேசுவதற்கும், வெளியேறியவர்களிடம் அமைப்பு முறையை மதிக்க வேண்டும் என்று கேட்பதற்கும் எந்த நியாயமும் இல்லை.

பொது வெளியில் கடிதம் வெளியிட்டதால் அமைப்புத் தோழர்கள், ஆதரவாளர்கள் பலருக்கு சோர்வு, மன உளைச்சல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அதற்கும் இந்த இரு தோழர்களை மட்டும் காரணமாக்க முடியாது. 5 மாத காலமாக அமைப்பு முறைக்குள் பிரச்சினையை தீர்க்காமல் அநீதி இழைத்த பழைய தலைமைதான் இதற்கும் பொறுப்பேற்க வேண்டும்.

அந்த கடிதம் வெளியிடப்பட்டதன் வாயிலாகத்தான் அமைப்புக்குள் இருந்த அதிகாரத்துவம் வெளிப்பட்டு, கட்சியில் உறுதியான உட்கட்சிப்போராட்டம் தொடங்கியது. அந்த வகையில் அவர்களின் போராட்டம்தான் இன்று அமைப்பிலிருந்த அதிகாரத்துவ போக்கை சரி செய்து ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் சரியான திசையில் பயணிக்க உதவியுள்ளது.

ஆனால், அமைப்பு முறையை மீறிவிட்டதாக கூச்சல் போடும் முன்னாள் செயலர் தரப்பு பின்பற்றிய அமைப்பு முறை என்ன? அமைப்பின் இணையதளத்தில் இருவரின் விலகல் கடிதத்தை வெளியிட்டு, அந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று ஆசிரியர் குழுவிலிருந்தே விலகியவர்கள், பின்னர் தலைமைக்கு உவப்பாக சதிக் கோட்பாட்டு கடிதங்களை எழுதிக் கொடுத்து, “அப்ரூவராக” மாறி ‘புனிதர்’ களாகி விட்டார்களாம். கம்யூனிச இயக்கத்தில் விமர்சன, சுய-விமர்சன முறையைதான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், ’அப்ரூவர்’ முறையை இப்போதுதான் பார்க்கிறோம்.

அமைப்பில் அதிகாரத்துவ போக்கினால் பாதிக்கப்பட்டு அநியாயமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவ்விரு தோழர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்ற கட்சித்தலைமையும் அணிகளும் விரும்பினோம். அவ்வாறு கொண்டு வருவதன் மூலமே அத்தோழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஓரளவுக்காவது சரி செய்ய முடியும் என்ற வகையில் கட்சியில் இணைந்து செயல்பட முன்வருமாறு கோரினோம். கார்ப்பரேட் – காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் இன்றைய சூழலில் அதற்கெதிரான சக்திகள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த கோரிக்கையை முன்வைத்தோம்.

ஆனால், கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்றும், கட்சியிலிருந்து விலகிய இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள், சொந்த வாழ்க்கைப்பிரச்சினைகளை முறைப்படுத்தி விட்டு பொருத்தமான மக்கள் திரள் அரங்கில் இணைந்து செயல்படுவதாகவும், தற்போதைக்கு கலாச்சார அரங்கின் நட்பு சக்தியாக மட்டும் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போது அவர்கள் எமது கட்சியிலும், மக்கள் திரள் அரங்குகளிலும் இல்லை. கலாச்சார அரங்கில் நட்பு சக்தியாக இருப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் திரள் அரங்கில் அவர்கள் இணைந்து செயல்பட முன்வரும் போது அதற்கேற்ப பரிசீலித்து முடிவு செய்யலாமென தீர்மானித்துள்ளோம்.

வறட்டுவாத, குறுங்குழுவாத, சீர்குலைவு சக்திகள் ஓடிவிட்ட நிலையில் அமைப்பு பாதுகாக்கப்பட்டு மீண்டெழ ஆரம்பித்துள்ளது. பழைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தைக் கணக்கில் கொண்டு புரட்சிகர பயணத்தில் மேலும் முன்னேறுவோம்!

 புரட்சிகர வாழ்த்துகள்!

 

                                                              தோழமையுடன்
                                                      மாநில அமைப்புக் கமிட்டி,
                                                இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா-லெ),
                                                                              தமிழ்நாடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here