கோவையை கொளுத்த தயாராகும் வானரக்கூட்டம்! தொழிலாளி வர்க்கமே
எதிர்த்து நில்!
சமீபத்தில் பள்ளி கல்லூரிகளில் பார்ப்பன சங்கிகளின் ஷாகாக்கள், கூட்டங்களை தடைசெய்யும்படி போராட்டங்கள் நடத்தும் பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்களின் எதிர்ப்பால் கோவை பேசு பொருளாகியுள்ளது. “கோவை விளாங்குறிச்சியில் போராடியதன் மூலம் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துவிட்டதாகவும்; கோவை மட்டுமல்ல! தமிழகம் முழுவதும் ஷாகாக்களை ஆர்.எஸ்.எஸ்-ன் தேசியத் தலைவர் மோகன் பகவத் நேரில் தொடங்கி வைக்க உள்ளார்” என்றும் சங்கிகள் வலைத்தளங்களில் கொக்கரிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கோவைக்கு மட்டும் சங்கித் தலைவர்களின் தொடர் விஜயம் நடக்கிறது! அதற்கேற்ப இந்து மதவெறியை கிளறி விடுவதும், அதற்கு தக்கபடி கலவரத்தை தூண்டுவதும் அதிகரிக்கிறது. அத்வானியின் வருகை, பிரதமராக பொறுப்பில் இருந்தவர்களான வாஜ்பாயி ஆட்சியில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு, இன்றைய பிரதமர் மோடியால் கார்ப்பரேட் சாமியார் ஜக்கியின் ஆதியோகி சிலை திறப்பு என பாஜகவின் பெருந்தலைகளே நேரில் வருவதன் மூலம் கோவைக்கு தனி கவனம் தரப்படுகிறது.
கோவை, கொங்கு பகுதிக்கு RSS தனி கவனம் ஏன்?
இந்த கேள்விக்கான பதிலை கண்டறிய கோவையின் தொழில்துறை சார்ந்து பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது. காலனிய காலத்தில் ஆங்கிலேயர்களால் டெக்ஸ்டைல் எனப்படும் பஞ்சாலைத் தொழில் கட்டி எழுப்பப்பட்டது. இதன் மூலம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயரைப் பெற்றது. பிரிட்டன் ஆதரவுடன் – கூட்டுடன் ஆதிக்க சாதியினரான நாயுடுக்களும், அதைத்தொடர்ந்து கவுண்டர்களும் தொழிலதிபர்களாக வளர்ந்தனர். 1910 ஆம் ஆண்டு காளீஸ்வரா மில்லும், சோமசுந்திரா மில்லும் நிறுவப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் பிரபல லட்சுமி மில்லும் துவங்கப்பட்டது.

இந்த ஆலைகளை துவங்கிய நாயுடு மற்றும் கொங்கு கவுண்டர்கள் ஆதிக்க சாதித்திமிருடன் தொழிலாளர்களை பண்ணையடிமைபோல் ஒடுக்கியும், அதற்கு தன் சொந்த சாதியினரையே அற்பக்கூலிக்கு வேலைதந்தும், அவர்களில் சிலரை கங்காணிகளாக மாற்றிதன்மூலம் CCTV இல்லாமலே தன் முழுக்கட்டுப்பாட்டில் வேலைவாங்கும் நவீன பண்ணையார்களாக கோலோச்சினர்.
அங்கு தொழிற்சங்கம், போராட்டம் என்பது கனவில்தான் நடக்கும். அந்த அளவுக்கு ஜனநாயகம் என்பது பிரிட்டிஷாரின் ஆட்சியைவிடவும் கொடூரமாக நசுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கோவையில் வேறு சிலரும் வளர்ந்தனர்.
இந்த ஆதிக்க சாதிகளில் விவேக் காமெடியில் வருவதைப் போல “ஒன்று முட்டா பீசு; இன்னொன்று முரட்டு பீசு ஆகும்”. சொந்த சாதி மக்களையே சுரண்டும் கொடூர மனம் படைத்த ’நல்ல முதலாளிகள்’
கோவையில் கால்பதித்த பார்சி, பனியாக்கள்!
தொழிற்துறையில் அதிவேக வளர்ச்சியை எட்டிய கோவையில் ஒருபுறம் இஸ்லாமியர்களின் நிறுவனங்களும் உள்ளூர் ஆதிக்க சாதியினரின் நிறுவனங்களுடன் போட்டியிட்டது. உதாரணமாக ஜவுளித்துறையில் நல்லி, சாரதாஸ்க்கு போட்டியாக ஷோபா கிளாத் சென்டர் இருந்தது! இன்று ஸ்ரீ லக்ஸ்மி சில்க்ஸ், போத்தீஸ் முன்னனியில் உள்ளன.
இஞ்சினியரிங் தொழில்வளர்சிக்கு ஏற்ப ஸ்டீல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், காப்பர், அலுமினிய வயர்களும், பிளேட்டுகளும் வட மாநிலங்களிலிருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. தமிழக அளவில் இத்துறையில் மொத்த, சில்லரை இரும்பு வர்த்தகத்தில் இஸ்லாமியருடன் வட இந்திய பார்ப்பன பனியா, பார்சிகள் போட்டியிட்டனர். கோவையை பொருத்தவரை இஸ்லாமியர்கள் பெரும் போட்டியாளர்களாக இல்லை. இதில் உள்ளூர் இந்து ஆதிக்கசாதி முதலாளிகள் மூன்றாவதாக களத்திற்கு வந்தாலும் தமக்கான மூலப்பொருளை தரும் தரகு முதலாளி வர்க்கமான பார்ப்பன பனியாக்களை எதிரிகளாக பார்ப்பதில்லை.
இயந்திரங்களுக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள், பழைய & புதிய பொருட்கள் விற்பனையில் இஸ்லாமியர்களின் உக்கடம் மார்க்கெட் பிரபலமானது. வடஇந்திய நிறுவங்களின் டூல்ஸ்களை விட பல மடங்கு தரமான இறக்குமதி டூல்ஸ்களை அதே உள்ளூர் விலையில் இஸ்லாமியர்கள் விற்றனர். அதேபோல் பல்வேறுவகையான உபயோகிக்கப்பட்ட பொருட்களும் மலிவான விலைக்கு கிடைத்தது. எனவே சிறுதொழிற்கூடங்கள், வாகனம் ஓட்டும் பொதுமக்களின் சந்தையை உக்கடம் பழைய மார்க்கெட்டே அதிகமாக கைப்பற்றியிருந்தது.
இவ்வாறு ஆட்டோமொபைல், தானுந்து உதிரிபாகங்கள், மின்னணு பொருட்கள், மின் சாதனங்கள் அனைத்திலும் உள்ளுர் சந்தையை மார்வாரிகள், சேட்டுகள் கைப்பறியுள்ளனர். ஆர்.எஸ் எஸ் புரவலர்களும் இவர்கள் தான்.
கல்வித்துறையில் கல்லா கட்டிய ஆதிக்க சாதிகள்!
கோவையை பொறுத்தவரை தமிழகத்தின் கல்வித்துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1867 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி இறுதி தேர்வில் கோவை மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆங்கிலேயர்கள் ஆரம்பித்து நடத்தி வந்த தென்னிந்திய திருச்சபை பள்ளி, ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, ஸ்டேன்ஸ் உயர்நிலைப் பள்ளி போன்றவை வழியிலேயே கோவையின் தற்போதைய ‘கல்வித்தந்தைகள்’ பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை தொடங்கினர். 1945 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜி.டி.நாயுடுவின் ஹோப் கல்லூரி, பூ.சா.கோ தொழில் நுட்ப கல்லூரி, தி.சு அவினாசிலிங்கம் கூட்டுக் கல்லூரி போன்றவை இன்று நிகர் நிலை பல்கலை கழகங்களாக உயர்ந்து நிற்கிறது.
இன்று கோவையின் கல்வித்துறையானது தெற்காசிய அளவில் மாணவர்களை ஈர்த்து விரிந்த சந்தையை பெற்றுள்ளது. இதில் கிறிஸ்துவரான தினகரனின் காருண்யா பல்கலைக்கழகமும், பி,எஸ்.ஜி., பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் உள்ளிட்ட டஜன் கணக்காண இந்து ஆதிக்க சாதியினரினரின் நிறுவனங்களும் எதிரெதிரே களத்தில் உள்ளன.

இயந்திர உற்பத்தியில் ஆதிக்க சாதிகள்-கார்ப்பரேட் கூட்டு!
டெக்ஸ்டைல்ஸ் இயந்திர உற்பதிக்கு பெயர்பெற்ற லட்சுமி மெசின் ஒர்க்ஸ் (LMW) பன்னாட்டு கம்பெனிகளுடன் கூட்டு சேர்ந்து தொழில்நுட்பத்தை வாங்கி உற்பத்தி செய்யும் தரகு நிறுவனமானது (உதாரனத்திற்கு லக்ஸ்மி ரீட்டர்). பின்னர் சொந்தமாக இயந்திரங்களை வடிவமைத்து உலக சந்தையில் போட்டியிடுகிறது.

ஸ்ரீ ரங்கநாதன் இண்டஸ்ட்ரீஸ் தயாரிக்கும் பலவகைப்பட்ட வால்வுகள் உலகத்தரம் வாய்ந்தவை. ஆசிய அளவில் போடியாளர்களே இல்லாதபடி ஆதிக்கத்தில் இருப்பவை. ரூட்ஸ், பிரிகால் என பன்னாட்டு கம்பெனிகளின் சப்ளையர்களாக பல இந்து முதலாளிகளின் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன.

அதேபோல் ஜப்பான் போன்ற வல்லரசுகளிடம் ஜாப் ஆர்டராக பெற்று கப்பலில் வரும் வாகன இஞ்சின் உள்ளிட்ட முக்கிய பொருட்களை உலகத்தரத்தில் கடைந்து அனுப்பும் தொழிலிலும் கிராப்ட்ஸ்மேன் போன்ற நிறுவனங்கள் முன்னணியில் இருந்தது. இன்று இவர்களின் எஜமானர்களே தமிழகத்தில் வாகன உற்பத்தியில் நேரடியாக களமிறங்கிவிட்டது தனிக்கதை!
உள்ளூர் முதலாளிகளோடு பல பன்னாட்டு நிறுவனங்களும் நேரடியாக கோவையில் கால்பதித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தொழிற்சங்க உரிமை, தொழிலாளர் நலச்சட்டம் என பேசும் கம்யூனிஸ்ட்டுகள்தான் முதன்மையான எதிரிகளாக உள்ளனர்.
லாப வெறியும் தொழில் போட்டியுமே ஆர் எஸ் எஸ் வளர அடிப்படை!
முதலாளிகளில் ஒரு பிரிவினரான ABT மகாலிங்கம் போன்றோர் ஒருபுறம் கோக் பெப்ஸி டீலர்சிப் எடுத்துக்கொண்டே மறுபுறம் சுதேசி விழிப்புணர்வு என வாஜ்பாயியை வரவழைத்து தேசபக்த நாடகம் போட்டனர். இவர் பிஜேபி யின் தொழிற்சங்கமான BMS இன் புரவலராகவும் இருக்கிறார். படிப்படியாக தமது போட்டியாளர்களான இஸ்லாமிய, கிறிஸ்தவ நிறுவனக்களை ஒழிக்க ஆர் எஸ் எஸ், பாஜக வை வளர்த்தனர். 1990 களில் முதல் சுற்று நடந்துள்ள கலவரத்தில் அப்படிப்பட்ட தொழிற் போட்டியாளர்களை அழித்தும் உள்ளனர். உதாரணமாக பிரபலமான ஷோபாக் கிளாத் சென்டர் டீசல் பேரலை வைத்து வானரக்கூட்டங்களினால் முழுமையாக எரிக்கப்பட்டதை கூறலாம். இதில் கூட்டாளியாக பார்ப்பன-பனியா, சேட்டுகள் இணைந்துள்ளனர்.

தொழில் மாவட்டமான கோவை, திருப்பூரை முழுமையாக கைப்பற்ற உள்ளூர் முதலாளிகள் வட இந்திய பனியாக்களுடன் கூட்டு சேர்வதுதான் கோவையில் ஷாகாக்கள் பெருகுவதற்கு அடிப்படையாகும். அதாவது காவி பாசிஸ்ட்டுகள் தமது எஜமானர்களான பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும், உள்நாட்டில் தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்யவே கலவரத்தை தூண்ட வெறிகொண்டு செயல்படுகின்றனர். இவர்களின் இலக்கு மதச்சிறுபான்மையினரும், பகுத்தறிவாளர்களும், கம்யூனிஸ்ட்டுகளும்தான். இதற்காகத்தான் காவிகளை ஊட்டி வளர்க்கிறார்கள்.
அரசு கட்டமைப்பு ஊட்டி வளர்த்த பயங்கரவாதம்!
1990 முதல் முற்போக்கு இயக்கங்கள் பொதுக்கூட்டம், மாநாடு நடத்தவும், போரட்டங்கள் நடத்தவும், சுவரெழுத்து எழுத, சுவரொட்டி ஒட்டவும் தடை போட்டே வந்துள்ளது. நீதிமன்றம் மூலம் போராடி அனுமதி பெற்றே விதிவிலக்காக சில கூடங்கள் நடத்தப்பட்டன. அதே நேரம் பெர்க்ஸ் போன்ற கலவி வளாகங்களில் பலநூறு பேரை திரட்டி பலநாள் ஷாகாக்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது.
தமிழகத்தில் கோவை காவல்துறைக்கு மட்டும் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் சிறப்பு அதிகாரம் நீட்டிக்கப்படுகிறது. அதே நேரம் காவிகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சாலைகளில் வெறியாட்டம் போடவும், பிரியாணி அண்டாக்களை தூக்கிச்செல்லவும் துணை நிற்கிறது. அரசின் பொறுப்பில் உள்ளவர்களே சட்டப்படி நேர்மையாக இருப்பதில்லை. அதனால்தான் சட்டவிரோத ஆயுதப்பயிற்சிகளை நடத்தும், பிஞ்சுகளின் மனதில் பார்ப்பன மத வெறி நஞ்சை திணிக்கும் ஷாகாக்களை தடைசெய்ய மறுக்கிறது. தங்களை எதிர்ப்பவர்களை சங்கிகள் ஆயுதங்களுடன் வந்து தாக்குவதை வேடிக்கையும் பார்க்கிறது.
கார்ப்பரேட் – காவி பாசிசம் கண்முன் களத்தில் நிற்கிறது. கார்ப்பரேட் வர்க்கம் காவிகளை ஆதரித்து பொருளுதவி செய்து வழிகாட்டுகிறது. நாம் மேலே விவரித்தவை ஒரு பருந்து பார்வை மட்டுமே. நிலைமை மிகவும் மோசமாகவும் கேடாகவும் உள்ளது. தமிழ்நாட்டை துண்டாக்கி கொங்கு நாடு வேண்டும் என்று பிரிவினை கேட்கும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ்- ஆதிக்க சாதி கூட்டு சென்றுள்ளது. கோவை இராணுவ காரிடாராக (Defence corridor) மாற்ற முன்னுரிமை தரப்படுகிறது.
இவர்களிடமிருந்து கோவையை காக்க முற்போக்காளர்களும், பெரியாரிஸ்ட்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் துணிந்து களத்தில் நம் எதிரிகளை எதிர்க்கிறார்கள். எது சரி! யார் கோவையில் இருக்கலாம்? இதை பெரும்பான்மையான கொங்கு மண்டல உழைக்கும் மக்கள்தான் அதிலும் குறிப்பாக தொழிலாளி வர்க்கம் தான் சீர்தூக்கிப்பார்த்து தீர்ப்பெழுத வேண்டும். தவறினால் கோவை மீண்டும் வானரக்கூட்டங்களால் கொளுத்தப்படும் என்பதில் அய்யமில்லை.
- இளமாறன்.