இந்தியாவில் 1990-களில் இருந்து தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய பிறகு மனிதர்கள் அதுவும் குறிப்பாக உழைப்பில் ஈடுபட கூடிய தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏனென்றால் ஏகாதிபத்திய முதலாளித்துவம் முன்வைக்கின்ற மீமிகு உற்பத்தியானது பொருள்களை, அதாவது பண்டத்தை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.

ஆனால் அதை உற்பத்தி செய்வதற்கு நவீன எந்திரங்களுடன் போட்டி போடும் ஒரு எந்திர பாகமாக தொழிலாளர்களின் உழைப்பு சக்தி உறிஞ்சப்படுவதால், வேலை, பொழுதுபோக்கு, ஓய்வு என்ற நிலைமை மாறி வேலை, ஓய்வு இரண்டுக்குமிடையில் தொழிலாளி வர்க்கம் சிக்கிக் கொண்டு கசக்கி பிழியப்படுகிறது.

இதன் காரணமாக பலவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மன அழுத்தம் என்பது மனநல மருத்துவர்களின் கண்ணோட்டத்தில் ஒரு எதிர்வினை தான். அதாவது தனக்கு நேர்கின்ற ஆபத்து, அவமானம், காத்திருப்பு, ஏமாற்றம் ஆகிய சூழல்களில் அதைத் துணிந்து சந்திக்க வேண்டும் அல்லது விலகிச் செல்ல வேண்டும் இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்து முடிவு எடுப்பதற்கு முன்பாகவே நம்முடைய எதிர்வினைகள் தோன்றிவிடுகிறது.

மனநோய் என்பது ஒரு வியாதியே கிடையாது என்று தனது கண்டுபிடிப்பை முன்வைத்தார் ஒரு ’அரசியல் மேதை’ அது சரிதான்! அடுத்தவர்களுக்கு மன உளைச்சலை உருவாக்குபவர்களுக்கு ஒருபோதும் மன வியாதி தோன்றாது. ஏனென்றால் தன்னை பாதுகாப்பாக தக்க வைத்துக் கொண்டு எதிரில் உள்ளவர்களின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அவர்கள் தயாராவதால் அவர்களை மனநோய் ஒருபோதும் தாக்குவதில்லை. அது ஏகாதிபத்திய முதலாளித்துவமாக இருந்தாலும் சரி! தன்னை முன்னிறுத்தும் அரசியல் மேதைகளாக இருந்தாலும் சரி! அவர்களின் தாக்குதலுக்கு உள்ளான எதிரில் உள்ளவர்கள் தான் மனநோய்க்கு ஆளாகின்றனர்.

இந்தியாவில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்கிய பிறகு நாடு தழுவிய அளவில் அதிக அளவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகரித்துள்ளனர். அதாவது இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான, அதாவது 36% பேர் மனநோயாளிகளாக உள்ளனர். இது உலக மக்கள் தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் ஆகும்.

இந்தியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் 2015-ஆம் ஆண்டிலேயே தெரிவித்தது. அதன் பிறகு பாசிச மோடி ஆட்சிக்கு வந்து விட்டதால் இந்த சதவீதம் கண்டிப்பாக அதிகரித்துதான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. உலக அளவில் 100 கோடி பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏகாதிபத்திய முதலாளித்துவம் உலக மக்களுக்கு தந்த கேடுகெட்ட வாழ்க்கையின் விளைவு இதுதான்.

மன அழுத்தம் மனநோய் அல்ல!
உடல் நோய்!

சமீபத்திய ஆய்வு ஒன்று மன அழுத்தத்தில் இரண்டு வகை இருக்கிறது. 1) ஆபத்து நேரத்தில் விரைந்து முடிவெடுக்க பொறுப்பை நிறைவேற்றி முடிக்கவும், போட்டிகளுக்கும் நேர்முகத் தேர்வுகளுக்கு தயாரிக்கவும், குடும்ப நிகழ்வுகளுக்கு முன்பாகவும் ஏற்படுகின்ற மன அழுத்தம் நல்ல மன அழுத்தம் எனப்படுகிறது. 2) சூழலுக்கு ஆட்பட்டு எதிர்கொள்ள முடியாமல் சிக்கலாகும் போது ஏற்படுகின்ற மன அழுத்தம் கெட்ட மன அழுத்தம் எனப்படுகிறது. வகைகள் இரண்டானாலும் விளைவு ஒன்றுதான்.

நாம் ஏற்றுக்கொண்ட வேலையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன் வேலை செய்யும் போது மேற்கண்ட இரண்டு வகையான அழுத்தங்கள் உருவாகின்றன. அதாவது Eustress எனப்படும் நேர் அழுத்தம் (‘positive stress’) மற்றும் அதிக வேலைபளு காரணமாக உருவாகும் Distress எனப்படும் எதிர்மறை அழுத்தம் (‘negative stress’) ஆகிய இருவகைகளும்தான்.

இதனையே வேறு விதமாக புரியும் வகையில் உடலின் இரசாயன குறைபாட்டால் நேரும் மன அழுத்தத்தை தீவிர மன அழுத்தம் என்றும், வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை மிதமான மன அழுத்தம் என்றும் தமிழகத்தின் சிறந்த மனநல மருத்துவர் ருத்ரன் கூறுகிறார்.

உடலில் உள்ள மூளையில் இருக்கும் லிம்பிக் என்கிற அமைப்பு நமது உடலின் செயல்பாடுகளையும் மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றுக்கு பொருத்தமாக நமது மனநிலையை இந்த லிம்பிக் அமைப்புதான் சமன்படுத்துகிறது.

“இந்த சமன்படுத்தும் வேலையை மூளையில் சுரக்கும் செரட்டோனின், நொராடிரினலின் ஆகிய இரண்டு இரசாயனங்கள் தகவல் பரிமாறுகின்ற வேலையை செய்கிறது. மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் இந்த ரசாயனங்களின் சுரப்பு குறைவாக இருக்கும். எனவே இதன்படி பார்த்தால் மனநோய் என்பது உடலின் நோயாக கருதப்படுகிறது” என்கிறார் மனநல மருத்துவர் டிம் காண்டோ பெர்

“பூஞ்சை மனம் அல்லது இளகிய மனம் கொண்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது எளிதில் உடைந்து மனச் சோர்வடைந்து விடுகின்றனர் உறுதியான மனம் கொண்டவர்கள் தங்கள் முயற்சிகளின் அளவை இரண்டு மடங்காகி லிம்பிக் அமைப்பு முற்றிலும் குறையும் வரை விழுந்துவிடாமல் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முயல்கிறார்கள்” என்று டிம் காண்டோ பெர் விளக்கம் தருகிறார்.

நிதி நெருக்கடி தனிப்பட்ட இழப்புகள், உறவுகளின் பிரிவுகள், நீண்ட நாள் நோய், தாங்க முடியாத வலி, போதைப்பொருட்களின் பயன்பாடு, கடந்தகால அதிர்ச்சிகள், அவமானங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதை மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

மன அழுத்தம் என்பது ஆண், பெண் பேதமின்றி இரண்டு பாலினத்தவரையும் பாதிக்கிறது. என்றாலும் பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் வேலை ஒதுக்கப்பட்ட பிறகு தங்களின் மூத்த பணியாளர்கள் மற்றும் மேலாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. கவனியுங்கள்! நாம் இலக்கை அடைய முடியாத நேரத்தில் தான் பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

நிதி மூலதனம் உலகமயம்!
மன அழுத்தமும் சர்வதேசமயம்!

திடீர் மரணங்களுக்கு முக்கியமான 10 காரணங்களில் மன அழுத்தம் பத்தாவது இடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக 15 வயதிற்கும் 29 வயதிற்கும் உட்பட்டவர்கள் தான் அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த தற்கொலைகள் பலவற்றுக்கும் மன அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், உலகில் ஒரு நிமிடத்திற்கு 2 பேர் இதனால் உயிரிழக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்து தங்கள் உணர்வுகளையும், எண்ண ஓட்டங்களையும் வறட்டு கவுரவத்தின் காரணமாக வெளிப்படையாக பேச தயங்குவது இத்தகைய அழுத்தங்களுக்கு முதன்மையான காரணமாக உள்ளது. இந்த மனிதர்கள் சமூகத்தில் தங்களுக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்பதற்கு அஞ்சி வெளியில் உதவி பெற தயங்குகின்றனர் அல்லது தங்கள் குறைபாட்டை தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்கின்றனர். இவற்றினால் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் மன அழுத்தம் முக்கிய நோயாக மாறியுள்ளது..

உலகை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஒற்றைத் துருவ வல்லரசாக ஆதிக்கம் செய்ய துடித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா சொந்த நாட்டு மக்களை மன நோயாளிகளாக மாற்றியுள்ளது உலகிலேயே அதிக அளவு மன அழுத்தம் உள்ள மனிதர்களை கொண்ட நாடு இது தான். மற்றொரு ஆய்வில் மேலை நாடுகளில் தான் அதிகமாக மன அழுத்தம் உடையவர்கள் இருக்கிறார்கள் என்றும் கீழ்த்திசை நாடுகளில் குறைவாகவே உள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

ஒரு முரண் தர்க்கமாக மன அழுத்தம், அன்றாடம் எரிமலைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் ’எரிமலை தேசமான ஜப்பானில் மிக குறைவாகவும், அன்றாடம் வெடி மருந்துகளுடன் போராடிக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானத்தில் மிக அதிகமாகவும் பாதிப்புகள் இருக்கின்றன. உலகை சூறையாட போட்டியிடும் ஜப்பான் ’அமைதியிலும்’, சுரண்டப்படும் ஆப்கன் ’மன உளைச்சலிலும்’ உள்ளனர்.

இந்தியாவில் இத்தகைய உளவியல் சிக்கல்களை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கியிருக்கின்றன. மன நோய்க்கு புறச் சூழ்நிலை ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. முதலாவதாக மனிதர்களுக்கு இடையில் உள்ள உறவு என்பது ஏறக்குறைய சிதைந்து போய் தனித்தனித் தீவுகளாக மனிதர்கள் வாழத் தொடங்கி விட்டனர். இரண்டாவதாக கிராமங்கள் அழிந்து நகரங்கள் உருவானதன் மூலம் நகரத்தில் உள்ள எந்திர வாழ்க்கை காம்பவுண்ட் அல்லது அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் அதிகரித்து விட்டதால், கிராமத்திலுள்ள கூட்டுக் குடும்ப மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது.

மூன்றாவதாக தன் வேலை உண்டு தான் உண்டு என்ற குறுகிய மனப்பான்மை தீவிர மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடுகிறது. நான்காவதாக தனக்கு யாரும் இல்லையோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுத்தும் விரக்தி ஒரு காரணமாகிறது. ஐந்தாவதாக தற்காலிக தீர்வாக கருதிக்கொண்டு துக்கத்திலும், மகிழ்ச்சியிலும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விடுவது போன்ற காரணங்கள் மனநோய்க்கு முக்கிய அடிப்படையாக உள்ளது.

உலக அளவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மன அழுத்தம் தான் உள்ள நோய்களிலேயே முதலிடத்தில் உள்ளது. இதற்குத் தீர்வாக நல்ல உணவு முறை, நல்ல உறக்கம் அதாவது குறைந்தபட்சம் 8 மணி நேர உறக்கம் அடுத்த நாள் வேலைகளை வேகமாக கொண்டு செல்ல உதவுகிறது. அதேபோல் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் மாறிக் கொள்ள முயற்சிப்பது, சினிமா வசனங்களில் வருவதைப்போல ’நினைத்தது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய கற்றுக்கொள்வது’ இவையெல்லாம் மன அழுத்தத்தை போக்கும் என்று முன்வைக்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

பாதிக்கப்படும் உணர்வு தொடர்பான அதிகரித்த கவலை, மனக்குழப்பம், மனக்கலக்கம் அல்லது மனப்போராட்டம், எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபப்படுதல், மனதை ஓய்வாக வைத்துக் கொள்ள முடியாமல் தவித்தல், எப்போதும் தனிமையாக இருப்பதாக உணர்தல் மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு ஆகியவை மன அழுத்தத்தின் வெளிப்பாடாக உள்ளது. லாப வேட்டைக்கு வெறி நாயாக அலையும் ஏகாதிபத்திய முதலாளித்துவமும் அதன் எடுபிடிகளான இந்திய ஆளும் வர்க்கமும், பாசிச ஆட்சி செய்யும் மோடி கும்பலும் இதனை கணக்கில் கொள்ள மாட்டர்கள் என்பதுதான் உண்மையாகும்.

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மேலதிகாரி ஒருவரை காலையில் 12 மணிக்கு முன்பு சந்திக்கவே அச்சப்படுவார் சக தொழிலாளி ஒருவர். ஏனென்றால் அந்த அதிகாரி மன பாதிப்புகள் காரணமாக காலையில் டென்ஷனாக இருப்பார். மதியம் தான் அது குறைந்து சகஜ நிலையை அடைவார் என்பதால் அவரை நான் மதியத்திற்கு மேல் தான் சந்திப்பேன் என்றார் தொழிலாளி.

ஒரு நல்லெண்ணத்தில் அந்த அதிகாரியின் சிகிச்சைக்காக அவர்தான் அதிகம் மெனக்கெட்டார். மனநோய் ஏற்படக் காரணமான வேதியல் இராசாயன மாற்றங்களை வேதியல் மாத்திரைகள் மூலம் எதிர்கொள்ள அதிகாரி மறுத்ததால் யோகா சிகிச்சையின் மூலம் மனநிலையை சமப்படுத்த ஆலோசனை கூறினார் மருத்துவர் ஒருவர். அதிகாரியும் ஒரு வழியாக ஏற்றுக் கொண்டு சிகிச்சைக்கு சென்றார். சென்ற இடத்தில் மன அழுத்தம் ஏற்படக் காரணம் குறித்து யோகா மருத்துவர் கேட்டவுடன் உடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் செய்யும் துரோகம் காரணமாகவே இந்த நிலைக்கு ஆளாகி விட்டேன் என்றாராம் அந்த அதிகாரி.

உடனே அந்த தொழிலாளி மன அழுத்தத்திற்கு ஆளானார். உண்மையில் ஏகாதிபத்திய முதலாளித்துவம் செய்யும் மிகை உற்பத்தியின் விளைவாக தொழிலாளிக்கு தான் மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதை மாற்றி தொழிலாளி வர்க்கத்தின் மீதே அந்த அதிகாரி குற்றம் சுமத்தியதை சகிக்க முடியவில்லை.

12-12-2021. இரா.கபிலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here