அன்பார்ந்த உழவர் பெருமக்களே! ஜனநாயக சக்திகளே!

கொரானா நெருக்கடி காலகட்டத்தில் உலகமே உற்பத்தியில் வீழ்ச்சியையும், வேலை வாய்ப்பில் தேக்கத்தையும் சந்தித்தது. இந்நிலையில், இந்தியாவில் அதிக உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் வழங்கியது வேளாண்துறை மட்டும்தான். அதுமட்டுமல்ல! விதைநெல், உரம், பூச்சிக்கொல்லி, நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட விவசாய இடு பொருள்களின் விலை உயர்வு, விவசாயத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, தொடரும் இயற்கை பேரிடர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு, சந்தை விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இவை அனைத்தையும் மீறி உழவர்கள் தனது வியர்வையை சிந்தி உற்பத்தியைப் பெருக்கியுள்ளனர். இதன் மூலமாக உணவுப் பற்றாக்குறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்றியிருக்கிறார்கள். மேலும் வேளாண் ஏற்றுமதியை 18 சதவீதம் அதிகரித்தும் இருக்கிறார்கள்.

நாட்டின் இயற்கைவளங்களை, கனிமவளங்களை மட்டுமல்ல, விளை நிலங்களையும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பலியிடுவதில் காங்கிரசை விட விசுவாசமான அடியாள் தான்தான் என்பதை மோடி நிரூபித்து வருகிறார். இந்திய உழவர்களே ஒன்று திரண்டு எதிர்த்தாலும் மூன்று வேளாண் விரோத சட்டங்கள் (ஒரே நாடு – ஒரே சுதந்திர சந்தை), மின்சார திருத்த சட்டம் 2020 (ஒரே நாடு ஒரே மின்சார சட்டம்) ‘ஒரே நாடு ! ஒரே உரம் திட்டம்!, அணை பாதுகாப்பு சட்டம், நதிநீர் பங்கீடு சட்டம், மாதிரி நிலக் குத்தகைச் சட்டம் என உழவர்களின் உரிமைகளை பறிக்கின்ற பல பாசிச சட்டங்களை பாராளுமன்றத்தில் ‘பெரும்பான்மை’ குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளார். இந்த சட்டங்கள் அனைத்தும் விவசாயத்தில் சுயசார்பை ஒழித்து, அன்னிய முதலீட்டை கொண்டு வந்து குவித்து உழவர் வாழ்வை முற்றாக அழிக்கிறது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சுடுகாடாக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், கெயில் குழாய் பதிப்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்கள், நியூட்ரினோ அழிவுத் திட்டங்களை அமல்படுத்தியே தீருவேன் என்று வெறியுடன் மோடி அரசு செயல்படுகிறது. உழவர் நலன் அல்ல, கார்ப்பரேட் நலந்தான் மோடி அரசின் கொள்கை – லட்சியம். அதனால்தான் அதன் நாசகார திட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளை, பொது மக்களை, 1947-க்கு பின்னர் இந்திய விவசாயத்தில் பெயரளவிலான சுயசார்புக் கொள்கைகள் அமுலில் இருந்தன. இந்நிலையில் 1960 ஆம் ஆண்டுகளில் ‘பசுமைப் புரட்சி’ திட்டத்தை இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கொண்டு வந்தனர். இந்திய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதும், உணவுக்காக வெளிநாடுகளில் கையேந்துவதை தடுத்து நிறுத்தி சொந்தக் காலில் நிற்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்கள். ஆனால் பசுமைப்புரட்சி திட்டம் ஒருபுறம் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த நம் பாரம்பரிய விவசாயத்தையும், நவதானியங்களையும் ஒழித்து கட்டியது. மறுபுறம் வீரியமிக்க விதை, இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் மூலம் நிலத்தை நஞ்சாக்கி, நிலத்தடி நீரை வற்றவைத்தது; பாடுபட்ட விவசாயிகளை கடன் குழியிலும் தள்ளி விட்டது. “பொட்டி மீனையும் பறி கொடுத்து, புடிச்ச மீனையும் தவறவிட்ட கதையாக” விவசாயிகள் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கியது.

பசுமைப் புரட்சி என்ற பச்சை துரோகத் திட்டத்தின் பலனைத்தான் இன்று வரை நாம் அனுபவிக்கின்றோம். விவசாயம் தொடர்ந்து நட்டத் தொழிலாகிவிட்டதற்கும், விவசாயமே கடன் நெருக்கடியில் சிக்கி சீரழிவதற்கும், விவசாயிகள் போண்டியாவதற்கும், தன் உயிரினும் மேலாக மதித்த நிலத்தையே வெறுத்து ஓடுவதற்கும், இந்தப் பசுமைப் புரட்சி திட்டம்தான் காரணம். இந்தப் பசுமைப் புரட்சி திட்டத்தின் விளைவுகளால் இந்திய விவசாயம் படிப்படியாக தனது பெயரளவிலான சுயசார்பையும் இழக்கத் தொடங்கியது.

பசுமைப் புரட்சியை கைவிடு! கார்ப்பரேட்டுகளுக்கு வழிவிடு!

“நொந்த மாட்டை ஈ மொய்த்த கதையாக’ பசுமைப் புரட்சியால் வாழ்க்கை நொந்துபோன விவசாயிகளின் ரத்தத்தை ‘கார்ப்பரேட் ஈக்கள்’ ஒட்ட உறிஞ்சுவதற்கு மேலும் ஒரு சதித் திட்டம் அரங்கேறியது. அதுதான் 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற நாசகார மறுகாலனியாக்க கொள்கை. இதனை நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அறிமுகப்படுத்தியது. ‘பஞ்சத்தில் கிடக்கும் இந்தியாவை, அமெரிக்காவைப் போல் குபேரபுரியாக்கும் அற்புதத் திட்டம்” என்று இதற்கு விளக்கம் வேறு சொன்னது.

1995-இல் உலக வர்த்தக கழகமானது. ‘காட் ஒப்பந்தம்’ மூலம் விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வதற்கு கதவுகளை அகல திறந்து விட்டது. இந்த காட் ஒப்பந்தம் விவசாயிகளுக்கு தரும் எல்லாவகையான “மானியம், கடன் திட்டங்களையும் ரத்து செய்!,” “உணவுப்பொருள் உற்பத்தியை தடை செய்!’ என்றது. “ஏற்றுமதிக்கான விவசாயத்தைப் பெருக்கு! இலவச மின்சாரத்தை ரத்து செய்!,” “ஏரி, குளங்களை தனியாரிடம் ஒப்படை!’ என்று உத்தரவிட்டது.

மாநாடு நோட்டீஸ்

“கார்ப்பரேட் கம்பெனிகள் தாராளமாக நாட்டிற்குள் விளை நிலங்களை வாங்கவும், விவசாயம் செய்யவும் அனுமதி வழங்கு! இதற்கு வசதியாக நில உச்சவரம்பு சட்டத்தை நீக்கு!” என்று அடுக்கடுக்காக ஆணையிட்டு மிரட்டியது.

இந்நிலையில், நாட்டை மறுகாலனியாக்கும் இந்த புதிய தாராளவாதக் கொள்கைகளை முழுமையாக அமல்படுத்தாமல் காங்கிரசு கட்சி அப்போது ஊசலாடியது. இந்திய மக்களிடம் தனது ஓட்டுவங்கி திவாலாகி விடுமோ என்று மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு அரசாங்கம் பயந்து போய் விழி பிதுங்கி நின்றது. மறுகாலனியாதிக்க கொள்கைகளை காங்கிரசால் வேகமாக அமல்படுத்த முடியாத போது மன்மோகன் சிங்கை கார்ப்பரேட்டுகள் தனது கட்டளைகளை நிறைவேற்ற மறுக்கும் ஒரு ‘செயலற்ற அடிமை’ என்று தூற்றினர். ‘அண்டர் அச்சீவர், செயல்படாத பிரதமர்’ என்றும் வசைபாடி பிரதமர் நாற்காலியிலிருந்து தூக்கி எறிந்தனர். மாற்றாக, பாசிச மோடியை பிரதமராக்கி ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தனர்.

மன்மோகனுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட காவி பாசிச பாஜக, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக ஆதீனங்கள், மடங்கள், பழைய மன்னர்கள், மிட்டா மிராசுகள் என நிலப்பிரப்புக்களிலேயே மேல்தட்டு பிரிவினரை தனது வர்க்க அடித்தளமாக கொண்டுள்ளது. இது தனது பார்ப்பன மேலாதிக்க சித்தாந்தத்தை கொள்கையாகக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சேவகம் செய்யும் பாசிச கட்சியாகும். அது மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் பாசிஸ்டுகளின் இந்து, இந்தி, இந்தியா என்ற அகண்ட பாரத கொள்கையை தனது அரசியல் வழிகாட்டும் நெறியாக கொண்டு செயல்படுகிற கார்ப்பரேட் விசுவாசக் கட்சியாகும்.

காவி பாசிச பாஜகவை தங்களது நம்பகமான அடியாள் படையாக கார்ப்பரேட்டுகளிலேயே முன்னேறிய ஒருசில மேல்தட்டு பிரிவினர் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் குஜராத்திகளான அதானி, அம்பானி போன்ற அகண்ட பாரத கனவை லட்சியமாக கொண்டுள்ள தேசங்கடந்த பார்ப்பன, பனியா கார்ப்பரேட்டுகளாவர். புதிய பாராளுமன்றத்தில் ஒரு கட்சி காவி பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி, பாசிச மோடியை நிரந்தரப் பிரதமராக்குவது. ‘செங்கோல் ஆட்சி செலுத்தி தங்களது ஏகபோக கொள்ளைக்கும், அகண்ட பாரத கனவுக்கும், அடிமை சேவகம் செய்ய வைப்பது என்பதே கார்ப்பரேட்டுகளின் எதிர்கால லட்சியம். இது, பார்ப்பன மேட்டுக்குடியின் மேல்சாதி நலனும், கார்ப்பரேட் மேல் தட்டின் வர்க்க நலனும் கலந்த வீரிய ஒட்டுரக பாசிசமாகும்.

அமெரிக்க ஒற்றைத் துருவ வல்லரசின் மேலாதிக்கத்தை சிரமேற்கொண்டு விசுவாசமாக அமுல்படுத்துகின்ற ஆளும்வர்க்க கும்பலின் ‘முதன்மை பணியாளனாக’ மோடி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். அமெரிக்க எஜமானர்களின் மனங்குளிர இந்த நாட்டின் ஆகப்பெரும்பான்மையான உழவர் பெருமக்கள் மீதும், பரந்துபட்ட உழைக்கும் மக்கள் மீதும் கொடூரமான பாசிச சட்டங்களை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்தி ஒடுக்குகின்றார். இதுவரை போராடி பெற்ற அனைத்து சட்டபூர்வ, ஜனநாயக உரிமைகளையும் பாசிச வெறிகொண்டு பறித்து தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் காலடியில் படையல் போடுகிறார்.

“ஐந்து வருடங்களில் இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்” என்ற முழக்கத்துடன் 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தார். ஏறக்குறைய கடந்த பத்து வருடங்களில் கார்ப்பரேட்டுகளுக்கு 30 லட்சம் கோடிக்கு மேல் வரிதள்ளுபடி செய்து ‘நான் விசுவாசமான கார்ப்பரேட்டுகளின் ஆள்’ என்பதை நிரூபித்துள்ளார். மறுபுறம் உழவர்கள் கட்டியுள்ள கோவணத்தையும் கார்ப்பரேட்டுகள் களவாடி செல்வதற்கு பாசிச சட்டங்கள் மூலம் ஏற்பாடும் செய்துவிட்டார். இதன் மூலம் விவசாயிகளின் ‘ஜென்ம விரோதியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளார் மோடி இந்தியாவை அமெரிக்காவைப் போல குபேரபுரியாக மாற்றுவதற்கு பழைய ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள். பிரதமர் மோடியோ இந்தியாவை அமெரிக்காவின் விசுவாசமான அடி(மை) மாடாக மாற்றியுள்ளார்.

உழவர் உரிமையை வென்றெடு! காவி பாசிசத்தை வீழ்த்திடு!

நமது நாட்டின் முதுகெலும்பான உழவர்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும். அதற்கு இந்த தேசத்தின் முதன்மை எதிரியான காவி பாசிச பாஜகவை உடனே அரசியல் அரங்கிலிருந்து வீழ்த்த வேண்டும் என்ற உண்மையை உழவர்கள் நாம் உணர வேண்டும்.ஏனென்றால் விவசாயத்தின் அழிவு, சமூகத்தின் பேரழிவாகும் என்பதை உணர்ந்து செயலில் இறங்க வேண்டும். இந்த மாற்றத்திற்கான ‘விதையாய்’ உழவனே நீ மாற வேண்டும் என்பதற்கான ஏற்பாடுதான் இந்த அரசியல் மாநாடு!

விவசாயம் தான் நமது நாட்டின் அடையாளம். நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஈடுபடும் தொழிலாகவும், நமது வாழ்வாதாரமாகவும் இருப்பதும் விவசாயம்தான். எனவே நமது வாழ்வுரிமையானது நிலத்தின் மீதான உரிமையாகும். நாம் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான உரிமையுமாகும்.

உழவர்களே! ஜனநாயகத்துக்கான நமது போராட்டத்தை உடனே துவங்க வேண்டும். கிராமங்கள் தோறும் விவசாயிகள் கமிட்டிகளை நிறுவ வேண்டும்! அனைத்து அதிகாரமும் விவசாயிகள் கமிட்டிக்கே என முழங்க வேண்டும்! அதற்கு, உழவர்களாகிய தங்களை விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என இந்த அரசியல் மாநாட்டின் மூலம் அறைகூவி அழைக்கின்றோம்.

”உழவர் உரிமையை வென்றெடு | காவி பாசிசத்தை வீழ்த்திடு!” என்ற முழக்கத்தை தற்போது நடைமுறை சாத்தியமாக்குவதற்கு உழவர்களாகிய நாம் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், குட்டி முதலாளிகள், அறிவு ஜீவிகள், தேசிய முதலாளிகள் உள்ளிட்டு அனைவருடன் இணைந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை கீழிருந்து கட்டியமைப்போம்! நாம் அதிகாரம் கொண்டவர்களாக மாறுவோம்! இன்றைய கட்டத்தில், மேலிருந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி மூலம் நிறுவப்படும் ஜனநாயக கூட்டரசுக்கு துணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் முன் நிற்போம்!

கீழிருந்து நாம் செலுத்தும் வலிமையான அதிகாரத்தின் மூலம் புதிய அரசியல் நிர்ணய சபைக்கு சுதந்திரமான தேர்தலை நடத்த வைப்போம்! கார்ப்பரேட்-காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அதன் சட்டங்களை கிழித்தெறிவோம்! நமக்குத் தேவையான, நாட்டு மக்களுக்கு தேவையான ஜனநாயகபூர்வமான சட்டங்களை நிறைவேற்றுவோம்!

விவசாயிகளின் விவசாயப் புரட்சியே புதிய ஜனநாயகப்புரட்சி என்று அறைகூவல் விடுப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியின் திசைவழியில் முதற்படியாக ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம். உழவர் உரிமையை வென்றெடுப்போம்! காவி பாசிசத்தை வீழ்த்த்துவோம்!

மாநாட்டிற்கு அணி திரள்வோம்! மாநாட்டிற்கு நிதி அளிப்போம்! 

ஒன்றிய அரசே!

மின்சார திருத்த சட்டம் 2020 உடனே திரும்ப பெறு!

உழவர் விரோத பாசிச சட்டங்களை ரத்து செய்!

தமிழக அரசே !

கார்ப்பரேட்டுகள் நிலங்களை அபகரிக்க உதவும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ உடனே திரும்பப் பெறு!

உழவர்களே!

கிராமங்கள் தோறும் உழவர் கமிட்டிகளை கட்டுவோம்! அனைத்து அதிகாரமும் விவசாயிகள் கமிட்டிக்கே என முழங்குவோம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு
தொடர்புக்கு – 9500959124

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here