மிழக சட்டசபையில் 21.04.2023 அன்று தொழிற்சாலைகள் சட்டம் 65ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரைமசோதாவை திமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. பாசிச பாஜக கொண்டு வந்த புதிய தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டது இந்த திருத்தம்.வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் இந்த திருத்தம் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு தொழிலாளிகளை காவு கொடுக்கும் கார்ப்பரேட் பாசிச நடவடிக்கை.

8 மணி நேர வேலை ஒன்றும் அவ்வளவு சாதரணமாக கேடுகெட்ட முதலாளி வர்க்கத்தால் கொடுக்கப்படவில்லை. மாறாக முதலாளி வர்க்கத்திற்கு எதிராக போராடி தொழிலாளர்களின் உயிரை கொடுத்து தான் பெற வேண்டியிருந்தது. 8 மணி நேர உழைப்பு நேரம் வேண்டி சிகாகோவில் மே 1ஆம் தேதி  போராடிய தொழிலாளர்களுக்கு கிடைத்தது தடியடி, வேலையிழப்பு, 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் மரணம்.

முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்:

இன்று திமுக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தை ஆதரித்து பேசும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  “தற்போது நடைமுறையில் உள்ள  1948 ஆம் ஆண்டு  தொழிற்சாலைகள் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். பணி நேரம், ஓய்வு, சம்பளம், மிகை நேரம் (overtime), வாராந்திர விடுமுறை ஆகியவை நடைமுறைப்படி தொடர்ந்து நீடிக்கும்.

தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டத்திருத்தம் 65ஏ பிரிவின் கீழ் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்  கட்டுப்பாடுகளுடன், தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில், அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் விருப்ப படிதான் நடைமுறைப்படுத்தப்படும். இல்லை என்றால் அரசு நிச்சயமாக பரிசீலனை செய்து அதன் பிறகு நடைமுறைப்படுத்தும். 48 மணி நேர வேலை என்பதில் மாற்றம் இல்லை. எல்லா நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது, இது தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்திருத்தம் அல்ல. இதில் தொழிலாளர்களை கட்டாயப் படுத்த முடியாது” என்றெல்லாம்  ஏதோ செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது போல இந்தியாவில் தொழிலாளர்களுக்கு என்ன நடக்கிறது? என்று தெரியாதது போல பேசியுள்ளார்.

பாசிச மோடி ஏற்கனவே ஏட்டளவில் இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி கார்ப்பரேட் சேவையில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்பதை நிரூபித்து விட்டார். அதற்கு போட்டி போடும் விதமாகத் தான் ‘திமுகவின் தொழிலாளர் விரோத நடவடிக்கை ‘அமைந்துள்ளது. சட்டம் இருந்தும் நிரந்தர வேலை இல்லை, சங்கம் வைக்கும் உரிமை இல்லை, அற்ப சம்பளம், கொடூரமான உழைப்புச்  சுரண்டல், அடிப்படை உரிமைகள் கிடையாது இது எல்லாம் தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு தெரியாமல் இல்லை, தெரிந்தும்  சமாளிக்கிறார்.

எந்த நிறுவனத்தில் சட்டத்தில் உள்ளபடி எனது விருப்பம் இல்லாமல் 12 மணி நேர வேலையை கட்டாயப்படுத்த முடியாது என்று கூற முடியும்?  கூறினால் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க தான் முடியுமா? டீ சரியில்லை என்று சொன்னாலே வேலையில் இருந்து தூக்கிவிடுவார்கள் முதலாளித்துவ எடுபிடிகள். இதில் வேலை நேரத்தை நாம் தீர்மானிக்க முடியுமா? அமைச்சரே! எதார்த்தத்தில் இருந்து பேசுங்கள். நீங்கள் செய்த அயோக்கியதனத்தை மறைக்க முடியாது.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,  “இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வருகையில் , வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மையை(Flexibility)  எதிர்பார்க்கிறார்கள், மேலும் இந்த விதிகள் சில நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்” என்று திமுகவின் கார்ப்பரேட் விசுவாசத்தை நாசூக்காக கூறியுள்ளார்.

அமைச்சர் பெருமக்களே! 12 மணி நேர வேலையால் பாதிக்கப்படுவது தொழிலாளி வர்க்கம் தான். இந்த சட்டம் குறித்து தொழிலாளர்களிடம் தான் முதலில் கருத்துக் கேட்டிருக்க வேண்டும். அதை செய்யவில்லை. தொழிலாளர்களின் பிரதிநிதிகளான தொழிற்சங்கத்தை அழைத்தாவது பேசியிருக்க வேண்டும். அதையும் செய்யாமல், எதேச்சதிகாரமாக கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக சட்டத்தை நிறைவேற்றியிருப்பது எவ்வளவு அயோக்கியதனம்?.

முதல்வர் ஸ்டாலினின் இரட்டை வேடம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு, பாசிச மோடி அரசின் சட்டத் தொகுப்பை தீவிரமாக எதிர்த்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் “உடலை கசக்கி, உதிர்த்த வியர்வையின் அடையாளமாக திகழும் தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் ஆகியவற்றை பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறேன். பாஜகவுக்கு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகளின் பக்கம் சாய்ந்திடும் நோக்கம் இருக்கிறது. ஏழைத் தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், ஏமாற்றலாம் அவர்கள் உரிமைகளை யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் பறித்துக் கொள்ளலாம் என்ற ஆபத்தான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது’’ என்று கூறினார்.

மேலும் வரலாற்றை கூறி , அவரது தந்தை  ‘மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ‘ 1986 கோவையில் நடைபெற்ற மே தின நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய போது தொழிலாளர்களின் நலனுக்காக அறிவித்த 6 முழக்கங்களில் ‘இனி பணி நேரம் 6 மணிநேரம் தான் எனக் கோரிக்கை வைப்போம்’ என்ற முத்தான முழக்கத்தை வைத்தார், என்றும் பாஜகவின் பாசிச தனியார் மய கொள்கையைப் பற்றி வீர வசனம் பேசிய அதே ஸ்டாலின்,அவர்களிடம் ஒன்று மட்டும் மாறியுள்ளது.அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து முதல்வராக ஆனதும் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கார்ப்பரேட்டுகளின் மனம் குளிர வைத்துள்ளார். ஏன் இந்த இரட்டை வேடம் முதல்வரே!அரசு அதிகாரத்தில் அமர்ந்ததும் நாக்கு பிறழ்கிறதா? இந்த சட்டத்திருத்தத்தை திமுகவின் தொழிற்சங்கம் தொமுச-வே ஏற்றுக் கொள்ளாது.

பன்னாட்டு நிறுவனங்களின் சொர்க்க பூமி!

பன்னாட்டு நிறுவனங்கள் வேலை நேரங்களில் நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்க்கிறார்கள் என்ற அமைச்சரின் கூற்றில் உண்மை உள்ளதா? பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லையா? என்றால், பன்னாட்டு நிறுவனங்கள் இயந்திரங்களை மட்டும் தான் கொண்டு வருகிறார்கள். மற்ற அனைத்தும் அரசே ஏற்பாடு செய்து கொடுக்கிறது. நிலம், நீர், சாலை வசதி, மின்சாரம், மனித சக்தி என அத்தனையும் கொடுத்து இன்னும் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுகிறது என்கிறார் தங்கம் தென்னரசு.

அமைச்சர் அவர்களே! தங்களது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு அனைத்து வசதிகளையும் செய்துக் கொடுத்தீர்கள் கடைசியில் என்ன ஆனது? 21 ஆயிரத்து 153 கோடி ரூபாய் வரி கட்டாமல் தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு டாட்டா காட்டி சென்றது. இதில் பாதிக்கப்பட்டது நோக்கியா நிறுவனம் அல்ல, தொழிலாளர்களே!


இதையும் படியுங்கள்:

நீங்கள் சொல்வது போல தொழிலாளர்களின் விருப்பத்தின் படி இங்கே வேலை செய்ய இடமில்லை. முதலாளிகளின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் மீறினால் வேலைபறிப்பு. ஏற்கனவே வேலையின்மையால் பாதிக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் நாளை 12 மணி நேர வேலை கட்டாயமாக்கப்பட்டால் உடலளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

சட்டத்திருத்த மசோதா நிறைவேற்ற பட்ட போது எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்கும் திமுகவுக்கு, அவர்கள் எதிர்பார்த்ததை விட பலமான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள் தமிழக மக்கள். CPI, CPM, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்துள்ளன. சட்டதிருத்தத்தை திரும்ப பெற இந்த எதிர்ப்பு போதும் என நினைக்கிறோம். இல்லை நாங்கள் நடைமுறை படுத்துவோம் என்று நீங்கள் நினைத்தால் தொழிலாளி வர்க்கம் திமுகவுக்கு நிச்சயம் பாடம் கற்பிக்கும்.

திமுகவை மக்கள் பதவியில் அமர்த்தியது மக்கள் சேவை செய்யத்தானேயொழிய, கார்ப்பரேட் சேவை செய்ய அல்ல! பாசிஸ்டுகளுக்கு எதிராக சமர் புரிந்துக் கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கு திமுக துரோகம் இழைக்குமானால் மே தினப் பரிசை தொழிலாளி வர்க்கம் கூடிய விரைவில் கொடுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here