கடந்த 2 ஆம் தேதி மாலை ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்தியாவின் அனைத்து மக்களும் உற்று நோக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். இறந்த உடல்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நிலைமை இப்படியிருக்க மேற்கு வங்கத்தின் ஒரு கிராமத்தில் இறந்தவர்களின் குடும்பத்தார் கூறுவதை பார்க்கும் போது இது தான் இன்றைய இந்தியா என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 3 முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்டது. மற்றவை பெரும்பாலும் ஏசி பெட்டிகளே அதிகம். தென்னிந்தியாவை நோக்கி செல்லும் இந்த ரயிலில் தங்கள் கனவுகளையும், வறுமையையும் சுமந்துக் கொண்டு செல்கிறார்கள் இளைஞர்கள். 3 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லாத பயணமே அவர்களின் வறுமைக்கு ஏற்றதாக உள்ளது.
ஹிங்கல்கஞ்ச்: “நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். என் மூன்று குழந்தைகளும் இறந்து விட்டார்கள். அவர்களுக்கும் சிறு குழந்தைகளுடன் குடும்பம் உள்ளது. நான் யாரிடம் சென்று என் வறுமை நிலையை நீக்க சொல்லி கெஞ்சுவேன். நாங்கள் எப்படி வாழ்வது” என்று கேட்கிறார் வங்காளத்தின் சுந்தரவனத்தில் உள்ள குக்கிராமமான ஜர்காலியில் வசிக்கும் சுபத்ராகயன்.
இவரது 3 மகன்கள் ஹரன் கயன், நிஷிகந்தா கயன் மற்றும் திபாகர் கயன் ஆகியோர் வேலைத்தேடி தென்மாநிலங்கள் செல்வது வழக்கம். கடந்த 2 ஆம் தேதி அவர்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுடன் 6 பேர் ஆந்திராவுக்கு தினக்கூலி வேலைக்கு செல்ல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளனர். இதில் 5 பேர் சடலமாக கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இதில் ஒருவர் கதி என்னவானது என்று தெரியவில்லை. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.
ஒடிசா ரயில் விபத்தால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த தெற்கு 24 பர்கானால் மாவட்டம் சோகத்தில் மூழ்கியுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி நிலவரப்படி மாவட்ட நிர்வாகம் 27 நபர்களின் இறப்புகளை உறுதிசெய்துள்ளது. இதில் பெரும்பாலானோர் சுந்தரவனப் பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் 19 பேரை காணவில்லை. 103 பேர் காயமடைந்துள்ளனர்.
கோரமண்டல் சம்பவம் கிராமப்புற வங்காளத்தின் மோசமான நிலையை காட்டுகிறது. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் மக்கள் வேறு இடங்களை நோக்கி நகரும் நிலை உள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனாலேயே அந்த பகுதி மக்கள் வேலைத் தேடி தென் மாநிலங்களை நோக்கி புலம் பெயர்கிறார்கள்.
ரயில் விபத்து குறித்து வெளியான அறிக்கைகளின் தரவுகளை பார்க்கும் போது ஆபத்தான கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், இறந்தவர்களில் இருவரை தவிர மற்ற அனைவரும் சிறுபான்மை அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி சமூகங்களை சார்ந்தவர்கள். இது கிராமப்புற வங்காளத்தில் பின்தங்கிய குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் அவலநிலையை கோடிட்டு காட்டுவதை பார்க்கலாம்.
சமீபத்திய ஆண்டுகளில், தென்மாநிலங்களை நோக்கி பயணிக்கும் மருத்துவ நோயாளிகளிடையே அதன் புகழ் காரணமாக 1980 மற்றும் 90 காலக்கட்டத்தில் “மருத்துவமனை எக்ஸ்பிரஸ்” என்று அழைக்கப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று “புலம்பெயர்ந்தவர்களின் எக்ஸ்பிரஸ்” என்ற நற்பெயரை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி, காலநிலை மாற்றம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைவாக ஒதுக்கப்பட்ட வேலைகள் ஆகிய காரணங்களால் வேலைத் தேடி புலம்பெயர்வது அதிகரித்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள்தொகையில் 2.6% வாழ்நாள் முழுவதும் புலம்பெயர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த தசாப்தங்களில் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அண்டை மாவட்டமான வடக்கு 24 பர்கானாவில் வசிக்கும் சாய்கத் மொண்டல் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர் வேலைத் தேடி பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு பேக்கேஜிங் தொழிற்சாலையில் மாதம் ரூ.15000 சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார். எஸ்.எம்.வி.டி பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது. அங்கு தான் வருமானம் கிடைப்பதாகவும் நிலைமை சீரான பிறகு கர்நாடகா திரும்புவதாக கூறுகிறார்.
இதுபோல் மேற்கு வங்கம் மட்டுமல்ல பீகார், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள உழைக்கும் மக்கள் வேலைத்தேடி தொழிற்துறையில் முன்னேறிய மாநிலங்களான தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கிறார்கள். இவர்கள் சிறந்த பயணமாக கருதுவது ரயிலை தான். இதில் தான் கட்டணமும் குறைவு. ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வார்கள் வட இந்தியர்கள் என்று பலரும் கிண்டலடிப்பார்கள். ஆனால் அதற்கான காரணத்தை அவர்கள் தேடுவதில்லை. வறுமை ஒன்று தான் காரணம்.
கோரமண்டலில் பயணித்து மரணித்தவர்களில் பெரும்பாலானோர் முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்தவர்களே! இதில் இறந்த பாதிக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்படவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. இவர்களை பற்றி ஆளும் பாசிஸ்டுகளும் கண்டுக் கொள்ளப்போவதில்லை. அரசை பொறுத்தமட்டில் கேள்வி கேட்க நாதியில்லாதவர்கள் தான் உழைக்கும் மக்கள்.
இதையும் படியுங்கள்: பத்திரிக்கை செய்தி: கொடூரமான ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்!
வறுமையில் சிக்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பு அவசியமானது. சம்பாதிப்பதற்கான தேவை அவர்களின் மரணபயத்தை மறைத்துள்ளது. இது குறித்து ஒரு தொழிலாளி கூறும் போது நான் வேலைக்கு செல்லவில்லை என்றால் என் குழந்தைகள் பசியால் மரணித்து போகும். இதை நாங்கள் விரும்பவில்லை என்கிறார்.
முதலாளிகள் அவர்கள் விரும்பிய இடத்தில் தொழில் செய்யலாம். ஆனால் தொழிலாளி வர்க்கமோ வேலை கிடைக்கும் இடத்தை தேடித்தான் செல்ல வேண்டும். அதனால் தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் “புலம்பெயர்ந்தோரின் எக்ஸ்பிரஸ்” ஆகவே நீடிக்கிறது. தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் கார்ப்பரேட் கும்பலின் சுரண்டல் நீடிக்கும் வரை தொழிலாளர்களின் பயணம் கூட பாதுகாப்பானதாக இருக்கப் போவதில்லை.
- நலன்