நசீருதீன் ஷா  சிறு அறிமுகம் :  மும்பை  குணச்சித்திர,  திரைப்பட நடிகர். இந்தியாவில் (வங்காளி முதல் தமிழ்,  மலையாளம் வரை)   பத்து மொழிகளில்  167 படங்களில்  நடித்துள்ளார் ; படங்கள்  இயக்கியுள்ளார்;  நவீன  மேடை நாடக நடிகர்,  இயக்குனர்.

மதச்சார்பின்மையை  வாழ்க்கையில்  பின்பற்றுகிறவர்; அதற்காகப்  போராடியும்  வருகிறார்; ஒன்றிய  மோடி அரசின் மதவெறியை  விமர்சித்தும்  பேசி வருகிறார்.  அண்மையில்  டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின்  ஒரு பகுதியான  ‘ஈ.டைம்ஸ்.இன் (e-times.in)’ சிறப்புப் பகுதிக்காக  அவர்  அளித்த பல  பேட்டிகளிலிருந்து சில பகுதிகள்:

“தற்போது  நாட்டில்   நடக்கிற  பல விசயங்கள்  வருத்தம் தருகிறது.  கலை மூலமாக,  குறிப்பாக  சினிமா மூலமாக, பா.ஜ.க  பச்சையாக  மதவெறிப்  பிரச்சாரத்தை  மக்களிடம் கொண்டு செல்கிறது……”

“நம் நாடு மதச்சார்பற்ற நாடென்றால், நடக்கின்ற ஒவ்வொரு சம்பவத்திலும்  எதற்காக இந்துமதம்  வலிந்து இழுக்கப்படுகிறது ? ”

“ஒரு முசுலீம் தலைவர் ‘ அல்லாஹூ அக்பர் ‘ என்று தொடங்கி ஓட்டுக் கேட்டால் கடுமையாக விமரிசிக்கப்படுகிறார்; ஆனால் பிரதமர் மோடி இந்துமதத்தைக் காட்டியே பிரச்சாரம் செய்கிறார். மோடி அரசாங்கமே இந்தத் துருப்புச் சீட்டை எடுத்து விளையாடுகிறது….”

“முசுலீம்களை வெறுத்துப் பேசுவது படித்தவர் மத்தியில்கூட ஃபேஷனாகி வருகிறது.இதை ஒன்றிய அரசு திட்டமிட்டுப் பரப்பிவருகிறது……”

(29.05.2023)

“இந்தி திரையுலகம் ( பாலிவுட் ) குழப்பமான, கலவரமான, சூழலில் இருக்கிறது ; இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே பயபீதியில்  தத்தளிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறீர்கள். பேசாமல் இருந்துவிடவேண்டும், ( இந்துவெறிப் ) பிரச்சாரத்தில் கலந்துகொள்ளாமல் விலகியிருக்கவேண்டும்…..இன்றைய கட்டத்தில் கலைஞர்கள் சொந்தக் கருத்து சொல்லவும் அச்சப் படுகிறார்கள். சொன்னால் அடிஉதை கிடைக்கும், அல்லது, அவர்களின் படங்கள் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படும் என்பதே நிலைமை….. ”

“கலை தன் அளவிலேயே வெறுப்பைத் தணித்து இணக்கம் கொண்டுவரும் என்றாலும் கலைஞர்கள் சமூக மாற்றத்தை தங்கள்  துறைமூலமாகவே  கொண்டு வந்துவிடமுடியாது…..”

“கலைஞர்கள்  சரியான கேள்விகளை எழுப்பவேண்டும்  ;   எந்தச் சூழலிலும் அவர்கள் அதைச் செய்யவேண்டும்….கலைஞனின் சொற்கள் மிகவும் பயன்மிக்கவை; அதனாலேயே  அவனது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும்……”

(30.5.2023)

“விபுல் ஷா எடுத்த  ‘கேரளக் கதை’ எல்லாத் தரப்பிலிருந்தும் வரவேற்கப்படுகிறது. எங்கும்  பாராட்டு மழை. நிறையப் பணமும் சமபாதித்துக் கொடுத்துவிட்டது….இந்தப் போக்கு மிகப் பயங்கரமானது…..இப்படத்தைப்பற்றி நிறையப் படித்தேன்.

(பொய்யும் புரட்டுமான)  அந்தப் படத்தை நான்  பார்க்கமாட்டேன்… இந்தப் போக்கு  எனக்கு  நாஜி ஜெர்மனியை நினைவுபடுத்துகிறது.

இட்லரின் காலத்தில் படத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பிரச்சாரத்துக்காக விலைக்கு  வாங்கப்பட்டார்கள். அவரைப் புகழ்ந்துபாடவும், “நாட்டுக்கு அவர்  பலதும் செய்ததாக ஏற்றிப் போற்றவும்”,    யூத இனத்துக்கு எதிரான  பொய்களையும் வெறுப்பையும் வேகமாய்ப் பரப்பவும் படங்களை எடுக்கச் சொன்னார்கள்.

இதையும் படியுங்கள்: நடிகவேள் எம் ஆர் ராதா எனும் கலகக்காரன்!

இந்த நெருக்கடி காரணமாக மிகச்சிறந்த இயக்குனர்கள் ஜெர்மனியைவிட்டே  வெளியேறினார்கள்.  அமெரிக்க ஹாலிவுட்டுக்குச்  சென்றுவிட்டார்கள்.  அங்கேபோனபிறகும்  ( கடமை மறக்காமல் ) பாசிச எதிர்ப்புப் படங்களைஎடுத்தார்கள். ( அதற்காக அமெரிக்காவிலேயே  ஹாலிவுட் இடதுசாரிக் கலைஞர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு விசாரணைகளும் நடந்து, பிறகு அதைப் பற்றியே ஒரு படம் எடுத்தார்கள், அது இடதுசாரிகளின் கெத்து! — மொ.பெ.ர் ). இப்போது இந்தியாவில் நெருக்கடி நிலை  போல ஒரு நிலை  நடப்பதாகவே  தெரிகிறது. படக்காரர்கள் மூன்று பிளவுகளாக்கப் பட்டுவிட்டார்களோ என்று தோன்றுகிறது : மக்கள் பக்கம் சரியான நிலைப்பாடு எடுத்து நிற்பது ஒன்று ; அரசின் பக்கம் தாவிவிடுவது மற்றொன்று;  நடுநிலை எடுத்து ஊசலாடுவது மூன்றாவது…

இவை  இப்போது இங்கே நடக்கின்றன……

வெறுப்பை விதைக்கும் அரசியலை மக்கள் நிச்சயமாக வெறுத்து ஒதுக்குவார்கள்….ஆனால், இது உடனே நடக்கின்ற விசயம் அல்ல என்பதை மட்டும்  நீங்கள் கவனத்தில் வையுங்கள்….”

(31.5.2023)

ஆங்கிலம் வழி தமிழில்: பீட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here