மிழக அரசு சேது கால்வாய் திட்டத்திற்காக ₹ 2500 கோடி ஒதுக்கி உள்ளது. மீண்டும் பார்ப்பன கும்பல் ராமர் பாலம் என்ற கட்டுக்கதையை தூசு தட்ட ஆரம்பித்து விட்டனர்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்று புளுகுவதும், மதுராவில் மசூதி இருந்த இடத்தில் தான் கிருஷ்ணன் ஜனித்தான் என்று கதை விடுவதும், சேது சமுத்திர கால்வாய் அமைக்கப்பட உள்ள இடத்தில் உள்ள மணல் திட்டுகளை இராமன் கட்டிய பாலம் என்று பித்தலாட்டம் புரிவதையும் பக்தி, இறை நம்பிக்கை என்ற போர்வையில் பெரும்பான்மை மக்களின் தலைமையில் கட்டுவதற்கு முயற்சிக்கிறது பார்ப்பன கும்பல்.

இந்த பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்களை நடத்தியது மக்கள் கலை இலக்கிய கழகம்.

இன்று மீண்டும் அதே பித்தலாட்டத்தை நடத்தும்போது அதை எதிர்த்து முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும். இது போன்ற சாதாரண பக்தி, இறை நம்பிக்கையை பாசிசத்திற்கு அடித்தளமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே எமது இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரையை இங்கு மீள் பதிவு செய்கிறோம்.

000

ரண்டு நிமிடம் ஓடக்கூடிய ராம் சேது பாலம் பற்றிய காணொளியை, அமெரிக்காவில் உள்ள சைன்ஸ் சேனல் வெளியிட்டுள்ளது. இவர்களின் ஆய்வுப்படி, இந்த பாலத்திலுள்ள, கற்களின் வயது 7000-ம் ஆண்டு என்றும், அதற்கு மேல் உள்ள மண் திட்டுகளின் வயது 5000-ம் ஆண்டு என்றும் கண்டு பிடித்துள்ளனர். செயற்கைக் கோள் படத்தின் படி இந்த ஆதம் பாலம் மணல் திட்டுக்களாலும், அதன் மேல் இருக்கும் கற்பாறைகளாலும் ஒரு அறுபட்ட பாலம் போல இருக்கிறது. மணல் திட்டுக்கள் உருவாவது இயற்கை என்றாலும் இந்த பாறைகள் இங்கே எப்படி கொண்டு வரப்பட்டன என்று கேள்வி எழுப்புகிறது அந்த வீடியோ.

இந்திய மற்றும் தமிழக புவி அறிவியலை படித்தவன் என்ற முறையில் என்னுள் சில கேள்விகள் எழுகிறது

எதற்காக Dr. Aalan Lester (Geologist – புவி அறிவியல் வல்லுநர்) , இந்த மண்திட்டு உருவானதற்கான காரணத்தை புவிஅறிவியல் கோட்பாடுகளின் மூலம் விளக்காமல், இது இந்து கடவுள் ராம் தான் கட்டியிருப்பார் என்று கூறுவது மிகவும் வியப்பாக உள்ளது. இவர் புவி அறிவியல் வல்லுனரா அல்லது ஹிந்து புரோகிதரா என்ற ஐயம் ஏற்படுகிறது. அந்த வீடியோவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் அந்த பாறைகள் கட்டப்பட்டிருப்பது சாத்தியமில்லை என்பதை இதை சூப்பர் ஹீயூமன்தான் செய்திருக்க முடியும் என்று சொல்கிறார்கள். அதன் பொருள் அதை மனிதர்கள் கட்ட முடியாது, கட்டவில்லை என்பதே.

எனினும் சங்கபரிவாரத்தினர் இதை வைத்தே இராமாயண காலத்திற்கு சென்று வாயால் பாலத்தை கட்டிவிட்டார்கள். ராமன் தான் இந்த மண் திட்டை கட்டியிருப்பார் என்ற நோக்கத்தோடு, டாக்டர் ஆலன் லெஸ்டர் ஆதம் பாலத்தை கூறியிருப்பதை ஆதாரமாக கூறுகிறார்கள்.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் (2007), இந்த பாலம் மனிதனால் கட்டப்பட்டது என்றால், அதற்கு அருகில் மனிதன் வாழ்ந்தற்கான சான்றுகள் இருக்க வேண்டும். அவ்வாறான எந்த சான்றுகளும் அங்கு கிடைக்கவில்லை. இறந்த மனிதனின் எலும்புகளோ அல்லது எந்த எச்சங்களோ அங்கு இல்லை. இந்த பாலத்தை கட்டுவதற்கு பத்து லட்சம் வானரங்கள் பயன்படுத்தப்பட்டது என்று கூறுகிறது ராமாயணம். ஆனால் இன்று வரை, இந்தியாவின் எந்த மூலையிலும் குரங்கு போன்ற மனித உருவம் கொண்ட எலும்புக்கூடு எங்கும் கிடைக்கவில்லை.

ராமன் ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையே பாலம் அமைத்து தான் ஸ்ரீலங்காவிற்கு போனார் என்றால், அதற்கு முன் அவர் மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு முதலில் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். ஏனெனில், மண்டபத்திலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் ஒரு தீவு. ராமாயணமும், அமெரிக்க சைன்ஸ் சேனலும் ஒரே ஒரு பாலத்தைத்தான் குறிப்பிடுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டிய பாம்பன் பாலத்தை தவிர அங்கு வேறு எந்த ஒரு பாலமும் இல்லை. ஆதலால், ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையே உள்ள பாலமானது இயற்கையாக அமைந்தது தான் என்று தெரிகிறது.

ராமன் பாம்பன் பாலத்தை கட்டாமல் எப்படி ராமேஸ்வரம் சென்றிருப்பான்

தொல்உயிரியல் (Paleontology) என்பது மண்ணில் புதைந்த இறந்த உடற்கூட்டினை பற்றியும், அது வாழ்ந்த கால அளவை கொண்டும் அவை தொகுக்கப்படுகிறது. இந்திய தொல்உயிரியல் ஆராய்ச்சிபடி, இந்தியாவில் இமயமலையில் தான் முதன் முதலில் மனிதனின் முன்னோடியான மனிதகுரங்கின் உடற்பாகம் கிடைத்தது, இவ்வகையான குரங்குகள் வாழ்ந்த கால அளவு 1.2 கோடி. அதன் பிறகு முழு மனித உருவம் கொண்ட உடற்கூறு தமிழ்நாட்டில் கிடைத்தது, இதன் காலஅளவு 1.66 லட்சம்.

உலகின் எந்த ஒரு மூலையிலும், மனிதர்களின் முன்னோடியான மனித குரங்குகள் வாழ்ந்த கால அளவும், முழு உருவம் அடைந்த மனிதன் வாழ்ந்த கால அளவும் எங்கும் ஒத்துப்போகவில்லை. ஆனால் ராமாயணத்தில் முழு உருவம் கொண்ட மனிதனான ராமனும் மனித குரங்கு வடிவம் கொண்ட அனுமானும் தோழர்கள். இந்த இரண்டு உருவங்களும் ஒன்றாக இணைந்து 7000ஆம் ஆண்டில் ஒரு பாலம் கட்டினார்கள் என்பது அண்டப்புளுகு மற்றும் அறிவியலுக்கு ஒத்துவராத கோட்பாடு.

இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் ஆராய்ச்சிப்படி, இந்த பாலமானாது இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையேஉள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட புவி மாறுதல்களினால் உருவானது. இந்த மண் திட்டானது சுமார் 18,000-ஆம்ஆண்டு முதல் 7000-ஆம்ஆண்டு இடைப்பட்ட காலத்தில் உருவாயிருக்கவேண்டும். பிறகுதான் மனிதர்களும் விலங்குகளும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்றிருப்பார்கள்.

இதையும் படியுங்கள்: கொலையாளிகள் விடுதலை! நிரபராதிகள் சிறைக்குள்! இதுதான் “இராம ராஜ்ஜியம்”!

கற்களின் மேல் ராமா என்று எழுதியதால் தான், கற்கள் கடல் நீரில் முழுகாமல் மிதந்து கொண்டிருக்கிறது என்று காவி அறிஞர்கள் அடித்து விடுகிறார்கள். கற்களின் மீது ராமா என்று மட்டுமல்ல, ராவணா என்று எழுதியிருந்தாலும், தண்ணீரின் மிதந்துகொண்டுதான் இருக்கும். ஏ னெனில், ப்யூமிஸ்(Pumice) எனப்படும் எரிமலை கற்களும், பவளப்பாறை கற்களும், தங்களின் கனஅளவில் 70 முதல் 80 சதவிகிதம் வெறும் துளைகளால் ஆனது. இந்த கற்களின் அடர்த்தியானது (Density) கடல் நீரின் அடர்த்தியை விட குறைவானது, அதனால் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது.

அமெரிக்காவின் சைன்ஸ் சேனல் தங்களுடைய வீடியோவை வெளியிடும் முன்னே, வாழும்கலை நிறுவனம் (Art-Of-Living) ராம்சேது பாலம் பற்றிய வீடியோவை வெளியிட்டது. வாழும் கலை வீடியோவும் “இந்த பாலம் கட்டப்பட்ட கற்களின் வயது 7000 ஆண்டுகள் இருக்கும் என்றும், அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் இதை கண்டுபிடித்தது” என்று கூறுகிறது. கண்டிப்பாக அமெரிக்காவின் சைன்ஸ் சேனல், தங்களுடைய ஆய்வின் முடிவை வாழும் கலை நிறுவனத்துடன் பகிரந்திருக்க வேண்டும். என்னுடைய ஊகம் என்னவென்றால், ஹிந்து சமய கொள்கை மீது பற்றுகொண்ட ஓரிரு ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவின் சைன்ஸ்சேனல் ஆராய்ச்சியின் பின்புலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இராமாயணத்தில் வரும், இலங்கை, இராவணன் என்ற குறியீடுகளெல்லாம் இன்றைய தென்னிந்திய – இலங்கையைக் குறிப்பிடுவன அல்ல, அவை கற்பனையே என்று வரலாறும், வரலாற்று அறிஞர்களும் கூறிவிட்டனர். இடையில் பாலம் மட்டும் எப்படி எழ முடியும்?

  • Dr. சேதுபதி, PhD.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here