நாள் 4-6-2023

பத்திரிக்கைச் செய்தி!


கொடூரமான ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்!
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம்!

பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகிய பாசிச கொடூரர்களின் கைகளில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் ரத்தம் சொட்டுகிறது. அவர்களின் உடல் மற்றும் உடைகளில் விபத்தில் பலியாகி இறந்து போனவர்களின் துர்நாற்றம் வீசுகிறது. நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலையாவதை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் செய்த பயணங்கள் உருவாக்கிய தோற்றங்கள், ஜி 20 நாடுகளின் மாநாடு மூலம் ஏற்படுத்திய வளர்ச்சி பற்றிய பிம்பங்கள் அனைத்தும் நொறுங்கி வீழ்வதை பற்றி தான் கவலைப்படுகிறார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த மிகப்பெரும் துயரம்! ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது; ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள பலரின் உயிர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு 500 மேலாக அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கான காரணம் என ரயில்வே உயரதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவின் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதாவது, மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பச்சை சிக்னல் ரத்தானதால் லூப் லைனில் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்து மோதியதில் அதன் பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்த பெட்டிகளால் அவ்வழியே வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்தில் சிக்கியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவாச் என்ற பாதுகாப்பு தொழில் நுட்பத்தை 2012 முதல் புறக்கணித்தது இந்த ரயில் விபத்திற்கு ஒரு முக்கிய காரணம் என ஒன்றிய மோடி அரசு மீது மாநில முதல்வர் பட்நாயக் உள்ளிட்டு பலர் குற்றம் சாட்டுகின்றனர்.. ஒடிசா மாநிலத்தின் வழியே செல்கின்ற எந்த ரயிலிலும் கவாச் பாதுகாப்பு இன்னும் கட்டமைக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பெரும் மனித படுகொலையை பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்.

சொந்த மாநிலத்தில் வாழ வழி இல்லாத வட மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் ரயில் போக்குவரத்தை தான் முதன்மையாக பயன்படுத்துகிறார்கள். சாதாரண உழைக்கும் மக்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகள் முறையாக சோதித்தறியப்படுவதில்லை உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. மாறாக ரயில் போக்குவரத்து என்றால் யாருக்கானது என்பதை மேட்டுக்குடிகள் பயணம் செய்கின்ற வந்தே பாரத் போன்ற ரயிலை முன்வைத்து துவங்கும் விளம்பரம் நாட்டின் பிரதமர் ஆன பாசிச மோடியின் வர்க்க சார்பை பச்சையாக வெளிப்படுத்துகிறது.

மக்கள் சேவையில் பாதுகாப்பான ரயில்வே என்பதை பற்றி துளியும் அக்கறை இல்லாதவர்தான் பாசிச மோடி. இந்த லட்சணத்தில் விபத்தை நேரில் பார்வையிட்ட பிறகு “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. தண்டிக்கப்படுவார்கள்” என ஆர் எஸ் எஸ்- பா.ஜ.க மோடி பேசுவது பாசிஸ்டுகளுக்கே உரிய கவர்ச்சிவாத பேச்சு ஆகும் இது கோரமான ரயில் விபத்தை விட நம்மை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் குற்றம் புரிந்த பா.ஜ.க எம்பி பிரிஜ் பூசன் சரன்சிங் என்பவனை கைது செயயக்கோரி பல மாதங்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள். பாலியல் கிரிமினல் குற்றம் புரிந்த தனது பா.ஜ.க எம்பி மீது நடவடிக்கை எடுக்காத மோடி ரயில் விபத்திற்கு யாரை தண்டிக்க போகிறாரார்? என்பது கேள்விக்குறி?

இந்திய இரயில்வேயின் மொத்த பாதை நீளம் 68,043 கி.மீ. இந்த முழு வழித்தடத்திலிருந்தும், 1,445 கிமீ தூரத்தில் மட்டுமே கவாச்/மோதல் தடுப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது மொத்த ரயில்வே வழித்தடங்களில் 2% மட்டுமே. இன்றுவரை, சுமார் 98% இந்திய ரயில்வேயில் மோதல் தடுப்பு சாதனங்கள்/அமைப்புகள் இல்லை. எனவே இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விபத்து நடக்காமல் இருக்க ஏற்படுத்த வேண்டிய தொழில் நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்கள் சேவையிலிருந்து படிப்படியாக விலகி லாபம் தரும் வியாபாரமயமாக மாற்றப்பட்டு தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதால் ரயிலில் பயணிக்கும் உழைக்கும் மக்களின் உயிர் துச்சமாக கருதப்பட்டுள்ளது என்பதை தான் இந்த விபத்து நமக்கு உணர்த்துகிறது.

ரயில்வே துறை தொடர்ந்து தரமான பாதுகாப்பான மக்கள் சேவையில் நீடித்து இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அடிமாடுகளைப் போல் தினம் தோறும் முன்பதிவில்லா ரயில் பெட்டியில் ஆபத்தாக பயணிக்கும் பல லட்சம் மக்களின் உயிர் பாதுகாப்பு ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ரயில்வே துறைக்கு 2022-23 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 14 விழுக்காட்டை ஏன் குறைக்கப்பட்டது?. ரயில்வே தனியார்மயம், ரயில்வேயில் அதிகளவில் காலி பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பணி அழுத்தங்கள் போன்றவை பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும்.

எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், தூரந்தோ, வந்தே பாரத், போன்ற புதிய பெயர்களால் பல மடங்கு ரயில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பாசஞ்சர் ரயிலுக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலிக்கும் தற்போது ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைக்கப்பட்டதால் ஒரு சில பெட்டிகளில் பல ஆயிரம் பேர் தொலை தூரம் ஆபத்தாக பயணிக்கும் அவலம் கொடுமையாக மாறி உள்ளது.

இவற்றுக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்றால் தற்போதைய 288 பேரின் மரணங்கள் எதிர்காலத்தில் பல கோடி பேரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தவதாக அமைய வேண்டும்.  உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ள இந்திய ரயில்வே-யின் சீர்கேடுகள் சரிசெய்யாவிடில் அது மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தும்.

ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கின்ற ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலின் பிரதிநிதியான பாசிச மோடியிடம் கிடையாது. நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பொருத்தமான சாலைப்போக்குவரத்து துவங்கி ரயில் போக்குவரத்து வரை அனைத்தையும் மக்கள் சேவை என்ற கண்ணோட்டத்தில் மாற்றுவதற்கு பொருத்தமான புதிய அரசு கட்டமைப்பு ஒன்றே இதனை உறுதிப்படுத்தும்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here