ஷ்யா – உக்ரைன் போரின் விளைவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனைக்குத் தயாரானது. இந்தியாவும் தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்தது. ஆனால் அப்படி கிடைத்த கச்சா எண்ணெய் முழுவதும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டது என்ற உண்மை தாமதமாகத்தான் தெரிய வந்தது. அதேசமயம் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள், சர்வதேச விலையில் (போர் பாதிப்பினால் அதிக விலையில்தான்) இறக்குமதி செய்கின்றன.

மார்ச் 14, 2022 அன்று பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில், வெளி விவகாரத்துறை அமைச்சர் ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி உரையாற்றுகையில்,  உக்ரேனில் சிக்கித் தவிக்கும் மக்களை – குறிப்பாக அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்களை – மீட்க இந்தியா எடுக்கும் முயற்சிகளை விவரித்தார். இந்தியா தனது நீண்டகால நிலைப்பாடான ‘நடுநிலைமையை’ப் பேணுவதில் உறுதியாக உள்ளதையும் எடுத்துக் கூறினார். இருப்பினும் அதை “அணிசேரா” கொள்கை என அவர் குறிப்பிடவில்லை.

ஐநா சபையின் சிறப்பு அமர்வில் (மார்ச் 2, 2022) அதன் தீர்மானத்தில் இருந்து விலகி இருந்ததை நியாயப்படுத்தினார்.  உக்ரேனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் என 141 நாடுகள் கூறின. ஆனால் இந்தியா மட்டும் அமைதி காத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சமூகத்தின் மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் விமர்சனத்தைப் பெற்றது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘சிந்தனையையே மாற்றும் வல்லமை படைத்த’ பாஜகவின் ஊடகப் படையணிகள் களத்தில் இறங்கின. கடந்த காலத்தில் உக்ரைன் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக குற்றம் சாட்டி வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் செய்திகளை பரப்பினர். 1971-ல் இந்திய சோவியத் உடன்படிக்கையிலிருந்து, 52 ஆண்டுகளாக ரஷ்யா நமக்கு பக்கபலமாக இருப்பதாக அரசாங்க சார்பு சமூக ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் நினைவூட்டுப் பிரச்சாரம் செய்தன. ஆனால் இந்த வரலாற்றில் நேரு மற்றும் இந்திராகாந்தியின் பங்களிப்பை மட்டும் குறிப்பிடாமல் கவனமாக தவிர்த்தன.

ரசியாவிற்கு எதிராக சர்வதேசத் தடைகள் இருந்த போதிலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தது. 2022 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கத்திய நாடுகளிடம், ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியில் ஒரு சதவீதம் மட்டுமே இந்தியா இறக்குமதி செய்கிறது என்று ஒரு வடிகட்டியப் பொய்யைக் கூறினார். உண்மையில் ரசிய எண்ணெய் ஏற்றுமதியில் 30% இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இந்தச் சூழலில் அரசின்  சுத்திகரிப்பு நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்ப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாத அதேசமயம், தனியார் நிறுவனங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. ரஷ்ய – உக்ரைன் போருக்கு முன்பு இரண்டு தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலையில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து, அதை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் அதன் இதர பிற பொருட்களை இங்கிருந்த போட்டித் தன்மைக்கேற்ப குறைந்த லாபத்திற்கே விற்க முடிந்தது.

இதற்கு முன்பு இந்தியாவின் 65 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களில் 10,000 – க்கு சப்ளை செய்வதற்கான சலுகையை ஒன்றிய அரசிடம் வேண்டிப் பெற்றிருந்த ரிலையன்ஸ் மற்றும் நயாரா நிறுவனங்கள், இப்போது ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெறுவதன் மூலமாக இதுவரை இல்லாத வகையில் அதீத லாபத்தை பெறுகின்றன.  மேலும் அவை பெட்ரோல், டீசலை நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமும் கொழுத்த லாபத்தை அடைகின்றன.

ரஷ்யாவிற்கு எதிரான தங்களது சொந்த பொருளாதாரத் தடையின் காரணமாக, கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகள் சர்வதேச சந்தையில் கடுமையாக விலை உயர்ந்த கச்சா எண்ணெயை அதாவது பேரலுக்கு 100 டாலருக்கு மேல் கொடுத்து வாங்கினர். இந்த விலை ஏற்றத்தை அடுத்து இந்திய அரசும், வானமே தலையில் இடிந்து விழுந்து விட்டதை போல கூப்பாடு போட்டது.

மோடி ஆட்சியில் அமர்ந்த மே – 2014 – ல் கச்சா எண்ணெய் விலை 107 டாலராக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் அடிக்கடி 100 டாலரைத் தாண்டியது. ஆனால் அப்போதெல்லாம் அதிகபட்ச பெட்ரோல் விலை 72 ரூபாய்தான்.  மோடி அரசின் பொருளாதாரத்தைதான் நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 டாலருக்கும் கீழே வந்த போதும், பெட்ரோல் விலை மட்டும் 100 ரூபாயைத் தாண்டியே தான் நிற்கிறது.

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திறந்த சந்தையிலிருந்து ஒப்பந்த விலையில் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரஷ்யாவுடன் நாம் இணக்கமாக இருந்திராவிட்டால் மொத்த தேசமும் மூழ்கியிருக்கும் எனவும் நம்ப வைக்கப்பட்டது. ரஷ்யா மீது பொருளாதார தடைகள் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகள் அதனிடமிருந்து எரிவாயுவை வாங்குவதாக ஜெய்சங்கர் குற்றம் சாட்டினார். எனவே எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கும் உரிமை உள்ளது என்றார். மேலும் “நாங்கள் ரசிய எண்ணையை வாங்குவதற்கு ஆட்களை அனுப்பவில்லை. மாறாக சந்தையில் சிறந்த எண்ணெயை வாங்குவதற்குதான் அனுப்புகிறோம்” என்றும் குறிப்பிட்டார். இவ்வளவு வக்காலத்தும், வியாக்கியானமும் தனியார் முதலாளிகளுக்கு சேவை புரியத்தானே அன்றி வேறெதற்கு?

இதையும் படியுங்கள்: 

பிப்ரவரி முதல் ஜூன் 2022 வரையான காலகட்டத்தில் மட்டும் சுமார் 62.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆனதாக ரஷ்யாவின் தகவல் தெரிவிக்கிறது. 2021ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதியானதை விட இது மூன்று மடங்கு அதிகமாகும். கடந்த பிப்ரவரி 2023 – ல் ஒரு நாளைக்கு 1.64 மில்லியன் பீப்பாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இவ்வளவு கச்சா எண்ணையும் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கே என்பதுதான் கசப்பான உண்மை.

கச்சா எண்ணையை சுத்திகரித்த பிறகு, ரிலையன்ஸ் மற்றும் நயாரா செய்த ஏற்றுமதி மூலம் அவை “சூப்பர் சார்ஜ்” லாபம் அடைந்ததாக அமெரிக்க வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்தது. மேலும் ரஷ்யாவுடனான மேற்குலக நாடுகளின் மோசமடைந்து வரும்  உறவால், ரிலையன்ஸ் தொடர்ந்து லாபமடையும் என்றும் பெருமூச்சு விடுகிறது.

திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜவ்ஹர் சர்கார், “ஒரு வருடத்திற்கு மேலாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் மூலமும், கடிதங்கள் மூலமும் பெட்ரோலிய அமைச்சகத்திடமிருந்து இப்படி இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி, ஏற்றுமதி அளவு, தள்ளுபடி மற்றும் லாபம் குறித்து அறிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை. உண்மையில் தனியார் நிறுவனங்களின் லாபம் மிக அதிகமாக இருந்ததால்தான் நிதி அமைச்சகம் ஆதாயவரியை அவ்வப்போது விதித்துள்ளது என புரிந்து கொள்கிறேன்” என்கிறார்.

ரிலையன்ஸும், நயாராவும் கொழுத்த லாபம் சம்பாதித்து வந்த நிலையில், எரிசக்தி மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (The centre for Research on Energy and clean Air)எனும் சர்வதேச சிந்தனைக்குழாமானது,  ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் பெற்று, அதை மீண்டும் ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக ஆதாரங்களுடன் இந்தியா மீது குற்றம் சாட்டியதிலிருந்து பிரச்சனை தொடங்கியது. இதுபோன்ற கள்ளச் சந்தை மற்றும் முறைகேடு என்னும் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா இதுவரை உரிய பதிலளிக்கவில்லை.

ரிலையன்ஸ் மற்றும் நயாரா நிறுவனங்கள் இந்த சிக்கலான சூழலில் எப்படி மலிவு விலைக்கு இறக்குமதி செய்து மிக அதிக விலைக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது, எவ்வளவு  லாபம் கிடைத்தது, இப்படி இரு தனியார் நிறுவனங்கள் பன்மடங்கு லாபமீட்டிய அதே வேளையில் நமது நாடு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவது பாதிப்பில்லையா? மேலும் பெட்ரோலியம் மற்றும் வெளிவிவகார அமைச்சகங்கள் குஜராத் நிறுவனங்களுக்கு லாபம் சேர்க்கும் வகையிலான சர்வதேச நிலைப்பாட்டை எடுத்து, பதட்டமான சூழலை ஏன் ஏற்படுத்த வேண்டும்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

இதற்கான பதில் எளிமையானதுதான். நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில், அவருடைய ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு முதலாளிக்கு பெரும் லாபம் ஈட்ட உதவும் வகையில்தான் இருக்கும். இதற்கு பிரதிபலனாக, இந்த சலுகை சார் முதலாளித்துவம் (குரோனி கேப்பிட்டலிசம்) மோடியின் தேவைகளை கவனித்துக் கொள்ளும். இந்த முதலாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப அரசு எந்திரம் எப்படியெல்லாம் நயவஞ்சகமாக நடந்து கொள்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இப்படியான போர்ச் சூழலில் மலிவு விலையில் கிடைத்த எரிசக்தியை இந்தியன் ஆயில் போன்ற அரசுத்துறை நிறுவனங்களுக்கு வாங்க அனுமதி கொடுத்து, அதன் பலனை மக்களுக்கு அளித்திருக்க வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை குறைவான விலைக்கு தந்திருக்க முடியும். ஆனால் மக்கள் விரோதிகள் தப்பித்தவறிக் கூட அப்படி சிந்திக்க மாட்டார்கள் என்பதைத்தான் நடந்த இந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

சர்வதேச எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தாலும், அதையெல்லாம் சமாளித்து கார்ப்பரேட் சேவையை செவ்வனே செய்வதற்குதான் காவி கும்பல் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ளது. மக்கள் நலனில் துளியளவும் அக்கறையற்ற இந்த பாசிச கும்பலை வீழ்த்தாமல் நமக்கு விடிவில்லை.

செய்தி ஆதாரம்:

https://m.thewire.in/article/government/is-the-modi-government-helping-private-companies-benefit-from-the-russia-ukraine-war

தமிழில் ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here