பிஜேபியை நான்கு மாநில தேர்தல்களில் ஜெயிக்க வைத்த மக்களுக்கு பரிசு : பெட்ரோல், டீசல், எரிவாயு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு

ப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து சுங்கச்சாவடிகளில் வரிகளை அதிகரிப்பதாக அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தான் விலையை தீர்மானிக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு, விலை நிர்ணயம் செய்வதில் சம்பந்தமில்லை என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், மாநில தேர்தலோ, ஒன்றிய தேர்தலோ நடக்கும் பொழுதெல்லாம், ஒரே விலையிலேயே விலை நொண்டியடிக்கிறது. ரசியா உக்ரைன் போர் காலத்தில் சர்வதேச அளவில் கச்சா பேரல் விலை ஏறிய பொழுது கூட விலையை அதிகப்படுத்தவில்லை. தேர்தல் முடிந்ததும், இதோ விலையை உயர்த்த துவங்கிவிட்டார்கள்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் இன்றைய விலை 107.43. இந்தியாவில் அதிகப்பட்ச விலை மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு பகுதியில் ரூ. 119 விற்கிறார்கள். ரூ. 150க்கு கொண்டுவராமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையின் உயர்வால் விலைவாசி ஏறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. இப்பொழுது இன்னும் அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறார்கள். இப்பொழுது சுங்கச்சாவடி கட்டணங்களையும் அதிகப்படுத்தப்படுவதால், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்னும் ஏறுவதற்கு ஒன்றிய அரசு வழிவகுத்திருக்கிறது. கடந்த ஐந்து மாநில தேர்தல்களில் நான்கில் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்திருப்பதற்கு மக்களுக்கு ”பரிசாக” கொடுத்திருக்கிறார்கள்.

சுங்கச்சாவடிகளில் கொள்ளை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறன. தனிநபர்கள் ஓட்டும் பைக்குகளைத் தவிர அனைத்து வண்டிகளுக்களுக்கும் அந்த சாலை வழியாக செல்லும் பொழுதெல்லாம், வரியாக பணம் செலுத்துகிறார்கள். சுங்கச்சாவடிகள்  அரசுக்கு பணமழை கொட்டும் மையங்களாக இருக்கின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 26 சுங்கச் சாவடிகளிலும் மற்றவற்றில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இதன்படி, ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து ரூ. 5 லிருந்து அதிகப்பட்சம் ரூ. 120 வரை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலையை போடுகிறோம். பராமரிக்கிறோம் என்று தான் வரியாக வாங்குகிறது. ஆனால்  தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை பல தரப்பு சங்கங்களும் தொடர்ச்சியாக புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  ஒன்றிய அரசிடம் சுங்கவரி அதிகமாக இருக்கிறது என முறையிடும் பொழுதெல்லாம், நல்ல சாலை வேண்டுமென்றால், வரிகளை கட்டித்தான் ஆகவேண்டும் என எகத்தாளமாக பதில் சொல்கிறது. அதே போல சுங்கச்சாவடிகளில் நிறைய நேரம் காத்திருக்கவேண்டியிருக்கிறது. நேரடியாக பணம் வாங்குவதால், சுங்கச்சாவடிகள் ஊழல் செய்கிறார்கள். ஆகையால் ”ஒரே கல்லில் இரண்டு மாங்கா” என வரி செலுத்துவதை “Fast Tag” இணைய வழியில் செலுத்தும் முறையை கொண்டு வந்தார்கள். முன்பு பணமாய் செலுத்தியதற்கும், இணைய வழியில் செலுத்துவதற்குமான வசூல் இடைவெளி பல மடங்கு என ஆர்.டி.ஐ. வழியில் கேள்விகளுக்கு கொடுத்த பதில்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

கோடிகளில் கொட்டும் சுங்க சாவடி மையங்களை பல ரோடு காண்ட்ராக்ட் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு சாதகமாக பயன்படுத்தி கிடைக்கும் இடங்களில் எல்லாம் சுங்கசாவடி மையங்களை உருவாக்கி மக்களிடம் வசூல் செய்கிறார்கள் என மாநிலங்களைவியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி “சட்டத்திற்கு புறம்பாக சுங்க சாவடி மையங்கள் அமைத்து வசூல் செய்வது தவறு. அரசு சுங்க சாவடி மையங்களிடம் இருந்து வரி வாங்கும் ஒரே காரணத்திற்காக மக்கள் அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. 60 கிமீ தொலைவிற்கு குறைவாக உள்ள சுங்க சாவடிகள் மூன்று மாதத்திற்குள் மூடப்படும்” என பதிலளித்தார்.  இது தான் இவர்களின் லட்சணம். ஒரு விதிமுறை உருவாக்கி, அதன்படி நடக்கிறதா என கண்காணிப்பது தான் அரசுக்கு வேலை. அந்த வேலையை செய்வதற்கு தானே மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதில் நடவடிக்கை எடுப்பதற்கு எதற்கு 90 நாட்கள்?

கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு : பெரும்பாலான மக்கள் மீது வரிகளுக்கு மேல் வரி

ஒருநாட்டிற்கு வரி தான் எல்லாமும்! வரியை வைத்துக்கொண்டு தான் எல்லா திட்டங்களையும் அமுல்படுத்துகிறது. வரிகளைப் பொறுத்தவரை வருமானத்திற்கு ஏற்றவாறு வசூலிப்பது வருமான வரி என்பது நேரடி வரியை சார்ந்தவை.   பெட்ரோல், டீசல், சுங்கச்சாவடி எல்லாம் மறைமுக வரி.  மக்கள் மீது அக்கறை கொண்ட அரசென்றால், நேரடி வரியை அதிகப்படுத்தி, மறைமுக வரியை குறைத்து வசூலிக்கும்.

பாஜக அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய அரசு கார்ப்பரேட்டுகளை செல்லப்பிள்ளைகளாகவும், பெரும்பான்மை மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் நடத்துகின்றன. ஒரு இந்திய குடிமகன் பத்து லட்சத்திற்கு மேலாக நம் நாட்டில் லாபம் சம்பாதித்தால், ரூ.100க்கு ரூ. 30 வரியாக செலுத்தவேண்டும். அதுவே கார்ப்பரேட்டாக இருந்தால் ரூ. 25 செலுத்தினால் போதுமானது.  இப்பொழுது போடப்பட்ட பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு போடப்பட்டிருந்த உப வரி 12%த்தையும் 5% குறைத்து 7%யாக குறைத்திருக்கிறது.

கொரானா முதல் அலை, இரண்டாம் அலைகளில் தொடர்ச்சியான ஊரடங்கினால் சிறுக சிறுக சேமித்த அத்தனை சேமிப்புகளையும் தொலைத்து நிற்கும் இந்த நெருக்கடியான காலத்திலும், எரிகிற வீட்டில் கிடைத்த வரை லாபம் என பாஜக மோடி அரசு கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறது.  “இந்துக்கள், இந்துக்கள்” என பேசிப் பேசி, ஆட்சிக்க்கு வந்த பிஜேபிக்காரர்கள் பெரும்பான்மை ”இந்துக்கள்” மீது எந்தவித கவலையும் இல்லாமல், விலையை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள்.  இந்த உண்மையை அவர்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று காலையில் சென்னை அண்ணா ஆர்ச் அருகே ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுநர் வழக்கமாக வாங்கும் ரூ15 லிருந்து டீசல் விலை உயர்வால், ரூ. 5 உயர்த்தி ரூ. 20யாக கேட்டிருக்கிறார். இதைச் சொல்லித்தான் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த பெண் அதெப்படி கூட்டிக்கேட்கலாம் என கடும் கோபத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் சமாதானம் சொல்லி அனுப்பினோம்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல் டீசலில் அடித்த கொள்ளை மட்டும் 21 லட்சம் கோடிகள் என்கின்றன பத்திரிக்கைகள். கார்ப்பரேட்டுகளும், மோடி அரசும் இணைந்து தேசத்தை கூட்டுக்கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து ஒழித்துக்கட்டாமல் நமக்கு விடிவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here