அமெரிக்க, ரசிய அரசுகளின் உலக மேலாதிக்க வெறிக்கு உக்ரைன் மக்கள் பலிகிடா!

இந்தியா இரசியாவிடம் எரிபொருள் 1 சதவிகிதம்தான் வாங்குகிறது‌ எனினும் இராணுவ தளவாடங்களுக்கு பெரிதும் ரசியாவையே சார்ந்திருக்கிறது. அமெரிக்க அடிவருடி மோடியோ செய்வதறியாமல் பழைய நிலையையே தொடர்கிறார்.

அமெரிக்க, ரசிய அரசுகளின் உலக மேலாதிக்க வெறிக்கு உக்ரைன் மக்கள் பலிகிடா!

புதிய ஜனநாயகம்
மே இதழ்

டந்த பிப்ரவரி 24ந்தேதி தொடங்கி இரு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது ரசியா – உக்ரைன் போர். இந்த போரின் காரணமாக 50 லட்சத்திற்கு மேற்பட்ட உக்ரைனிய மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்; உக்ரைன் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது.
ரசியா இந்த தாக்குதலின் தொடக்கத்தில் மூன்று பிரச்சினைகளை முன்வைத்தே தொடங்கியது. 1.நேட்டோவில் உக்ரைனை இணைக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும், 2.டான்பாஸ் பகுதியில் தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பது, 3.உக்ரைனில் வளர்ந்துள்ள நியோ-நாஜிக்களைக் கட்டுப்படுத்துவது போன்ற காரணங்களை முன் வைத்து போரை துவங்கி நடத்தி வருகிறது.

1990களில் சோவியத் யூனியன் பல்வேறு நாடுகளாக சிதறுண்ட பிறகு, சோவியத் யூனியன் என்ற விருப்ப பூர்வமான ஒன்றியத்தை, ’மாருசியர்களின்’ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தற்போதைய ரசியாவின் அதிபரான விளாதிமீர் புதின் தான் பதவிக்கு வந்த 1999 முதலே தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

1990-களில் சோவியத் யூனியன் தற்காலிகமாக உலக மேலாதிக்கப் போட்டியில் இருந்து பின்னடைவை சந்தித்தது. உலகிலேயே எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தில் முதலிடத்தில் உள்ள ரசியா தனது பொருளாதாரத்தை எண்ணெய் ஏற்றுமதியின் மூலமும், இரண்டாம் உலகப்போரின் போது தேங்கிக்கிடந்த வெடிமருந்துகளை உலக நாடுகளுக்கு விற்பனை செய்ததன் மூலமும் தான் பெற்ற கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு சிறிது சிறிதாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வருகிறது.
இந்த புதின் காலத்தில் தான் ரசியா தன்னிடமிருந்து பிரிந்து போன 14 குடியரசுகளை உள்ளடக்கி 21 குடியரசுகளையும், 46 பிராந்தியங்களையும் கிரெம்ளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்த நாடுகளை முழுமையாக தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ரசியா கடந்த 1999 முதலே முயற்சி செய்து வருகிறது.

தற்போது அதிபராக உள்ள விளாதிமிர் புடின் இயல்பிலேயே ஒரு பாசிச சர்வாதிகாரி இந்தியாவில் உள்ள மோடி, அமெரிக்காவின் டிரம்ப் ஆகியவர்களுடன் எப்போதும் நெருக்கமான உறவுகளை மேற்கொள்பவர்.

நேட்டோ கூட்டமைப்பில் முன்னாள் சோவியத் நாடுகள் பலவும் இணைந்து உள்ள நிலையில் தற்போது சோவியத் ஒன்றியத்தில் ரசியாவிற்கு அடுத்து பலமான நாடான உக்ரைன் இணைவது ரசியாவினால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. ஏற்கனவே உக்ரைன் மீது பல முறை இராணுவ தாக்குதலை ரசியா நடத்தியுள்ளது.

நேட்டோ விரிவாக்கம் : ரசியா – உக்ரைன் போருக்கான அடிகொள்ளி
நேட்டோ என்கிற வட அட்லாண்டிய ஒப்பந்த அமைப்பு 1949 ஆம் ஆண்டு‌ இரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டத்தில் சோவியத் ரசியாவுக்கு எதிராக கட்டப்பட்டது. நேட்டோ அமைப்பு அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதன் முதன்மை நோக்கம் – “சோவியத் அபாயத்தை” கட்டுப்படுத்துவதே ஆகும். 1991 யில் ரசிய ஒன்றியம் முற்றிலும் சிதறிவிட்ட பிறகு அமெரிக்கா தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிறுவவதற்கான அமைப்பாக பயன்படுத்தி வந்துள்ளது. ரசிய ஒன்றியம் முற்றிலும் சிதறிய போது நடந்த அமெரிக்க- ரசிய பேச்சுவார்த்தையில் நேட்டோ அமைப்பில் ரசியாவில் இருந்து பிரிந்த நாடுகளை இணைக்க மாட்டோம் என உறுதியளித்தது அமெரிக்கா. ஆனால் அதன் பிறகு 15 நாடுகளை நேட்டோ அமைப்பில் இணைத்துள்ளது. தற்போது நேட்டோ நாடுகளின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. ரசியாவிலிருந்து பிரிந்த நாடுகளை நேட்டோவில் இணைப்பது தனது நாட்டிற்கான அச்சுறுத்தலாக பார்க்கிறது ரசியா. அந்த அடிப்படையில் உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் முயற்சியை கடுமையாக எதிர்த்து வருகிறது ரசியா.

இந்த முயற்சிகள் தொடங்கும் போதே ரசியா நிச்சயம் உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கும் என்பதை நேட்டோ நாடுகளும் உக்ரைன் அதிபரும் நன்கு அறிவர். அதன் காரணத்தாலேயே உக்ரைன் இராணுவத்தை நவீனமயமாக்குவது, விரிவுபடுத்துவது ஆகிய வேலைகளில் 2019 யில் தொடங்கி ஈடுபட்டு வந்துள்ளனர். அத்தகையதொரு தயாரிப்பு இல்லாமல் ரசிய தாக்குதலை உக்ரைன் இவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடிந்திருக்காது.

இந்த போர் உக்ரைன் மக்களை மட்டும் பாதிக்கவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரசியா மீது விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக ரசிய மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடைகள் இருப்பினும், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் தேவைக்கு ரசியாவையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. இது ரசியாவின் பொருளாதாரம் முற்றிலும் சரிவதிலிருந்து தடுத்துள்ளது. இன்னொருபுறம் ரசியாவின் மீதான பொருளாதார தடை இருமுனை கத்தியாக ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

இந்த அபாயத்தை கணக்கில் கொண்டே ஐரோப்பிய நாடுகள் சற்று அடக்கி வாசிக்கின்றன. ஆனால், அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் தேவைக்கு ரசியாவை சார்ந்திருப்பதை நிறுத்த வேண்டும் என்கிறது அமெரிக்கா. அதன்மூலம் ஐரோப்பிய நாடுகளை எரிபொருள் தேவைக்கு அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப் பார்க்கிறது. அதே அணுகுமுறையையே இந்தியாவிடமும் கடைபிடிக்க முயற்சிக்கிறது. இந்தியா இரசியாவிடம் எரிபொருள் 1 சதவிகிதம்தான் வாங்குகிறது‌ எனினும் இராணுவ தளவாடங்களுக்கு பெரிதும் ரசியாவையே சார்ந்திருக்கிறது. அமெரிக்க அடிவருடி மோடியோ செய்வதறியாமல் பழைய நிலையையே தொடர்கிறார்.

ரஷ்ய அதிபர் புதியனுடன் மோடி

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28 அன்று ஐநா பொது செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் உக்ரைன் நாட்டுக்கு சென்றிருந்த போது கீவ் நகரின் மீதான தாக்குதலை மேலும் அதிகப்படுத்தியது ரசியா. ஐநாவில் ரசியாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அவர் ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த தாக்குதலை நிகழ்த்தியது ரசியா.

மற்றொரு புறம் இந்த போரின் மூலகர்த்தாவான அமெரிக்கா. அதில் 2.8 பில்லியன் டாலர் நிதி 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கியுள்ளது. அந்த ஆண்டு தான் ரசியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே முதல் மின்ஸ்க் ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உக்ரைனுக்கு அமெரிக்கா செய்யும் இராணுவ ரீதியிலான உதவிகள் அனைத்தும் உக்ரைனை ரசியாவிற்கு எதிரான போர்முனையாக பயன்படுத்தவதற்கான வெகுமதிதான். 1991 ஆம் ஆண்டு ரசிய ஒன்றியம் வீழ்ந்த போது தனது நேட்டோ அமைப்பை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தமாட்டேன் என வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கு முன், 1991 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இராணுவ ரீதியிலான உதவியாக மட்டும் 6.2 பில்லியன் டாலர் நிதியை வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் 11 ந்தேதி “நாங்கள் உக்ரைனில் ரசியாவுக்கு எதிரான போரில் ஈடுபட மாட்டோம். ரசியாவுக்கும் நேட்டோவுக்குமான நேரடி போர் என்பது மூன்றாம் உலகப் போர் ஆகும். அதனை தவிர்க்கவே நாங்கள் முயல்கிறோம்.” என்று பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன். அதே நேரம் ரசியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவ 33 பில்லியன் டாலர் அதாவது ஏறத்தாழ 2.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கவும், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அமெரிக்க அரசு LEND OR LEASE திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்துள்ளது அமெரிக்க அரசு. மற்ற நேட்டோ நாடுகளும் இராணுவ தளவாடங்களும் நிதியும் வழங்குவதன் மூலம் இந்த போரை மேலும் வளர்த்தெடுக்கின்றனர்.

LEND OR LEASE திட்டம் என்பது ஹிட்லர் படைக்கு எதிராக போர் புரிய ஆயுத பலமின்றி இருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு தனது நாட்டின் இராணுவ தளவாடங்களை பயன்படுத்துவதற்கு கொடுத்தத் திட்டம்; அமெரிக்கா நேரடியாக இரண்டாம் உலகப்போரில் பங்கெடுக்காத போது கொண்டுவந்த திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ரசியாவுக்கு எதிரான தனது போரை உக்ரைன் உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கொண்டு ஒரு Proxy war ஆக அமெரிக்கா நடத்த முயல்வது தெளிவாகிறது.
உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கும் போது அதனை “ஒரு சிறப்பு நடவடிக்கை” என்று தொடங்கிய தாக்குதலை அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலை காட்டி தாக்குதல் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக செய்து வருகிறது.

“தற்போது நேட்டோவில் இணையும் முடிவைக் கைவிடுகிறோம், ஆனால் மேற்கு ஐரோப்பா நாடுகள் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் முன்மொழிதலை நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால், இந்த முன்மொழிதலை நேட்டோவை புறவாசல் வழியாக நுழைப்பது என்று நிராகரித்துவிட்டது ரசியா. ஒருபக்கம், ரசியாவை எதிர்த்து நிற்பதன் மூலம் அந்நிய நாட்டிடமிருந்து இருந்து நாட்டை காப்பதாக கூறிக்கொண்டே நேட்டோ நாடுகளுக்கு உக்ரைனை‌ திறந்துவிட்டிருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
மறுபுறம் ரசியாவுக்கு எதிரான போரில் ”நேட்டோ நாடுகள் கூடுதலாக உதவ வேண்டும்” என்றும் கோரி இரட்டை வேடம் போடுகிறார் உக்ரைன் அதிபர் வோலடிமிர் ஜெலன்ஸ்கி. இந்த போர் ஒரு முடிவிலா திரிசங்கு நிலையை அடைந்து விட்டது. நேட்டோவோ, ரசியாவோ தற்போதைக்கு பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை.
அமெரிக்க. ரசிய ஏகாதிபத்தியங்களிடையேயான இந்த போரில், உக்ரைன் அதிபரை உடனடியாக அந்த நாட்டு மக்கள் தூக்கி எறிவதும், நேட்டோவுடனான உறவை துண்டிப்பதும், ரசியாவுடன் போர்‌நிறுத்த நடவடிக்கைகளுக்கு ‌போவது ஒரு புறமும், இழந்த உலக மேலாதிக்க போட்டிக்கு தான் தயாராகி விட்டதாக கொக்கரிக்கும் ரசியாவை உடனே உக்ரனை விட்டு வெளியேற வேண்டும் என்று பிற‌நாடுகள் ரசியாவை நிர்ப்பந்தம் செய்வதுமே தற்போதைக்கு போரை ஒயச்செய்யும்.

ஏகாதிபத்தியங்கள் இருக்கும் வரை போரற்ற, சமாதானமான, அமைதியான உலகமிருக்க முடியாது என்பதை உக்ரைன், ரசிய மக்கள் விலை கொடுத்து பெற்று வருகிறார்கள்.

பைசல் அப்துல்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here