சாவர்க்கரை தியாகி எனக்கூறுவது உண்மையான தியாகிகளை மீண்டுமொரு முறை‌ கொல்வதற்கு சமம்!

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதியன்று ‘மதச்சார்பற்ற, ஜனநாயக’ நாடான இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை, ‘ஆசாதிகா அம்ரித் மகோத்சவம்’ என்ற கோஷத்தோடு கொண்டாடியது. இதில் வருத்தமும், அதிர்ச்சியும் ஊட்டக்கூடிய வகையில் சாவர்க்கரை சுதந்திரத்திற்காக தமது இன்னுயிரை ஈந்த தியாகிகள் உடன் வைத்து புனிதரென பிரகடனம் செய்து, வழக்கமாக செங்கோட்டையில் பிரதமர்கள் ஆற்றும் சுதந்திர தின உரையில்,  மோடி  குறிப்பிட்டு ஆற்றிய உரை என்பது வெட்கக்கேடானது.!

தனது உரையில் நேதாஜியுடனும், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருடனும் இணைந்து சாவர்க்கரும் தமது வாழ்நாளில் இந்த தேசத்தின் நலனுக்காகவே முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் என்றார் மோடி.

உண்மையில் இந்த தேசம் மங்கள்பாண்டவுக்கும், தாந்தியா தோபேவுக்கும், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்பகுல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில் போன்ற எண்ணிலடங்கா புரட்சியாளர்களுக்கும், பேகம் ஹஸ்ரத் மஹல், துர்காபாய், ஜான்சிராணி, லட்சுமிபாய், வேலு நாச்சியார் போன்ற வீரமங்கைகளுக்கும் நன்றி கடன்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் ஆங்கிலேய ஆட்சியினை தகர்த்து இந்த நாளை நமக்கு அளித்ததற்காக!


இதையும் படியுங்கள்: சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது || நூல் அறிமுகம்


மேலே குறிப்பிட்ட தியாகிகளுடன் சாவர்க்கரை இணைத்து சமமாக பேசியது என்பது தனது பச்சை பொய்யை இரண்டாம் முறையாக நிறுவ முயன்றது மட்டுமல்ல. உண்மையான இந்த தியாகிகளை, அவர்களது செயலை! குறைத்து கூறும் யுத்தி ஆகும். தனது உரையில், சாவர்க்கர் தனது முழு வாழ்வையும் தேசத்திற்காக அர்ப்பணித்தவர் என்பது அடிப்படை ஆதாரமற்ற பொய் மட்டுமல்ல! உண்மையான தியாகிகளை கேவலப்படுத்தும் செயல் ஆகும்!

சாவர்க்கர் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தவரா? இல்லையா? என்பதை அவரது எழுத்துக்கள் மூலமும் இந்து மகாசபையின் ஆவணக் காப்பகத்தில் உள்ள அவரது செயல்பாடுகளின் பதிவுகளின் மூலமும் ஒப்பிட்டு காணலாம்.

இந்திய தேசத்தில் இருந்து இந்து தேசியத்தை நோக்கிய சாவர்க்கரின் மாற்றம்.

சாவர்க்கர் தனது முதல் சுதந்திர போர் குறித்து 1907 ஆண்டு எழுதிய “இந்திய சுதந்திரப் போர் 1857 “என்னும் நூலில் ‘இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினார்கள்’ என்றுதான் எழுதியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்களை குறைவாக மதிப்பிட்டு விட்டனர். அவர்கள் இந்துவாக இருப்பினும், முஸ்லிமாக இருப்பினும் இந்தியாவின் பிள்ளைகளே என்றார். அவர்களின் பெயர்களில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், அவர்கள் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்றார். ஒரே தாய்க்கு பிறந்த இரட்டை சகோதரிகள் இந்துவும் முஸ்லீமும் என்றார். 1857 புரட்சியை நடத்திய அகமது ஷா வை புகழ்ந்தார். அருமையாகவும் புத்திசாலித்தனத்துடனும் இந்திய சுதந்திரத்திற்கான ஜிகாத் போருக்கான வலையை ஒவ்வொரு மூலையிலும் நெய்திருக்கிறார் என்றார்.

என்றாலும் ‘செல்லுலர் ஜெயில்’ என்றழைக்கப்படும் அந்தமான் சிறையின் வாசம் இந்தியா பற்றிய அவரது கருத்தில் அடிப்படை மாற்றத்தினை கொண்டுவந்தது. அவர் சிறையிலிருந்து வெளிவரும் போது ஒரே கடவுள், ஒரே தேசம், ஒரே கொள்கை, ஒரே இனம், ஒரே வாழ்க்கை, ஒரே மொழி என்ற மந்திரத்தை கூறினார். அதுவே பின்பு இந்துத்துவவாக மாற்றம் அடைந்தது என்கிறார் அவரது முதல் சுயசரிதை ஆசிரியரான தனஞ்செய் கீர்.


இதையும் படியுங்கள்தனக்குத் தானே ;வீரன் ; பட்டம் கொடுத்துக் கொண்ட தேச விரோத கோழையின் வரலாறு


அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்பதை மறுப்பதற்கும் இஸ்லாமிய வெறுப்பாளராக மாறுவதற்கும் காரணம் சிறையில் இருந்த பெரும்பாலான சிறை வார்டன்கள் முஸ்லிம்களாகவும் அவர்களால் துன்புறுத்தப்பட்ட கைதிகள் இந்துக்களாகவும் இருந்ததும் காரணம் எனப்படுகிறது.

ஆனால் சாவர்க்கர் மட்டுமே சிறையில் துன்புறுத்தப்பட்டதை இந்து – முஸ்லீம் பிரச்சனை என்ற கண்ணோட்டத்தில் சித்தரித்தார் என்பது சுவாரஸ்யமான உண்மை ஆகும். சுதந்திரப் போராட்ட வீரரான பரீந்தர் குமார் கோஸ் என்பவர் அதே செல்லுலர் சிறையில் முஸ்லிம்களும் அவ்வாறு துன்புறுத்தப்பட்டதை தனது சிறை வாழ்க்கை பற்றிய நூலில் பதிவு செய்துள்ளார்.

அதேசமயம், பல முஸ்லிம் வார்டன்கள் இரக்க மனதுடன் ரகசியமாக இறைச்சி உணவுகளை கொண்டு வந்து கைதிகளுக்கு மத பேதமின்றி கொடுத்துள்ளனர். பரீன் என்னும் நானே அதற்கு சான்று. மிகவும் சுவையான அந்த உணவுகளை ஒரு ஆர்வத்தில் நான் உண்டேன் என்று மேலும் விளக்குகிறார்.

உண்மையில் தேசியவாதத்தின் மீதான உறுதிப்பாட்டை கைவிட்டதை நியாயப்படுத்த சாவர்க்கர் முஸ்லீம் சிறை அதிகாரிகளின் துன்புறுத்தல்களை பயன்படுத்தினார். இந்துத்துவா படைகளால் உண்மையான பாரதீய என்று அழைக்கப்படும் வரலாற்று ஆசிரியரான R.C. மஜும்தார் அந்தமான் சிறை குறித்து தனது முக்கியமான நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். அந்தமான் சிறையானது இந்த புரட்சிகர வீரர்களின் மனதில் ஆங்கிலேய ஆட்சியைப் பற்றியும் அதனை ரகசிய புரட்சிகரமான செயல்கள் மூலம் அகற்றுவது குறித்த அவர்களின் மனநிலையில், ஒரு தீவிர மாற்றத்தையும் ஏற்படுத்தியது. அது எத்தகைய மாற்றம் என்பது சிறை வாழ்க்கைக்கு பிறகான அவர்களது செயல்களின் மூலம் நாம் எளிதில் அறியலாம்.

தேசப் பிரிவினைக்கு ஜின்னாவுக்கே வழிகாட்டியவர் சாவர்க்கர்.

முஸ்லீம் லீக்கின் தலைவரான முகமது அலி ஜின்னா தனது இரு தேச கோட்பாட்டினை 1940 ஆம் ஆண்டு தான் முதன் முறையாக அறிவித்தார். ஆனால் அதற்கு வெகு காலத்துக்கு முன்பே சாவர்க்கர் இரு தேசங்கள் வேண்டும், அதுவே சரியானது என்றார். இந்தியா என்பது இந்துக்களின் தாயகம், என்றும் முஸ்லிம்கள் இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது! என்றும் 1923ஆம் ஆண்டு எழுதிய ”இந்துத்துவா” என்ற நூலில் தெரிவிக்கிறார்.


இதையும் படியுங்கள்: காந்தி படுகொலை: திகாம்பர் பாட்கேயின் ஒப்புதல் வாக்குமூலம்


சாவர்க்கர் 1937 ஆம் ஆண்டு இந்து மகாசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட, அதே ஆண்டில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 19வது இந்துமகா சபாவில் ஆற்றிய உரையின் போது இப்படி குறிப்பிடுகிறார். அனைவரும் நினைப்பது போல இந்தியா என்பது ஒன்றுபட்ட ஒரே தேசம் அல்ல. இந்துக்களை விரோதம் கொண்ட அருகருகே வசிக்கும் இரண்டு நாடுகள் உள்ளன ;ஒன்று இந்துகளுடைய இந்தியா மற்றொன்று முஸ்லிம்களுக்கான இந்தியா.

ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிராக அரசுக்கு ஆதரவு:

1942ஆம் ஆண்டு செய் அல்லது செத்துமடி என்னும் கோஷத்துடன் அமல்படுத்தப்பட்ட புகழ்பெற்ற காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின்போது பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டது. ஒரே நாளில் 1,00,000 பேர் கைது செய்யப்பட்டனர். காந்தி உள்பட அனைத்து தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. இத்தனை களேபரங்களுக்கும், மத்தியில் கான்பூரில் நடைபெற்ற 24 வது இந்து மகாசபா கூட்டத்தில் பேசியவர், சாவர்க்கர்.

பிரிட்டிஷ் அரசுக்கு இந்து மகாசபையின் நிபந்தனையற்ற முழு ஆதரவை தெரிவித்தார். அவர் இந்து மகாசபையின் இந்த அணுகுமுறையை இவ்வாறு கோடிட்டு காட்டினார்;. இந்து மகாசபையில், அனைத்துவகை அரசியல் செயல்பாட்டாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும். இந்து மகாசபையில்  உள்ள அனைத்து வகை அரசியல் செயல்பாட்டாளர்களும் பதிலளிக்கக் கூடிய அதாவது ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிரான அரசின் அடக்குமுறை போன்ற பதிவுகளை இந்த சபை தரும். அதாவது ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிராக தேவைப்பட்டால் ஆயுதங்கள் மூலம் கூட பதிலளிக்கலாம் என்பதே அது!

முஸ்லீம் லீக்குடன் ஆட்சி அதிகாரத்திற்காக கைகோர்த்த சாவர்க்கார்.

எந்த முஸ்லிம்களை எதிர்த்து வந்தாரோ அதே முஸ்லிம் லீக் உடன் கூட்டணி சேர்ந்து வங்காளத்திலும் ஒருங்கிணைந்த இந்தியாவின் பழைய இந்து மாகாணத்திலும் முஸ்லிம் லீக் உடன் கூட்டணி ஆட்சியை நடத்த உதவினார். இதுகுறித்து கூறிய சாவக்கர்,” இந்துமகா சபை , நடைமுறை அரசியலுக்கு ஏற்ப நியாயமான சமரசங்களை ஏற்றுக்கொள்ளும்! அப்போதுதான் நமது இயக்கம் வளர முடியும் !என்பது தெளிவு” என்றார்.

வங்காளத்தில் காங்கிரசால் கூட கட்டுப்படுத்த முடியாத முரட்டுக் தலைவரான பஸ்லுல் ஹக் தலைமையில் இந்து மகாசபை தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜி அரசில் அவருக்கு அடுத்த இடத்தை ஓராண்டுக்கு வகித்தார். இவை அனைத்தும் ஒத்துழையாமை இயக்கத்தை நீர்த்துப்போக செய்த செயல்களே ஆகும்.

நேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கர்:

இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் ஆங்கிலேயர்களை வீழ்த்த வேண்டும் என்ற கொள்கையுடன் ஜப்பானியர்களின் உதவியுடன் வடகிழக்கின் வழியே நேதாஜி படை நடத்தி வரும் போது, இதே சாவர்க்கர் “போரின்போது நாட்டை காக்க வேண்டியது நமது கடமை. இந்து மகாசபை மூலம் அனைவரும் அரசின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் “என்ற முழக்கத்துடன் நமது இந்துத்துவா கொள்கை நலனுக்காக செயல்படும் அரசின் கரங்களை வலுப்படுத்துவோம். விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவத்தின் எந்த பிரிவில் ஆவது சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று 1941 ஆம் ஆண்டு பாகல்பூரில் நடந்த 23ஆம் இந்து மகாசபா கூட்டத்தில் முழங்கியவர் சாவர்க்கர்.

“ஜப்பானிய படைகள் வட கிழக்கில் குறிப்பாக வங்காளம் மற்றும் அசாம் மாகாணங்களின் வழியாக எந்த நேரமும் நுழையலாம் எனவே ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஏதாவது ஒரு படைப் பிரிவில் ஆயுதங்களோடு உடனே சேரவேண்டும்” என்று கூறினார். அப்படி அவர் ஜப்பானிய எதிரிகள் என்று குறிப்பிட்டது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தையே!!. அப்படி அவர்களின் மகாசபை குறிப்பின் படி அவரது வேண்டுகோளுக்கிணங்க படையில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு லட்சம்!.

கருணை மனுக்கள்:

வீர சாவர்க்கர் 1911, 1913, 1914, 1918 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளில் என 5 முறை கருணை மனுக்களை சமர்ப்பித்தார். இவை வீரசிவாஜியின் சீடராக முகலாய அரசுகளை ஏமாற்ற கையாண்ட தந்திரம் போன்றது என்று அவர்கள் கூறுவது எத்தனை பொய் என்பதை நவம்பர் 14,1913 ஆம் தேதியிட்ட கருணை மனுவை ஆராய்ந்தால் அதுவே கூறும். அது இவ்வாறு கூறுகிறது.

கருணை வடிவான அரசாங்கம் கருணையுடன் என்னை விடுவிக்கவேண்டும். நான் அரசியல் அமைப்புக்கும் அதற்கு முதன்மையான ஆங்கில அரசாங்கத்திற்கும் உறுதியான விசுவாசியாக இருப்பேன். ஒரு காலத்தில் என்னை தங்கள் வழிகாட்டியாக கருதி தவறாக வழி நடத்தப்பட்ட இளைஞர்கள் அனைவரையும் திரும்ப கொண்டு வருவேன். அதாவது அரசுக்கு ஆதரவாளர்களாக! நான் நீங்கள் விரும்பும் எந்த நிலையிலும் அரசாங்கத்திற்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன் .எனவே மாட்சியமை தாங்கிய தங்களிடம், ஊதாரித்தனமான மகன், அனைத்தையும் இழந்து தன் பெற்றோரிடம் திரும்புதல் போல அரசாங்கத்தின் கதவுகளை தட்டுகிறேன். 1920 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதியிட்ட தனது இன்னொரு மனுவில் எனது ஆரம்பகால அற்புதமான வாழ்க்கை சிதைந்து விட்டது. இந்த சிறைவாசம் வலி நிறைந்ததும் வருத்தம் நிறைந்ததாகவும் ஆகிவிட்டது ஒரு விடுதலை என் மனதை தொட்டு புதியதொரு பிறப்பை வழங்கும் எனவே கருணையோடு எதிர்காலத்தில் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் தங்களுக்கு பயன் உள்ளவனாக இருப்பேன் என்று  உறுதி கூறுகிறேன் என இறைஞ்சினார். ஆங்கிலேயருக்கு கருணை மனு எழுதியதில் எந்த தவறும் இல்லை. உண்மையில் அது கைதிகளுக்கு கிடைத்த சட்ட உரிமை ஆகும். ஆனால் சாவர்க்கர், பரீன், காஞ்சிலால் மற்றும் நந்தகோபாலா ஆகியோர் மட்டுமே கருணை மனுக்களை அளித்தனர். எனினும் சாவர்க்கர் மற்றும் பரீன் மட்டுமே தங்கள் கடந்தகால புரட்சிகர செயலுக்கு மன்னிப்பு கோரினர்.

சாவர்க்கர் அந்தமான் சிறையில் 1911 ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி இரட்டை ஆயுள் தண்டனைக்காக அடைக்கப்பட்டார். எனினும் 1921 ஆம் ஆண்டு 9 வருடங்கள் 10 மாத சிறைத் தண்டனைக்கு பிறகு இந்தியாவிற்கு மாற்றப்பட்டார். கடைசியாக 1924-ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நிபந்தனைகளுடன் தனது சகோதரனுடன் விடுதலை செய்யப்பட்டார்.

சாவர்க்கர் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் தீண்டாமைக்கு எதிரான அறப்போராளியாகவும் சித்தரிக்கப்படுகிறார். இக்கூற்றுக்களை அவரின் நம்பிக்கைகள் மற்றும் இந்து மகாசபையின் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள செயல்களுடன் ஒப்பிட்டு பார்ப்போமானால் அவர் மனுவை சட்டங்களை வழங்கியவர் ஆக கூறுகிறார். மேலும் இந்துக்களாகிய நாம் வெல்ல முடியாத இனம் எனவும், சட்டங்களை வழங்கிய மனுவின் காலத்தைப் போல் மீண்டும் அவை நிரூபிக்கப்பட வேண்டும் என்கிறார். மனுஸ்மிருதி என்பது வேதங்களுக்கு அடுத்தபடியாக புனிதமானதும் வழிபடக்கூடியதும் என்றார்.

சாவர்க்கர் இந்து அரசர்களை தூக்கிப் பிடிப்பவராகவும் அவர்களது ஆட்சி என்பது பழைய இந்து அரசர்களின் வழித்தோன்றல்களுடைய வீரமிக்க இந்துக்களுக்கான ஆட்சி என்றும் வர்ணிக்கிறார். இந்த இந்து அரசர்கள் என்பவர்கள் ஆளும் ஆங்கிலேயே அரசுக்கு ஐந்தாம் தூணாக நின்று கட்டிக்காத்தவர்கள் தனது வெளிநாட்டு முதலாளிகளுக்கு மனிதர்களையும் பொருட்களையும் வாரி வழங்கியவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை.!!

இந்த இந்து அரசர்கள் ஆங்கிலேய அரசுக்கு சேவகம் செய்யும் கொடுமைகாரர்களாகவும் ஜனநாயக பூர்வமான எந்த செயலையும் அனுமதிக்காதவர்களாகவும் விளங்கினர். கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரமான குற்றங்களுடன் அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு எதிராக கொடூரமான தண்டனைகளை நிறைவேற்றுபவர்கள் ஆகவும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல்வேறு இடங்களில் இந்திய தேசியக் கொடியான மூவர்ண கொடியை பறக்க விடுவதை கூட தடை செய்பவர்களாகவும் விளங்கினர் .இத்தகைய அரசர்கள் இந்தியாவை ஆள வேண்டும் என முழங்கினார்.

மைசூர் இந்து சமஸ்தானமாக இருந்த போது மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்த முனைந்த 26 பேர் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. சம்பவத்தின் சூட்டை தணிப்பதற்கு 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சிமோகாவில் நடைபெற்ற இந்து மகா சபையில் உரையாற்றிய சாவர்க்கர் நாம் இந்து மாநிலத்தின் இந்துத்துவ சக்திகளை ஒருங்கிணைந்து வலுப்படுத்துவதுடன் மகாராஜாவின் ராஜ்ஜியத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டும். இளவரசிக்கும் அரசுக்கும் இந்த நாசகார நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பளித்து மிகவும் விசுவாசமான தேசபக்தி ஆதரவை வழங்குவது இந்துக்களின் கடமை என்று முழங்கினார்.

சாவர்க்கர், இங்கிலாந்து ராணியிடம் இந்தியாவை ஒப்படைப்பதாக இருந்தால் நேபாள மன்னரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

சாவர்க்கரின் சுயசரிதை எழுதிய தனஞ்சை கீர் கான் கூற்றுப்படி ரத்தனகிரி மாவட்டத்தில் மேஜிஸ்திரேட்டிடம் 50 ரூபாயை ஓய்வூதியமாக பெற்றுக்கொண்டார் பின்னர் அது 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது என்று கூறுகிறார். மேற்கூறிய இந்துத்துவ ஆவணக் காப்பகத்தில் உள்ள வரலாற்று உண்மைகளை முற்றிலும் புறக்கணித்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதற்கு நேர் எதிரான ஒரு ஆளுமையை நினைவுச் சின்னமாக முன் நிறுத்துவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் ஒரு சோகமான செயலாகும்.

ஆக்கம்: ரகுவரன்

மூலம்: https://countercurrents.org/2022/08/pm-modi-idolizes-savarkar-second-killing-of-the-true-martyrs/PM Modi Idolizes Savarkar: Second Killing Of The True Martyrs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here