டந்த ஒரு மாதமாக ‘இலவசங்களுக்கு’ எதிராக மிகத்தீவிரமாக களமாடி வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V.ரமணாவின் பதவிக் காலம் வருகிற ஆகஸ்ட் 26 ந்தேதி முடிவுறப் போகிறது.

‘இலவசங்கள்’ கொடுப்பதன் வாயிலாக நாட்டு‌ மக்களின் வரிப்பணம் வீணாவதாக கவலைப்படும் N.V. ரமணா ‘இலவசங்கள்’ தொடர்பான வழக்கை மிக முக்கியத்துவம் கொடுத்து கையாள்கிறார். அந்த வழக்கை கொடுத்தவர் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஸ்வினி. அந்த பாஜககாரர் தொடுத்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்கும் தலைமை நீதிபதி N.V. ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் ஒன்றரை ஆண்டுகளாக இருக்கிறார். இந்த காலகட்டத்தில் 29 உரைகள் நிகழ்த்தியுள்ளார். அவற்றில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது குறித்து வாய்கிழிய பேசியுள்ளார். ஜனநாயகம், மக்கள் உரிமைகள் ஆகியவை குறித்து பெரும் அக்கறை உள்ளவராக காட்டிக்கொண்டார்.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் “அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு” விசாரித்து இருக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த 53 வழக்குகளை எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் விட்டு செல்கிறார்.

அதில் மிக முக்கியமான 6 வழக்குகளை பத்திரிக்கையாளர் சவுரவ் தாஸ் சுட்டிக்காட்டுகிறார்.

  • ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு- 1,116 நாட்களாக நிலுவையில் உள்ளது.

16 ஆகஸ்ட் 2019 அன்று முதல் விசாரணை நடந்த இந்த வழக்கில் கடைசியாக விசாரணை நடந்தது – 2 மார்ச் 2020 (30 மாதங்கள் ஆகிறது.) 25 ஏப்ரல் 2022 அன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரிய போது “பரிசீலிக்கிறோம்” எனக் கூறிவிட்டார் தலைமை நீதிபதி.

  • தேர்தல் பத்திரங்கள் எதிர்த்த வழக்கு – 1,817 நாட்களாக நிலுவையில் உள்ளது.

ஏப்ரல் 5, 2019 அன்று முதல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு கடைசியாக விசாரிக்கப்பட்டது – மார்ச் 29, 2020 (30 மாதங்களுக்கு முன்பாக.25 ஏப்ரல் 2022 அன்று இந்த வழக்கை விசாரிணைக்கு எடுக்கக் கோரிய போது “எடுத்துக் கொள்வோம்” எனக் கூறிவிட்டார் தலைமை நீதிபதி.)

இந்த தேர்தல் பத்திரங்களைக் கொண்டு இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில் மட்டும் பாஜக 10,000 கோடி ரூபாய்க்கு மேல் ‘நன்கொடை’ பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  •  UAPA சட்டத்திற்கு எதிரான வழக்கு: 1,105 நாட்களாக நிலுவையில் உள்ளது.

செப்டம்பர் 9, 2019 அன்று முதல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு அதற்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவேயில்லை -(35 மாதங்களாக.)

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட CAA வுக்கு எதிராக போராடிய JNU மாணவர் தலைவர் உமர் காலித், ஹத்ராஸ் பாலியல் வன்முறை – படுகொலை பிரச்சினை குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே, ரோனா‌ வில்சன்‌ உள்ளிட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். பாசிச மோடி அரசு தனக்கு எதிராக போராடுபவர்களை, கருத்து தெரிவிப்பவர்களை, உண்மையை பேசுபவர்களை UAPA எனும் கொடூர அடக்குமுறை சட்டத்தைக் கொண்டு ஒடுக்குகிறது. எந்த விசாரணையும் இன்றி எவரையும் “பயங்கரவாதி” என முத்திரை குத்தக் கூடிய வாய்ப்பை அளிக்கிறது இந்த சட்டம்.


இதையும் படியுங்கள்: சமூக செயற்பாட்டாளர் உமர் காலித்துக்கு பிணை மனு நிகாரிப்பு!


 

இந்த சட்டத்தை பாதுகாப்பதன்மூலம் அந்த அடக்குமுறையை நீடிக்கச் செய்கிறது உச்சநீதிமன்றம்.

கடந்த டிசம்பர் 9, 2021 தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா “படித்த இளைஞர்கள் சமூக எதார்த்தத்தில் இருந்து தள்ளி இருக்க முடியாது. தலைவர்களாக உதிக்க வேண்டும். அரசியல் உணர்வும், அறிவார்ந்த விவாதங்களும் தேசத்தை அரசியல் அமைப்புச் சட்டம் கனவு கண்ட திசையில் நகர்த்திச் செல்லும். “என்று கூறியுள்ளார்.

  • பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு எதிர்த்த வழக்கு:

மார்ச் 12, 2019 அன்று போடப்பட்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு கடைசியாக விசாரிக்கப்பட்டது –ஆகஸ்ட் 5, 2020 (24 மாதங்களுக்கு முன்பாக.)

இப்படி விசாரிக்கப்படாமல் நிலுவையில் போட்டதன்‌ மூலம் உயர்சாதி ‘ஏழை’களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.

  • குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: 988 நாட்களாக நிலுவையில் உள்ளது.

டிசம்பர் 18, 2019 அன்று முதல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு கடைசியாக விசாரிக்கப்பட்டது – ஜனவரி 20, 2020- (31 மாதங்களுக்கு முன்பாக. )

முஸ்லிம் மக்களை மட்டும்‌ இந்திய முஸ்லிம், பிற‌ நாட்டு முஸ்லிம் எனப் பிரிப்பதன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 14 அனைவருக்கும் (குடிமக்கள் அல்லாதவர்கள் உட்பட) உறுதிபடுத்தும் சமத்துவத்தை, நிராகரிக்கிறது இந்த சட்டத்திருத்தம். இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் போராடிய பலரும் சிறை வைக்கப்பட்டனர்.

  • கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை தீர்ப்புக்கு எதிரான வழக்கு: 189 நாட்களாக நிலுவையில் உள்ளது.

மார்ச் 15, 2022 அன்று தொடரப்பட்ட வழக்கு இதுவரை ஒருமுறைக்கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. கடந்த ஏப்ரல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரிய போது “இரண்டு நாட்களில்” எடுத்துக் கொள்வதாக கூறிய, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா இன்னும் இரண்டு நாட்களில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆகிவிடுவார். வழக்கு இன்னும் பல மாதங்களுக்கு விசாரணைக்காக காத்திருக்கும்.


இதையும் படியுங்கள்: ஹிஜாப் தடை: முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை பறிப்பு!


இவரே பெகாசஸ் உளவு பார்த்தது குறித்து நீதிமன்ற விசாரணை வேண்டும் எனக் கோரிய வழக்கை கண்டுகொள்ளாமல் இருப்பவர். இப்படிப்பட்ட முக்கியமான வழக்குகள் இழுத்தடிக்கப்படுவது கார்ப்பரேட்- காவி பாசிசத்திற்கு துணையாக உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் நிற்பதையே வெளிப்படுத்துகிறது.

இது தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா மீதான விமர்சனம் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இந்திய நீதித்துறையே எப்படி இயங்குகிறது என்பதை படம் போட்டு காட்டும் விவரங்கள் ஆகும்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுங்கச்சாவடி முதல் விமானப் பயணம் வரை எண்ணற்ற சலுகைகளை அனுபவிக்கக் கூடியவர்கள். அவை அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து வருபவை. மக்கள் வரிப்பணத்தை சம்பளமாகவும் சலுகைகளாகவும் பெற்றுக் கொண்டு மக்கள் உரிமைகள் தொடர்பான வழக்குகளை கிடப்பில் போடும் நீதிபதிகளின் சலுகைகளை யார் ரத்து செய்வது? கோடிக்கணக்கான ரூபாய் GST அளிக்கும் சாதாரண மக்களின் உணர்வுகளை பாதிக்கும் இதனை முடிவுக்கு கொண்டுவருவது எப்போது? கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் அங்கமாய் மாறி நிற்கும் இந்த கட்டமைப்பை தூக்கியெறிவதற்கான போராட்டங்களே அதற்கான விடை!

  • திருமுருகன்

ஆதாரம்:

https://article-14.com/post/lots-of-speeches-but-no-action-in-cases-of-national-importance-the-legacy-of-chief-justice-ramana-63058720be481

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here