ஜனவரி 30, 1948 அன்று இந்துத்துவா தீவிரவாதியான நாதுராம் விநாயக் கோட்ஸே டெல்லி பிர்லா மாளிகையில் தன் கைத்துப்பாக்கியால் காந்தியை சுட்டுக்கொன்றான். அவனுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோபால் விநாயக் கோட்ஸே, நாராயண் தத்தாத்ரேய ஆப்தே, சங்கர் கிஷ்டய்யா, தத்தாத்ரேய சதாசிவ பராச்சுரே, விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே, மதன்லால் காஷ்மீரிலால் பாவா, திகாம்பர் ராமச்சந்திர பட்கே, விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோர். கங்காதர் சகாராம் தண்டவதே, கங்காதர் ஜாதவ், சூர்யதேவ் ஷர்மா ஆகிய மூவர் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

கோட்ஸேயின் குடும்பம், கோபால் கோட்ஸே உட்பட ஒத்துக்கொண்ட உண்மை என்னவெனில், நாதுராம் கோட்ஸே எப்போதும் ஆர் எஸ் எஸ்சில் இருந்து விலகியது இல்லை என்பதே. பிரண்ட்லைன் 1994 இதழில் கோபால் கோட்ஸே பதிவு செய்தது: ஆர் எஸ் எஸ்சில் இருந்து விலகியதாக நாதுராம் கோட்ஸே நீதிமன்றத்தில் சொன்னான். ஏனெனில் காந்தி கொலைக்கு பின் கோல்வாக்கருக்கும் ஆர் எஸ் எஸ்ஸுக்கும் பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அவன் என்றும் ஆர் எஸ் எஸ்சில் இருந்து விலகியது இல்லை. நாங்கள் எல்லா சகோதரர்களும் ஆர் எஸ் எஸ்சில் இருந்தோம். எங்கள் வீட்டில் நாங்கள் வளர்ந்தோம் என்பதை விட ஆர் எஸ் எஸ்சில் நாங்கள் வளர்ந்தோம் என்பதே உண்மை. அதுவே எங்கள் குடும்பம்”. தன் சொந்த உறுப்பினர்களை கைகழுவிய ஆர் எஸ் எஸ்ஸை கோபால் கோட்சே கண்டித்துள்ளார். (ஆதாரம்: தி கேரவான், ஜனவரி 2020, திரேந்தர கே ஜா கட்டுரை). ஹிந்து மகாசபையின் மஹாராஷ்டிரா செயற்குழு, குற்றவாளிகளுக்கு உதவி செய்வதற்காக சட்ட உதவிக்குழு அமைத்து வழக்கு நிதிதிரட்டும் குழுவையும் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

காந்தி படுகொலை குறித்து விசாரணை செய்ய , கான்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆத்மசரண் ஐ.சி.எஸ். நியமிக்கப் பட்டார். டெல்லி செங்கோட்டையில் முதல் விசாரணை 27.5.1948 அன்று நடத்தப்பட்டது. தீர்ப்பு 1949 பிப்ரவரி 10 அன்று வழங்கப்பட்டது. குற்றவாளிகளில் திகாம்பர் பட்கே அப்ரூவர் ஆகி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முக்கிய பகுதி இது.

….. ……..

இனி பாட்கேயின் வாக்குமூலம்:

“பூனாவில் சாஸ்திர பந்தார் என்ற கடையை நடத்தி வந்தேன். ஆயுதங்கள், வெடி பொருட்கள் விற்பனை செய்தேன். 1940இல் ஹிந்து மகாசபை தலைமை நிர்வாகிகளுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த அமைப்பின் கூட்டங்களில் பங்கு பெற்று வந்தேன். அங்கே புத்தகங்கள், ஆயுதங்களை விற்பேன். சாவர்க்கரை 1944-45இல் சந்தித்தேன். கோட்ஸேவையும் ஆப்தேவையும் 1940-41 முதல் அறிவேன். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக கார்க்கரேவை அறிவேன்.

சாவர்க்கர் காந்தி கொலை குற்றவாளிகளுடன் இருக்கும் படம்

ஆப்தேவுக்கு பல முறை நான் ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளேன். 1947 ஜூலை ஆகஸ்ட்டில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் வாங்க என்னை முதல்முறையாக ஆப்தே சந்தித்தான். அப்போது கார்க்கரேயும் உடன் வந்தான். சில முக்கியமான நபர்களுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் தேவைப்படுகிறது என்று சொன்னான். குருதயாள் சிங்கிடம் இருந்து ஸ்டென் துப்பாக்கி ஒன்று வாங்கி ஆப்தே, கார்க்கரே இருவரிடமும் கொடுத்தேன். …. 1948 ஜனவரி 9 மாலை 6.30 மணிக்கு ஆப்தே என் கடைக்கு வந்தான். சரக்கை (ஆயுதங்கள், வெடிபொருட்களுக்கான சங்கேதச் சொல்) தயாராக வைத்து இருக்குமாறும், விரைவில் கார்க்கரே தன் சகாக்களுடன் வந்து சரக்கை சோதித்து பார்ப்பான் என்றும் சொன்னான். 8.30 மணி அளவில் கார்க்கரேயும் மூவரும் வந்தார்கள். அவர்கள் மதன்லால், ஓம் பிரகாஷ், சோப்ரா ஆகியோர்.

துணியால் சுற்றப்பட்ட வெடிகுண்டுகள் (கன் காட்டன்), கையெறி குண்டுகள், துப்பாக்கி ரவைகள், கைத்துப்பாக்கிகள், பியூஸ் போன்றவை அவை. அவற்றை சோதனை செய்தபின் சென்று விட்டார்கள். 10ஆம் தேதி ஹிந்து ராஷ்டிர தல் அலுவலகத்துக்கு ஆப்தே என்னை அழைத்து சென்றான். அலுவலகத்தில் நாதுராம் கோட்ஸே இருந்தான். இரண்டு கன் காட்டன், இரண்டு சுழல் துப்பாக்கிகள், ஐந்து கையெறி குண்டுகளை கொடுக்குமாறு ஆப்தே கூறினான். பாம்பேயில் இந்த சரக்குகளை தருவது என முடிவு செய்யப்பட்டது.

ஜனவரி 14 அன்று தாதரில் இருந்த ஹிந்து மகாசபை அலுவலகத்துக்கு என் பணியாளர் சங்கருடன் சென்றேன். அரை மணி நேரம் காத்திருந்த பின் மாடியில் இருந்து இறங்கும்போது ஆப்தே அங்கு வந்தான். “நல்லது, சரக்குகளை பத்திரமாக வைக்க இடம் வேண்டும், என்னுடன் வா” என்று என்று கூறியபடியே இறங்கும்போது மேலே ஏறி வந்து கொண்டு இருந்த கோட்ஸே மேல் மோதினோம்.

அனைவரும் வெளியே வந்து சிவாஜி பார்க்கில் இருந்த சாவர்க்கரின் வீட்டுக்கு சென்றோம். சரக்குகள் இருந்த பையை எடுத்துக்கொண்டு ஆப்தே உள்ளே சென்றான், என்னை வெளியே காத்திருக்குமாறு சொன்னான். கோட்ஸேயும் உள்ளே சென்றான். பத்து நிமிடங்களுக்கு பின் வெளியே வந்தார்கள். நாங்கள் மூவரும் மீண்டும் ஹிந்து மகாசபை அலுவலகம் சென்றோம். சங்கரையும் சேர்த்துக்கொண்டோம்.

சாவர்க்கர்

வாடகை காரில் புலேஸ்வரில் இருந்த தீக்சித் மஹாராஜ் வீட்டுக்கு சென்றோம். அவர் தூங்கிக்கொண்டு இருந்ததால் அவரது வேலையாள் இடம் சரக்கை கொடுத்து பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும் என்றும் மறுநாள் காலையில் நாங்கள் அதை வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிவிட்டு திரும்பினோம்.

ஜனவரி 15 அன்று சிவாஜி அச்சகத்துக்கு கோட்ஸே, ஆப்தே, நான், சங்கர் நால்வரும் சென்றோம். வெளியே கார்கரேயை சந்தித்தோம். சங்கரை வெளியே நிறுத்திவிட்டு நால்வரும் உள்ளே சென்றோம். உரிமையாளர் ஜோஷியை சந்திப்பது திட்டம். வெளி அறையில் என்னை உட்கார சொல்லிவிட்டு கோட்ஸே, கார்க்கரே, ஆப்தே மூவரும் ஜோஷியுடன் உள்ளே சென்றார்கள். ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார்கள். விடைபெற்று மீண்டும் ஹிந்து மகாசபை அலுவலகம் திரும்பினோம். மீண்டும் தீக்சித் மஹாராஜ் வீட்டுக்கு சென்று சரக்குகளை திரும்பி வாங்கினோம். சரக்குகளை ஆப்தேவுக்கு காட்டியபின் பை கார்கரேயிடம் ஒப்படைக்கப்பட்டது. ப்ராண்டியர் அல்லது பஞ்சாப் மெயில் ரயிலை பிடித்து மதன்லாலும் தானும் டெல்லி செல்வதாக ஆப்தே என்னிடம் சொன்னான்.

கார்க்கரேயும் மதன்லாலும் புறப்பட்டு சென்றபின் நாங்கள் மஹாராஜுடன் பேசிக்கொண்டு இருந்தோம். முக்கியமான ஒரு காரியத்தை நிறைவேற்ற டெல்லி செல்ல இருப்பதாகவும் ஓரிரண்டு சுழல் துப்பாக்கிகளை தருமாறும் மஹாராஜிடம் ஆப்தே வேண்டினான். ஒரு துப்பாக்கி கிடைத்தது. வெளியே வந்தோம். தன்னுடன் டெல்லிக்கு வர முடியுமா என்று ஆப்தே என்னிடம் கேட்டான். என்ன காரியம் என்று நான் கேட்டேன். காந்திஜி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, ஹசன் சுஹ்ரவர்த்தி ஆகியோரை தீர்த்துக்கட்ட சாவர்க்கர் முடிவு செய்து இருப்பதாகவும் இந்த வேலையை முடிக்கும் பொறுப்பை அவர் ஆப்தே, கோட்ஸே இருவருக்கும் கொடுத்து இருப்பதாகவும் சொன்னான். புனாவில் எனக்கு சில வேலைகள் உள்ளதால் புனா சென்று அங்கிருந்து நான் டெல்லிக்கு வருவேன் என்று சொன்னேன். தன் சகோதரர் கோபால் ஒரு துப்பாக்கி தருவதாக சொல்லி இருப்பதால் தானும் புனாவுக்கு போக உள்ளதாக கோட்ஸே கூறினான்.

ஜனவரி 16 அன்று புனாவில் சிறிய கைத்துப்பாக்கி ஒன்றை என்னிடம் தந்து அதற்குப் பதிலாக பெரிய சுழல் துப்பாக்கி ஒன்றை தரும்படி கேட்டான். நான்கு ரவைகள் அடங்கிய சுழல் துப்பாக்கி ஒன்றை கோட்ஸேவிடம் கொடுத்தேன்.

ஜனவரி 17 அன்று மாலை ஹிந்து மகாசபை அலுவலகத்தின் முன் மதன்லாலை சந்தித்தேன். ரயிலை தவற விட்டுவிட்டதால் திட்டமிட்டபடி டெல்லிக்கு செல்ல முடியவில்லை என்றான். அவனும் மதன்லாலும் இரவு ரயிலில் டெல்லி செல்வதாக சொன்னான்.

17ஆம் தேதி அதிகாலையில் விக்ட்டோரியா ரயில் நிலையத்தில் ஆப்தே, நாதுராம் கோட்ஸே இருவரையும் சந்தித்தேன். டெல்லி செல்லும் முன் கொஞ்சம் பணம் சேகரிக்கும் பொருட்டு, பாம்பே டையிங் தொழிற்சாலை முதலாளி சந்த்ரதாஸ் மேக்ஜி மதுரதாஸ் என்பவரை சந்தித்தோம். அங்கிருந்து புறப்பட்டு ஹிந்து மகா சபை அலுவலகம் சென்றோம். டெல்லிக்கு புறப்படும் முன் சாவர்க்கரை சந்தித்து அவரது இறுதி ஆசிகளை பெற வேண்டும் என கோட்ஸே கூறினான். சாவர்க்கர் சதனுக்கு சென்றோம். தரைத்தளத்தில் என்னை காத்திருக்க வைத்துவிட்டு இருவரும் மாடிக்கு சென்றனர். சுமார் பத்து நிமிடங்களுக்கு பிறகு சாவர்க்கருடன் வெளியே வந்தனர்.” “வெற்றியுடன் திரும்ப வருக” என்று கோட்ஸேவை சாவர்க்கர் ஆசிர்வதித்தார்.

“காந்தியின் நூறு வருடங்கள் முடிந்து விட்டது என்பதை தாத்யராவ் (சாவர்க்கர்) உணர்ந்து விட்டார். நம் திட்டம் வெற்றிகரமாக முடியும் என்பதில் ஐயமில்லை” என்று ஆப்தே கூறினான்.

இதன் பின் நாங்கள் மீண்டும் தீக்சித் மஹாராஜை சந்தித்தோம். சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றை அவர் காட்டினார், ஆனால் பணம் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொள்ளுமாறு அவர் பிடிவாதமாக இருந்ததால் நாங்கள் வெறும் கையுடன் திரும்பினோம்.

18ஆம் தேதி இரவு பஞ்சாப் மெயிலில் மறுநாள் டெல்லி வந்து சேர்ந்தோம். 19ஆம் தேதி காலை டெல்லி ஹிந்து மகாசபை அலுவலகத்துக்கு வந்தோம். அங்கே மதன்லால், கோபால் கோட்ஸே, ஆப்தே, காக்ர்கரே, நாதுராம் கோட்ஸே எல்லோரும் இருந்தோம்.

20ஆம் தேதி காலை ஆப்தே, நான், சங்கர் மூவரும் பிர்லா மாளிகைக்கு சென்றோம். காவலர் எங்களை நிறுத்தினார். காந்தியின் செயலாளரை சந்திக்க வந்துள்ளோம் என்று ஆப்தே கூறினான். ஒரு தாளில் எங்கள் பெயர், வந்த நோக்கம் ஆகியவற்றை எழுதி தருமாறு காவலர் கூறினார். அதன் பின் பிர்லா மாளிகையின் உள்ளே சென்றோம். வீட்டின் பின்புறம் இருந்த புல்வெளிக்கு சென்றோம். வழக்கமாக பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சென்றோம். காந்தியும் சுஹ்ரவர்த்தியும் உட்காரும் இடம் இதுதான் என்று ஒரு இடத்தை காட்டினான் ஆப்தே. அங்கே பார்வையில் பட்ட சிறிய ஜன்னல் வழியே சுட்டால் காந்தியையும் சுஹ்ரவர்த்தியையும் ஒரே தாக்குதலில் கொல்ல முடியும், குறைந்த பட்சம் ஒருவராவது சாக வேண்டும் என்று ஆப்தே கூறினான்.

மேடையின் மறுபக்கத்திற்கு சென்று இரண்டு இடங்களை சுட்டிக்காட்டி, இந்த இரண்டு இடங்களிலும் கன் காட்டன்களை வெடிப்போம், அப்போது ஏற்படும் குழப்பத்தை பயன்படுத்தி காந்தியை நாம் கொல்வோம் என்றான் ஆப்தே. பின்னர் சிறிய ஜன்னல் இருந்த அறையை காட்டி, ஒரு புகைப்பட செய்தியாளர் போல நடித்து நான் அந்த அறைக்குள் சென்று, துப்பாக்கியால் சுட வேண்டும், கூடவே கையெறி குண்டு ஒன்றை வீச வேண்டும் என்று அறிவுறுத்தினான். அறைக்குள் நாங்கள் செல்லவில்லை.

11.30 மணிக்கு ஹிந்து மகாசபை அலுவலகத்திற்கு திரும்பினோம். மகாசபையின் பின்னால் இருந்த காட்டில் எங்கள் ஆயுதங்களை சோதித்துப் பார்த்தோம். கோபால் கொண்டு வந்த துப்பாக்கி கோளாறு செய்ததால் சங்கரின் துப்பாக்கியில் நான்கு தோட்டாக்கள்கள் ஏற்றப்பட்டு பத்து கஜ தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது சுட்டுப்பரர்க்க, தோட்டா மரத்தின் அருகே கூட செல்லவில்லை. எனவே தன் துப்பாக்கியை பயன்படுத்த கோட்ஸே முடிவு செய்தான். மூன்று வனக்காவலர்கள் வந்து எங்களை விசாரித்தார்கள். அவர்கள் அருகில் வரும்முன் ஆயுதங்கள், வெடிபொருட்களை போர்வைக்கு அடியில் மறைத்து வைத்தோம். கோபால் அவர்களுடன் பஞ்சாபி மொழியில் உரையாடி சமாளித்து அனுப்பினான்.

நீதிமன்றத்தில் கோட்சே தனது சகாக்களுடன்

இதற்கு மேல் அங்கே இருப்பது ஆபத்து என்பதால், மகாசபை அலுவலகம் திரும்பினோம். அங்கிருந்து மெரினா ஹோட்டலுக்கு சென்றோம். ஹோட்டலின் குளியலறையில் எங்களது துப்பாக்கி, வெடி குண்டுகள் அனைத்தையும் தயார் செய்தோம். “பாட்கே, இதுதான் நம் கடைசி வாய்ப்பு இன்று எல்லாவற்றையும் முடித்து விட வேண்டும். அனைத்தும் திட்டமிட்டபடி உள்ளதை உறுதி செய்” என்று கோட்ஸே கூறினான்.

இறுதியாக ஆப்தே கட்டளைகளை பிறப்பித்தான்: “மதன்லால், நீ பிரார்த்தனை மேடையை ஒட்டியுள்ள பின் சுவரில் கன் காட்டன் குண்டை வெடிக்க வேண்டும். இந்த குண்டு வெடித்த உடன், பணியாளர்கள் குடியிருப்பின் பின் பக்க அறைக்குள் புகைப்படக்காரர் ஆக நடிக்கும் பாட்கே நுழைந்து பின் பக்கம் இருந்து காந்தியை சுட வேண்டும், கூடவே சிறிய ஜன்னல் வழியே ஒரு குண்டையும் காந்தி மீது வீச வேண்டும். மதன்லாலுக்கு நான் சமிக்ஞை செய்வேன், எனக்கு நாதுராம் சமிக்ஞை செய்வான். மற்றவர்கள் கூட்டத்துக்குள் மக்களுடன் கலந்து விடுவார்கள்.”

எங்கள் அனைவருக்கும் தனித்தனி பெயர்கள் கொடுக்கப்பட்டன. நாங்கள் எங்கள் தோற்றங்களையும் உடைகளையும் மாற்றிக்கொண்டோம்.

என்னுடைய சுழல் துப்பாக்கி, கையெறி குண்டு ஆகியவற்றை ஒரு கைப்பையில் வைத்தேன். ஹோட்டலில் இருந்து ஹிந்துமகாசபை சென்று அங்கிருந்து பிர்லா மாளிகை சென்றோம். மாளிகையின் பின்புறம் எங்கள் காரை நிறுத்தி இறங்கினோம். சற்று தூரத்தில் மதன்லால் வந்தான். நீ தயாரா என்று ஆப்தே மதன்லாலிடம் கேட்க, ‘நான் தயார். கன் காட்டன் குண்டை சுவரின் மீது வைத்துள்ளேன், திரியை பற்ற வைக்க வேண்டியதுதான் பாக்கி’ என்கிறான் மதன்லால்.

அப்போது அங்கே வந்த கார்க்கரே, “நீங்கள் தாமதிக்கின்றீர்கள். காந்தி ஏற்கனவே தன் இருக்கையில் அமர்ந்து விட்டார்” என்று ஆப்தேவிடம் சொல்கின்றான்.(காந்தி தன் பிரார்த்தனையில் குர் ஆன் வசனங்களை சொல்ல தொடங்கும்போது குண்டை வெடித்தால்தான் குர் ஆன் வாசிப்புக்கு எதிரான ஒரு செயலாக குண்டு வெடிப்பை மாற்ற முடியம், நீங்கள் ஏற்கனவே தாமதிக்கின்றீர்கள்” என்று கார்க்கரே திட்டமிட்டது இங்கே தெளிவாகின்றது).

அறையின் முன்னால் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து இருப்பதை நான் பார்த்தேன். எனில் சுட்ட பின் அந்த அறையில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த உடன் எனக்குள் பயம் வந்துவிட்டது. “அட, பயப்படாதே. நாம் எல்லோரும் தப்பிக்க வழி செய்துள்ளோம்”என்றான் கோட்சே. நாதுராம், ஆப்தே, கார்க்கரே மூவரும் என்னை அறைக்குள் தள்ளி காரியத்தை முடிக்க தூண்டினார்கள். “இந்த அறையினுள் இருந்து சுடுவதை விட நான் நேருக்குநேராக சுடுவது சரியாக இருக்கும், அவர் கொல்லப்படுவது உறுதியாகும்” என்றேன். ஆப்தேயும் கோட்ஸேயும் சம்மதித்தனர். (அதாவது, காந்தியை சுட்ட கொலையாளியாக பாட்கே பிடிபடுவான், குண்டு வீசிய பின் மதன்லால் பிடிபடுவான் அல்லது தப்பிக்க கூடும், ஆக மூளைச்சலவை செய்யப்பட்ட அகதியும் (மதன்லால், தேசப்பிரிவினைக்குபின் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் இருந்து அன்று இந்தியாவுக்குள் வந்த அகதி) கொலைகாரனும் ஆன பாட்கேயும் முக்கிய சதிகாரர்களுக்காக பழியை தங்கள் தலை மீது சுமப்பார்கள், மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள்). சங்கரை அழைத்துக்கொண்டு காரின் அருகே சென்றேன். பிறர் பின்கட்டில் இருந்தார்கள்.

காந்தியை சுட பயன்படுத்திய துப்பாக்கி

என்னுடையதும் சங்கருடையதும் ஆன துப்பாக்கிகளையம் கையெறி குண்டுகளையும் எடுத்துக்கொண்டு ஒரு துண்டில் சுற்றி கைப்பையில் வைத்து காரின் பின்னிருக்கையின் அடியில் வைத்தேன். நான் சைகை செய்யும்வரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சங்கரை எச்சரித்தேன். மீண்டும் இவர்களிடம் வந்தேன்.

என் சட்டையின் இருபக்கப்பைகளில் கை விட்டுக்கொண்டே வந்தேன், நான் துப்பாக்கியையும் குண்டையும் உள்ளே வைத்து இருப்பதாக அவர்கள் நம்புவதற்காக அவ்வாறு செய்தேன். நான் தயாராக இருப்பதாக ஆப்தேவிடமும் கோட்ஸேயிடமும் சொன்னேன். நீ தயாரா என்று மீண்டும் என்னை ஆப்தே கேட்டான். ஆம் என்று பதில் சொல்லிவிட்டு, சங்கரையும் அழைத்துக்கொண்டு பார்வையாளர்களுடன் முன் வரிசையில் அமர புறப்பட்டேன்.

ஆப்தே மதன்லாலின் முதுகில் கை வைத்து வா என்றான். சுவரில் குண்டு வைக்கப்பட்டு இருந்த இடத்தை நோக்கி மதன்லால் சென்றான். சங்கரும் நானும் பிரார்த்தனை மன்றத்துக்கு சென்றோம். கார்கரே. எங்கள் பின்னால் இருந்தான். காந்தியின் முன்னால் பெண்களும் குழந்தைகளுமாக சுமார் முப்பது பேர் இருப்பதை கண்டேன். காந்தியின் வலதுபக்கம் பதினைந்து அடி தூரத்தில் நான் இருந்தேன். என் வலதுபக்கம் சற்று தொலைவில் சங்கரும் கார்க்கரேயும் இருந்தார்கள். சுமார் மூன்று நிமிடங்கள் ஆன பின் பலத்த வெடிகுண்டு சத்தம் கேட்டது. புகை கிளம்பியது. வெடித்த இடத்தை நோக்கி நான்கைந்து பேர் ஓடி வந்தனர். காந்திஜி கரங்களை கூப்பியவாறு கூட்டத்தை அமைதிப்படுத்தினார். சில நிமிடங்கள் கழித்து மதன்லால் பிடிப்பட்டதை பார்த்தேன். கூட்டமோ அமைதியாக உட்கார்ந்து இருந்தது. பிர்லா மாளிகையின் வெளியே இருந்த போலீஸ் முகாமுக்கு மதன்லால் கொண்டு செல்லப்பட்டதை பார்த்தேன். முகாமில் இருந்து நான்கைந்து பேர், அவர்கள் போலீசார் என்று நினைக்கிறேன், என்னை நோக்கி வந்தார்கள். மதன்லாலை அழைத்து வந்து கூட்டாளிகளை காட்டிக்கொடுக்குமாறு சொல்வார்கள் என்று பயந்தேன். முகத்தை மூடிக்கொண்டு திரும்பினேன். சிறிது நேரம் கழித்து நான் நிமிர்ந்து பார்க்கும்போது மக்கள் கலைந்து செல்வதை பார்த்தேன். சங்கரும் நானும் கூட்டத்தில் கலந்து வெளியேறினோம்.

நேராக ஹிந்துமகாசபைக்கு வந்தோம். கோட்ஸே, ஆப்தே, கோபால் எவரையும் நான் பிரார்த்தனை மண்டபத்தில் பார்க்கவில்லை. காட்டுக்குள் சென்று கையெறி குண்டுகளை வீசி விடுமாறு சங்கரிடம் சொன்னேன். என் உடைமைகளை அடுக்கி டெல்லியை விட்டு வெளியேற ஆயத்தமானேன். ஆப்தேயும் இரு கோட்ஸேக்களும் அப்போதுதான் மகாசபைக்குள் வந்தார்கள். ‘நண்பா, என்ன நடந்தது?’ என்று ஆப்தே என்னிடம் கேட்க நான் கோபத்தின் உச்சிக்கு சென்றேன். அவர்களின் திட்டம் எனக்கு புரிந்துவிட்டது, புகை கக்கும் துப்பாக்கியை ஏந்தியபடி நான் போலீசில் பிடிபட வேண்டும், அவர்கள் தப்பிக்க வேண்டும்! கட்டுப்பாட்டை இழந்தேன், இனிமேல் என் முகத்தில் விழிக்காதீர்கள், இங்கிருந்து உடனே போய் விடுங்கள் என்று கத்தினேன்.

சங்கரும் நானும் புது டில்லி ரயில்நிலையம் வந்தோம், போலீசார் சோதனை போட்டுகொண்டு இருந்தார்கள். எனவே பழைய டெல்லி ரயில் நிலையம் வந்து இரவு சுமார் 10.30 மணிக்கு பாம்பே செல்லும் ரயிலில் புறப்பட்டோம். 22ஆம் தேதி கல்யாணில் இறங்கி அங்கிருந்து புனாவுக்கு ரயிலில் வந்து சேர்ந்தோம்.

புனாவில் என் வீட்டில் 31 ஜனவரி 1948 அதிகாலை என்னை கைது செய்தார்கள்.”

…. ……

கைது செய்யப்பட்ட பாட்கே, டெல்லி ஹிந்துமகாசபையின் பின்னால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களையும் மதன்லாலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையெறி குண்டையும் அடையாளம் கண்டு வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஜனவரி 20 முயற்சி தோல்வி கண்ட பின் 30ஆம் நாள் கோட்ஸே தன் இலட்சியத்தை நிறைவேற்றினான், காந்தியை கொன்றான். உண்மையில் 1934 ஜூன் 25, 1944 ஜூலை, 1944 செப்டம்பர், 1946 ஜூன் 26, கும்பல் நடத்திய தாக்குதல்கள், திட்டங்கள் குறித்து முறையான போலீஸ் பதிவுகள் இல்லாததால் அவை குறித்த ஆவணங்கள் இல்லை என்பதுதான் உண்மை.

அன்றைய பிரதமர் நேருவும் மிகச்சில காங்கிரஸ் தலைவர்களும் மட்டுமே உண்மையில் காந்தி கொலையானது குறித்து வருந்தினார்கள் என்பதும் படுகொலை விசாரணை கூட காந்தி படுகொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக குற்றவாளிகளை தப்பிக்க வைக்க அரசுத்தரப்பு முயல்கின்றதோ என்று சந்தேகப்படும் அளவுக்குத்தான் இருந்தது என்பதும் உண்மை.

ஜனவரி 20க்கும் 30க்கும் இடைப்பட்ட பத்து நாட்களில் அரசு நிர்வாகம், போலீஸ், உளவுத்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளும் அன்றைய அமைச்சர்கள் சர்தார் வல்லபாய் படேல், பாரதீய ஜனசங்கத்தை (இந்த அமைப்புதான் 1980இல் பாரதீய ஜனதா கட்சியானது என்பதை நினைவில் கொள்க) சேர்ந்த ஸ்யாம பிரசாத் முகர்ஜி ஆகியோருக்கும் நேருவுக்கும் இடையே நடந்த கடிதப் பரிவர்த்தனைகளும் சொல்வது என்னவென்றால் காந்தியை காப்பாற்றி இருக்க முடியும் என்பதே. ஒரு கட்டத்தில் இவர்களுக்குக்குள் மோதல் முற்றி காந்தியிடமே பஞ்சாயத்துக்கு சென்றுள்ளார்கள்.

….. …..

உதவிய நூல்: Let’s kill Gandhi, ஆசிரியர் துஷார் காந்தி (காந்தியின் கொள்ளுப்பேரன்), வெளியீடு ரூபா பப்ளிகேஷன்ஸ், புது டில்லி

நன்றி:
மு. இக்பால் அகமது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here