2025 ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேர் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதும், ‘அது பாகிஸ்தானின் சதி வேலை’… ‘இதனை விட்டேனா பார்’… என்று மோடி கூட்டம் வானத்திற்கும் பூமிக்குமாகத் துள்ளிக் குதித்து பம்மாத்துக் காட்டியதும், இந்தப் படுகொலைக்கும் தமது நாட்டிற்கும் எள்ளளவு தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் சத்தியம் செய்ததும், கார்ப்பரேட் – காவிப் பாசிச மோடி அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுடன் மூன்று – நான்கு நாட்கள் போரிட்டதும் – அண்மைக்கால வேதனையும், ஏமாற்றும், பொய்மையும், காவி அரசியல் அறுவடையும்— ஒருங்கிணைந்தவை என்பதை நாடறியும்! ஏன், உலகமே அறியும்.
இரண்டு நாடுகளும் ட்ரம்ப்-பின் உத்தரவுக்குப் பணிந்தன!
பஹல்காம் துப்பாக்கிச் சூடு முதல் பாகிஸ்தானுடன் போரிட்டு முடித்துக் கொண்டது வரை நடைபெற்ற உண்மைகள் எவை எவை என்பதனை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் தமது எஜமானர்களான கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வது மற்றும் படுகேவலமான ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு மக்களை அடிபணிய வைப்பது என்ற கொள்கைகளை மட்டுமே பிரதானமாக வைத்து அரசியலில் பாசிசப் போக்குகளுடன் பயணிக்கும் மோடி அரசின் எந்த ஒரு கருத்து வெளிப்பாடுகளையும் அலசி ஆராயாமல் உண்மை என நம்புவது போன்ற மூடத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.
அதிலும் 1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா பெயரளவிற்கான ‘சுதந்திரம்’ பெற்ற காலம் முதல் ஏன் ‘காஷ்மீர்’ தீர்க்கவியலாத தலைவலிப் பிரச்சினையாக நீடிக்கிறது என்பதையும், அதன் மூலம் சிறுபான்மை இஸ்லாமியர்களைத் தமது அரசியல் ஆதாயத்திற்காகச் சங்கிக் கூட்டம் ஏன் குறிவைத்து தாக்கி அழிக்கின்றன என்பதை பாஜக-வை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் ‘இந்தியா கூட்டணி’ உட்பட ஏனைய எதிர்க்கட்சிகள் எவையும் உணர முற்படுவதாக இல்லை.
இதற்கு முன் ‘புல்வாமா’ உட்பட திரித்து விடப்பட்ட எண்ணற்ற சம்பவங்கள் முன்னுதாரணங்களாக நம்முன் இருந்தும், ‘மோடி’யரசன் “போர்! போர்!’- என்று கூச்சலிட்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களையுமே அரசியல் ரீதியில் தன் காலடியில் சரணாகதி அடைய எத்தனித்ததை சங்கிகள் கொண்டாடலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – இந்துத்துவ – காவிக் கூட்டத்தை புரிந்தவர்கள் மோடியின் பித்தலாட்டங்களை உணர்ந்து நன்றாகவே அம்பலப்படுத்துகிறார்கள். ஆனால் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டுள்ள பாஜக எதிர்ப்பாளர்கள் என கூறிக் கொள்ளும் அனைத்து எதிர்கட்சிகளும் மோடியின் வால் பிடித்து செல்வதுதான் வேதனையிலும் வேதனையான விடயமாக உள்ளது. அவர்களின் பிழைப்புவாதமும், கூட்டத்தோடு கோவிந்தா போடாவிட்டால், தனிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சமும் இதற்குக் காரணங்களாக இருக்கின்றன.
நாடெங்கும் “OPERATION SINDHOOR – ஆபரேசன் சிந்தூர்” விளம்பரம் செய்யும் காவி அரசு!
17-05-2025-ல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த “மக்கள் அதிகாரம்” மாநில கருத்தரங்கம் மற்றும் மாநாட்டில் பங்கேற்று விட்டு அரங்கிலிருந்து வெளியேறி வேன் மூலமாக இரவு 11 மணிக்கு இருப்பிடம் திரும்பும் பொழுது சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகள் எங்கனும் வானுயர்ந்த கட்டிடங்களின் உச்சியில் நள்ளிரவில் பிரகாசிக்கும் அலங்கார வெளிச்சத்தில் “OPERATION SINDHOOR – ஆபரேஷன் சிந்தூர்” – ரத்தக் கிளைகளுடன் – டிஸ்பிளே ஆகி விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.
பிறகு விசாரித்த போதுதான், சென்னை மட்டுமல்ல; இந்திய நாடு முழுமைக்கும் இவ்வித மலிவான அரசியல் விளம்பரங்கள் மோடி அரசால் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிய முடிந்தது.
சரி; மோடி வித்தை தான் இப்படியெனில் எதிர்க்கட்சிகளும் ஏன் இந்த மோடியின் கேவல அரசியலுக்கு உடன்பட வேண்டும்?
‘மோடி வித்தை’யை உலகம் முழுவதும் பரப்ப சர்வ கட்சி எம்பி-க்கள் குழு!
‘ஆபரேஷன் சிந்தூர்’ -எனும் ‘சாதனை’க் களியாட்டத்தில் இருக்கும் காவி மோடி அரசு, இதனை உள்நாட்டில் உள்ள தொலைக்காட்சி உட்பட இன்ன பிற சேனல்கள் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் பல்வேறு வகைப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி செலவில் விளம்பரங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சென்றது போதாது; தமது சாதனையை உலகம் முழுமைக்கும் தனது கட்சி மட்டுமல்ல; ஏனைய எதிர்க்கட்சிகளையும் பங்கேற்க செய்து பரப்பிட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு 59 பெயர்களைக் கொண்ட ஏழு சர்வ கட்சி பாராளுமன்ற குழுக்களை அமைத்து உலக முழுமைக்கும் உள்ள நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து மோடியின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ‘சாதனை’யைப் பரப்பிடப் போகிறார்கள்!
படிக்க:
♠ ஆப்பரேஷன் சிந்தூர்! பொய்யையும், புனைவையும் பரப்பி உண்மையை மழுங்கடிக்கும் போலி வீடியோக்கள்!
♠ தமிழக சங்கிகளுக்கு சிந்தூர் யாத்திரை ஒரு கேடா ?
இது குறித்து எந்த ஒரு எதிர்க்கட்சியும் எதிர்ப்பின்றி வெட்கமின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. மோடி செய்திருக்கக் கூடிய செயல் அசிங்கம், ஆபாசமானது என்று எடுத்துக் கொண்டால், இதில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் அதே அளவிற்கானது தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.
பாசிச மோடி அரசுக்கு ஒரு வேண்டுகோளை வைப்போம்!
காஷ்மீர் பிரச்சனை; இந்தியா பாகிஸ்தான் போர்; ‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்த சாதனைகளை உள்நாடு மட்டுமல்ல; உலகமே தன்னை வியந்து பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆளாய்ப்பறக்கும் மோடி, 2002ல் குஜராத்தில் பட்டவர்த்தனமான பொய் பிரச்சாரத்தின் அடிப்படையில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து மத வெறியர்களை தூண்டிவிட்டு பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது; பாலியல் பலாத்காரம் செய்தது; உ.பி., ம.பி., மணிப்பூர், அரியானா, பீகார், ராஜஸ்தான், சட்டீஸ்கர், உத்தரகாண்ட், உட்பட எண்ணற்ற மாநிலங்களில் சிறுபான்மை இஸ்லாமியர் கிறித்தவர்கள் கொலை செய்தது; இளம் பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் விட்டது; மாட்டுக்கறி வைத்திருந்ததாக சிறுபான்மையினரை கொலை செய்தது; பொதுக் கிணற்றில் பொதுக் குளத்தில் குடிக்க தண்ணீர் எடுத்ததற்காக அல்லது குளித்ததற்காக தலித் இந்துக்கள் எண்ணற்றோரை இழுத்துப் போட்டு அடித்தது மற்றும் கொலை செய்தது; மசூதிகள் ஆலயங்கள், சிறுபான்மையினரின் வீடுகள் இவற்றை புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கியது; இந்து மதசாமியார்கள் ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக ஊர்வலம் போக அனுமதித்து பின்னால் காவி கூட்டம் அணிவகுத்துச் செல்லும் காட்சிகளை தொகுப்பது; கோவில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சர்களாக நியமனமாக முடியும் என்ற வானளாவிய சட்டம் இந்தியாவில் இருப்பது குறித்து பரப்புவது; நான்கு வர்ணம் 4000 சாதி வேறுபாடுகளை தொகுத்து இதற்கு அடிப்படையான மனு ஸ்மிருதி, பகவத் கீதை உட்பட எண்ணற்ற புராண இதிகாச குப்பைகளை அனைத்தையும் வரிசைப்படுத்துவது—இவையாவற்றையும் கூட பாசிச ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா மோடி அரசு சாதனை பட்டியலாக – பாரம்பரிய மிக்கதாக தொகுத்துக் கொண்டு, ‘ஆப்பரேஷன் சிந்தூரை’ உலகம் முழுமைக்கும் பரப்புவதற்கு நாடாளுமன்ற குழு உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்புவது போல, இத்தகு ‘சாதனை’களையும்கூட உலகம் முழுமையும் பரப்பும் வகையில் நாடாளுமன்ற குழுக்களை அமைத்து விரைவில் அனுப்பி வைக்க வேண்டும் என்ற ‘வேண்டுகோளை’ காவி அரசிடம் முன்வைப்போம்! நாமோ மக்களைத் திரட்டி சமூக மாற்றத்திற்கு சரியான வழிமுறையைக் காண்பித்து, களப்போரில் இறங்கி, சமர் புரிந்து வெற்றி வாகை சூட சூளுரைப்போம்!
- எழில்மாறன்.