ந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நான்கு நாட்கள் நடைபெற்ற இராணுவ மோதலின் போது, ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் பல போலிச் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியது. இதைத் தகவல் போரின் இன்றியமையாத பகுதி என்று கூறி, மற்றவர்களையும் பரப்புமாறு வலியுறுத்தியது.

சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பவர்களைக் (Followers) கொண்ட ஒரு X தளம், தகவல் போரில் அனுமானம் என்பது ஒரு போர்க்களம் என்றும், பாகிஸ்தானுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செய்திகளை பெரிதுபடுத்தி – அது பொய்யாக இருந்தாலும் – பரப்ப வேண்டும் என்றும் கூறியது. இதற்கு மாறாக இந்தியாவைக் காயப்படுத்தும் வகையிலான செய்திகள் உண்மையாகவே இருந்தாலும், அவற்றை புதைத்து விட வேண்டும், பரவ அனுமதிக்க கூடாது என்கிறது. மேலும் “இது போர், முக்கியமாக உளவியல் போர். நமது ஒவ்வொரு பதிவும் ஒரு தோட்டாவைப் போல இருக்க வேண்டும்” என்று உசுப்பேற்றுகிறது அந்த X பதிவு.

3 லட்சத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்களைக் கொண்ட மற்றொரு X கணக்கு, பாகிஸ்தானில் ஆட்சிக்கவிழ்ப்பு, கராச்சி மற்றும் லாகூர் போன்ற நகரங்கள் இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்டன என்று தொடர்ச்சியாக பொய்ச் செய்திகளை வெளியிட்டது. இத்தகைய பதிவுகளை நேர்மறையாக நமக்கு உதவும் செய்திகள் என்று குறிப்பிட்டு இவற்றைப் பகிர்பவர்கள் தாய்நாட்டின் “மின்னணு போர்ப்பிரிவினர்” என்றும் கூறியது. இதனை பொய் செய்தி என்றோ தவறான தகவல் என்றோ கூறுபவர்கள் பாகிஸ்தானின் கைக்கூலிகள் என்கிறது அந்தப் பதிவு.

பயங்கரவாதிகள் காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற இரண்டு வாரங்கள் கழித்து மே 7 அன்று, பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத இலக்குகளை இந்தியா குறிவைத்து தாக்கியதாக கூறிய போது, இப்படி பொய்யும், புரட்டுமான சமூக வலைதள இடுகைகளை சங்கிகள் தொடங்கினர்.

மோதல் நடந்த நான்கு நாட்களில் இந்திய இராணுவத்துக்கு ஆதரவான கருத்தை ஊதிப் பெருக்கி போலிச் செய்திகள், போலியான புகைப்படங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கிய காணொளிகள் போன்றவற்றை பல போலிக் கணக்குகளைத் துவங்கி பரப்பத் தொடங்கினர். இதை “தகவல் போர்” என்றும், பாகிஸ்தானை தோற்கடிக்க இது அத்தியாவசியத் தேவை என்றும் கூறினர்.

2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” கின் போது கூட இந்த அளவு மோசமானப் பொய்ப் புனைவுகள் இல்லை. ஆனால் இம்முறை தகவல் போரென்று பகிரங்கமாக அறிவித்து, தவறான தகவல்களை பரப்புவதை நியாயப்படுத்துவதும் நடந்ததுதான் கொடுமை. போரில் முதலில் பலியாவது “உண்மை”தான் என்பார்கள். ஆனால் அதற்காக இந்த அளவுக்கா உண்மைகளை பலி கொடுத்து பொய்யைப் பரப்புவது?

பொய்ச் செய்திகளை முறியடிக்கும் போர்வாளாக “ஆல்ட் நியூஸ்”!

முகமது ஜுபைர் மற்றும் பிரதிக் சின்ஹா ஆகியோரால் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆல்ட் நியூஸ் எனும் உண்மை சரிபார்ப்பு இணையதளம் பொய் செய்திகளை அம்பலப்படுத்தி உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக செயல்பட தொடங்கியது. பாஜக ஆட்சியில் வலதுசாரிகள் பரப்பும் தவறான தகவல்களை தடுக்கும் முயற்சியால் பிரபலமடைந்துள்ளது.

படிக்க: 

  ஆப்பரேஷன் சிந்தூர்! பொய்யையும், புனைவையும் பரப்பி உண்மையை மழுங்கடிக்கும் போலி வீடியோக்கள்!

அதன் நிறுவனர்களில் ஒருவரான சின்ஹா, “வலதுசாரிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக தவறானது என நிரூபிக்கப்பட்ட தகவல்களை கூட நீக்குவதில்லை. தவறான தகவல்களை பரப்பியது குறித்து மன்னிப்பு கேட்பதும் இல்லை. இப்போது ஒரு படி மேலே போய் இப்படியான பொய்களை பரப்புவது எங்கள் பிறப்புரிமை, எங்கள் போர் உரிமை என்று வெளிப்படையாக சொல்கிறார்கள். தகவல் போரில் தங்களைப் போர் வீரர்களாக கருதும் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியில் தங்களது பங்கு முக்கியமானது என்று நினைக்கின்றனர். கராச்சி துறைமுகத்தை பற்றிய வதந்தி உண்மையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்” என்று விளக்குகிறார்.

ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஒருவர் பொய்ப் பிரச்சாரம் அவசியம் தேவை என்ற கருத்தை ஊக்குவிக்கிறார். மேலும் ஒரு பொய் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டால் அது உண்மையாகிவிடும் என்று கூறிய நாஜி கோயபல்சையும் குறிப்பிட்டு பேசினார். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போரின் உண்மை இதுதான் எனவும் குறிப்பிட்டார்.

இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக ஒரு செய்தி சேனல் தவறான செய்தியை வெளியிட்ட போது, அந்தச் சேனலின் நேரலையில் தோன்றிப் பேசிய இதே நபர், ” நமது ராணுவம் கராச்சி துறைமுகத்துக்கு தீ வைத்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கும். முழு நகரத்தையும் வெடிக்கச் செய்யுங்கள். பாகிஸ்தானியர்களே உங்கள் முன் மரணம் நிர்வாண நடனம் ஆடுகிறது” என்று கொக்கரித்தார்.

பாகிஸ்தானின் தாக்குதலின் விளைவாக இந்தியாவில் குறைந்தது 21 பேர் – 4 குழந்தைகள் & 2 வீரர்கள் உட்பட- உயிரிழந்தனர். ஆனால் இந்தியாவின் பிரதான ஊடகங்கள் இந்த செய்தியை அரிதாகவே வெளியிட்டன. போர் பதற்றம் நிலவிய நான்கு நாட்களில் பரவிய தவறான தகவல்களின் உண்மை சரிபார்ப்பு குறித்துப் பேசிய சின்ஹா, “உண்மை சரிபார்ப்புக்கு பணிச் சுமையோ, திறன்களோ எங்களுக்கு நெருக்கடியாக இல்லை. தகவல்களை சரி பார்ப்பது மிகவும் எளிதானது. இதற்கு மிகக் குறைந்த நேரமும், பயிற்சியும் போதும். இவர்களது ரத்த வெறியை பார்க்கும் போதுதான் நமக்கு அதிர்ச்சி ஏற்பட்டு, பிறகு நமது உணர்வுகள் மரத்துப் போகிறது” என்கிறார்.

மோடி தலைமையிலான பாசிச பாஜக கும்பலும் அதன் வலதுசாரி அடிவருடிகளும் தவறான தகவல்களையும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்பும் கட்டுக் கதைகளையும் எதிர்த்து முறியடிப்பதில் ஆல்ட் நியூஸ் முன்னணி பங்காற்றி வருகிறது. எனவேதான் அதன் இணை நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜுபைர் பலமுறை பாசிச மோடி அரசால் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுகிறார்.

“மோதலின் முதல் நாளில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கிய பிறகு, பாகிஸ்தானில் இருந்து ஏராளமான பொய்த் தகவல்கள் வெளிவந்தன. அவற்றை திறம்பட முறியடிக்கும் வேலையை செய்த ஜுபைர் குறிப்பிடத்தக்க அளவு இதன் மூலம் அங்கீகாரமும் பெற்றார். அன்று இரவு அனைவரும் உறங்கச் சென்ற போதும் உண்மையை உரக்கச் சொல்ல உறங்காமல் கண் விழித்த ஜுபைர் அதிகாலை 4 மணிக்கு தான் தூங்கச் சென்றார்” என்று சின்ஹா குறிப்பிடுகிறார்.

மேலும் இந்தியா, பாகிஸ்தான் மோதலின் போது வெளிவந்த தவறான தகவல்களில் 95 சதவீதத்தை 2 திறன்களை பயன்படுத்தி அம்பலப்படுத்த முடியும். படங்களை ரிவர்ஸ் இமேஜிங் எனும் தேடலின் மூலம் சரிபார்க்க முடியும். வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடுதலின் மூலம் உண்மைத்தன்மையை கண்டறிய முடியும். இரண்டு நாள் பயிற்சி போதும். இந்த பயிற்சியை செய்ய முன்வரும் யாவரும் இதைச் செய்ய முடியும் என்கிறார் சின்ஹா.

படிக்க:

♠ போர் நிறுத்தம்: மக்களை முட்டாளாக்க பார்க்கும் மோடி அரசு!

போர் நிறுத்தம் – பொய் சொல்வது டிரம்ப்பா, மோடியா?

இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் போர் நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளன என்ற செய்தியை முதலில் வெளியிட்டவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். மூன்றாம் நாட்டின் தலையீட்டை மறுக்கும் சிம்லா ஒப்பந்தம் இருக்கும் நிலையில், அமெரிக்கா தலையிட்டு போரை எப்படி நிறுத்தியது என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்திய அரசு தரப்பில், “பாகிஸ்தான் போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கெஞ்சியது, நம்மிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்கள்தான் பணிந்து வந்தார்கள். எனவேதான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம்” என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதையாக சமாளித்தது.

போர் நிறுத்தம் குறித்து பொதுமக்களுக்கு ஆற்றிய மோடியின் உரையிலும் டிரம்பின் அறிவிப்பு குறித்து பேச்சு, மூச்சு இல்லை. அடுத்த நாள் பேசிய டிரம்ப், வர்த்தகத்தை காட்டி மிரட்டி இரு நாடுகளையும் பணிய வைத்தேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். வர்த்தகம் குறித்தெல்லாம் எதுவும் பேசவில்லை என இந்திய தரப்பில் சொல்லப்பட்டது. இருப்பினும் கடந்த நான்கு நாட்களில் நான்கு முறை திரும்பத் திரும்ப இதையே குறிப்பிட்டு பேசுகிறார் டிரம்ப். எனில் இந்திய இறையாண்மை கேள்விக்குள்ளாகி உள்ளது என்பதுதானே பொருள்.

நமது 56 இன்ச் அகன்ற மார்பு கொண்ட மாவீரர் ‘விஸ்வ குரு’ ட்ரம்புக்கு எதிராக வாய் திறக்காதது ஏன்? வெறும் வாய்ச்சவடால் மூலம் மக்களை ஏய்க்கும் மோடியின் லட்சணம் இதுதான். கார்ப்பரேட்டுகளின் காவலரான மோடி அவர்களது வர்த்தக நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதனால் தான் போரை உடனடியாக நிறுத்தினார் என்பதுதான் உண்மை. புல்வாமா தாக்குதலின் மர்மம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியபால் மாலிக் மூலம் வெளிவந்தது. இன்றைய காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலின் உண்மையும் கண்டிப்பாக வெளிவரும். காத்திருப்போம்.

  • குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here