தமிழக பாரதிய ஜனதா சார்பில் மே 14 இல் சிந்தூர் யாத்திரை. சென்னையில் இன்று தொடங்கும் இந்த யாத்திரையில் தேசியக்கொடியை ஏந்தியவாறு நான்கு கட்டங்களாக பயணம். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தி சுற்றுலாப் பயணிகளை கொன்று குவித்தனர். அதைத் தொடர்ந்து இந்தியா தனது படைகளை ஏவி ஏவுகணைகளை வீசி தீவிரவாத முகாம்களை தகர்த்துள்ளது. இதையும் கடந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களின் மீதும் குண்டுகளை வீசியுள்ளது.
தற்போது, உலக நாட்டாமையான அமெரிக்காவின் உத்தரவுக்கு ஏற்ப தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது. “நான் சொல்லித்தான் போர் நிறுத்தம் வந்துள்ளது” என்று அதிபர் டிரம்ப் பகிரங்கமாகக் கொக்கரிக்கிறார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த சூழ்நிலையில் தான் தமிழகத்தில் சிந்தூர் யாத்திரை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் சங்கிகள்.
எதற்காகவாம் இந்த யாத்திரை ?
நமது படைகள் வீரத்துடன் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டியதற்கும், தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளதற்கும் நன்றி தெரிவிப்பதற்காகவாம்.
அதற்காக தமிழகத்தில் தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக சாலைகளில் செல்ல உள்ளார்களாம். சரிதான்! நீங்கள் தாமரையை ஏந்திச் சென்றால்தான் ஒருவரும் சீண்ட மாட்டார்களே.
ராணுவத்தின் சீருடையை அணிந்து கொண்டு, தம்மை மறைத்துக் கொண்டு, கோழைத்தனமாக தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளை கண்டு பொங்குகிறீர்களே அதற்குரிய – கோழைத்தனத்தை கண்டிக்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா சங்கீஸ்?
சங் பரிவார வனக் கூட்டங்கள் இந்தியாவெங்கும் நடத்திய தாக்குதல்கள் மட்டும் வீரத்தின் வெளிப்பாடா? கலவரங்கள், படுகொலைகள், பாலியல் கும்பல் வல்லுறவுகள் உள்ளிட்ட அனைத்தையும் பகிரங்கமாக அறிவித்துவிட்டும், ஊர் அறிய பேனர் வைத்து விட்டுமா செய்தீர்கள்? கோழைத்தனமாக திடீரென்று தானே தாக்கினீர்கள்.
மணிப்பூரில் பெண்களை நிர்வாண ஊர்வலம் விட்டீர்களே – அது என்ன சர்வதேச ஊடகங்களை வரவைத்து நேரடி ஒளிபரப்பாகவா சாதித்தீர்கள். குஜராத்தில் 2000 இஸ்லாமியர்களை படுகொலை செய்தீர்களே அதை எந்த படைக்கு தகவல் சொல்லிவிட்டு நெஞ்சுரத்தோடு அரங்கேற்றினீர்கள்?
ராணுவத்திற்கு ‘நன்றி’ கூறத்தான் வேண்டும்!
நீங்கள் முப்படைகளுக்கு நன்றி தெரிவிப்பதன் பின்னே உள்குத்து ஏதேனும் இருக்கும் அல்லவா? இந்திய ராணுவம் எல்லை தாண்டி வந்து படுகொலைகளை செய்த பயங்கரவாதிகளைத்தான் வேட்டை ஆடத்தான் குண்டு வீசி உள்ளது. ஆனால் உள்நாட்டிலேயே தலைநகர் டெல்லி உட்பட பல மாநிலங்களில் கலவரங்களையும், வல்லுறவுகளை படுகொலைகளையும் அரங்கேற்றி வரும் உங்கள் மீது – சங் பரிவாரங்களின் மீது எத்தனை ஏவுகணைகள் வீசப்பட்டன? அப்படி வீசப்படாததற்க்காகத்தான் நீங்கள் முப்படைக்கும் நன்றி தெரிவித்து இந்த சிந்தூர் யாத்திரையை தொடங்குகிறீர்களோ?
படிக்க:
♦ போர் நிறுத்தம்: மக்களை முட்டாளாக்க பார்க்கும் மோடி அரசு!
♦ ஆப்ரேஷன் சிந்தூர்: ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்கும் போலி தேசபக்தி – உண்மைப் போர் வெறி!
உங்கள் “அக்னிபாத்” திட்டத்தின் மூலம் ஆயுதப் படையில் சேரும் தனது கனவை தொலைத்து விட்டு நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் உங்களை ஆரத்தி எடுத்து வரவேற்பார்களோ?
கோவை கலவரம், மண்டைக்காட்டு கலவரம் என கலவரம் மூலமே கால் பதிக்கும் கேடுகெட்ட பார்ப்பன இந்து மத வெறி அரசியலைக் கொண்டுள்ள உங்களை தமிழக மக்கள் காரி உமிழவே செய்வார்கள்.
மதுரை பக்கம் மறந்தும் போய்விடாதீர்கள். முருகனை வைத்து வம்புக்கு இழுத்து திருப்பரங்குன்றத்தை கலவர குன்றம் ஆக்க எத்தனித்த உங்கள் சதிகள் அங்கே அம்பலமாகி நாறிக் கொண்டிருக்கின்றன. இது போதாதென்று டங்ஷ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளும் கடும் வெறுப்பில் உள்ளார்கள்.
தமிழகத்தில் எப்படியாவது கால் பதித்து விட வேண்டும் – வேரூன்றி விட வேண்டும் என்று நீங்கள் தவியாய் தவிப்பது புரியவே செய்கிறது. அக்கா தமிழிசை, வானதி முதற்கொண்டு நிர்மலா மாமி வரை எவ்வளவோ முயற்சித்து விட்டார்கள். ‘ஆடு’ மேய்ந்த வரை போதும்; புழுக்கைகளை தவிர வேற எதையும் போடவில்லை என்று இமய மலைக்கு ஓட்டிச் சென்று விட்டீர்கள்.
”பகையாளிக்குடியை உறவாடி கெடுக்க வேண்டும்” சரிதானே சங்கீஸ்! அதற்காக நீங்கள் வள்ளுவனை – திருக்குறளை துணைக்கு அழைக்கிறீர்கள். சீமான், விஜய் என B டீம்களை களமிறக்கியதும், பன்னீர் – சசிகலா – செங்கோட்டையன் என்ன கோஷ்டிகளாக்கி அதிமுகவை பிளப்பதும் அனைவருக்கும் தெரியும் தான்.
உங்களின் சுயநலத்துக்காக – பற்றி எரியும் பிரச்சனைகளிலிருந்து மொத்த மக்களையும் திசை திருப்புவதற்காக எதையும் செய்யத் துணிந்தவர் தான் உங்கள் மோடி. மோடியின் அரசு மனசாட்சியே இல்லாமல் நம் படைவீரர்களை பலி கொடுத்து புல்வாமா, பஹல்காம் என அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்த விடுவதோ அல்லது நடத்த வைப்பதோ அம்பலமாகாமல் இல்லை. இது குறித்து கேள்வி எழுப்பினால் அவர் காஷ்மீரின் ஆளுநராகவே இருந்தாலும் வழக்கு பாயும் அல்லவா?
பஹல்காம் தாக்குதல் உங்கள் அரசின் உளவுத்துறையின் தோல்வி என அனைவரும் விமர்சிக்கின்றனர் நைனாரே. இன்று வரை விமர்சனங்களை எதிர்கொண்டு விளக்கம் தருவதையோ, பாராளுமன்றத்தில் விவாதிப்பதையோ, பொறுப்புடனும் வெளிப்படை தன்மையுடன் மோடி, அமித்ஷா உள்ளிட்டு யாரும் செய்யவில்லையே.
முக்கியமாக சுற்றுலா வருவாயை நம்பி இருக்கும் காஷ்மீருக்கு மக்கள் பஹல்காம் தாக்குதலின் விளைவாக தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விட்டது என குமுறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி ஒரு புற நிலை இருந்தும் கூட, தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகள் குறித்து துப்பு கொடுத்தால் 20 லட்சம் பரிசு என்று கூவினாலும் கூட ஏன் அவர்களை நெருங்க முடியவில்லை? இதற்கான பதில் நீங்கள் முன்னெடுக்கும் அரசியலிலேயே உள்ளது. இந்துத்துவாதான் – அகண்ட பாரத, இந்துராஷ்ட்டிரா தான் அனைத்திற்குமான சூத்திரதாரி!
சமூக ஊடகங்களின் நேர்மறை பங்களிப்பின் மூலம் தேசிய – சர்வதேசிய அரசியல் களத்தில் நடக்கும் அயோக்கியத்தனங்கள் பெருநகரங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளது என்ற நிலையை தாண்டி மெதுவாக கிராமங்கள் வரை கசியத்தான் செய்கிறது. ஒருவேளை தெருவில் வைத்து இதற்கான விளக்கங்களை உங்களிடம் மக்கள் கேட்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே வண்டியிலிருந்து இறங்காமல் மேற்கூரை வழியே கையசைத்தபடியே யாத்திரை சென்று விடுங்கள் அதுதான் நல்லது நைனா(ரே).
இளமாறன்