ந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக பாரத ரத்னா கருதப்பட்டுவருகிறது. அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. நடைமுறையில் யாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாட்டின் பிரதமரே குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்வார்.

இவ்விருது வழங்கப்பட்டவர்கள் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணை பிரதமர், தலைமை நீதிபதி,  லோக்சபா சபாநாயகர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்கட்சிதலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்படும். இத்தகைய பெருமையாக கருதப்படும் விருது இந்த வருடம் பீஹாரின் முன்னாள் முதல்வர் திரு.கர்பூரி தாக்கூர் அவர்களுக்கும் பாரதீய ஜனதா கட்சியின் லால் கிருஷ்ண அத்வானி அவர்களுக்கும் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

கர்பூரி தாக்கூர்:

கர்பூரி தாக்கூர் பிஹாரில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளார். முதன் முதலில், குறிப்பாக மண்டல் கமிசன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே 1978 ஆம் ஆண்டு பிஹாரில் 26% இட ஒதுக்கீட்டை முதன் முதலில் வட இந்தியாவில் அமல்படுத்திய முன்னோடி ஆவார். இதன்படி 12% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 8% மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்கு, 3% பெண்களுக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு என்று அரசு துறைகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்த ஜன சங்கம் (தற்போதைய பாரதிய ஜனதா கட்சி) ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி தாக்கூர் ஆட்சியை கவிழ்த்தது. இன்றுவரை சங் பரிவார் அமைப்புகள் இட ஒதுக்கீட்டு (EWS தவிர) முறையை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். இதற்கு சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்று அறிவித்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றதே  சமீபத்திய உதாரணம்.

கர்பூரி தாக்கூர்

ஒருபுறம் சனாதனத்தை மறுத்து சமத்துவத்தை நிலைநாட்ட முயன்ற கர்பூரி தாக்கூருக்கும் மறுபுறம் சமத்துவத்தை மறுத்து சனாதனத்தை நிலைநாட்ட வேலை செய்த அத்வானிக்கும்  ஒரே நேரத்தில் பல கணக்குகளுடன் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

லால் கிருஷ்ண அத்வானி (LK. அத்வானி);

காந்தியும், இந்து மத நம்பிக்கையாளர்களும் மென்மையான குரலில் இறைநம்பிக்கையுடன் முழங்கிய ”ராம நாமம்” இன்று வட இந்திய மாநிலங்களில் காவி பாசிஸ்டுகளால் வன்முறை முழக்கமாக மாறிக்கொண்டிருக்கும்  ’ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்துக்கும் , சிறுபான்மையினருக்கு எதிரான காவி பாசிச நடவடிக்கைகளுக்கும், அடித்தளமிட்டு தேசத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும்  சக்தியை  இந்து மத பெரும்பான்மைவாத பாசிஸ்டுகளின் கைகளுக்கு கொண்டுசேர்த்தவர் அத்வானி.

1927ஆம் வருடம் பாகிஸ்தானின் கராச்சி (இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்)  நகரில் பிறந்து வளர்ந்த அத்வானி 1942 தனது பதின்ம வயதுகளில் RSS சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு தன்னை அதில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார். 1980ல் வாஜ்பாயி உள்ளிட்டோருடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சியை தொடங்கினார். 1984ல் இரண்டு மக்களவை தொகுதிகளை மட்டுமே வென்ற பா.ஜ.க 1989ல் ஜூன் 9-11 அத்வானி முன்மொழிந்த பலம்பூர் தீர்மானத்திற்கு பிறகு மிதவாத போக்கை கைவிட்டு தீவிர இந்துத்துவ அரசியலை – VHP யின் ராமஜென்மபூமி என்ற முழக்கத்தை கையிலெடுத்த பிறகு  நடந்த முதல் தேர்தலில் (1989 நவம்பர்) 86 மக்களை தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தவிர்க்கும் நோக்கில் வி.பி. சிங்கிற்கு ஆதரவளித்தது

அப்போதைய பிரதமர் வி.பி. சிங் 1989ல் SC – ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றியது, 1990ல் மண்டல் கமிசனை ஏற்று கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் RSS மற்றும் BJP தலைவர்களை கலக்கம் அடைய செய்தது. இந்த நடவடிக்கைகளை எதிர்க்குமாறு RSS பி.ஜே.பி யின் தலைவர்களை கேட்டுக்கொண்டது. தனிப்பட்ட முறையில் அவர்களை எதிர்க்க வேண்டும் என்று தோன்றினாலும் வெளிப்படையாக எதிர்த்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் ஆதரவை இழக்க நேரிடும் என்று அஞ்சினார்கள். அச்சமயத்தில் ஆபத்பாந்தவனாக அத்வானி ராம் ரத யாத்திரையை தொடங்கினார்.

அத்வானி தொடங்கிய ராம் ரத யாத்திரை

குஜராத்தின் சோம்நாத்தில் தொடங்கிய இந்த ரத யாத்திரை அயோத்திக்கு செல்வதற்குள் கலவரங்களில் 564 பேரை பலி கொண்டது. வி.பி.சிங்கின் உத்தரவுபடி லாலுவால் அத்வானி பீஹாரில் தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். எனினும் மற்றவர்கள் ஏறக்குறைய 50,000-க்கும் அதிகமானோர் காவல்துறையினரின் கண்ணீர் புகை குண்டு வீச்சையும் மீறி அக்டோபர் 30ம் தேதி பாபர் மசூதியில் காவிக் கொடி நட்டு அதனை இடிக்க முயன்றனர். இதனையடுத்து வி.பி.சிங்கின் பரிந்துரையில் அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவின் உத்தரவின் பேரில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை ஒடுக்கினர். இதில் கலவரக்காரர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து  இதற்கு பழி தீர்க்கிறோம் என்ற பெயரில் உத்திர பிரதேசம் முழுவதும் VHP இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது. இதனை காரணம் காட்டி வி.பி.சிங் அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை திரும்பப்பெற்றது பா.ஜ.க. இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்து வி.பி. சிங் பதவி விலகினார். இதற்கு அடுத்து 1991ல் நடந்த மக்களவை தேர்தலில் 120 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்கட்சியாக பா.ஜ.க வளர்ந்தது. முன்பைவிட அதிக எண்ணிக்கையில் மக்களவை இடங்களை பெற்று அத்வானி எதிர்கட்சி தலைவராக அமர்ந்ததும் பாபர் மசூதியில் ராம ஜென்ம பூமி அமைக்க வேண்டும் என்ற விஷம பிரச்சாரத்தை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்றோர் மேலும் தீவிரப்படுத்தினர். நேரடியாக வன்முறையை தூண்டும் வகையில் சட்டத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரான மதவெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து இந்தியாவின் அரசியல் போக்கை மாற்றிய பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை அரங்கேற்றினர். முன்பு 1990ல் இத்தகைய முயற்சியை வி.பி. சிங் தடுத்து நிறுத்தினார். ஆனால், 1992ல் நரசிம்ம ராவ் தடுக்க தவறினார்.

1992ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி சங் பரிவார் இந்துத்துவ கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட கலவரங்களில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு 1996இலிருந்து 2004 வரை மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் 1998 முதல் 2002 அத்வானி உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதே சமயம் 2002 ல் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்பதை விடுத்து அதனையொட்டி எழுந்த இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை தூண்டி விட்டு கலவரத்திற்கு ஆதரவளித்தார். இதில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 2500க்கும் அதிமானோர் காயம்பட்டனர். நூற்றுக்கணக்கான பாலியல் பலாத்கார நடவடிக்கைகள் இஸ்லாமிய பெண்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. (அதில், பில்கிஸ் பானுவும் ஒருவர்) இந்த சம்பவம் நடந்த போது மத்தியில் உள்துறை அமைச்சராக அத்வானிக்கு 2002ம் ஆண்டு ஜூன் மாதம் துணை பிரதமர் வழங்கி கெளரவித்தது சங் பரிவார் சனாதன கும்பல். பாபர் மாசூதி இடிப்பு சம்பவம் போலவே உலக அளவில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது குஜராத் கலவரம்.

2005ம் ஆண்டு லாகூருக்கு சென்ற அத்வானி தான் சேர்ந்த RSS- BJP சங் பரிவார் கும்பல் தற்போது வரை எதிரியாக(இந்திய பிரிவினைக்கு காரணமான)  கூறிவரும் முகமது அலி ஜின்னாவின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியதோடு நில்லாமல் அவர் ஒரு மதசார்பற்ற தலைவர் என்று புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்வு நடந்ததிலிருந்து RSS, அத்வானி பி.ஜே.பியின் தலைமையில் இருப்பதை விரும்பவில்லை. 2004 மற்றும் 2009 தேர்தல்களில் பி.ஜே.பி தோல்வியடைந்ததை தொடர்ந்து 2014 தேர்தலில் பி.ஜே.பியும் அத்வானியை ஓரம் கட்டி மோடியை  முன்னிறுத்தி ஆட்சியை பிடித்தது.

2014ல் ஆட்சியில் அமர்ந்த மோடி தலைமியான பி.ஜே.பி அரசு தற்போது வரை பாராளுமன்றம், நீதிமன்றம், நிர்வாக அமைப்புகள் போன்றவற்றை பாசிச மயமாக்கி வருகிறது. ஆளுநர்களை வைத்து மாற்று கட்சியினர் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கு நெருக்கடி தருவது, பாராளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் சஸ்பெண்டு செய்து விட்டு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது, பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது போன்றவை சிறந்த உதாரணங்கள் ஆகும். அதே வகையில் பாபர் மசூதி தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தால் ராமர் கோவில் கட்ட ஏதுவாக வழங்கப்பட்டதையடுத்து 2024 தேர்தலுக்கு முன் எப்படியாவது ராமர் கோவிலை திறந்துவிட வேண்டுமென்று அவசர அவசரமாக கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடித்துள்ளார் பாசிஸ்ட் மோடி.

ராம் ரத யாத்திரை மூலம் ராம ஜென்ம பூமி இயக்கத்தை உந்தித்தள்ளி பாபர் மசூதி இடிப்பின் மூலம் அடித்தளமிட்ட அத்வானி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்காதது மூத்த தலைவர்களிடத்திலும் பல  RSS- BJP உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தனது வெற்றிக்கு முக்கியமான அடித்தளமாக இருக்கும் இந்தி மொழி பேசும் வட மாநிலங்களில் இந்துமத பெரும்பான்மையனரின் வாக்குகளை முழுவதுமாக பெற வேண்டும் என்ற பிரதான நோக்கில் சமத்துவ விரும்பிகளை திருப்திபடுத்த கர்பூரி தாக்கூருக்கும் சனாதன சங்கிகளை திருப்தி படுத்த அத்வானிக்கும் பாரத ரத்னா விருது வழங்கி அதற்கான அறுவடை தேர்தலில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறார் மோடி.


இதையும் படியுங்கள்: 


மதசார்பற்ற இந்திய நாடு என்ற பெயரை களங்கப்படுத்திய, அரசியல் லாபத்திற்காக ஆயிரக்கணக்கான குடிமக்களை கலவரங்களில் பலி கொடுத்து இலட்சக்கணக்கான மக்களை துண்டாடி கோடிக்கணக்கான இந்திய மக்களை அவர்கள் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தை காரணம் காட்டி எதிரிகளாக சித்தரித்து வஞ்சிக்கத் துடித்த அத்வானிக்கு அவர் செய்த அனைத்தையும் மேலும் வீரியமாக செய்து கொண்டிருக்கும் மோடி, அத்வானிக்கு பாரத ரத்னா கொடுத்து  கெளரவப்படுத்தியுள்ளார்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது தேசிய அளவில் முக்கிய கட்சிகள் பெரும்பாலும் இந்த அறிவிப்பிற்கு எதிராக வாய் திறக்கவில்லை மாறாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.  ‘மதசார்பற்ற இந்தியா’ கவலை தோய்ந்த முகத்துடன் தனது எதிர்காலம் குறித்த கவலையோடு பெயரளவிலான ஜனநாயகமும் நாட்டில் கவலைக்கிடமாக உள்ளது.

  • தாமோதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here