வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் இன்று பிப்ரவரி 7 இல் ரூ.600 தொட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் அடித்தட்டிலுள்ள உழைக்கும் மக்களின் வீடுகளில் இனி சோத்துக்கு ஊற்ற ரசத்துக்கும் வாய்ப்பில்லை.
தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பூண்டு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
வரத்து குறைவு!
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 100 டன்னுக்கு மேல் பூண்டு வந்தது. அது தற்போது 40 டன் ஆக குறைந்துவிட்டது. இதுதான் விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.
காய்கறிகளின் விலையும் மளமளவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்கிறது oneindia.com
சூடுபட்ட பூனையான பூண்டு விவசாயிகள்!
கோயம்பேடு சந்தைக்கு மத்திய பிரதேசத்தில் இருந்துதான் அதிகாளவில் பூண்டு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக தினமும் 250 டன் வரும். கடந்த 10 நாட்களாக 25 டன் மட்டுமே வருகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதம் இறுதி வரை பழைய பூண்டு இருப்பு வைத்து விற்கப்படும். பிப்ரவரிக்கு பிறகு புதிய பூண்டு வரும். பெரிதாக விலை உயர்வு இருக்காது.
கடந்த 2022-ம் ஆண்டு நாட்டின் மொத்த உற்பத்தி 3 மில்லியன் டன்னில், 2 மில்லியன் டன் மத்திய பிரதேசத்தில் விளைந்தது. இதனால் அம்மாநிலத்தில் பூண்டு கொள்முதல் விலை கிலோ ரூ.40 வரை சரிந்தது. விளைந்தும் விலை கிடைக்காமல் பெரும் நஷ்டமடைந்த விவசாயிகள் கடந்த ஆண்டு பூண்டு பயிரிடுவதை தவிர்த்தனர்.
குளிர், மழை,வெயில், அரசின் அடக்குமுறை உள்ளிட்ட அனைத்தையும் தாங்கியபடி குறைந்த பட்ச ஆதார விலை வேண்டும் என டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடிவருதன் அவசியத்தை இதனுடன் பொருத்தி புரிந்துகொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்:
- ஆற்றில் கரையும் பூண்டு விவசாயிகளின் உழைப்பு!
- வேளாண் விளை பொருட்களுக்குகுறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)வருங்கால அராஜகத்தை தவிர்க்கும்!
பூண்டுக்கு விலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. எனவேதான் மாற்றுப்பயிருக்கு சென்று விட்டனர். இதனால் விளைச்சல் இல்லாமல் வரத்து குறைந்து விலை உயர்ந்துவிட்டது. கடந்த ஜூலை மாதமே கிலோ ரூ.150 வரை வந்தது. தற்போது ரூ.600 வரை வந்துவிட்டது. இனி மீண்டும் பூண்டை பயிரிடுவார்கள். நாளை விளைச்சல் பெருகும்போது கொள்முதல் விலை என்னவாக மாறும்?
வேளாண் கார்ப்பரேட்களுக்கா விருந்தாக்குவது?
புதிய பூண்டு வரத் தொடங்கியதும் விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறார் கோயம்பேடு சந்தை பூண்டு வியாபாரி வி.எம்.எஸ்.மணிகண்டன். அதற்கு தேவைக்கேற்ப விளைவித்தாக வேண்டும். வேளாண்துறையில் கால்பதித்துள்ள அதானிக்கள் திணித்துவரும் ஒப்பந்த விவசாயம் விவசாயிகளை நாசமாக்கி வருகிறது.
கார்ப்பரேட்டுகள் உலகச்சந்தையை குறிவைக்கிறார்கள். அவர்கள் விருப்பபடி ஒற்றை பயிர் சாகுபடிக்கு மாறினால் என்ன நடக்கும்? தக்காளி விவசாயிகளின் அனுபவமே போதுமானதல்லவா? மழைபொய்த்து விளைச்சல் குன்றினாலும், அதிகமாக விளைந்தாலும் விவசாயிகள் நாசத்தையே சந்திக்கின்றனர். கார்ப்பரேட்டுகளின் இலக்கு விளைபொருட்கள் மட்டுமல்ல; பலகோடி ஏக்கர் விளைநிலங்களும்தான்.
சூதாட்டமா – விவசாயமா?
லாட்டரியின் எந்த எண்ணுக்கு பரிசு கிடைக்கும் என்பதை எப்படி சூதாடியால் கணிக்க முடியாதோ அதேபோல், எந்த பயிர் வைத்தால் விலை கிடைக்கும் என்பதையும் விவசாயிகளால் கணிக்க முடிவதில்லை. வருவாய்க்கு உத்தரவாதம் இருக்கிறதோ இல்லையோ செலவு மட்டும் சர்வ நிச்சயமானதாகி விட்டது.
கோடிக்கணக்கான சிறு, குறு, விவசாயிகள் மட்டுமின்றி நடுத்தர, பணக்கார விவசாயிகளும் கூட விதையில் தொடங்கி பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, பூ பூக்க மருந்து, காய் காய்க்க மருந்து, காய் பழுக்கவும் மருந்து என அனைத்துக்கும் வேளாண் கார்ப்பரேட்டிடம் சிக்க வைக்கப்பட்டு விட்டனர். மக்கள் வாங்கும் சில்லரை சந்தை விலைக்கும் விவசாயிகளுக்கு கிடைக்கும் கொள்முதல் விலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் சட்டபூர்வமாக்கப்படுகிறது.
தூண்டப்படுகிறது போராட்டம்!
ரசத்துக்கு எதுக்கு பூண்டு? நிதியமைச்சரை கேட்டால் ”எங்களுக்கு சமைக்க பூண்டு வெங்காயமே தேவையில்லை” என்பார். பூண்டை வாங்காமல் புளியை கரைத்து சமாளிக்கலாம்தான். நாளை உப்பு, புளியின் விலையும் உச்சம்தொட்டால் புளுத்த அரிசியை பொங்கித் தின்ன எதை கரைப்பது?
விலைவாசியை கட்டுக்குள் வைக்க அரசே விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். பயிடும் பரப்பை கண்காணிக்க வேண்டும். கார்ப்பரேட் சூதாடிகளின் விளைபொருள் கொள்முதல், ஏற்றுமதி, பதுக்கலை தடுத்தாக வேண்டும்.
நமக்கு மலிவான விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் விவசாயம் கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தாக்கப்படாமல் உத்தரவாதமான வருமானம் வரக்கூடிய தொழிலாக அல்லவா பாதுகாக்கப்பட வேண்டும்? இதற்காகத்தான் சம்யுக்த கிசான் மோர்ச்சாவானது தொழிற்சங்கங்களோடு இணைந்து கிராமீன் பந்த்தை அறிவித்துள்ளது. கார்ப்பரேட் அடியாளான மோடி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து வருகிறார். எனவே பொது எதிரிக்கு எதிராக இரு பெரும் வர்க்கங்கள் அணிதிரளத் தொடங்கியுள்ளன.
உணவு உண்ணும் அனைவரும் விவசாயிகளோடு, தொழிலாளிகளோடு இணைந்து வரும் பிப்ரவரி 16 வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம். விலைவாசி உயர்வுக்கு நிரந்தர தீர்வு காண அரசை நிர்பந்திப்போம். கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தூக்கியெறிவோம்.
- இளமாறன்