2025 ஏப்ரல் 22 ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் ‘தீவிரவாதி’களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்ற செய்தியை அறிந்தோம். அதற்காக இரங்கல் தெரிவித்தோம்; கண்டனம் தெரிவித்தோம்;
குற்றவாளிகள் யார் என கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்கக் கோரினோம். ஆனால் புரியாத புதிராக நீடிப்பது என்னவென்றால் பஹல்காம் என்பது மிக முக்கிய சுற்றுலாத்தளம் மட்டுமல்ல; அது ஒரு ‘ரெட் அலர்ட்’ பகுதி எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டு வீழ்த்தப்படும் வரை அப்பகுதியில் ஒரு காவலரோ, போலீஸ் செக் போஸ்டோ, எல்லைப் பாதுகாப்பு படையினரோ, ராணுவமோ ஒருவர் கூட இல்லாமற் போனது எப்படி? சுட்டு வீழ்த்தப்பட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் ராணுவம் வந்துள்ளது ஏன்?
உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகாதது ஏன்?
காஷ்மீருக்கான சிறப்பு விதி 370-ஐ குதியாளம் போட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதுடன் அம்மாநிலத்தையே இரண்டாகப் பிரித்து மாநில அந்தஸ்தைப் பறித்து, யூனியன் பிரதேசமாக மாற்றி, அப்பிரதேசங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டதாக ஒன்றிய அரசு மிகப் பெருமைப்பட அறிவித்துக் கொண்ட வேளையில் இக்கொடூரச் சம்பவம் நடந்தேறி உள்ளது. இச்சம்பவத்தை ஒட்டி முன்கூட்டியே அப்பகுதிக்கு வரவிருந்த மோடியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு அரபு நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. செய்தி அறிந்து வெளிநாடுகளில் சுற்றித் திரிந்த பிரதமர் நாடு திரும்பியதும் உடனடியாக காஷ்மீர் பஹல்காம் செல்லாமல் பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு சென்றது ஏன்? எனில், இச்சம்பவம் நடைபெறப் போகின்ற விதம் குறித்து முன்கூட்டியே கண்டறியத் தவறிய உளவுத்துறையினர் மீது எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? இதற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகாதது ஏன்?
சுற்றுலாப் பயணிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக பாகிஸ்தான் அறிவிக்கிறது.
ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் தத்தம் விருப்பப்படி உள்நாட்டில் உள்ள ‘தீவிரவாதிகள்’ யார்? ‘பயங்கரவாதிகள்’ யார்? என வரையறுத்துக் கொண்டு ஆளும் வர்க்க நலனுக்கு துரும்பளவு எதிர்ப்பு விளைந்தாலும், உண்மைக்குப் புறம்பான காரணங்களை அவர்கள் மீது திணித்து அப்படிப்பட்டோரை நர வேட்டையாடுகின்றன. பற்றாக்குறைக்கு பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்துத்துவ மதவெறி கும்பல் இப்பிரச்சினையை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றன.
அதனுடைய உச்சம் எதைத்தொட்டு இருக்கிறது என்றால் (ராணுவம், போலீஸ் குறித்த நமது மார்க்சிய – லெனினிய தேசிய – சர்வதேசிய கண்ணோட்டம் வேறொன்றாக இருந்தாலும்) இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரோஷி இந்திய ராணுவத்திற்காக – தீவிரவாதத்திற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு தனது பங்களிப்பினை செலுத்தி இருந்தாலும், பேட்டிகள் பல அளித்திருந்தாலும் அவர் ஒரு இஸ்லாமியர் என்பதால், அவர் குறித்து பாஜக மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா என்பவர் இவ்விதம் பேசி உள்ளார்:
” எங்கள் மகள்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தைத் துடைத்தார்கள். பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க அவர்களின் சகோதரியையே அனுப்பினோம் “-என்று அநாகரிகமான – அவமானகரமான – வெட்கக்கேடான – மோசமான கருத்துக்களை வெளியிடுகிறார் என்றால் மோடி அமித்ஷா கும்பல் இதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ன கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளது? ஏன் அவரது அமைச்சர் பதவியை பறிக்கவில்லை?
ஆனால் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராயினும் கர்னல் சோபியா குரோஷி இவ்விதம் தெரிவிக்கிறார்:
“நான் ஒரு முஸ்லிம்; ஆனால் பாகிஸ்தானி அல்ல; நான் ஒரு முஸ்லிம்; ஆனால் தீவிரவாதி அல்ல; தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது; தீவிரவாதிகளைத் தேடித் தேடி என் கைகளாலேயே கொல்வேன்! அவர்கள் மதங்களைக் கேட்காமலேயே…”-குரோஷியின் இவ்விதமான கூற்றுக்கு சங்கிகள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் போர் – கடைந்தெடுத்த மடை மாற்றும் வேலை:
நாட்டில் நிலவும் மக்களின் வாழ்வாதாரம் கீழ்மட்டத்தில் வீழ்ந்து கிடப்பது; வேலையில்லாத் திண்டாட்டம்; விலைவாசி உயர்வு; அண்மையில் எதிர் கொள்ளவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தல், அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுமையும் வலுத்துள்ள எதிர்ப்புக் குரல் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடிக் கேள்விகள், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த சம்மட்டி அடி, போட்ட வாய்ப் பூட்டு; மாநில அரசின் மசோதாக்களுக்கு கையொப்பமிட ஆளுநர்களுக்கு, குடியரசு தலைவருக்கு கால நிர்ணயம் செய்தது… இப்படியான பல்வேறு பிரச்சனைகள் நாடு முழுவதும் பேசு பொருளாகி ஆளும் காவிக் கூட்டத்திற்குக் கடுமையான உள்நாட்டு நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் பஹல்காம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவற்றை மடைமாற்றத்தான் பஹல்காம் சம்பவம் நடந்திருக்குமோ என்று யூகிப்பதை எவரும் தவறு என்று சொல்லிவிட முடியாது.
படிக்க:
🔰 ஆப்ரேஷன் சிந்தூர்: ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்கும் போலி தேசபக்தி – உண்மைப் போர் வெறி!
🔰 பாதுகாப்பு குறைபாட்டிற்குப் பொறுப்பு ஏற்காமல் போர்வெறியை த் தூண்டும் மோடி அரசு!
சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டது எந்த அளவிற்கு மனக் கொதிப்பை ஏற்படுத்துகிறதோ அதே அளவிற்கு 2002இல் குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது, உ.பி., ம.பி., மணிப்பூர் அரியானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறுபான்மையினர் மட்டுமல்ல; தலித்துகள் கொலை செய்யப்படுகின்ற பொழுது, மாட்டுக் கறி வைத்திருந்ததாக, மாட்டுக்கறி சாப்பிட்டதாக, பொதுக் கிணற்றில் – பொதுக் குளத்தில் தண்ணீர் எடுத்ததற்காக அல்லது குளித்ததற்காக கொன்று குவிக்கப்பட்ட போது; மசூதிகளும், தேவாலயங்களும், வீடுகளும் புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டம் ஆக்கிய போது இந்த சங்கிகளுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வரவில்லை? மனிதாபிமானம் மரத்துப்போனதா?
இவை யாவற்றின் குற்றவாளிகள் சங்கிப் பயங்கரவாதிகள் தானே? பாதிக்கப்பட்டோர் எத்தனை எத்தனை பேர்? இவர்களில் இஸ்லாமியர் மட்டுமல்ல; கிறிஸ்தவர் மட்டுமல்ல; எத்தனை நூற்றுக்கணக்கான ‘இந்து’க்களும் அடங்குவர்? இவை அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் குற்றவாளி கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியவர்கள் பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்துத்துவ மதவெறி கும்பலன்றி வேறு எவராகக் இருக்கக்கூடும்? இவை யாவும் மனிதநேயமிக்க செயற்பாடுகளோ? காவிக் கூட்டம் பதில் கூறட்டும்.
போர் நிறுத்தத்தை அமெரிக்க ட்ரம்ப் அறிவித்தது எப்படி? பாரத் மாதா கீ ஜெய் முழக்கத்துடன் போரை முடித்து வைத்தார் மோடி!
வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று அமெரிக்க ட்ரம்ப் மிரட்டியதாலேயே போரை இந்தியாவும் பாகிஸ்தானும் நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டன என்பதனை மறுத்து இந்திய தரப்பு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுதான் அவரது கூற்றுக்கான அர்த்தம். ஒவ்வொரு எக்ஸ்தளப் பதிவிலும் தமது நீண்ட உரையாடல்கள் விவாதங்கள் அறிவுறுத்தல்கள் காரணமாகவே இரண்டு நாடுகளும் போரை நிறுத்திக் கொள்வதற்கு சம்மதித்தன என்பதனை பட்டவர்த்தனமாக நாள்தோறும் வெளியிட்டுக் கொண்டே இருந்தார் ட்ரம்ப்.
மேலும் ஜெய்ஸ்வால் ‘காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சனை. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையையும் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பது எங்களது நீண்ட கால தேசிய நிலைப்பாடு. அந்தக் கொள்கை மாறவில்லை. உங்களுக்குத் தெரியும்… பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியை (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) விட்டுக் கொடுப்பதுதான் நிலுவையில் உள்ளது…’ என்ற பாணியில் கருத்து தெரிவித்துள்ளார். அப்படியெனில் காஷ்மீர் விவகாரம் குறித்து அதன் ஆரம்ப காலம் தொட்டு பிரச்சினையை அலசி ஆராய வேண்டியுள்ளது. காஷ்மீர் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்; இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று இருப்பதை மறைக்க முயல்வது உண்மையை ஆழக் குழி தோண்டி புதைப்பதற்கு சமமாகும். இத்தருணத்தில் இவ்விடயத்தை மேலும் விவரிக்க யாம் விரும்பவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பே ம.க.இ.க. போன்ற அமைப்புகள் “காஷ்மீர் யாருக்குச் சொந்தம்”? என்று வெளியிட்டுள்ள சிறு நூலை படித்தாலேயே உண்மை நிலையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
ஆனால் நிலைமைகள் இவ்வாறு இருக்க மக்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தையும், அரசியல் அறுவடையையும் மேற்கொள்ள காவிக் கூட்டம் 2019-ல் புல்வாமா பிரச்சனையை உருவாக்கியது போல பஹல்காம் பிரச்சனையை தற்போது கட்டவிழ்த்து விட்டு போரின் மூலம் அரசியல் அறுவடையை செய்துவிட்டு விமானப்படை வீரர்கள் முன் தானும் ஒரு ராணுவ வீரன் தான் என்று காண்பித்துக் கொள்ளும் வகையில் மோடி தனது தலையிலே ராணுவ தொப்பியை அணிந்து கொண்டு ‘பாரத் மாதா கீ ஜெய்’ முழக்கமிட்டு அப்பாவி ராணுவ வீரர்களையும் முழக்கமிடச் செய்துள்ளார். வெற்றி பெருமிதத்தில் மிதந்துள்ளார். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கமிடாதது தான் பாக்கி!
இந்த இழிசெயல்களுக்கு சங்கிகளோடு சேர்ந்து செய்தி ஊடகங்கள் அனைத்தும் ஒப்பாரி வைத்ததும், இந்தியா கூட்டணி உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து மாரடித்ததும் கேவலம்! அவமானம்! வெட்கக்கேடு!
எனவே, எத்தருணத்திலும் காவிக் கூட்டம் ஒரு விடயத்தில் மூக்கை நுழைக்கிறது என்றால் அதில் பல கோடி கண்கள் கொண்டு, பல கோடி சந்தேகங்களை மக்கள் உருவாக்கிக் கொள்வதும் அதன் மூலம் உண்மை எதுவாக இருக்க முடியும் என உறுதிப்படுத்திக் கொண்டு, இறுதி பரிகாரம் காண முற்படுவதுமே நாட்டிற்கு நலம் பயக்கும். இல்லையேல் இம்மாபாவிகள் நாட்டை சுடுகாடாக்காமல் விடமாட்டார்கள் என்பது திண்ணம்.
– எழில்மாறன்