”தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடு செல்ல வேண்டாம்” என பல அறிவுருத்தல்களை அருளிவிட்டு. அன்றைய தினமே அரசுமுறை பயணமாக 5 வெளிநாடுகளுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி. மே 18-ம் தேதியன்று முதன்முறையாக இந்திய பிரதமர் ஒருவர் நார்வே-க்கு சென்றுள்ளார். இந்த ‘சிறப்பான’ செய்தியை, சங்கிகள் சோசியல் மீடியா மூலம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்து கொண்டிருந்தபோது, ஓட்டமும் நடையுமாக மோடி நார்வே தலைநகர் ஓஸ்லோவிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

என்ன நடந்தது நார்வேயில்?

”ஊடக சுதந்திரத்தில் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கைக்களிடமிருந்து சில கேள்விகளை எடுத்துக் கொள்கிறீர்களா?” ஓஸ்லோ நகரத்தின் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், நமது விஷ்வகுருவின் வியர்வை நாளங்களை திறந்த கேள்வி இதுதான். கேள்விக்குப் பதிலளிக்காமல் சென்ற, 56 இன்ச் மார்பகம் கொண்ட அந்த வீரனின் வீடியோவை அந்த பத்திரிக்கையாளர் ஹெல் லிங் (Helle Lyng) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பத்திரிக்கையாளர்களை மோடி சந்திக்க மாட்டார் என்பது நமக்கு தெரிந்த செய்திதான். அதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. ஹெல் லிங்-ம் அப்படி தான் சொல்லியுள்ளார். ”மோடி பதிலளிப்பார் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனாலும் அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேள்வியெழுப்புவது தான் என் வேலை” என பதிவிட்டுள்ளார்.

மோடியின் வாயாக தூதரகம்

மேற்கண்ட சம்பவத்தை தொடர்ந்து, மோடிக்கு வாயாக நாங்கள் இருக்கிறோம். இரவு 09.30 மணிக்கு ராடிசன் ஃப்ளு ஹோட்டலுக்கு (எங்கயோ கேட்ட பேரு மாதிரி இருக்குல்ல! அதேதான். ஆனா நார்வே) வாங்க. நாங்க பதில் சொல்கிறோம் என ஹெல் லிங் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களை அழைத்து சந்திப்பு நடத்தியுள்ளது, நார்வேவுக்கான இந்திய தூதரகம். அங்கு சென்ற ஹெல் லிங் ”மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடக்கிறதே, உங்களை நாங்கள் ஏன் நம்ப வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார். அதிற்கு பதிலளித்து பேசிய, மேற்கு நாடுகளுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், ஜனநாயக அரசியலமைப்பு, நாகரீக தொட்டில், ஜி20 மாநாடு, யோகா, கொரோனோ என கேள்விக்கு நேரடி பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து மழுப்பியுள்ளார். அதைக் கண்டித்த ஹெல் லிங் நேரடியாக கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என குறுக்கிட்ட போதும் பதில் வரவில்லை. ”எனது கேள்விகள் மூலம் எப்படியாவது நேரடி பதில் பெற முயற்சிப்பேன். அல்லது பதில் பெற்றதற்கான உணர்வை அடைவேன், ஆனால் நான் இருமுறை குறுக்கிட்டபோதும் இங்கு அப்படி எதுவும் நிகழவில்லை” என அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை விமர்சித்துள்ளார் ஹெல் லிங்.

படிக்க:

 வேலையில்லா இளைஞர்களை இழிவுப்படுத்தும் நீதித்துறையின் அதிகாரத் திமிர்!

 இந்தியாவில் பல்லிளிக்கும் பத்திரிக்கை சுதந்திரம்!

மோடியை கேள்வியெழுப்பியதை குறித்த ஹெல் லிங் –ன் எக்ஸ் தள பதிவை  ராகுல் காந்தி பகிர்ந்துள்ளதை தொடர்ந்து, ராகுல் காந்தியிடம் போனில் பேட்டி கேட்டுள்ளார் ஹெல் லிங். ராகுல்காந்தி பதிலளித்ததாக இதுவரை தகவல் இல்லை. பேட்டி கொடுத்தால் ஹெல் லிங் பாகிஸ்தான் அல்லது சீன கைக்கூலியாகவோ அல்லது இந்துத்துவா எதிர்ப்பாளராகவோ அடையாளப்படுத்தி, சமூக வலைத்தள தாக்குதல் துவங்குவார்கள்.

இந்திய ஊடக சுதந்திரம்

‘அதிர்ஷ்டவசமாக’ ஹெல் லிங் இந்தியராக இல்லை. இருந்திருந்தால் இது போன்ற கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டார்.  ஒருவேளை கொஞ்சம் சுரணையோடு கேட்டிருந்தால், இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் அல்லது சனாதன் சன்ஸ்தா போன்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளால் கொல்லப்பட்டிருப்பார். அல்லது ”இந்திய நீதிமன்ற சர்வாதிகாரம்” குறித்து பேசிய இந்திய யூடியுபர் குல்ஷனுக்கு எதிராக தானாக முன்வந்து வழக்கு தொடுத்து, விசாரித்து 2000 ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள டெல்லி நீதிமன்றம் போல உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பேரரசரின் மனங்கோனும்படி நடந்து கொண்டமைக்காக சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டுக்கலாம். ஆனால் அவர் நார்வேயில் இருப்பதால் தற்போதைக்கு எவ்வித முன்னறிவிப்பும், எச்சரிக்கையுமின்றி, மெட்டா நிறுவனம் ஹெல் லிங்-ன் முகநூல் மற்றும் இன்ஸ்டா பக்கங்களை முடக்கியுள்ளது. மேலும் தான் ஒரு உளவாளி அல்ல என்கிற வகையில் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஹெல் லிங் செய்தது சரியா தவறா?

சம்பவத்தைத் தொடர்ந்து சுதந்திர பத்திரிக்கையாளர்களும், ஊடகங்களும் ஹெல் லிங்-டம் தொடர்ந்து பேட்டி எடுத்து வருகின்றனர். அனைவருக்கும் நிதானமாக பொறுத்தமாக பதிலளித்து வருகிறார். குறிப்பாக NDTV கேள்விகளால் அவரை அணுகிய விதம் மிக மோசமாக இருந்தது. இந்தியா குறித்து என்ன தெரியும்? ஓஸ்லா வில் நடந்தது பத்திரிக்கையாளர் சந்திப்பு இல்லையே, அது செய்தி வெளியீடு தானே, அங்கு ஏன் கேள்வி எழுப்பினீர்கள்? பத்திரிக்கை சுதந்திரம் தரவரிசை என்பது போலியானது. சில போலியான என்.ஜி.ஓ க்களால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதை வைத்து இந்தியாவை எப்படி மதிப்பிடுவீர்கள் என்பன போன்ற கேள்விகள் எழுப்பி, நண்பனின் நார்வே அவமானத்தைத் துடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது, அதானியின் NDTV.

ஆனால் மேற்கண்ட கேள்விகள் உள்ளிட்டு பல கேள்விகளுக்கும், இந்த நிகழ்வு குறித்து இந்தியாவில் விவாதிக்கப்படுவது குறித்தும் தொடர்ந்து பதிலளித்து வருகிறார் ஹெல் லிங். குறிப்பாக பிபிசி இந்தி செய்தி நிறுவனத்திக்கு அவர் அளித்துள்ள விரிவான பேட்டி கவனிக்கத்தக்கது.

படிக்க:

 “ கோடி மீடியா க்களால்” சந்தி சிரிக்கும் பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை!

 தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் மோடிக்கு சொம்படித்த கோடி மீடியாக்களுக்கு செருப்படி!

”ஜனநாயகம் என்றால் என்ன? உங்கள் பிரதமர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பேசுகிறார். ஆனால், உங்கள் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நபரை கேள்வி கேட்பதற்கான வாய்ப்பே இல்லை என்றால் ஜனநாயகம் என்பது என்னவாக இருக்கும்? உங்கள் தலைவர்களிடமும் அவர்களது கொள்கைகளிடமும் உங்களால் நேரடியாகக் கேள்விகளைக் கேட்க முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள நீங்கள், விவாதங்களை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்கிறீர்கள் என்பது குறித்து நான் கவலைப்படுகிறேன். இந்தியாவில் இதழியல் என்பது ஆபத்தான ஒரு தொழில். அங்குள்ள பத்திரிகையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நான் பத்திரிகை துறையில் இருக்கும் வரை, கேள்விகளை எதிர்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன் நார்வேக்கு வரும் எந்தவொரு பிரதமர் அல்லது அதிபரின் அணுகுமுறையையும் தொடர்ந்து எதிர்ப்பேன் என பிபிசி இந்திக்கு பேட்டி அளித்துள்ளார்.

பத்திரிக்கை சுதந்திர குறித்த தரவரிசை யாரால் எடுக்கப்பட்டது. அதன் உண்மைத் தன்மை என்ன என்பது ஒருபுறம் இருக்கட்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக் கொள்கிறீர்களே, உங்கள் தலைவரை கேள்வி கேட்க முடியவில்லை என்பது என்ன வகையான ஜனநாயகம் என ஹெல் லிங் முன்வைத்துள்ள கேள்வி மிக முக்கியமானது. விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால் மோடியின் ஊதுகுழலான ஊடகங்கள் அதை விவாதிக்காது.

”வெளிப்படைத்தன்மையும், பொறுப்பேற்கும் குணமுமில்லாத மோடி, எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் பத்திரிக்கையாளர்கள் அவரை கேள்வி எழுப்புங்கள். அது இந்திய மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவை” என குறிப்பிட்டுள்ளார் யுடியுபர் துருவ் ரதீ. வேலையில்லா இளைஞர்களை கரப்பான்பூச்சி என குறிப்பிட்ட நீதிபதியின் கருத்தைக் கண்டித்து உருவாகி, இந்த வாரத்தில் பிரபலமாகியுள்ள ”காக்ரோச் ஜனதா பார்ட்டி”, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் கண்டிப்பாக பத்திரிக்கையாளர் சநதிப்புகளை நடத்த வேண்டுமென்பதை முக்கிய கோரிக்கையாக முன்வைத்துள்ளது.  தற்போது இத்தாலி பிரதமரிடம் சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மோடி ஊர் திரும்பியவுடன், “எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் மோடி” என அவர் செல்லுமிடமெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டும்.

ஹெல் லிங்-ன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நார்வே பிரதமர், ”நம்மைப் போல அவர்களுக்கு (இந்தியர்களுக்கு) பத்திரிக்கைகளைச் சந்தித்து பழக்கமில்லை” என பேசினார். உண்மையில் அவர் கிண்டலடிக்கவில்லை. கேள்விகளுக்குப் பதிலளிக்காத பாசிச கும்பலை அம்பலப்படுத்துவோம்.. பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவதைத் தொடர்ந்து செய்வோம்.

  • இளமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here