
ஒன்றிய மோடி அரசு அனைத்து கட்சி எம்.பிக்கள் அடங்கிய ஏழு குழுக்கள் அமைத்து 33 நாடுகளுக்கு அனுப்பி பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஆபரேஷன் சிந்தூரை நியாயப்படுத்தியும் பேச வைத்துள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், திமுக எம்பி கனிமொழி உட்பட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது கிரீசுக்கு சென்ற குழுவுக்கு தலைமை தாங்கி பேசிய கனிமொழி ‘ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒற்றுமையாக செயல்படுகிறோம்’ என்று பேசியுள்ளார்.
கடந்த மாதம் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலாப் பயணிகள் 24 பேரும், காப்பாற்ற சென்ற இரண்டு காஷ்மீர் இஸ்லாமியர்களும் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சுற்றுலா பயணிகளைப் பாதுகாக்கத் தவறிய தனது தோல்வியை மறைக்க ஒன்றிய பாஜக அரசு எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் குறிப்பாக, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தியதாக செய்தியை பரப்பியது. பாகிஸ்தான் அரசோ இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று அறிவித்தது.
இந்நிலையில் பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் மே 7 அன்று இந்து மத சாயம் பூசப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை அழித்ததாக மோடி அரசும் கோடி மீடியாக்களும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு பொதுமக்களின் குடியிருப்புகளை இந்திய ராணுவம் தாக்கியதாக கூறி இந்தியாவின் மீது எதிர்தாக்குதல் நடத்தியது. இது இருநாட்டுக்கும் இடையில் போராக மாறும் சூழ்நிலையில் ட்ரம்பின் உத்தரவுக்கு பணிந்து பாசிச மோடி அரசு பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தியது. பாகிஸ்தானும் நிறுத்திக் கொண்டது.
‘ஆப்ரேஷன் சித்தூர்’ நடவடிக்கையை ஓட்டாக அறுவடை செய்யும் வேலைகளிலும் மோடி அமித்ஷா கும்பல் இறங்கியது. குஜராத்தில் மோடி நடத்திய ‘ரோடு ஷோ’ வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
படிக்க:
🔰 ”திரங்க யாத்ரா” தேசபக்தி பஜனையில் ஒன்றிணையும் எதிர்க் கட்சிகள்!
🔰 மைசூர் பாக் டூ ‘மைசூர் ஸ்ரீ’ : தேசிய வெறியைப் பரப்பும் சங்கிகள்!
பெஹல்காமில் யார் தாக்கினார்கள்? பயங்கரவாதிகள் என்றால் எப்படி உள்ளே நுழைந்தார்கள்? தாக்கிவிட்டு எப்படி திரும்பிச் சென்றார்கள்? அந்த நேரத்தில் இராணுவம் ஏன் குறிப்பிட்ட பகுதியில் இல்லை? உளவுத்துறை என்ன செய்தது? இப்படியான எந்த கேள்விகளுக்கும் பாசிஸ்டுகளிடம் பதில் இல்லை. மாறாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக அத்தனை கேள்விகளையும் திசை திருப்பினார்கள். இப்பொழுது இந்த குழுவினால் பயனடையப்போவது என்னவோ மோடி தான். இதற்காகத்தான் இந்தியா கூட்டணி எம்பிக்கள் வேலை செய்கிறார்கள்.
ஒன்றிய மோடி ஆட்சியில் இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில், மாட்டுக்கறி கடத்தியதாக இஸ்லாமிய இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது காவிப் பாசிசக் கும்பல்.
மறுபுறம் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து காடுகளையும், மலைகளையும் பாதுகாக்கும் அரணாக நின்று போராடிக் கொண்டிருக்கும் பழங்குடிகளையும், மாவோயிஸ்டுகளையும் ‘ஆபரேஷன் காகர்’ என்ற பெயரில் வேட்டையாடி வருகிறது பாசிச கும்பல். கனிம வளங்கள் நிறைந்த மலைகளை கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைக்க சொந்த நாட்டு மக்களின் மீது உள்நாட்டு போரை தொடுத்துள்ளது. இவர்களின் நரவேட்டைக்கு மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பசவராஜ் சமீபத்தில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டிற்கு கார்ப்பரேட் – காவிப் பாசிச பயங்கரவாதம்தான். இந்த பயங்கரவாதத்தை தான் எதிர்க்கட்சி எம்பிக்கள் பொதுவெளியில் ஒவ்வொரு நகரத்திற்கும், கிராமத்திற்கும் சென்று அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.
அதைவிடுத்து ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக பேரணி நடத்துவதும், இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதும், வெளிநாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் பற்றி பெருமை பேசுவதும் இந்திய மக்களுக்கு சிறிய நன்மையும் பயக்காது. மாறாக பாசிஸ்டுகளின் தேசியவெறிக்கு உழைக்கும் மக்கள் பலியாகி பாசிசத்தைப் பலப்படுத்தவே செய்யும். இதை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உணர வேண்டும். உணர வைப்போம்.
- நலன்
தோழர் நலன் அவர்களது இக்கட்டுரை சிறப்பு வாய்ந்தது; பாராட்டத் தகுந்தது. அனைத்து தோழர்களும் ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டும்.
கட்டுரை தலைப்பினை அடுத்து முதல் வாக்கிய அமைப்பு தவறாக உள்ளது. அதனைக் கூர்ந்து கவனித்து வாக்கிய அமைப்பை சரி செய்திடுக.
தோழர் நலன் அவர்களது இக்கட்டுரை சிறப்பு வாய்ந்தது; பாராட்டத் தகுந்தது. அனைத்து தோழர்களும் ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டும்.
கட்டுரை தலைப்பினை அடுத்து முதல் வாக்கிய அமைப்பு தவறாக உள்ளது. அதனைக் கூர்ந்து கவனித்து வாக்கிய அமைப்பை சரி செய்திடுக. ‘நமது நாட்டில் நிலவுவது கார்ப்பரேட் காவிப் பாசிசன் தான்’
என வாக்கியத்தை அமைத்துக் கொள்ளலாமா என்று கூட பரிசீலிக்கவும்.