
இந்தியாவின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று மோடி முன் வைப்பதை கண்டு நாடு வளர்ச்சி பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பனக் கும்பலும், நடுத்தர வர்க்கமும் ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர்.
சமீபத்திய புள்ளி விவரங்களின்படி இந்தியாவின் பொருளாதாரம் உலகில் உள்ள முதல்நிலை ஐந்து நாடுகளில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் ஐந்தாவது நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தாலும், ஜப்பானில் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 33,900 அமெரிக்க டாலர்களாகும். ஆனால் இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 2,800 அமெரிக்க டாலர்கள் மட்டும் தான். அது மட்டுமல்ல, மக்கள் தொகையில் பாதி பேருக்கும் மேல் மூன்றுவேளை உணவு உண்பதில்லை. பசி குறியீட்டில் இந்தியா 105 வது இடத்தில் உள்ளது. 100க்கு 35 பேர் வறுமையுடன் வாழ்கிறார்கள். 70 கோடி பேர் உணவு பாதுகாப்பின்மையில் தான் உள்ளனர்.
தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா வேலைகளில் மட்டுமே பணிபுரிகின்றனர். ஊதியம் மிகவும் குறைவாகவே பெறுகின்றனர். இந்தியாவின் 1% செல்வந்தர்கள் தேசிய செல்வத்தில் 40% கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் மொத்த மக்கள் தொகையில் 50% மேல் உள்ள மக்கள் வெறும் 3% மட்டுமே செல்வத்தை வைத்துள்ளனர்.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பெருமையடிப்பதற்கு ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராக 2018-2021 காலகட்டத்தில் பணியாற்றிய பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் என்ற பார்ப்பனரை அவரது பதவிக்காலம் முடிந்ததும் ஐஎம்எப் இல் இந்தியாவின் நிர்வாக இயக்குனராக நியமித்தது பாசிச மோடி கும்பல்.
அவர் India@100 எனும் தலைப்பில் ஆகஸ்ட் 2024 இல் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். மோடி அரசு பத்தாண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வல்லரசாகி விடும். பல நூற்றாண்டுகளாகக் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு மோடியினால் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. 2047 இல் 55 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறிவிடும். அப்பொழுது இந்தியா பொற்காலத்திற்குள் நுழைந்து விடும் என்று கதையளந்துள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்தை இந்த புத்தக மோசடிக்காக ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் பொறுப்பிலிருந்து விலக்கிக் கொள்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
இந்தியாவின் செல்வங்களை சூறையாடுகின்ற கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ச்சி பெற்றுக்கொண்டே செல்கிறார்கள். அவர்களுக்கு பொருத்தமாக பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்படுவது மட்டுமின்றி மக்களின் சேமிப்பில் உருவாகியுள்ள வங்கிகள் பல ஆயிரம் கோடிகளை அவர்களுக்கு கடனாக கொடுத்து தள்ளுபடி செய்கிறார்கள் என்பதை கீழ்க்கண்ட புள்ளிவிவரம் நமக்கு அறிவிக்கின்றது.
”யூகோ வங்கியின் முன்னாள் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் சுபோத் குமார் கோயல் 17 ஆம் தேதியன்று அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். M/s Concast Steel & Power Ltd(CSPL) நிறுவனத்திற்கு 6210 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடுகள் பெரிய அளவில் நடந்திருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடன் தொகையில் பெரும்பகுதி வேறு கம்பெனிகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு சுருட்டப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கூறுகிறது.
சுபோத் குமார் கோயல் பெரும் தொகை கையூட்டு பெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. லஞ்சப்பணம் கோயலின் உறவினர்களின் பல்வேறு பினாமி கம்பெனிகளுக்கு மாற்றப்பட்டு வெள்ளையாக மாற்றி சொத்துக்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. சோதனையில் வேறு பல லஞ்ச முறையீடுகளும் வெளிவந்திருக்கின்றன. CSPL நிறுவனர் சஞ்சய் சுரேகா டிசம்பர் மாதமே கைது செய்யப்பட்டு விட்டார். நிறுவனத்தின் பல சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.
கடன் வழங்கியதில் கையூட்டு பெற்றதாக கைது செய்யப்பட்ட உயர்மட்ட வங்கி தலைவர்கள் சிலர் பெயர் கீழே வருமாறு:
- எஸ் கே ஜெயின், சிண்டிகேட் வங்கி முன்னாள் CMD
- சியாமல் ஆச்சார்யா, ஸ்டேட் வங்கி Deputy MD
- யோகேஷ் அகர்வால் ,ஐ டி பி ஐ முன்னாள் CMD (கடன் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்)
- ரவீந்திர மராத்தே, பேங்க் ஆப் மகாராஷ்டிரா முன்னாள் CEO
- பிரதீப் சவுத்ரி, ஸ்டேட் வங்கி முன்னாள் சேர்மன்
- ராணா கபூர், எஸ் வங்கி நிறுவனர்
- பத்மபூஷன் சந்தா கொச்சார் ஐ சி ஐ சி ஐ வங்கி முன்னாள் CEO
இப்படி பட்டியல் நீள்கிறது. “10 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி ஊழலைப் பற்றி பேசும்போது கார்ப்பரேட், அரசு கள்ளக் கூட்டணி என்கிறோம். இந்த கள்ளக் கூட்டணியில் வங்கி உயரதிகாரிகள் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் முன்னாள் வங்கி அதிகாரியான ஆறுகுட்டி பெரியசாமி.
ஒரு எடுத்துக்காட்டாக வங்கிகளில் ஒருவர் 50 லட்சம் கடன் வாங்கினால் வட்டியுடன் சேர்த்து ரூ 1 கோடி தரவேண்டும். ஆனால் அனில் அம்பானி வாங்கிய 49,000 கோடி கடன்களுக்கு பதிலாக வெறும் 455 கோடியை அபராதமாக கட்டினால் போதும் என்கிறது ரிசர்வ் வங்கி. இந்தியா உலக பில்லியனர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2025 ஆண்டில் 271 பேர் பில்லியனர்களாக முன்னேறியுள்ளனர். அமெரிக்காவில் 800 பேரும், சீனாவில் 814 பேரும் பில்லியனர்களாக உள்ளனர். இந்த வகையில் பொருளாதாரத்தை சூறையாடிய தேசங்கடந்த தரகு முதலாளிகளான கொள்ளைக்காரர்கள் உலகின் பணக்காரர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
நாட்டின் இயற்கைவளங்களையும், கனிமவளங்களையும் கொள்ளையடிக்கின்ற தேசங்கடந்த தரகுமுதலாளிகளான அம்பானி, அதானி, அகர்வால் கும்பல் நிகழ்த்திவரும் பொருளாதார குற்றங்கள் மற்றும் வங்கிகளை சூறையாடுவது; இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்கு அள்ளிக் கொண்டு செல்வது; அதற்காக நாட்டில் நிலவி வருகின்ற சட்டங்களை வளைப்பது; இதற்கெல்லாம் சன்மானமாக தேர்தல் பங்கு பத்திரத்தின் மூலமாக பாசிச பாஜகவிற்கு பல்லாயிரம் கோடிகளை அள்ளி கொடுப்பது போன்ற அனைத்தும் சட்டப்படி நடப்பதால் இவை பயங்கரவாத நடவடிக்கைகளாக அறிவிக்கப்படுவதில்லை அல்லது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
படிக்க:
🔰 குறையும் வறுமை: புள்ளிவிவர மோசடியில் இறங்கியுள்ள மோடி கும்பல்!
🔰 மோடியின் பொருளாதார ஆலோசகரால் கிழிக்கப்பட்ட மோடியின் முகத்திரை!
”நாட்டின் கனிம வளங்களை சூறையாடாதே! பழங்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றாதே” என்று போராடினால், ’பயங்கரவாதிகள்’, ’தீவிரவாதிகள்’, ’நக்சலைட்டுகள்’. ’மாவோயிஸ்டுகள்’ என்று முத்திரை குத்தி எவ்வித விசாரணையும் இன்றி கொன்றொழிக்கப்படுகின்றனர்.
விவசாயத்திற்கு அடிப்படையான விளைநிலங்கள் கார்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு கொண்டே வருகிறது. அரசாங்க விவரப்படியே 2022 கணக்கின் படி 180.62 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலமாக சுருங்கியுள்ளது. ஆனால் கார்ப்பரேட் தேவைக்காக நிலம் வாரி வழங்கப்படுகிறது. ஒரு விவரப்படி 2023 ஆம் ஆண்டில் மட்டுமே டெல்லியில் 36 பரிவர்த்தனைகளில் 9120 கோடி ரூபாய் மதிப்புள்ள 415 ஏக்கர் நிலமும், பெங்களுருவில் 14 ஒப்பந்தங்கள் மூலமாக 3,412 கோடி மதிப்புள்ள 305 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 2022-ல் 18,112 கோடி மதிப்புடைய 1603 ஏக்கர் நிலமும், 2023 சுமார் 110 ஒப்பந்தங்கள் மூலமாக 32,203 கோடி மதிப்புள்ள 1947 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில் 20 சதவீதம் கடந்த பத்தாண்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் காடுகளில், மலைகளில் பல தலைமுறைகளாக வாழ்கின்ற மக்கள் ”காடுகள் எங்களுக்கே சொந்தம்” என்று குரல் எழுப்பினால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். தலைக்கு விலை வைத்து படுகொலை செய்யப்படுகிறார்கள். விவசாயிகள் ”உழுபவனுக்கே நிலம்” என்று போராடினால் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று பெயர் சூட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள்.
மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் 70 கோடி மக்கள் பட்டினியில் வாடுகின்ற நாட்டில் செல்வம் ஒரு பக்கம் குவிந்து கொண்டே செல்வதும், நாட்டின் உழைக்கும் மக்களான எமதருமை மக்கள் பசியிலும், பட்டினியிலும் வயிற்றைக் கட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்ற அவல நிலையை எதிர்த்துப் பேசினால், ’நகர்புற நக்சல்கள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அரசாங்கத்தை விமர்சித்து கேள்வியெழுப்பும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள், சமூக செயல்பாட்டாளர்கள் வெளியிடுகின்ற அறிக்கைகள், கட்டுரைகள், செய்திகளின் உள்ளே புகுந்து போலியான ஆவணங்களை புகுத்தி குறிப்பிட்ட சில காலத்திற்கு வெளியில் வர முடியாத அளவிற்கு சைபர் தாக்குதல்களை நடத்துகிறார்கள். இதன் மூலம் அவர்களை, ’தேச விரோதிகள்- பயங்கரவாதிகள்’ என்று சித்தரிக்க முயல்கிறார்கள்.
உண்மைக்கும், பொய்க்கும் இடையில் உள்ள இடைவெளியை புரிந்து கொள்ள முடியாத கோடிக்கணக்கான மக்கள் வசிக்கின்ற நாட்டில், ஜனநாயகம் என்பதை பற்றி புரிந்து கொள்ள முடியாத பிற்போக்குத்தனங்களிலும், மத மூடநம்பிக்கைகளிலும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்கள் வாழும் நாட்டில் அவர்கள் இப்படியே வாழ வேண்டும்; அவர்கள் கல்வியறிவு பெறக்கூடாது; ஆதிக்க சாதியினர், பார்ப்பனர்களுடன் போட்டி போடக்கூடாது; வறுமையில் கிடந்து சாக வேண்டும். மாறாக எந்தக்காலத்திலும் மேட்டுக்குடியினர், பணக்காரர்களுக்கு சமமாகவும் அல்லது அவர்களுக்கு இணையாகவும் முன்னேறி விடக்கூடாது என்பதையெல்லாம் தான் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம் என்கிறோம்.
நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற இந்த பொருளாதார குற்றங்கள், பொருளாதார சுரண்டல்கள், வர்க்க ரீதியான ஒடுக்குமுறைகள் ஆகியவற்றைத் தான் உண்மையான பயங்கரவாதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதன் பின்னணியில் உள்ள ஆர்எஸ்எஸ் – பாஜகவினர் இந்த உண்மைகளை மறைத்து நாட்டின் மீது அக்கறையும், பொறுப்பும், தேசபக்தியும் கொண்ட கம்யூனிஸ்டுகள் மீது அவதூறு பரப்புவதும், மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கு, ’பயங்கரவாத, பிரிவினைவாத, தீவிரவாத’ பீதியூட்டுவது தற்காலிகமாக வெற்றி பெறலாம்.
ஆனால் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளும், தொழிலாளர்களும், சிறு குறு தொழில் முனைவர்களும், அறிவுத்துறையினரும் தங்களது வாழ்க்கையின் அவலங்களுக்கும், துன்ப துயரங்களுக்கும் உண்மையான காரணங்களை புரிந்து கொள்ளும் போது கோடிக்கால் பூதமாக எழுந்து உண்மையான பயங்கரவாதிகளை மூச்சந்தியில் நிற்க வைத்து தக்க தண்டனை கொடுப்பார்கள்.
◾ பார்த்த சாரதி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்தை இந்த புத்தக மோசடிக்காக ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் பொறுப்பிலிருந்து விலக்கிக் கொள்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
இவரை நியமித்தது மோடி அரசு எனில் , ஏன் அவர்களே இவரை விலக்கி கொள்ள வேண்டும்.
இந்த வாக்கியம் புரியவில்லை.