இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் ஆர்எஸ்எஸ் காலிகள் செய்யும் களவாணித்தனங்கள்!

குற்றம் சுமத்தப்பட்ட ஜெகதீஷ் சிங், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராக உள்ளார். அடுத்த நபரான நரேந்திர  சுக்லா, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் தலைவராக உள்ளார்.

1
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் ஆர்எஸ்எஸ் காலிகள் செய்யும் களவாணித்தனங்கள்!
2021 – 22 மற்றும் 22 – 23 நிதி ஆண்டுகளில் ICHR -ல் சுமார் 16 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக சிறப்பு தணிக்கையில் கண்டறியப்பட்டது.

மோடி தலைமையிலான பாஜக ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே அனைத்து அரசுத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் நபர்களை இட்டு நிரப்பும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. அதேபோலத்தான் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் (ICHR) ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய அகில பாரதீய இதிஹாஸ் சங்கலன் யோஜனாவின் (ABISY) உறுப்பினர்கள் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.

இந்திய வரலாற்றை மாற்றி மீண்டும் எழுதுவது என்ற சங்பரிவார் கும்பலின் முக்கிய அஜெண்டாவை நிறைவேற்றும் நோக்கில்தான் இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன. ABISY –  யின் அலுவலகம் டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில்தான் செயல்படுகிறது என்பதிலிருந்து இவற்றின் நெருக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் வழிநடத்தப்படும் ICHR மூலமாக வரலாற்றுத் திரிபும், சித்தாந்த மாற்றமும் நடக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கூடுதலாக இங்கு ஊழலும், நிதி முறைகேடுகளும் நடந்து இப்போது சந்தி சிரிக்கிறது. சென்ற மாத தொடக்கத்தில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (CVC) ICHR – ல் சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதைக் கண்டறிந்து, ABISY – ன் 4 உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டியது.

இவர்கள் மீது மட்டுமல்லாமல் முன்னாள் அதிகாரிகள் 11 பேர் மீதும் அபராத நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றியக் கல்வி அமைச்சகத்திற்கு CVC அறிவுறுத்தியுள்ளது. 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுகளில் இந்திய லோக்பால் அமைப்பில் இரண்டு முக்கிய புகார்கள் தரப்பட்டன. ICHR – ல் நியமனங்கள், நிதி மற்றும் பதவி உயர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக அந்தப் புகார்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்துதான் நிறுவனத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது குறித்து நடந்த விசாரணையில் 14 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் கண்டறியப்பட்டன. மூத்த அதிகாரிகளின் “பொறுப்பற்ற செலவினக் களியாட்டத்தை” விசாரணை வெளிக்கொணர்ந்தது. CVC குற்றம் சுமத்தியவர்களில் ஒருவர் ICHR – ன் துணை இயக்குனரும் ABISY-யின் விளம்பரப் பிரிவு தலைவராகவும் இருக்கும் சௌரவ் குமார் மிஸ்ரா ஆவார். ABISY அமைப்பின் தலைவரான பால் முகுந்த் பாண்டேவின் மருமகன்தான் இவர்.

இன்னொரு நபரான ஓம் ஜி உபாத்யாய் ICHR – ன் மிகவும் சக்தி வாய்ந்த உறுப்பினர் செயலாளர் பதவியை வகிப்பதோடு ஆராய்ச்சி மற்றும் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். மேலும் இவர் ABISY இன் மூத்த எழுத்தாளராவார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இவர் மோடி அரசின் மோசமான நடவடிக்கைகளுக்கும் முட்டுக் கொடுப்பதில் வல்லவராகத் திகழ்கிறார்.

குற்றம் சுமத்தப்பட்ட ஜெகதீஷ் சிங், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராக உள்ளார். அடுத்த நபரான நரேந்திர  சுக்லா, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் தலைவராக உள்ளார். இந்த இருவரும்தான் முக்கிய முடிவெடுக்கும் குழுவில் இருந்தனர். முன்னாள் ICHR செயலாளர்களான உமேஷ் கதம் மற்றும் குமார் ரத்னம் ஆகியோரையும், அவர்களின் பதவிக்காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்குமாறு அரசுக்கு CVC அறிவுறுத்தியது. தற்போது JNU – வில் கற்பிக்கும் பணியில் உள்ள உமேஷ் கதம் ABISY – ன் உறுப்பினராகவும் உள்ளார். CVC யின் பரிந்துரையை ஏற்ற ICHR – ன் ஒழுங்குமுறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த விவகாரம் தீவிரத் தன்மையுடன் கையாளப்படும் எனவும் அறிவித்தனர்.

இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் நோக்கம்!

ICHR எனும் இந்த வரலாற்று ஆய்வு நிறுவனம் 1972 – ல் தொடங்கப்பட்டது. கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் இந்நிறுவனம், அரசாங்க நிதி உதவியுடன் வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதன் முடிவுகளை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் 2017 ஆம் ஆண்டு முதல் இணையும் ABISY உறுப்பினர்கள், இதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் மகாபாரதக் காலத்தில் இருந்து தற்போது வரையிலான வரலாற்றை இந்திய கால வரிசைப்படி மீண்டும் தொகுத்தல் என்ற வேலையை செய்யப் போவதாக அறிவித்தனர்.

படிக்க:

🔰 வகுப்பறையில் சாணி பூசிய டெல்லி பல்கலைக்கழக முதல்வர்! பதில் சம்பவம் செய்த மாணவர்கள்!

🔰 மதங்களின் தோல்வியும், அறிவியல் வெற்றியும்!

இந்துத்துவ சிந்தனை கொண்ட, போதிய தகுதியில்லாத இத்தகைய நபர்கள் ICHR ல் புகுத்தப்பட்டு, பிறகு அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இப்போது 5 அதிகாரிகள் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  தவறான மற்றும் சட்ட விரோதப் பணி நியமனங்கள், விதிகளை மீறி கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்தல், ஆராய்ச்சி மற்றும் மின்னணு சாதனங்களை முறைகேடாக வாங்குதல் ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

நிதி முறைகேடுகள்

2021 – 22 மற்றும் 22 – 23 நிதி ஆண்டுகளில் ICHR -ல் சுமார் 16 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக சிறப்பு தணிக்கையில் கண்டறியப்பட்டது. 2023 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட புகாரில் ABISY யின் அதிகாரம் பெற்ற நபர்களின் ஆதரவுடன் திட்டமிட்ட முறையில் அரசாங்க நிதியை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இவர்கள் செயல்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை புறக்கணித்து பொறுப்பற்ற முறையில் செலவு செய்துள்ளனர் என்பதை விசாரணை வெளிப்படுத்தியது. இதில் மிக முக்கிய முறைகேடு என்னவென்றால் ICHR க்கு இறுதிப் பணியை (ஆய்வு முடிவை) சமர்ப்பிக்காத 397 ‘அறிஞர்களுக்கு’ 6.26 கோடி நிதி வழங்கப்பட்டது தான்.  ICHR விதிகளை மீறி முழுமையடையாமல் இருக்கும் 85 திட்ட இயக்குனர்களிடம் இருந்து கூடுதலாக 1.09 கோடி திட்ட மானியங்கள் வசூலிக்கப்படவில்லை. ICHR கட்டிடத்தில் 2.55 கோடி  மதிப்பிலான பழுது பார்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை தகுதி வாய்ந்த அதிகாரியிடம் ஒப்புதல் பெறாமல் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை பின்பற்றாமல் நிறைவேற்ற உமேஷ் கதம் உத்தரவிட்டார் என்பதை தணிக்கைக்குழு கண்டறிந்தது. இதை ஒரு கடுமையான முறைகேடு என்றும் கூறியது.

முறைகேடான நியமனங்களும், பதவி உயர்வுகளும்!

ஒருபுறம் நிதி முறைகேடுகள் என்றால், மறுபுறம் பதவி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளிலும் ஏராளமான தில்லுமுல்லுகளை சங்கிகள் அரங்கேற்றியுள்ளனர். உதவியாளர் பதவியில் இருந்து பிரிவு அதிகாரியாகவும், பிரிவு அதிகாரியிலிருந்து உதவி இயக்குனராகவும் குறுகிய கால அவகாசத்தில் பதவி உயர்வு அளிப்பதும், இல்லாத பதவியை எல்லாம் புதிதாக உருவாக்கி பணி நியமனம் செய்வதும், வயது வரம்புகளைப் பற்றி கவலைப்படாமல் தேவையான முன் அனுபவங்களை கணக்கில் கொள்ளாமல் என முறைகேடுகளுக்கு அளவே இல்லாமல் சங்கிகள் ஆடி உள்ளனர்.

இயக்குனராக உள்ள உபாத்யாய் மற்றும் உறுப்பினர் செயலாளராக இருந்த குமார் ரத்னம் போன்றோரே இத்தகைய முறைகேடுகளுக்கு காரணமாக இருந்துள்ளனர். 2018 ஆம் ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆள் சேர்ப்பு தேர்வுகளை நடத்த ICHR ஒரு தனியார் நிறுவனத்தை நியமித்தது. இந்த நிறுவனத்திற்கு 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் உரிய பொது நிதி விதிகளையோ, இ- டெண்டர் செயல்முறைகளையோ பின்பற்றாமல் தேர்வு செய்யப்பட்டதாக 2022 ல் லோக்பாலில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆட்சேர்ப்பு நிறுவனம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக செயல்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. மத்திய விஜிலன்ஸ் அமைப்பானது, மே 2024 ல் இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக தர்மேந்திர சிங், ஓம் ஜீ உபாத்யாய் மற்றும் ரஜனிஷ்குமார் சுக்லா ஆகியோரை அடையாளம் காட்டியது. போதிய விழிப்புணர்வு இல்லாததே நடந்த தவறுக்கு காரணம் என உபாத்யாய் விளக்கம் அளித்தார். இதனை ஏற்று செப்டம்பர் 2024 ல் மூவரும் எவ்வித தண்டனையோ அபராதமோ இன்றி மோசடிப் புகாரிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப் பட்டுள்ளது. ICHR தலைவர் ரகுவேந்திர தன்வார், குற்றப் பத்திரிகை வழங்கப் பட்டவர்களிடம் 45 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது என்றார்.

இவர்களும் தண்டிக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை.

இதுவே இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு எதிர் தரப்பினர் என்றால் எவ்விதப் புகாரும் இன்றியே கூட அடக்குமுறை பாயும். பிணை கூட வழங்காமல் நீண்ட சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். ஆனால் அவர்களுக்கு ஆதரவு சக்திகள் என்றால் குற்றம் நிரூபணம் ஆனாலும் தண்டனை இன்றி தப்பி விடுவர். இதுவே இன்றைய கள எதார்த்தம். இந்த அராஜக நிலை தொடர  அனுமதிக்கப் போகிறோமா அல்லது போராடி மாற்றப் போகிறோமா?

  • குரு

1 COMMENT

  1. இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் சங்கிகள் கணிசமாக நிரப்பப்பட்டு இருப்பதும், தமது காவிக் கொள்கைக்கு உடன்படாதவர்களை தூக்கி அடிப்பதும், உடன் பட்டவர்களை உச்சி மோர்வதும், நிதி மோசடி உள்ளிட்ட அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தப்ப விடுவதும், ஆனால் நேர்மையானவர்கள் மீது பொய்யான குற்றம் சுமத்தி தண்டிக்க முற்படுவதும் பாசிஸ்டுகளான ஆர்எஸ்எஸ் பாஜக மோடி கும்பளின் தொழிலாகிப் போய் விட்டது… என்பதனை கட்டுரையாளர் தோழர் குரு சுருக்கமாயினும் நறுக்குத் தெரித்தாற் போல கட்டுரையை வடித்திருக்கிறார். அவருக்கு எமது பாராட்டுக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here