“தமிழர்களின் நலன் சார்ந்து சட்டமன்றத்தில் எத்தனை சட்டங்கள் நிறைவேற்றினாலும், அவை பார்ப்பனர் நலன்களுக்கு உகந்தவை அல்ல என்று கருதுவார்களேயானால், அதனை எந்த வகையிலும் முடக்கிப் போடும் வல்லமையைக் கொண்டுள்ளன பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள ‘உச்சிக் குடுமி’ நீதிமன்றங்கள்”
-என்று தந்தை பெரியார் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்னரே ஓங்கி ஒலித்தார். பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் அங்கம் வகித்த அவர், சுயமாக ‘சுயமரியாதை இயக்கம்’ துவங்கிய சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பே பெரியார் கூறிய கூற்று நூற்றாண்டு கடந்த பின்னரும் நீடித்து நிலைத்து நிற்கின்ற கொடுமைகளைப் பார்க்கின்ற பொழுது இது ஜனநாயக நாடா? குடியரசு பெற்ற நாடா ? என்ற கேள்வியை எழுப்பி மக்கள் வெகுண்டெழுந்து பார்ப்பன அரசுக்கு எதிராகவும், நீதித்துறையின் இவ்வளவு இழிந்த தீர்ப்புக்கு எதிராகவும், அரசியல் சட்ட அமைப்பு முறைக்கு எதிராகவும் – களம் கண்டு சமர் புரிய கொதித்தெழுந்திருக்க வேண்டும். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிவு ஜீவிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்ச்சிகள், யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் சிற்சில நேர்காணல்கள், எதிர்ப்புகள் தவிர வெகுமக்கள் மத்தியில் அவ்வாறு எவ்வித எதிர்ப்புணர்ச்சியும் தென்படவில்லை. இந்த அவல நிலையே பார்ப்பன ஆதிக்கம் நிலைத்து நிற்கவும், காவிப் பாசிசம் பற்றி படரவும் வழி வகுக்கின்றன.
ஆர் எஸ் எஸ் பாஜகவின் தமிழக உண்மைத் தலைவர் ஆர். என். ரவி.
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு முதல் ஆளுநராக வீற்றிருக்கும் ஆர்.என் ரவியின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒன்றிய பாசிச பாஜக அரசின் ஏவல் நாயாக இருந்து கொண்டு தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இயற்றும் அனைத்து மசோதாக்களையும் முடக்கிப் போடுவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, முதல்வருக்கு மேல், தானே தன்னிகரற்ற மன்னர் போல் பவணி வருவதும், தமிழ்நாடு அரசின் அனைத்து நலன் சார்ந்த திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுவதும், பாசிச மோடி – அமித்ஷா கும்பல் இடுகின்ற கட்டளையை மட்டுமே தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முனைவதும், தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் தவறாமல் ஆர்எஸ்எஸ் – பாஜக கொள்கைகளைப் பரப்புவதும், அரசு சார்ந்த நிகழ்வுகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்தை போட வைக்கும் உத்தியைத் தொடர்ந்து செய்து வருவதும், தமிழ்நாட்டில் சாதி மத வெறி இயக்கங்களை உரம் ஏற்றி வளர்ப்பதும், உலகப் பொது மறையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், நெற்றியிலே- கரங்களிலே விபூதி பட்டைகளைச் சாத்துவதும், அதன் மூலமாக திருவள்ளுவரை இந்து மத வளையத்திற்குள் இழுத்துப் போட முனைவதும், இந்து மதத்தின் ஆணிவேரையே அசைத்துப் பாடிய வள்ளலாரையும்
‘இந்து’ சட்டகத்துக்குள் அடைக்க முனைவதும், சட்டமன்றத்தில் அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை தன் இஷ்டப்படி மாற்றி அமைத்துப் படிப்பதும், சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையை ஆர் எஸ் எஸ் – பாஜக – இந்துத்துவா – காவிக் கொள்கைகளை பரப்புவதற்கான தலைமையகமாகக் கொண்டு செயல்படுவதுமாக எண்ணற்ற அலங்கோலங்களைச் செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்பதைத் தமிழகம் நன்கு அறியும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பும், குறுக்கு வழியில் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் முடக்கும் செயலும்:
ஆளுநர் ஆர்.என். ரவியின் அட்டகாசத்தை தாங்க மாட்டாத தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்களையும் கையெழுத்து போடாமல் முடக்கி வைத்த ஆளுநரை கையெழுத்திட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2025 ஏப்ரல் 8-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா-ஆர். மகாதேவன் அமர்வு ஆளுநரை கடுமையாகக் கண்டனம் செய்ததுடன் அரசியலமைப்பு விதி 142-ன்படி ஆர்.என். ரவி கையெழுத்து போடாமல் முடக்கி வைத்திருந்த பத்து மசோதாக்களையும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட அதே நாளில் கையொப்பமிடப்பட்டதாக கருதி தீர்ப்பு வழங்கியதை நாம் அறிவோம்.
படிக்க:
🔰 இந்திய நீதித்துறையின் அவலமும் பாசிசக் காவிக் கூட்டத்தின் ஆட்டமும்!
🔰 செந்தில் பாலாஜி முதல் உமர் காலித் வரை: நீதித்துறையின் பாசிசம்!
இந்நிலையில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கு அதிகாரம் பெற்ற தமிழ்நாடு அரசு இரண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேடுதல் கமிட்டியை மட்டுமே உருவாக்கி உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்ட நாளோ 08-04-2025. ஏப்ரல் மாதம் முடிவடையும் வரையிலும் RSS-பாஜக கும்பலுக்கு ஞானோதயம் பிறக்கவில்லை போலும். மே மாதம் விடுமுறைக்கால அமர்வில் நெல்லை மாவட்ட பாஜக செயலாளர் வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில், தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை கோரி வழக்குப் போடுகிறார். நியாயபூர்வமாக பார்த்தால் வழக்கு தொடுத்தவர் அவருக்குரிய எல்லைப் பகுதியான (Jurisdiction) சென்னை உயர்நீதிமன்ற –
மதுரை கிளையில் உள்ள விடுமுறை கால அமர்வில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மே முதல் வாரத்தில் விடுமுறை கால அமர்வில் இருந்த நீதிபதிகள் முன்பும் தாக்கல் செய்ய முன்வராமல், தனக்கு சாதகமான தீர்ப்பு எவர்களிடமிருந்து கிடைக்கும் என்று சரியாகக் கணித்து (Forum Shopping or bench fixing) நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் – லட்சுமி நாராயணன் அமர்வில் வழக்கினை தாக்கல் செய்கின்றனர். வழக்கினைப் பதிவுக்கு எடுத்துக் கொண்ட பதிவாளரோ, வழக்கு நீதிபதிகள் மேஜைக்கு வரும் பொழுதோ எவருமே இந்த வழக்கு விடுமுறைக்கால அமர்வுக்கு ஏற்ற அவசரகால வழக்கு அல்ல என்று கூறவோ, இந்த வழக்கின் மனுதாரர்க்கு உரிய எல்லைப் பகுதி மதுரை உயர்நீதிமன்ற கிளை என்று எடுத்துக்கூறி திருப்பி அனுப்பவோ முன்வரவில்லை. மாறாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் – லட்சுமி நாராயணன் அமர்வு பாஜகவின் வெங்கடாசலபதி எண்ணியது போலவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மே 21-ல் விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ‘தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க அரசு தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும்; சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் உள்ள 10 பல்கலைக்ககங்களில் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது; இந்தக் குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் மட்டுமே செய்துள்ளது; அதுவும் ஜூன் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது; அதனால் தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசு தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும்’…என வாதிட்டார்.
தமிழக உயர்கல்வித்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன், ‘துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானிய குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது; இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை; பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனுதாரர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்; மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது; நியாயமற்றது; அநீதியானது; வானம் இடிந்து விழுந்து விடாது;’-என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்.
இருப்பினும் செவிடன் காதில் ஊதிய சங்கு என்பதைப் போல நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன்-லட்சுமி நாராயணன் அமர்வு மனுதாரர் நெல்லை மாவட்ட பாஜக செயலாளர் வெங்கடாஜலபதி மனுவுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக தடையானை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.
யார் இந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்?
இவர் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே RSS இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்திருக்கிறார். எச்ச. ராஜா, ஆர்.என். ரவி, பாண்டே முதலானோர் பங்கேற்ற இந்துத்துவ வெறி இயக்கக் கூட்டங்களில் பங்கேற்று தான் ஒரு ஆர் எஸ் எஸ் காரன் தான் என புளகாங்கிதமாககருத்து வெளிப்படுத்தியுள்ளார்.
கரூர் பகுதியில் மூட நம்பிக்கைகள் நிறைந்த ஆன்மீக நிகழ்வு ஒன்றில் எச்சில் இலைகள் மீது உருண்டு புரளும் பாமர மக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பொது நல வழக்கு ஒன்றில் அப்படி உருளுவது ஆன்மீகத்தின் அடிப்படையில் தனிமனித உரிமை என தீர்ப்பளித்தவர்தான் இந்தக் கோமான் ஜி.ஆர். சுவாமிநாதன்
நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியபோது அதில் பயணித்த முப்படைத் தளபதி உட்பட சிலர் மாண்ட பொழுது பாஜகவின் ஏவல் நாய் மாரிதாஸ் என்பவன் தமிழ்நாடு அரசின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உடன்பட்டு போகும் நிலையே இதற்கு காரணம் என பல்வேறு அவதூறுகளை பரப்பிய பொழுது அவன் கைது செய்யப்பட்டதும், அதனை சாதாரண விடயமாக கருதி வழக்கை தள்ளுபடி செய்ததும் இதே கோமான் ஜி. ஆர். சுவாமிநாதன் தான்.
மயிலாடுதுறை பகுதியில் லாவண்யா என்ற மாணவியின் மரணத்திற்கு அவர் படித்த கிறிஸ்தவ பள்ளியில் உள்ள நிர்வாகம் தம்மை மதமாற்ற வற்புறுத்தியதாலேயே தற்கொலை செய்து கொண்டதாக ஒரு வதந்தியை அண்ணாமலை, வானதி, எச். ராஜா, தமிழிசை
போன்றோர்கள் பரப்பிட உண்மை எது என்று முனைந்து விசாரணை செய்யாமல் அதனை முக்கிய வழக்காக எடுத்துக்கொண்டு சதிராட்டம் போட்டவர் தான் இந்த ஜி.ஆர். சுவாமிநாதன். கடைசியில் அது குடும்பப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட நிகழ்வு என்பது வெட்ட வெளிச்சமானதும் அனைவரும் அடங்கிப் போயினர்.
எனவே, பாசிச ஆர்.எஸ்.எஸ் பாஜக இந்துத்துவ காவிக் கூட்டம் என்பது அரசியல் அரங்கில் மட்டுமல்ல; அங்கிங்கெனாத படி நீதித்துறை உட்பட அனைத்திலும் உட்புகுந்து உழைக்கும் மக்கள் நலனுக்கு விரோதமாக சதிராட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியே நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன்-லட்சுமி நாராயணன் அமர்வு நெல்லை மாவட்ட பாஜக செயலாளர் வெங்கடாஜலபதிக்கு ஆதரவாக – தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிராக அளிக்கப்பட்ட தடையாணை உத்தரவாகும்.
இதனை பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட- பழங்குடியின மக்கள் குறிப்பாக மாணவர்கள் வெகுண்டெழுந்து போராடி உரிமையை நிலைநாட்ட முன்வர வேண்டும் என்பதே இன்றைய தேவை.
- எழில்மாறன்






