சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா (Surguja) பகுதி, வட சத்தீஸ்கரில் அமைந்துள்ள மிக அழகிய மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த பழமையான மாவட்டமாகும். இதன் நிர்வாகத் தலைமையிடமாக அம்பிகாபூர் (Ambikapur) நகரம் உள்ளது. இப்பகுதி அதன் இயற்கை எழில், பழங்குடியின கலாச்சாரம் மற்றும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் பெயர் பெற்றது.
இப்பகுதியின் பெரும்பகுதி (சுமார் 58%) காடுகளால் சூழப்பட்டுள்ளதுடன், 600 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பீடபூமி அமைப்புகளைக் (Pat formations) கொண்டுள்ளது. இப்பகுதியில் பாண்டோ (Pando) மற்றும் கோர்வா (Korwa) போன்ற பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
புராணங்களின்படி, ராமர் தனது 14 வருட வனவாசத்தின் போது சர்குஜாவிற்குச் சென்றிருந்தார். ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ராம்நகர், சீதா-பெங்ரா மற்றும் லக்ஷ்மன்கர் போன்ற பல இடங்கள், ராமர், லட்சுமணன் மற்றும் சீதா தேவியின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்தக் காட்டில் தான் தற்போது மரங்களை நட்டு வனப்பகுதி உருவாக்கப் போவதாக அதானி கதை அளக்கிறார்.
இங்கு PEKB நிலக்கரி சுரங்கத்தை அமைத்துள்ள அதானி என்டர்பிரைசஸ் நிறுவனமானது 40 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பசுமை வனப் பகுதியை அதிகரிக்கப் போவதாக கதை விட்டுக் கொண்டுள்ளது. அதை கார்ப்பரேட் எடுபிடிகள், மீடியாக்களில் பரப்பியும் வருகின்றனர்.
சுர்குஜாவின் புவியியல் அமைப்பு!
சுர்குஜா மாவட்டத்தின் உயர்நிலங்கள், சிறிய பீடபூமிகளைக் கொண்ட உயர்நிலங்களான ‘பாட்’ என்ற தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளன. மைன்பாட், ஜராங் பாட், ஜோன்கா பாட், ஜமிரா பாட் மற்றும் லஹ்சுன்பாட் ஆகியவை இவ்வட்டத்தின் முக்கியப் பகுதிகளாகும்.
இப்பகுதியின் சராசரி உயரம் 600 மீட்டருக்கும் (2,000 அடி) அதிகமாகும். மைலான் 1,226 மீட்டர் (4,022 அடி) , ஜாம் 1,166 மீட்டர் (3,825 அடி) , பார்டா கர்சா 1,159 மீட்டர் (3,802 அடி) , கந்தா தாரா 1,149 மீட்டர் (3,770 அடி ) , சுதாய் 1,131 மீட்டர் (3,711 அடி) மற்றும் கரோ 1,105 மீட்டர் (3,625 அடி) ஆகியவை இங்குள்ள சில சிகரங்களாகும்.

சுகுஜா மாவட்டத்தில் ஹஸ்தியோ நதி , ரிஹந்த் நதி மற்றும் கன்ஹார் நதி ஆகிய மூன்று நதிப் படுகைகள் உள்ளன. காடு மலை என அனைத்தையும் இயற்கை உருவாக்கி பராமரித்து வருகிறது. அதை அழிப்பதைத் தான் கார்ப்பரேட்டுகள் செய்து வருகின்றனர்.
சர்குஜாவின் கனிமப் பட்டைகள்:
ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அல்லது சீதாபூர்-சம்ரிப் பட்டை: இந்தப் பட்டை மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுடன் தொடர்புடையது. இங்கு பாக்சைட் மற்றும் சிறிதளவு நிலக்கரி ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன.
மத்திய-வடக்கு சர்குஜா (வத்ராப்நகர்-பா—பிரதாப்பூர்-சூரஜ்பூர்-அம்பிகாபூர்) பெல்ட்: நிலக்கரி, பைரிடிக் கனிமங்கள், சல்பர், மைக்கா பெரிலூயிம், பைரைட்ஸ், தாமிரம் மற்றும் கலேனா ஆகியவற்றின் இருப்பு பதிவாகியுள்ளது. பிஷ்ராம்பூர், பட்கான், தடாபானி, ராம்கோலா, லக்கன்பூர் மற்றும் பாசென் ஆகியவை முக்கிய நிலக்கரி வயல்களாகும். உத்தரபிரதேச எல்லைக்கு அருகில் உள்ள வத்ராப்நகரில் சில தீ-களிமண், மைக்கா, நிலக்கரி, கலேனா மற்றும் சில்மனைட் போன்றவையும் பதிவாகியுள்ளன.
படிக்க:
♦ சத்தீஸ்கர் வனக்காடுகள் அதானிக்கு! உயிர்பலி பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு!
♦ இஸ்ரேலுடன் இணைந்து மரண வியாபாரியாக மாறிய அதானி!
சர்குஜாவில் மூன்றாம் நிலை பாறைகளில் பாக்சைட் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்குதான் திருவாளர் அதானி தனது சுரங்கத்தை அமைத்து மலைகளையே விழுங்க பார்க்கிறார். நல்லவனாக காட்டிக் கொள்ள மரக்கன்றுகளை நடுவதாகவும் கதை விடுகிறார்.
கொட்டிக் கிடக்கும் கனிமங்கள்!
வெப்பமண்டலப் பருவமழைச் சூழல்களில் பொதுவாக கயோலினேற்றம் அடையும் அலுமினியம் செறிந்த பாறைகளின் சிதைவு மற்றும் வானிலையினால், ஒரு படி முன்னேறி, அலுமினிய ஹைட்ராக்சைடுகள் மற்றும் இரும்பு, மாங்கனீசு, டைட்டேனியம் ஆக்சைடுகள் நிறைந்த ஒரு எச்சத்தை உருவாக்குகிறது.

அலுமினிய ஹைட்ராக்சைடுகள் போதுமான அளவு சுருங்கும்போது, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பாக்சைட் படிவுகள் உருவாகின்றன. ‘பாக்சைட்டாக்கம்’ என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை, நிலப்பரப்பில் உயர்ந்த, நன்கு வடிகால் வசதியுள்ள, தாழ்வான பீடபூமிகளில் செழித்து வளர்கிறது.
சுர்குஜாவில் பாக்சைட் இருப்பு 57.54 மில்லியன் டன்கள் ஆகும், இது மாநிலத்தின் மொத்த இருப்பில் சுமார் 57% ஆகும். அதானியின் நாக்கில் எச்சில் ஒழுகாமல் என்ன செய்யும்?
சுற்றுச்சூழல் ‘பாதுகாவலனாக’அதானி!
அதானியின் சுரங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக 40 மரங்கள் என்ற கணக்கில், சுர்குஜா பகுதியில் சுமார் 568 ஹெக்டேர் நிலப்பரப்பில் 1.6 மில்லியனுக்கும் (16 லட்சத்திற்கும்) அதிகமான மரக்கன்றுகளை அதானி குழுமம் நட்டுள்ளது.
படிக்க:
♦ சர்வதேச கார்ப்பரேட் கிரிமினல் கௌதம் அதானியைக் காப்பாற்றும் பாசிச மோடி!
♦ எல்.ஐ.சி யின் பணத்தை எடுத்து அதானிக்கு கறி விருந்து படைக்கும் பாஜக அரசு!
காவிரியை மீட்க மிஸ்டு கால் கொடுக்கச் செய்த தமிழகத்தின் – ஜக்கியின் ஈஷாவை போல அதானிக்கும் ‘இயற்கையின் மீது காதல்’ உள்ளதுதான். மேலும், இப்பகுதியின் பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் நோக்கில் 40 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சால், தேண்டு, நெல்லி போன்ற அந்தப் பகுதிக்குரிய (native species) மரங்கள் நடப்பட்டு, அவை சுமார் 88% உயிர் பிழைப்பு விகிதத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி முதலில் இருக்கும் காடுகளை அழிக்கப் போகிறார். ஆனால் அதை எல்லாம் நாம் பார்க்கவோ, பேசவோ கூடாது. அவர் 40 லட்சம் மரக்கன்றுகளை நட்டு காட்டை வளர்க்க வந்துள்ளார். அதையே நாம் கொண்டாட வேண்டும். மீறினால் மோடி அரசு அடக்குமுறையை நம்மீது ஏவும்.
“இது என்னுடைய மண்” என்று புராண நாயகர்களான ராம லட்சுமணன்கள் வில்லை எடுத்துக்கொண்டு அதானிக்கு எதிராக சண்டைக்கு வரப்போவதில்லை. பாண்டோ மற்றும் கோர்வா பழங்குடிகள் தான் போராடியாக வேண்டும். போராடியும் வருகிறார்கள்.
மண்ணின் மேல் மரக்கன்றுகளை நட்டு விட்டு (கணக்கு காட்டிவிட்டு) அடியாழத்தில் உள்ள அனைத்து மண், பாறை அடுக்குகளையும் புரட்டிப் போடப் போகிறது அதானி நிறுவனம். கார்ப்பரேட்டுகளின் எச்சத்தை விழுங்கி வாந்தி எடுக்கும் கார்ப்பரேட் மீடியாக்கள் இந்த உண்மையைப் பேசப்போவதில்லை. சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டுள்ள நாம் உரக்கப் பேசுவோம்.
- இளமாறன்






