பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது தங்க சுத்திகரிப்பு மற்றும் தங்க ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று.
இந்த நிறுவனம் கடந்த 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரையிலான (4 ஆண்டுகள்) காலகட்டத்தில் ஈட்டியதாக கூறப்படும் வருவாயில் சுமார் ₹15.15 லட்சம் கோடி வருவாய் எங்கிருந்து, எப்படி வந்தது? என்ற கணக்கை தவறாக அல்லது சரிபார்க்க முடியாத வகையில் காட்டுவதாக SEBI* (Securities and Exchange Board of India) குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹3.32 லட்சம் கோடி வருமானம் (கடன் தவிர்த்து) வருகிறது. ஆனால் இந்த நிறுவனம் (நான்கு ஆண்டுகளில்) சராசரியாக ஆண்டுக்கு ₹3.78 லட்சம் கோடி வருமானம் சம்பாதித்துள்ளதாக கூறுகிறது. தமிழ்நாடு அரசின் வருமானத்தைவிட அதிகமாக லாபம் சம்பாதித்து உள்ளதாக கூறும் இந்த நிறுவனம் அந்த லாபத்திற்கான கணக்கை சரியாக காட்டவில்லை.
இந்தியாவில் உள்ள இந்த ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள “வால்காம்பி” என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்கி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது சர்வதேச வர்த்தகத்தை நடத்தி வருவதாக கூறியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த இந்த வால்காம்பி நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ.543 கோடி மட்டுமே. ஆனால் இந்த நிறுவனத்தின் மூலமாக ரூ.3,027 கோடி வருமானம் ஈட்டியதாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கணக்கில் சுமார் 2,500 கோடி ரூபாய் வருமானம் எப்படி அதிகமாக காட்டப்பட்டது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
அதேபோல ஆப்பிரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கங்களில் 1,035 கோடி ரூபாய் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக கணக்கில் காட்டியுள்ளது. ஆனால் இந்த முதலீடு தொடர்பாக போதுமான ஆதாரங்களை ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழங்கவில்லை. இந்த முதலீடு உண்மையில் செய்யப்பட்டதா, இல்லையா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.
இந்த நிலையில், அப்ளுயன் சேர்ஸ் மற்றும் ஸ்டாக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Affluence Shares and Stocks Pvt Ltd) என்ற நிறுவனத்திற்கு சுமார் 11,481 கோடி ரூபாய்க்கு விற்பனையும் அதே நிறுவனத்திடம் இருந்து 11, 488 கோடி ரூபாய்க்கு கொள்முதலும் செய்துள்ளதாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் இதுகுறித்து “அப்ளுயன் சேர்ஸ் மற்றும் ஸ்டாக்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்திடம் செபி விசாரணை நடத்திய பொழுது ‘தங்கள் நிறுவனத்திற்கும் ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் சம்பந்தமே இல்லை’ என்றும் ‘எங்களுக்கிடையில் விற்பனையோ கொள்முதலோ நடைபெற்றதே இல்லை’ என்றும் அந்த நிறுவனம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இப்படி மாபெரும் முறைகேடுகள் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் நிலையில் அதுவும் இந்த முறைகேடு ரூ.15.15 லட்சம் கோடி என்ற அளவிற்கு பூதாகரமாக வளரும் வரையில் எப்படி கண்டுபிடிக்கப்படாமல், வெளியில் தெரியாமல் போனது? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
தணிக்கை நிறுவனமோ செபி -யோ இந்த முறைகேட்டை கண்டுபிடிக்கவில்லை. இந்த ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குதாரர் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செபியிடம் இந்த நிறுவனத்தின் செயல்பாடு குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பிறகு தான் இந்த நிறுவனத்தின் திருட்டுத்தனம் குறித்த விசாரணையை செபி தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் கணக்குகளை முறையாக தணிக்கை செய்வதற்கென்றே தணிக்கை அதிகாரிகள் (Auditors) உள்ளனர். அவர்கள் ஏன் இந்த முறை கேட்டை கண்டுபிடிக்கவில்லை? கணக்கில் இவ்வளவு பெரிய ஓட்டை (வேறுபாடு) உள்ளதை கண்டுபிடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் இந்த மோசடியில் ஒரு மிகப்பெரிய கூட்டமே துணை நின்றுள்ளது என்பது உறுதி.
இந்த நிலையில், இந்த மோசடி வெளியில் தெரிந்த உடனே 2023 ஆம் ஆண்டு முதல் பங்குச்சந்தையில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிந்துள்ளது. பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் இந்த நிறுவனத்தின் முறைகேடு குறித்து செய்திகள் கசியத் தொடங்கிய உடனே தங்களின் பங்குகளை விற்று விட்டனர்.
படிக்க:
♦ ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்ற ஆர்எஸ்எஸ்-பாஜக தேசத் துரோக கும்பல்.
♦ ஹிண்டன்பர்க் இரண்டாம் அறிக்கை: செபியின் தலைவர்- அதானி- மோடி கும்பலின் மோசடி அம்பலம்!
ஆனால் இந்த விபரங்கள் எதுவும் தெரியாமல் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருந்த சாமானியர்களுக்கு ரூ.12,725 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 10.8% தை வாங்கியுள்ளது. இந்த நிலையில் எல்ஐசிக்கு சுமார் 2,943 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது எல்ஐசி முதலீட்டாளர்களின் பணம் சுமார் ரூ. 2,943 கோடி மக்களின் பணம் ‘காணாமல்’ போய்விட்டது.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கனரா வங்கியில் ரூ 509 கோடி கடன் வாங்கியுள்ளது. இந்தக் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்தத் தொகையை வசூலிக்க முடியாமல் போகலாம். அதாவது இந்த தொகையை ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனம் கனரா வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், பொதுவாக முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களின் உண்மையான வருமானத்தை எந்த அளவிற்கு குறைத்துக் காட்ட முடியுமோ அந்த அளவிற்கு குறைத்துக் காட்டி வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்கு தான் முயற்சி செய்வார்கள்.
இந்த நடைமுறைக்கு மாறாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது வருமானத்தை அதாவது தான் ஈட்டாத லாபத்தை பொய்யாக ஈட்டியதாக அதுவும் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியதாக பொய் கணக்கை எழுதியுள்ளது. எதற்காக இப்படி பொய் கணக்கை எழுதியுள்ளது? என்ற கேள்வி பூதாகரமாக எழுகிறது.
இல்லாத வருமானத்தை இருப்பதாக காட்டி முதலாளிகள் சட்ட விரோதமாக சேர்த்து வைத்துள்ள தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது என்பது பொதுவாக உள்ள நடைமுறை.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் இப்படிப்பட்ட சட்ட விரோதமான கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காகத்தான் இப்படிப்பட்ட பித்தலாட்டத்தில் ஈடுபட்டுள்ளதா? அதற்கு தணிக்கை அதிகாரிகள் துணை போய் உள்ளானரா? இந்த முறை கேட்டில் “செபி” யைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்கு என்ன? பாசிச பாஜக அரசின் பங்கு என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
1992 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்குச்சந்தை ஊழலில் ஈடுபட்டு பிடிபட்ட ஹர்சத் மேத்தா -வின் ஊழலுக்கு இணையான மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளது ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனம். இந்த ஹர்ஷத் மேத்தா குஜராத்தை சேர்ந்தவர்.
இந்திய வங்கியில் வாங்கிய சுமார் ரூ. 6,000 கோடி கடனை கட்டாமல் தலைமறைவான வின்சம் டைமண்ட்ஸ் -ன் முன்னாள் தலைவர் ஜாதின் மேத்தா குஜராத்தை சேர்ந்தவர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய சுமார் ரூ.13,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவான நீரவ் மோடி மற்றும் முகில் சோசி இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள். 2001 ஆம் ஆண்டில் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதற்காக பிடிபட்ட பங்குச்சந்தை வர்த்தகர் கேத்தன் பிரேக் -ம் குஜராத்தை சேர்ந்தவர். அந்த வரிசையில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் மேத்தாவும் குஜராத்தை சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அரசியல், பொருளாதரத்தை தனது விருப்பத்திற்கேற்ப வளைத்து வரும் அம்பானி – அதானி வகையறாக்களும் குஜராத்தை சேர்ந்தவர்கள்தான் எனும் பொழுது இந்திய நாட்டில், இந்திய ஒன்றிய அரசில் குஜராத் முதலாளிகளின் செல்வாக்கு எப்படிப்பட்ட தாக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
‘இப்படிப்பட்ட’ செல்வாக்கு ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான ராஜேஷ் மேதாவிற்கு உள்ளதால் தான், இந்த செல்வாக்கு உள்ள தைரியத்தில் தான் அந்த நிறுவனம் 15.15 லட்சம் கோடி ரூபாய் வருவாயை மோசடியாக காட்டி உள்ளதா?
ஊழலை ஒழிக்க வந்த விஸ்வகுரு மோடியோ அவரது நண்பர் உள்துறை அமைச்சர் அமித்சாவோ இதற்கு பதில் சொல்லப் போவதில்லை. மோடி, அமித்ஷாவை –பாசிச பாஜகவை கண்மூடித்தனமாக ஆதரித்துக் கொண்டிருக்கும் அப்பாவி சங்கிகள் இதற்கு பதில் சொல்வார்களா?
– குமரன்
குறிப்பு: SEBI (Securities and Exchange Board of India) என்பது இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம். இது இந்தியாவின் பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு சந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்பு.






