இருண்டு கிடக்கிறது தமிழ்நாடு…! சூட்டிங் ஸ்பாட்டாக தமிழகம்…! அதற்குத் தலைமையகமாக தலைமைச் செயலகம்…! பிழைப்புவாதிகளாக அரசியல் கட்சியினர்…!
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உழைக்கும் மக்களுக்கு, வாக்கு வங்கி – போலி பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாக எவ்வித நிரந்தரத் தீர்வையும் பெற்றிட இயலாது என்பதற்கு உலகளாவிய எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவிற்கு தேர்தல் முறைகேடுகளும், தில்லு முல்லு மோசடிகளும், அரசியலற்ற தற்குறி அரசியலும், கவர்ச்சி மோகமும், ஊழலும், கொள்ளையடிப்பதற்காகவே அரசியலில் பிரவேசித்து, கொள்கையற்ற அப்பட்டமான பிழைப்புவாதிகளாக கட்சி மாறும் இழி பிறவியினராய் வலம் வரும் ஆயிரக்கணக்கானோரை அனைத்துவித முதலாளித்துவ கட்சிகளிலும் தொடர்ந்து அவதானித்தே வருகிறோம். எண்ணிக்கை களில் தான் சற்று வேறுபாடுகளைக் காணலாம். இப்படிப்பட்ட அனைத்துவித மானங்கெட்ட பிழைப்பிற்கு அதிகார வர்க்கமும் சகல வழிகளிலும் துணை நிற்பதையும் காண்கிறோம். அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து மாநில அளவில் ஒன்றிய அளவில் நாட்டை – மக்களைச் சீரழிக்கின்றன. திடீர் திடீரென தலைவர்கள்/ கட்சிகள் முளை விடுவதும், ‘அதுகளுக்கு’ எண்ணற்ற பட்டங்களைச் சூட்டி, ஒளிவட்டப் பிம்பத்தை உருவாக்குவதிலும் அரசியல் பிழைப்புவாதிகள் முன்னணிப் பாத்திரம் வகிப்பது ஒரு புறம்; திரைப்படக் கவர்ச்சி மோக பொறுக்கி அரசியல் மூலமாக கவர்ந்திழுக்கப்பட்ட ரசிக மனோபாவம் கொண்ட இருபால் ரசிகர் கூட்டம் மறுபுறம்!
அதன் வளர்ச்சிப் போக்கே இன்று தமிழ்நாடு, நடிகரும் அரசியலற்ற ‘பொறுக்கி’ அரசியல் வாதியுமான விஜய் கரங்களில் ஆட்சி அதிகாரம் அகப்பட்டுக் கொண்டு சீரழிவதை அவர் பதவியேற்ற ஒரு மாதம் முடிவதற்கு உள்ளாகவே அவதானிக்க முடிவதைக் காண்கிறோம். உறுதியாக பாசிசம் குறித்து எள்ளின் முனையளவும் அறிந்திராத விஜய்யும்கூட பாசிஸ்டாக பரிணமிப்ப தற்கான வாய்ப்புகள் கூடுதலாகவே உள்ளன என்பதை உணர முடிகிறது.
குதிரை பேர அரசியலுக்குத் தலைமையகம் அரசுத் தலைமைச் செயலகமே…!
நாம் ஏற்கனவே பலமுறை விளக்கி இருக்கிறோம். தொங்கு சட்டமன்றமாகிப் போன தவெக அரசாங்கம், குதிரை பேர வணிகத்தில் குதிரை வேகத்தில் செயல் புரிந்து, அதிமுகவை உடைத்து அமைச்சர்கள் பதவி ஆசை காட்டி எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் கும்பல் தலைமையிலான 25 எம்எல்ஏக்களை சட்டமன்றத்தில் பெருமாண்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் விஜய் ஆட்சி பிழைக்க வாக்களிக்க செய்தது ‘விஜய் – வேலுமணி – சிவிஎஸ்’ கூட்டணி!
அதன்பின், ‘அதிமுகவை அரசாங்கத்தில் அங்கம் வகிக்க அனுமதித்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம்’ என இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் ‘போர்க்கொடி’ தூக்கியதும், விஜய் தரப்பினர், ‘அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க் களுக்கு இடம் இல்லை’ என அறிவித்ததும், அதன்பின் வேலுமணி தரப்பு எடப்பாடியிடம் ஒட்டிக்கொண்டதும் மற்ற பல மாநிலங்களைப் போல தமிழ்நாட்டு அரசியலும் சிரிப்பாய் சிரித்துக் கிடக்கிறது என்பதையும் ஏற்கனவே பார்த்து விட்டோம்.
இந்நிலையில் ஏமாற்றமடைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் MC.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, MSM ஆனந்தன், MR. சிவபதி ஆகியோர், ‘மாபெரும் தலைவர்கள்’ ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் சால்வை அணிவித்து தவெக-வில் தஞ்சம் புகுந்தனர்.
தொடர்ந்து ‘அரசியல் தற்குறி முதல்வர்’ விஜய்யையும் சந்தித்து சால்வை அணிவித்து ‘வாழ்த்து’ப் பெற்றனர். இவர்களுக்கு முன்னதாகவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் KV.ராமலிங்கம், இசக்கி சுப்பையா இருவரும் தவெகவில் புகுந்து விட்டனர். இதில் பெரிய வேடிக்கை என்னவெனில் பனையூர் அலுவலக கேட்டுகளை உடைத்துக் கொண்டு ‘இதுகள்’, நான் முந்தி – நீ முந்தி என்று அடித்துப் பிடித்து இடித்துக் கொண்டு உள்ளே புகக்கூடிய காட்சிகளைப் பார்க்கின்ற பொழுது கேவலத்திலும் கழிசடைத் தனமாகத் தென்பட்டது. கட்சி மாறிய இவர்களால் முதலில் ஒரு கூத்தாடி விஜய்க்கு சால்வை அணிவித்து ஐக்கியமாகிக் கொள்ளும் தகுதியைக்கூட பெற இயலவில்லை. சற்று தாமதமாக தலைமைச் செயலகத்தில் கட்சி மாறியதை அடையாளப்படுத்தும் வகையில் விஜய்க்கு சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொள்கின்றனர். ஆக, தலைமைச் செயலகமே தவெக-வின் தலைமையகமாக மாறிக் கொண்டு இருக்கக்கூடிய அவலம் உருவாகியுள்ளது.
மேலும் இதில் முன்னாள் திமுக எம்எல்ஏக்கள் இருவர் கூட தவெக-வில் இணைந்துள்ளனர். ‘பனையூரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் 5000 பேர் தவெக-வில் இணைகின்றனர்’ என அறிவிப்பு செய்து 500 பேரைக் கூட திரட்ட முடியாத நிலையில் வேட்டி சேலை கொடுக்கப் போவதாக அறிவிப்பு செய்து ஆண் பெண்களை திரட்டிய – மக்களை முட்டி மோத விட்ட அசிங்கங்களும் அரங்கேறி உள்ளன.
படிக்க:
♦ தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!
♦ தமிழகத்தில் தவெக ஆட்சி: மூன்றாம் இடத்தில் தமிழ்!
காலம் காலம் தொட்டு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் கட்சிகளில் பலரும் இப்படி சூடு, சொரணை, வெட்கம், மானம், ரோசம் துளியுமின்றி தவளைகளைப் போல கட்சி தாவுகிறார்களே, எதற்காக? புதிய கட்சிகளில் இணைந்து தியாகபூர்வமாக உழைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அக்கறையாலா? இல்லை. நிச்சயமாக இல்லை. மாறாக, ‘தாம் ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சி தேய்மானத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது; செல்வாக்கு உள்ள புதிய ஆளும் கட்சியில் நுழைந்து கொண்டால் ஏதேனும் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திப் புதிய பதவிகளைப் பெற்று விடலாம்; பொறுக்கித் திண்ணலாம்; வழக்கம்போல கொள்ளை அடிக்கலாம்; மேலும் மேலும் சொத்துக்களை வாங்கிக் குவிக்கலாம்’ – என்பதே இப்படிப்பட்ட பிழைப்புவாதிகளின் லட்சியமாக மாறி விட்டன. மற்ற வகையில் இப்படிப்பட்ட பச்சோந்திகளுக்கு மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளோ, கோட்பாடுகளோ, லட்சியங்களோ என்றும் இருந்ததில்லை. ஆம்! ‘பிழைப்பு வாதமே அரசியல்’ என்றாகிவிட்டது! இதில் ஆதவ் அர்ஜுனா முதலிடம் வகிப்பவர் ஆவார். அவரைத் தொடர்ந்து நிர்மல் குமார், அருண் ராஜ், செங்கோட்டையன், கீர்த்தனா எனப் பெரும் கும்பலே தவெக-விலும் இருக்கிறது. அனைத்திற்கும் மூலவர் ‘தளபதி விஜய்’ தான்! இவர்கள்தான் ‘தூய சக்தி’யாம்? ஆனால் என்றுமே இப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் அப்பாவி உழைக்கும் மக்களே!
ப.சிதம்பரம் – சிவசேனா – வைகோ – துரை வைகோ -தொல் திருமா. போன்றோர் விஜய்யின் மவுத்(Mouth-வாய்)களாக மாறிப்போனதேன்?
மேற்காணும் தலைவர்களும் கட்சிகளும் விஜய்க்கு ஒளிவட்டம் ஏற்படுத்தும் பணிகளைச் செய்வதைப் பார்க்கும் பொழுது ஆபாசமாகத் தெரிகிறது. காங்கிரசைப் பொருத்தமட்டில் சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கித் திளைக்கிறது. திமுக ஆட்சியில் ‘காக்கா’ பிடித்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இருக்கையை பெற்றுக் கொண்டது. (திமுக தயவில் பெற்ற ஐந்து எம்எல்ஏக்களில் இருவருக்கு அமைச்சர் பதவிகள் பெற்றாகிவிட்டன.) தற்போது தவெக கூட்டணிக்குத் தாவி மற்றுமோர் மாநிலங்களவை உறுப்பினர் இருக்கையைப் பெற்றுக் கொண்டு விட்டது. காங்கிரசை திமுக கூட்டணியிலிருந்து தவெக கூட்டணிக்கு இழுத்துச் சென்றதில் முதன்மை பாத்திரம் வகித்த பலே கில்லாடி குற்றச் செயல்களை துணிந்து செய்யும் பிரவீன் சக்கரவர்த்திக்கு அந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இருக்கை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனாலேயே கட்சிக்குள் குஸ்தி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கோமாளி பிரவின் தமது ட்விட்டர் பக்கப் பதிவில் ‘இடதுசாரிகள் அனைவரும் எங்களைப் போலவே தவெக கூட்டணியில் இணைந்து விட்டனர்’ என்று வெட்கமில்லாமல் பொய்களைப் பரப்பினார். மெத்தப் படித்த மேதாவியான ப. சிதம்பரமோ காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் கிடைத்ததை பூரிப்பாகக் கருதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டதாகவும், தவெக கூட்டணியில் அங்கம் வகிக்க இடதுசாரிகளை அழைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். இடதுசாரிகளோ அப்படிப்பட்ட எண்ணமே இல்லை; நாங்கள் திமுக கூட்டணியில் தான் இன்னும் நீடிக்கிறோம் என்று கூறுகின்றனர்.
இந்தியா கூட்டணியில் திமுகவும், ஆம் ஆத்மியும் புறக்கணித்துக் கொண்டு இருக்கின்றன. INDIA கூட்டணியை உருவாக்குவதற்கு திமுகவின் பங்கு கூடுதலானது தான் என்பது உண்மையே. ஆனால் திமுக போனால் என்ன; அளப்பெரிய செல்வாக்குள்ள விஜய்-யின் தவெக INDIA கூட்டணியில் இணைந்து கொள்ள இருப்பதாக சிவசேனா காங்கிரஸ் உட்பட பலரும் நம்பிக்கை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்ட அகில இந்திய அளவிலான ‘இந்தியா கூட்டணி’ குறித்த பிரச்சனையில், இது குறித்த கண்ணோட்டம் துளியுமற்ற தற்குறி அரசியல்வாதி விஜய், மேற்கண்ட விவரங்கள் குறித்து எதுவுமே வாய் திறக்காத போது, அவரது வாயாக (mouth) இவர்களிருந்து கொண்டு செய்தி பரப்புகின்ற கோமாளித்தனங்களை என்ன வென்று பகர்வது? தம்மை (விஜய்யின் தவெக) பெற்றெடுத்த பெற்றோருக்கு (பாஜக) எதிராக செயல்படும் INDIA கூட்டணியில் இணைந்து செயல்பட இது விடயத்தில் விஜய் முட்டாளா என்ன? அவ்வளவு துணிச்சல் தான் அவருக்கு வந்து விடுமா என்ன?
‘பாஜக அல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் மலர வேண்டும் என்பதற்காகவே தவெக-வை ஆதரிக்கிறோம்’ என்று பீற்றிக்கொள்ளும் ‘முற்போக்காளர்’களும் கூட இது குறித்து ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். பாஜக ஒன்றிய அளவில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்ப்பது ஒரு பக்கம் கிடக்கட்டும்; ஆனால் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக, உரிமைகளுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசும் ஆளுநரும் செய்கின்ற எண்ணற்ற துரோகங்களுக்கு எதிராக ‘கொள்கை எதிரி’யான பாஜக குறித்து ஒரு வார்த்தை பேசி இருப்பாரா இந்த விஜய்?
அப்படி இருக்கின்ற பொழுது தவெக-வை பாஜக எதிர்ப்பு சக்தி என்று கருதுவதும், அதனுடன் கூட்டணி சேர்ந்து அமைச்சரவையில் அங்கம் வகிப்பதும், அதனை நியாயப்படுத்துவதும் விசிக., ஐயூஎம்எல் போன்ற கட்சியினருக்கு அசிங்கமாகப் படவில்லையே ஏன் என்பதுதான் வேடிக்கையான விடயம்! விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே நடக்கின்ற கணக்கற்ற குற்றச் சம்பங்களிலிருந்தே, அதிலும் தவெக-வினரே மிகுதியான குற்றவாளிகளாக பவனி வருவதிலிருந்தே மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி விட்டோமே என எண்ணி இன்னும் ஆதரவை வாபஸ் வாங்காமல் நீடித்திருப்பதற்கு என்ன வியாக்கி யானங்களை இடதுசாரிகள் சொல்ல முனைந்தாலும் அவை ஏற்கத் தகுந்ததல்ல.
படிக்க:
♦ தவெக விஜய் யை கைது செய்ய கோரி திருச்சி, ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் !
♦ கரூர் படுகொலை: தவெக தலைவர் விஜயை ‘Victim’ஆக சித்தரிப்பது அயோக்கியத்தனம்!
வைகோவும், துரை வைகோவும் ‘மாபெரும் புரட்சித் தலைவர்’ விஜய்யுடன் புதிய உறவு கொண்டிருப்பதை பெருமையாகக் கருதுவதும்,தமது இல்லம் தேடி வந்த விஜய்யை போற்றி புகழ்ந்து தமது வீட்டு பணியாளர்களை கூட விஜய்யிடம், வைகோ அறிமுகம் செய்து வைத்ததும், திருச்சியில் துரை வைகோ, விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து, “ ‘துரதிர்ஷ்டவசமாக’ உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி யிட்டுவிட்டது; இல்லையேல் எங்களது இரு எம்எல்ஏக்களும் தங்கள் அரசுக்கு முழுமனதான ஆதரவை வழங்கி இருப்போம்” – என்ற பாணியில் புளகாங்கிதமாக மெய் சிலிர்த்துப் பேசி இருப்பதும் இவர்களின் பிழைப்புவாத ஆபாச வக்கிர அரசியலை பறைசாற்றுகிறது. திமுக தயவில் திருச்சி எம்பியாக துரை வைகோவுக்கு…! மாநிலங்கள் அவை உறுப்பினராக திமுக தயவில் வைகோவுக்கு…! இப்போது அதிமுக பிழைப்புவாதிகள் போலவே தொண்டை கிழிய முற்போக்கு பேசும் வைகோ கும்பலும் திசை மாறுகின்றன என்பதே உண்மை.
அதிலும் பெரிய வேடிக்கை திமுகவிலிருந்து வெளியேறிய வைகோ, மதிமுக-வை உருவாக்கியதற்கான பிரதான காரணமாக கருணாநிதியின் குடும்ப அரசியலையே முன்னிறுத்தினார். ஆனால் இவரோ தனது மகன் துரை வைகோ-வை முன்னிறுத்துவது குறித்து அசிங்கமாகக் கருதவில்லை. இதனாலேயே எண்ணற்றோர் இவரது கட்சியிலிருந்து முன்னரே வெளியேறி விட்டனர். அண்மையில் அவரது கட்சியின் முக்கிய தளபதியாக இருந்த மல்லை சத்யாவும் வெளியேறி விட்டார்.
ஓட்டுக் கட்சிகளில், கட்சி மாறுவதில் கூட்டணி மாறுவதில் பெரும் பகுதியினர் இத்தகைய ‘யோக்கியதாம்சத்தையே’ பெரும் பகுதியினர் கொண்டுள்ளனர். அதே வேளையில் மிகக் குறைந்த எண்ணிக்கையினராய் இருந்தாலும் தாம் புரிந்து கொண்ட அரசியல் அளவிற்கு நியாயமான கொள்கை உணர்வின் அடிப்படையில் கட்சி மாறுவதை கூட்டணி மாறுவதை நாம் குறை சொல்வதற்கு ஏதுமில்லை. அந்த வகை என்பது மிக மிக சொற்பமாக அருகி விட்டதே என்பதுதான் வேதனை!
‘ரீல்ஸ்’சை விட்டு, ‘ரியல்’லுக்கு வாங்கோ… விஜய் ப்ரோ…!
‘கோட்டு’ போடுங்கோ… ‘சூட்டு’ போடுங்கோ…!
உங்க கோட்… உங்க சூட்… அவற்றை நீங்கள் அணிவதை தப்புனும் யாரும் சொல்லல.
அதே வேளையில் தமிழ் ‘நாட்டு’ மக்கள் ‘பட்டு’ அல்லலுரும் ஒரே மாதக் கொடும் துயரங்கள் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்கள் என்று தான் கோருகிறோம். முடியலையா? இடத்தை ‘காலி செய்யுங்கள்’ என்று தான் வேண்டுகிறோம்! ஏனெனில் ஆட்சியைப் பிடிக்க நீங்களும் உங்கள் அடிவருடிக் கும்பலும் வினாடிக்கு வினாடி பரப்பிக் கொண்டிருந்த ‘ரீல்ஸ்’ அனைத்திற்கும் தீர்வு காண வேண்டிய இடத்தில் இன்று நீங்கள் அல்லவோ அமர்ந்து விட்டீர்கள் ப்ரோ? இப்போதும் அதே ‘ரீல்ஸ்’சை விட்டுக் கொண்டிருந்தால் கொதித்தெழும் மக்கள் முன்னிலையில் தவெக சாம்பலாகி விடும் என்பதை மட்டும் உணருங்கள் ப்ரோ.
திமுக ஆட்சியில் இருந்த பொழுது, பாஜக கேஸ் சிலிண்டர் விலை ஏற்றும்போது என்ன சொன்னீங்க? ‘ஸ்டாலின் ப்ரோ எது எதுக்கோ டெல்லிக்கு பறக்குறீங்கல்ல…கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கும் கொஞ்சம் அப்படியே டெல்லிக்கு பறந்து போய் பாஜகவுடன் போராடாலாமுல்ல…’ என்று கதைத்தீர்கள் தானே? நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை சிலிண்டர் விலை ஏற்றப்பட்டு வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்தை எட்டி விட்டதே! நீங்கள் டெல்லிக்கு பறக்க வேண்டாம்; போராட வேண்டாம்; வாய் திறந்தாவது பாஜகவுக்கு எதிராக இரண்டே வார்த்தைகள் கண்டனம் தெரிவித்தீர்களா? முதல் சந்திப்பை பிரதமருடன் 10 நிமிடம் நிகிழ்த்தியதாக(?) கூறப்பட்டதே, அப்பொழுதாவது ‘போர்க் காரணங்களை போலியாக கூறி வணிக சிலிண்டர், வீட்டு சிலிண்டர் விலையை ஏற்றாதீர்கள்’ என்று கோரிக்கை வைத்தீர்களா? உங்களது ‘வீரப்பராக்கிரக’ வாய்ச் சவடால்கள் எல்லாம் எங்கே தொலைந்து போயின ப்ரோ?
படிக்க:
♦ ரோபோ எந்திரனை மனிதனாக்கினார் இயக்குனர் ஷங்கர். அமைச்சர்களை ரோபோவாக்குகிறார் பாசிச கோமாளி விஜய்
♦ சந்தேகமே இல்லை! விஜய் தற்குறிதான்! தலைக்கனமேறிய அசல் சங்கிதான்!
விஜய் முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் கூட நிறைவு பெறவில்லை. அதற்குள்ளாக தமிழ்நாடே தாங்க முடியாத அளவிற்கு கொடுமையான குற்றச் சம்பவங்கள், மக்கள் துயரங்கள் நடக்காத நாளில்லை. இவற்றில் பலவற்றை யாம் ஏற்கனவே பட்டியலிட்டு இருக்கிறோம்.
கோவை சூலூர் பகுதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியது.
காசிமேடு பகுதியில் 10 வயது சிறுமியை தவெக கிளைச் செயலாளர் தினேஷ் பாலியல் வன்புணர்வு செய்தது.
நடைப்பயிற்சி சென்ற 85 வயது மூதாட்டி முதல் தொட்டிலில் படுத்து உறங்கிய 2 ½ வயது குழந்தை வரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது.
விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியிலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது.
15 வயது முதல் 18 வயது வரையிலான இளம் சிறுமிகளை பாருக்குள் அனுமதித்தது; சிறுவர் சிறுமிகளுக்கான சீண்டல்கள் மோதலாக வெடித்து ஒரு இளம் பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டது.
ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் ஒரு இளம் பெண்ணை தொடர்பு கொண்ட தவெக-வினர் ஆதவ் அர்ஜூன், புஸ்ஸி ஆனந்திடம் கூறி வேலை வாங்கித் தருவதாக பொய் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்தது; இதில் ஜெயபால், பாலமுருகன் இருவர் மட்டும் கைதாகி இருப்பது; இதில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வில்லை என்பதோடு அவர் அப்பெண்ணுக்கு மிரட்டல் விட்டுக் கொண்டிருப்பது.
காங்கேயம் பகுதியில் சிறுமிக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் வன்புணர்வு செய்து பலியாக்கி இருக்கிறார்கள் சிறுவர்கள்.
ராமநாதபுரத்திலும் ஒரு பெண்ணை ஏமாற்றி தவெகவினர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து லாட்ஜில் தங்க வைத்து பாலியல் சீண்டலுக்கு முயற்சித்தது.
திருப்பத்தூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
அரசுப் பேருந்து ஓட்டுநரை தவெக ‘பிரமுகர்’ தலைமையிலான கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி இருப்பது.
கொலை – கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருப்பது.
போதை வஸ்துகள்; போதை மாத்திரைகள் பல கோடி ரூபாய் மதிப்பில் சர்வ சாதாரணமாக வியாபாரத்திற்கு உள்ளாக்கப்படுவது.
தங்குதடையற்ற ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற அனுமதிப்பது.
விவசாய கடன் தள்ளுபடி பிரச்சனையில் விவசாயிகளை ஏமாற்றி வயிற்றில் அடித்திருப்பது.
வறுமையின் காரணமாக மதுரை ராமராயர் மண்டபம் சாலையில் வள்ளி (45) தற்கொலை செய்து கொண்டு மாண்டிருப்பது.
அரசுப் பள்ளி துவக்க நாளில் சிறுவர் சிறுமிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்குதல் என்ற பெயரில் வழக்கத்திற்கு மாறாக தவெக-வினர் ஒலிபெருக்கி ஏற்பாடு செய்து மாணவ மாணவியர், ‘முதல்வர் விஜய்யின் கொள்கைகளை கற்று முன்னேற வேண்டும்; அப்பொழுதுதான் எதிர்காலம் ஒளி மிகுந்ததாக மாறும்’ – என்று உரை நிகழ்த்தி பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப் பாய்ச்சியது. இதனால் ஆசிரிய பெருமக்கள் பெரும் வேதனைக்குள்ளானது.
படிக்க:
♦ பள்ளிச் சிறார்களை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நடிகர் விஜய்!
♦ கவர்ச்சி மோக – பொறுக்கி அரசியலும் நடிகர் விஜய் பதவியேற்பும்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள காரையூரில் அஸ்வின் என்ற பத்தாம் வகுப்பு மாணவன் உட்பட கும்பலாக தண்ணி அடித்து விட்டு ஏற்பட்ட தகராறில் அஸ்வினை கழுத்து அறுத்து கொலை செய்தது.
விஜயின் சொந்த தொகுதியான பெரம்பூரில் தலை, கால், கை இல்லாத ஆண் சடலம் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில்/ கிராமங்களில் கொலை கொள்ளை பாலியல் வன்புணர்வு போன்ற அக்கிரமங்கள் நடக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகி இருப்பது.
நாள்தோறும் குறைந்தது 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு நடைபெறுவது; குழந்தை குட்டிகளுடன் மக்கள் தெருவில் தஞ்சம் புகுவது; மின்வாரிய அலுவலகங்களை மக்கள் முற்றுகையிடும் சூழல் உருவாகி இருப்பது; போலீஸ் சமாதானப்படுத்துவது; ‘நாங்கள் மறுநாள் வேலைக்குப் போக வேண்டுமா? இல்லையா?
ஒட்டுமொத்த தூக்கத்தையும் நாங்கள் தொலைத்தால் எப்படி மறுநாள் வேலைக்குப் போக முடியும்? மின்வாரிய அதிகாரிகள் ரெஸ்பான்ஸ் செய்ய மறுக்கிறார்கள்; மக்கள் பிரதிநிதிகள் ஓடி ஒளிகிறார்கள்…’- என்று தொழிலாளர் குடும்பத்தினர் ஆண் பெண் கூட்டம் சாலையில் நடுநிசியில் நின்று போர்க் குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர். பெயருக்கு போலீஸ் தான் வருகிறது! கோரிக்கைகளை நிறைவேற்ற, விஜய் ஆட்சியில் காது கொடுத்து கேட்கத்தான் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் உட்பட வேறு எவரும் இல்லை.(‘ஸ்டாலின் சார், மக்கள் சத்தம் உங்களுக்கு கேட்கிறதா?’ – என்று ‘ரீல்ஸ்’ காண்பித்த விஜய் முதல்வராகப் பதவியேற்ற பின் இன்று ‘ரியல்’லில் முக்காடு போட்டு படுத்துக் கொண்டார்.)
இப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு பிரச்சனைகளும், கொலை கொள்ளை கொடூரங்களும், மின்வெட்டு பிரச்சனைகளும், வாழ்வாதாரப் பிரச்சினைகளும் நாள்தோறும் உழைக்கும் மக்களால் தாங்க முடியாத அளவிற்கு அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.
இவை ஒருபுறம் என்றால், வாக்குகளை அறுவடை செய்ய மக்கள் செவிகளில் தேனாகப் பாயச் செய்த எண்ணற்ற வாக்குறுதிகள் அனைத்தும் மூட்டை கட்டி ஓரங்கட்டப் பட்டிருக்கிறது விஜய் அவர்களே!
ஓரிரண்டையாவது பெயருக்கென நிறைவேற்ற முடியவில்லையே உங்களால் ஏன் ப்ரோ?
விஜய் ப்ரோ, தமிழகத்தை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்ற எத்தனிக்காதீர்!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தை தவெக கட்சி தலைமை அலுவலகமாக மாற்றிட முயற்சிக்காதீர்! அதன் மூலம் குதிரை பேரத்தை முடுக்கி விட எத்தனிக்காதீர்!
‘ரீல்ஸ்’ வேறு; ‘ரியல்’ வேறு என்பதை உணர முற்படுவீர்!
மக்கள் நலன் சார்ந்து காரியம் ஆற்றிடுவீர்!
ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படும் தமிழகத்திற்கு ஆதரவாக, மோடி அமித்ஷா கும்பலுக்கு எதிராக சற்றேனும் கரத்தை உயர்த்தி குரல் எழுப்ப முயற்சிப்பீர்!
ஆளுநர் மாளிகையை காவி மயப்படுத்தும் ஆர்.எல். அர்லேகருக்கு எதிராக கொஞ்சம் மேலும் குரல் உயர்த்திடுக!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடப் படல் வேண்டும்; வந்தே மாதரம் பாடல் தேவையில்லை; இறுதியில் தேசிய கீதம் பாடினால் போதும்…என்பது மோடியிடம் யாசகம் கேட்பதாக இருக்கக் கூடாது; இது நமது உரிமை; எனவே இது விடயத்தில் மோடியிடம் மனு கொடுக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு துணிச்சலாக முந்தைய அரசு கடைப்பிடித்தது போலவே பின்பற்ற தவெக அரசு முன் வரவேண்டும்.
இன்னும் தவெக VS திமுக லாவணி கச்சேரி நடத்தாமல், ‘தீய சக்தி’யை ஒழித்து விட்டோம்;
‘தூய சக்தி’யை உருவாக்கி விட்டோம் என்ற நினைப்பில் உருப்படியாக தமிழ்நாட்டு மக்கள்நலன் சார்ந்து ஏதேனும் செய்ய முற்படுவீர்!
மக்களே, பிழைப்பு வாத – சுயநலக் காரியவாதங்களுக்காக கட்சி மாறும் இழி பிறவிகளை ஓரம் கட்டுவீர்! இந்த ஈனச் செயலை குதிரை பேரத்தின் மூலம் சாத்தியமாக்கும் அரசியல் சக்திகளையும் புறக்கணிப்பீர்!
- எழில்மாறன்






